மாதந்தோறும் இரண்டு ஏகாதசிகள் வீதம் ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் 11-ஆவது நாள் ஏகாதசி வரும். இவற்றில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். மேற்கூறிய 24 ஏகாதசிகளில் சில சிறப்புமிக்க ஏகாதசிகளையும் அவற்றின் பலன்களையும் இங்கு பார்ப்போம்.
சபலா ஏகாதசி
தை மாத தேய்பிறையில் வருவது. சம்பாவதீ என்னும் நாட்டையாண்ட மாகிஸ்மதன் என்பவருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களுள் முதல் பிள்ளையின் பெயர் லும்பகன். இவன் எல்லாவித தீய பழக்க- வழக்கங்களுக்கும் அடிமையாகி மன்னரின் செல்வங்களை செலவிட்டு அழித்துவந்தான். அதனால் கோபம்கொண்ட மன்னர் அவனை நாடுகடத்தினார். ஆனால் அவ்வப்போது அவன் நாட்டிற்குள் ரகசியமாக நுழைந்து திருட்டுத் தொழில் செய்துவந்தான். ஒருநாள் திருடும்போது அகப் பட்டுக்கொள்ள, அவனை அனைவரும் அடித்து உதைத்தனர். "நான் மன்னரின் மகன் லும்பகன்' என்று அவன் கதறி அழ, அவனை விட்டுவிட்டார் கள். பின்னர் அவன் காட்டுக்குள் சென்று விட்டான். சரியான உணவு கிடைக்காமல் உடல்மெ−ந்து துன்புற்றான். அப்போது அசரீரியாக ஒரு குரல், "லும்பகா, ஒருநாள் முழுவதும் இரவு தூங்காமல், உணவருந்தாமல் உபவாசமிருந்தால் உனது பாவங்கள் அகலும்' என்றது. அதன்படி அவன் நடக்க, "நீ காட்டைவிட்டு நாட்டுக்குச்செல். உனக்கு ராஜபதவி காத்திருக்கிறது' என்று அசரீரி சொன்னது. லும்பகன் நாட்டிற்குச் செல்ல, "மன்னர் இறந்துவிட்டதால் இனி நீங்கள்தான் நாட்டையாள வேண்டும்' என்று கூறி, அவனை யானைமீதேற்றி அழைத்துச்சென்றார்கள். லும்பகனும் சிறப் பாக நாட்டையாண்டு பின்னர் வைகுண்டம் அடைந்தானாம். அவன் விரதமிருந்த நாள் சபலா ஏகாதசியாகும். இந்தநாளில் விரதம் அனுஷ்டித்தால் வாழ்க்கையில் உயர் பதவிகள் தேடிவரும்; வாழ்க்கை மேன்மை அடையுமாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/egadesi.jpg)
புத்ரதா ஏகாதசி
தை மாத வளர்பிறையில் வருவது. பத்ராவதி நகரின் மன்னரான சுகேதுமான்- சம்பகா தம்பதிகளுகு எல்லா செல்வவளங்கள் இருந்தும் புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்தக் கவலையோடு மன்னர் குதிரையில் வேகமாகச் செல்லும் போது ஒரு குளக்கரையைக் கண்டதும் குதிரை அங்கேயே நின்றுவிட்டது. அந்தக் குளத்தினருகே ஒரு ஆசிரமம் இருப்பதைக் கண்ட மன்னர் அங்குசென்று முனிவர்களை தரிசனம் செய்து தன் மனக்குறையைக் கூறினார். அதற்கு முனிவர்கள், "மாசிமாதம் வரவிருப்பதால் நாங்கள் இங்கு நீராடவந்தோம். இன்று புத்ரதா ஏகாதசி. நீங்களும் இந்தக் குளத்தில் நீராடி உபவாசமிருந்து பெருமாளைப் பூஜித்தால் புத்திரபாக்கியம் கிட்டும்' என்றனர்.
மன்னரும் அதன்படி உபவாசமிருந்து பின்னர் முனிவர்களை வணங்கி நன்றி கூறிவிட்டு நாடு திரும்பினார்.
மறுவருடமே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த தாம். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னர், தன் நாட்டிலுள்ள மக்களுக்கு இவ்விரதம் குறித்து விளக்கி, புத்ரதா ஏகாதசியை அனைவரும் அனுஷ்டிக்க வேண்டுமென்று ஆணையிட்டாராம்.
ஆமலகி ஏகாதசி
பங்குனி மாத வளர்பிறையில் வருவது. இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிட்டுமாம். ஒரு கோதானம் செய்தாலே மிகவும் சிறந்தது என்றிருக்கும்பட்சத்தில், ஆயிரம் கோதானம் செய்தால் எவ்வளவு பலன் கிட்டுமென்று எண்ணிப் பாருங்கள்... ஆமலகி ஏகாதசியன்று ஒரு நெல்−மரத்தடியில் பெருமாளைப் பிரதிஷ்டைசெய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து பூஜித்து வணங்கினால் மேற்கண்ட பலன்கள் கிட்டுமாம்.
விஜயா ஏகாதசி
பங்குனி மாத தேய்பிறையில் வருவது. நாம் எடுத்த காரியத்தில் எந்தவித தடங்கலும் ஏற்படாமல் வெற்றியடைய கடைப்பிடிக்கவேண்டிய சிறந்த விரதம்தான் இந்த ஏகாதசி விரதம். ஒரு வாழையிலையில் நவதானியங்களை (எள் தவிர) பரப்பிவைத்து, அவற்றின்மேல் பெருமாள் திருவுருவப்படத்தை வைத்துப் பூஜிக்கவேண்டும். மறுநாள் துவாதசியன்று ஒரு சாதுவுக்கு அல்லது ஏழைக்கு அன்னதானம் செய்து, பூஜை செய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்குத் தந்துவிட்டு பின்னர் நாம் உண்ணவேண்டும். ராமபிரான், ஒரு முனிவர் கூறிய ஆலோசனையின்படி விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, இவ்விரத மகிமையால் இராவணனிடமிருந்து சீதையை மீட்டுவந்தாராம்!
பாபமோசனிகா ஏகாதசி
சித்திரை மாதத் தேய்பிறையில் வருவது. "சைத்ர ரதம்' என்ற வனத்தில் மேதாவி என்ற ரிஷி தவம் செய்துகொண்டிருந்தார். மஞ்சுகோஷை என்ற தேவலோக மங்கை அங்குவந்து முனிவரை மயக்கிட, மேதாவி முனிவரும் அவள் அழகில் மயங்கி அவளுடன் சிலநாள் வாழ்ந்தாராம். சிறிதுகாலம் கழித்து, "நான் புறப்படப்போகிறேன்; அனுமதி தாருங்கள்' என்று அந்த தேவமங்கை கூற, கோபமுற்ற மேதாவி முனிவர், "என் தவத்தை, காலத்தை வீணாக்கிய நீ பேயாகப் போவாய்' என்று சபித்தார். பேயுருவில் அந்த முனிவரை சோகத்தோடு வணங்கி, சாபம் நீங்க வழிகூறுமாறு கேட்டாள் தேவமங்கை. அதற்கு முனிவரும், "என்மீதும் தவறுள்ளது. அதனால நீ பாபவிமோசன ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து உன் சாபத்தை நீக்கிக்கொள்' என்றார். அவரும் அதே விரதத்தை மேற்கொண்டு இழந்த தவ வலி−மையைப் பெற்றாராம். செய்த பாவங்கள் அகல இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பது நல்லது.
காமதா ஏகாதசி
சித்திரை மாதம் வளர்பிறையில் வருவது. நாகலோகத்தின் அரசன் புண்டரீகன். அவனது அவையில் லலி−தன்- ல−தா என்னும் கந்தர்வ தம்பதியர் கானம்பாடுவது வழக்கம். ஒருசமயம் லவிதன் மட்டும் தனியாகப் பாடும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. அவனால் சரியாகப் பாடமுடியவில்லை. இதனால் கோபமடைந்த மன்னர், "நீ ராட்சதனாகப் போவாய்' என்று சாபம் கொடுத்தார். இதனால் அவன் ராட்சதனாக மாறித் துன்புற்றான். ஒரு முனிவரின் ஆலோசனைப்படி, சித்திரை மாதத்தில் வரும் காமதா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க, பெருமாளின் அருளால் ராட்சத உருவம் மாறி மீண்டும் கந்தர்வ உருவத்தைப் பெற்றானாம். வேண்டிய விருப்பங்கள் நிறைவேறவேண்டுமானால் காமதா ஏகாதசி விரதமிருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
வருதினி ஏகாதசி
நமது வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கி, சகல செல்வங்கள் பெற அனுஷ்டிக்கவேண்டிய விரதம், வைகாசி மாத தேய்பிறையில் வரும் வருதினி ஏகாதசியாகும். பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளிய பாவத்தைப் போக்க சிவபெருமானே இந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பலன் பெற்றார் என்று ஏகாதசி மகாத்மியம் கூறுகிறது. வருதினி ஏகாதசியன்று தானம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்குமாம்.
மோகினி ஏகாதசி
ஸ்ரீராமருக்கு ஒருமுறை வசிஷ்ட முனிவர், "இந்த மோகினி ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும் போக்கக்கூடியது; அறியாமை எனும் இருளைப்போக்கி, பகவானின் அருள் கிடைக்கச் செய்து வைகுண்டம் சேர்ந்துவிடும் சக்திவாய்ந்த விரதம்' என்று விளக்கினாராம். ராமரும் இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையறிந்து வியந்தாராம்.
அபரா ஏகாதசி
ஆனிமாத தேய்பிறையில் வருவது. இவ்விரதம் அனுஷ்டித்தால் கொடிய பாவங்கள்கூட நம்மைவிட்டு நீங்கிவிடுமாம். மேலும் பிரயாகையில் மாசி மகத்தன்று நீராடிய புண்ணியமும், நவராத்திரி விரதமிருந்து காசி விஸ்வநாதரைப் பூஜித்த பலனும், கயாவில் முன்னோர்க்கு பிண்டமளித்த புண்ணியமும், கேதாரம் சென்று ஈஸ்வரரை தரிசித்த பலனும் அபரா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்!
நிர்ஜலா ஏகாதசி
ஆனிமாத வளர்பிறையில் வருவது. வியாசமுனிவர் ஒருமுறை, "எல்லா துன்பங்களையும் நீக்கும் விரதம் ஏகாதசி விரதம்தான்' என்று பஞ்சபாண்டவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்போது பீமன் அவரிடம், "என்னால் ஒருபொழுது உபாசமிருப்பதே முடியாது. ஒருநாள் முழுவதும் எப்படி உபவாசமிருப்பேன். எனக் குத் தகுந்தவாறு ஒரு ஏகாதசி விரதமிருந்தால், அனைத்து ஏகாதசி விரதமிருந்த பலன் கிடைக்கிற விரதமிருந்தால் கூறுங்கள்' என் றான். அவரும் நிர்ஜலா ஏகாதசி விரதம் பற்றிக் கூறி, "அன்றைய தினம் தண்ணீர்கூட பருகாமல் பெருமாளைப் பூஜித்து வணங்கினால் எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை அடையலாம்' என்று விளக்கினார்.
பீமனும் நிர்ஜலா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து, அன்று முழுவதும் தண்ணீர்கூட பருகாமல் விரதமிருந்து மறுநாள் துவாதசியன்று உணவுண்டான். அந்த துவாதசி பாண்டவ துவாதசி என்று பெயர் பெற்றது. பீமன் கடைப்பிடித்ததால் பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
எனவே ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை விரதமிருந்து அனுஷ்டித்தாலும், சிறப்புமிக்க மேற்கூறப்பட்ட சில ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டித்து வைகுண்ட வாசனின் அருள்பெறுவோமாக!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/egadesi-t.jpg)