ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சேரமன்னனான தர்மபாலன் ஆட்சிக்காலத்தில் தான் மலைக்கோட்டை மேல் உளியால் செதுக்காமல் தத்ரூபமாகவே இருந்த அபிராமி அம்மன் இருந்து வந்தது. அந்த அபிராமி அம்மனுக்குத்தான் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்று இருக்கிறது. அதைத்தொடர்ந்துஅச்சுததேவர் நாயக்கர் மூலம் மீண்டும் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. அதன்பின் ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் மலைக்கோட்டையில் படிக்கட்டுகள் கொண்டு வரப்பட்டதுடன் மட்டுமல்லாமல் கோவிலை புதுப்பித்து கும்பாபிகேஷகத்தையும் ராணி மங்கம்மாள் நடத்தி இருக்கிறார். அதன்பின் வந்த திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் தான் பக்தர்கள் மலைக்கோட்டைக்கு வந்து அபிராமி அம்மனை தரிசித்து சென்று வந்தனர். இப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் ஒற்றர்களும் வருவார்கள் என்று கருதி தான் மலைக்கோட்டைக்கு மேல் இருந்த அபிராமி அம்மனை திண்டுக்கல் மாநகர் மையப் பகுதியில் கொண்டுவந்து வைத்து கோவில் கட்டி பக்தர்கள் வழிபட்டும் வந்தனர். அதன்பின் காலப்போக்கில் கோவிலும் விரிவுபடுத்தப்பட்டு திண்டுக்கல் நகரம் மட்டுமல்ல திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள 18 பட்டி மக்களும் வந்து அபிராமி அம்மனை தரிசித்தும் வந்தனர்.
இந்த நிலையில் தான் பழமையடைந்த அபிராமி அம்மன் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்று நகரிலுள்ள முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியதின் பேரில் தான் கடந்த 2013-ல் கோயில் இடிக்கப்பட்டு 2016-ல் புதிதாக கற்கோவிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இப்படி முன் கோபுரத்துடன் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோவிலில் அபிராமி-பத்மகிரீஸ்வரர், ஞானாம்பிகை-காளஹஸ்தீஸ்வரர் தெய்வங்களுக்கு தனித்தனியாக மூலஸ்தானங்கள் அமைத்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதோடு வருடந்தோறும் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக 11 நாள் நடைபெறும். அதுபோல் தை மாதம் கந்த சஷ்டி, நவராத்திரி பெருவிழா, மார்கழி வழிபாடு, நடராஜர் தேரில் நகர்வலம் வருதல் இப்படி ஆண்டுதோறும் திருவிழாக்களும் மிக விமர்சையாக அபிராமிக்கு நடந்து வருவது வழக்கம். இந்த நிலையில் தான் 2011ல் முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சிப்பீடத்தில் ஏறியதில் இருந்து தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. அதுபோல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நியமித்து வந்தார். அதுபோலதான் திண்டுக்கல்லில் உள்ள இந்த அபிராமி அம்மன் கோவிலுக்கு கடந்த செப்டம்பர் 2013-ல் அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக எஸ்.கே.சி.சண்முகவேல், அரவிந்தா செல்போன் வீரக்குமார், நிர்மலா, மலைச்சாமி ஆகியோரை நியமித்தனர்.
அதைத் தொடர்ந்து கோவிலிலுள்ள அடிப்படை வசதிகளையும், பக்தர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் இந்த அறங்காவலர் குழுவினர் நிறைவேற்றியும் வருகிறார்கள். இது சம்மந்தமாக அறங்காவலர் குழு உறுப்பினரான அரவிந்தா செல்போன் வீரக்குமாரிடம் கேட்டபோது- திண்டுக்கல் மாநகரிலுள்ள முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கடந்த 1970-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி அப்போது இருந்த செயல் அலுவலர் தசரதன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஓ.சின்னசாமிபிள்ளை ஆகியோர் தலைமையில் வைகாசி விசாகம் தெப்ப உற்சவம், மலைக்கோட்டையின் கீழ் உள்ள கோட்டைக்குளத்தில் நடைபெற்று இருக்கிறது. அதன்பின் நிதி நெருக்கடியினால்தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. அதனால் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆசியுடன் மீண்டும் தெப்ப உற்சவத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதை தொடர்ந்து தான் நாங்களும் எங்க ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரிடம் இந்த விசயத்தை கொண்டு சென்ற போது தெப்ப உற்சவம் நடத்துவதற்கு அனுமதியும் கொடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதியும் பெற்று நடத்துங்கள் என்று கூறினார்கள். அதை தொடர்ந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதியிடம் அனுமதி பெற்றபின் தான் 54 வருடங்களுக்கு பிறகு கடந்த மே 22ம் தேதி மலைக்கோட்டை கீழ் உள்ள கோட்டைக்குளத்தில் மிக விமர்சையாக அபிராமி தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் நகர முக்கிய விஐபிக்கள், அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அபிராமி அம்மனின் தெப்ப உற்சவத்தில் கலந்துகொண்டனர். இந்த உற்சவத்திற்கு தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவில் மற்றும் பத்ரகாளி யம்மன் கோவிலிலிலிருந்து அபிராமி பத்மகிரீஸ்வரருக்கு சீர்வரிசையும் கொண்டுவந்து கொடுத்தனர். இப்படி 54 வருடங்களுக்கு பிறகு தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் தெப்பத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றதை பாராட்டி பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுப்ரமணி, மேயர் இளமதிஜோதிபிரகாஷ், செயல் அலுவலர் தங்கலதா கோவில் மற்றும் குருக்கள் குருநாதன் உட்பட அறங்காவலர் குழுவினர், முக்கிய பிரமுகர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் இனி வருடந்தோறும் தெப்ப உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெறும் என்று கூறினார்.
இது சம்மந்தமாக மற்றொரு அறங் காவலர்குழு உறுப்பினரான சண்முகவேலிடம் கேட்டபோது... திண்டுக்கல் மாநகரின் காவல்தெய்வமாக அபிராமி அம்மன் இருந்து வருகிறது. நாங்கள் அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்ற பின் கோவில் வளர்ச்சிக்காகவும், பக்தர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுத்துவருகிறோம். 16 வருடங்களுக்கு பிறகு முதன் முதலில் கோவிலுக்கு ஓதுவார் மூர்த்தி நியமனம் செய்து இருக்கிறோம். அதுபோல் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டினால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரிடமும் அறங்காவலர் குழுமூலம் வலியுறுத்தியபோது அவர்கள் அதற்கு அனுமதியும் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தான் திண்டுக்கல்லுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு வைத்தோம். அதை தொடர்ந்துதான் முதல்வரிடம் அனுமதி பெற்று மூன்றரை கோடியில் திருமண மண்டபம் கட்ட முதல்வரும் அனுமதி கொடுத்து கடந்த நவம்பர் மாதம் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்அதைத் தொடர்ந்து திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இப்படி பக்தர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் நவீனமுறையில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் மணமகன், மணமகள் அறை, சமையலறை, தங்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, ஜெனரேட்டர் அறை, நவீன சாப்பாடுக் கூடம், அலுவலக அறை இப்படி விசாலமான சகலவசதிகளுடன் கட்டி கூடிய விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர இருக்கிறோம் என்று கூறினார்!