"பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து' என்பது நல்லதொரு பொன்மொழி. சாப்பாட்டு ராமன்கள் உருவாக்கிய பழமொழி என்று இதை கேலி செய்வர். ஆனால் அதன் ஆன்மிக அடிப்படையைப் புரிந்துகொண்டால் உண்மை தெளிவாகும். விசேஷங்களில் அனைவரும் சேர்ந்துண்பதை "பந்தி' என்பர். "பங்க்தி' என்ற வடமொழிச் சொல்லே தமிழில் பந்தி என்றானது. நல்ல குணம் படைத்த ஒருவர் சாப்பிட்டாலே அங்கு பரிமாறும் உணவு முழுவதும் புனிதமடையும். அப்படிப்பட்ட நல்லவரை "பங்க்தி பாவணர்' என குறிப்பிடுவர். சேர்ந்து சாப்பிடுபவர் நல்லவராக இருந்தால் அந்த நற்பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்பதால் "பந்திக்கு முந்து' என்று சொல்லிவைத்தார்கள்.

eshan

ஒரு ஞானியிடம் சிலர், ""நாங்கள் புனித நதிகளில் நீராடி புண்ணியம் சேர்க்கச் செல்கிறோம்! நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும்'' என அழைத்தனர். ""இப்போது வர இயலாது'' என்றவர், அவர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்து, ""நீங்கள் புண்ணிய நதிகளில் மூழ்கும்போதெல்லாம் இந்த பாகற்காயையும் நனைத்து திரும்பக் கொண்டுவந்து என்னிடம் தாருங்கள்'' என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

அவர் அந்தப் பாகற்காயை நறுக்கி, ஆளுக்கொரு துண்டு கொடுத்து, ""புனித நதிகளில் மூழ்கி வந்த பாகற்காய்... சாப்பிட்டுப் பாருங்கள்... இனிக்கும்'' என்றார்.

Advertisment

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள், வாயில்போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. பாகற்காய் தன் குணத்தைக் காட்டியது. ஞானி அவர்களிடம், ""புனித நதிகளில் மூழ்கினாலும், பாகற்காய் அதன் சுபாவத்தை மாற்றிக்கொள்ளாது. அதுபோல, நமது கெட்டகுணங்களை மாற்றிக் கொள்ளாமல் எந்த புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கினாலும் பயன்கிடைக்காது'' என்றார்.

மேலும் அவர் ஒரு கதையைச் சொன்னார்.

வியாபாரி ஒருவரின் பணப்பை காணாமல்போனது. அதைக் கண்டு பிடித்துத் தருவோர்க்கு பரிசு தருவதாக அறிவித்தார். வேலய்யன் என்ற இளைஞன் இறைவனுக்கு காணிக்கை தருவதாக வேண்டிக்கொண்டு தேடமுயன்றான். அவனது நம்பிக்கை வீண் போகவில்லை. பணப்பையை ஒரு புதரில் கண்டெடுத்து வியாபாரியிடம் சென்று ஒப்படைத்தான். ஆனால் பணத்தாசை பிடித்த வியாபாரி பரிசு தர விரும்பவில்லை.

Advertisment

""பணத்தோடு தங்க மோதிரம் ஒன்றும் இருந்தது. அதைக் காணவில்லையே. அதையும் கொடு. அப்புறம்தான் பரிசு தருவேன்'' என்றார் வியாபாரி. வேலய்யன் வருந்தினான். அங்கு வந்த ஊர்த்தலைவர் வியாபாரியின் தந்திரத்தைப் புரிந்து கொண்டார்.

eshanஅவர் சமயோசிதமாக, ""பணத்தோடு மோதிரம் இருந்ததாக நீங்கள் சொல்வதால், இது உங்களுடையது இல்லையென்று தெரிகிறது. எனவே இதை ஊர்ப் பொதுப் பணமாகக் கருதி பத்தில் ஒரு பங்கு இறைவனுக்கு காணிக்கை தந்துவிட்டு, மீதிப்பணம் வேலய்யனுக்கே'' என தீர்ப்புக் கூறினார் ஊர்த்தலைவர்.

தனக்குக் கிடைத்த பணப்பையை தானே வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்காமல், அப்பணம் உரியவருக்கே சேரவேண்டும் என்றும், அதில் ஒரு தொகையை இறைவனுக்கும் காணிக்கை யாக செலுத்தலாம் என்ற நல்ல எண்ணத்துடனும் செயல்பட்டதால் பன்மடங்கு பலன்களை வேலய்யன் அடைந்தான். ஊர்த்தலைவர் ரூபத்தில் ஈசனே வந்து தீர்ப்பு சொன்னதாக மகிழ்ச்சியில் மூழ்கினான்.

எந்த நிலையிலும் தன் சுபாவத்தை மாற்றிக்கொள்ளாத பாகற்காயைப்போல வியாபாரி இருந்ததால் பணப்பையை இழந்ததுடன் பாவத்தையும் சம்பாதித்துக் கொண்டார். ஆக, மனதில் மாற்றம் வந்தால்தான் புண்ணியம் ஏற்படும்.

அத்தகைய நல்ல மாற்றத்தினைத் தந்து மனமகிழ்ச்சியை வரவழைக்கின்ற புண்ணிய பூமியாய்த் திகழ்கின்ற திருத்தலம்தான் இன்னம்பூரில் உறையும் ஸ்ரீ எழுத்தறிநாதர் திருக்கோவில்.

இறைவன்: எழுத்தறிநாதர், எழுத்தறி நாதேஸ்வரர்.

இறைவி: நித்ய கல்யாணி, சுகந்த குந்தளாம்பாள் (பூங்கொம்பு நாயகி).

புராணப் பெயர்: திருஇன்னம்பர்.

ஊர்: இன்னம்பூர்

தலவிருட்சம்: செண்பகமரம்

. தீர்த்தம்: ஐராவத தீர்த்தம்.

சுமார் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் காவிரி வடகரையில் 45-ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையது.

"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று

அழுது காமுற்று அரற்று கின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பூர் ஈசனே!'

-அப்பர்

வங்கியில் நமக்கு கணக்கில்லாமல் இருக்கலாம். ஆனால் பாவபுண்ணியக் கணக்கில் நமது எல்லாச் செயல்களும் அவ்வப்போது வரவு வைக்கப்படுகிறது. வரவு வைப்பவன் சித்ரகுப்தன் அல்ல; சிவபெருமான். இதை அப்பர் தனது பதிகத்தில் அழகாகப் பாடியுள்ளார்.

இறைவனை யாரெல்லாம் அன்பு பெருக் கெடுக்க, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து மலர்தூவித் துதித்து வணங்குகிறார் என்பதையும், யாரெல்லாம் காலத்தை வீணே கழித்து இறைவனைப் புறக்கணிக்கிறார் என்பதையும் இன்னம்பர் ஈசன் எழுதி வைப்பார் என்கிறார்.

eshan

"எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பூர் ஈசனே!'

என்பது நாவுக்கரசரின் வாக்கு. கணக்கு நமக்குத் தெரியும். அதென்ன கீழ்க்கணக்கு? 1-க்கு மேலுள்ள பத்து, நூறு, ஆயிரம் முதலானவை மேல்கணக்கு. ஒன்றுக்குக் கீழுள்ள முக்கால், அரை, கால் முதலியன கீழ்க்கணக்கு.

மூன்றாவது காலான நடக்க உதவும் தடியைக் கைப்பற்றுவதற்கு முன்னரே, எமதூதர்களைக் கண்டு பயப்படுவதற்கு முன்னரே, இடுகாட்டுக்குப் புறப்படும் முன்னதாகவாவது இன்னம்பர் தான்தோன்றியீசனாரை ஒருமுறை நினைக்கவேண்டும்.

மிகமிகத்துல்லியமான கீழ்க்கணக்குமுறை தமிழகத்தில் இருந்தது. முதல் ராஜராஜன் காலத்தில் ஒரு வேலியின் 1-ன் கீழ் 52, 423, 800.000 பகுதிகூட பதிவு செய்யப்பட்ட செய்தி கல்வெட்டில் உள்ளது. மனிதனே இவ்வளவு துல்லியமாகப் பிரிவு செய்தால் மகேஸ்வரன் எப்படி பதிவு செய்வான்!

மனிதர்களுக்கு மட்டும் நான்கு கண்கள் உண்டு. வெளியில் இருப்பன புறக்கண்கள். (ஊனக்கண்கள்). உள்ளே இருப்பன அகக்கண்கள். (ஞானக்கண்கள்). "எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்' என்ற பழ மொழிக்கு, "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு' என்ற குறளில் இன்னும் அழுத்தம் சேர்க்கிறார் திருவள்ளுவர். எல்லாரும் கட்டாயம் தரிசிக்க வேண்டியவரான கணக்கெழுதும் கடவுள் இன்னம்பூரில் எழுத்தறிநாதர் என்ற திருநாமத்துடன் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை நல்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் என்பது கிராமவாசிகளின் சொல்வழக்கு.

யுகந்தோறும் பிரபஞ்சவெளியில் கிரகங்களுக்கெல்லாம் ஒளி தந்த கதிரவன் ஒருசமயம் ஒளி மழுங்கத் தொடங்கினான். இதற்கு விமோசனமாக சிவனாரை வழிபட எண்ணிய சூரியன் செண்பகாரண்யம் என்றழைக்கப்பட்ட இத்தலத்திற்கு வந்து, தான்தோன்றிப் பெருமானை வழிபட்டு மீண்டும் தனது ஒளியினைக் கூட்டிக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. இனன் (சூரியன்) நம்பி வழிபட்டு, பலன் பெற்றதால் இத்தலம் இன்னம்பர் என்றிருந்து தற்போது இன்னம்பூர் என்று போற்றப்படுகிறது.

தல வரலாறு

சுதன்மன் என்னும் ஆதிசைவர் ஒருவர் இன்னம்பூர் ஈசன்மீது இணையிலா காதல் கொண்டவர். நித்திய பூஜையோடு ஆலய நிர்வாகத்தையும் பார்த்து வந்தார்.

அப்போது ஆட்சிபுரிந்த சோழ மன்னன்,

இன்னம்பூர் ஆலயத்திற்குரிய சரியான கணக்குளைக் காண்பித்து கையொப்பம் பெற்றிட உத்தரவிட்டான்.

ஆனால் சூதுவாது அறியாத சுதன்மன் எந்தக் கணக்கினையும் அதுவரை எழுதி வைத்ததில்லை. வருவாயை தனக்கென்று செலவு செய்யாமல் ஆலயத்திற்கே செலவிட்டார்.

அரசனது ஆணையைக் கேட்டு அரண்டுபோன சுதன்மன், அரனார் பாதக்கமலம் பற்றிக் கதறியழுதார். தன்னை வணங்கும் அடியாரை விட்டுவிடுவாரா அந்த ஈசன். கருவறையில் ஓர் ஓலைச்சுவடிக் கட்டினைக் காட்டியருளினார். சுவடிக்கட்டினை எடுத்துச் சென்ற சுதன்மன் அரசன்முன் சமர்ப்பித்தார். அச்சுவடிகளைப் பிரித்துப் பார்த்த அரசன் கணக்குகள் எதுவும் விளங்காமல் குழம்பினான். வேலை மிகுதியால், மறுநாள் இக்கணக்குகளை விவரிக்கும்படி சுதன்மனிடம் கூறியனுப்பினான்.

கணக்கே எழுதாதவருக்கு விவரம் எப்படித் தெரியும்? கலக்கம் கொண்டவராய் கயிலைநாதன் காலடியில் வீழ்ந்து மயக்கமுற்றார்.

உடனே ஈசன் சுதன்மன் வடிவத்தில் அரசர்முன்சென்று தெள்ளத்தெளிவாக விளக்கினார். அரசன் இதுவரை இப்படியொரு கணக்கினைக் கேட்டுத் தெளிந்த தில்லை. சுதன்மனைப் பாராட்டி மகிழ்ந் தான் மன்னன்.

சந்நிதியில் வீழ்ந்து கிடந்த சுதன்மனது கனவில் தோன்றிய எழுத்தறிநாதர், "அரசனது சந்தேகங்கள் சரிசெய்யப் பட்டன' என மொழிந்தார். கண் விழித்தவர் ஏதும் விளங்காமல் கணக்குடன் செல்லவே, "ஏற்கெனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?' என மன்னன் கேட்க, நடந்ததைக் கூறினார் சுதன்மன். அப்போதுதான் இறைவனே வந்து கணக்கு காட்டிய விவரம் தெரிந்தது. மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன் ஈசனுக்கு கோவில் எழுப்பினான். சுவாமிக்கு எழுத்தறிநாதர் என்னும் திருநாமம் உண்டாயிற்று. அடியாரை சோதிப்பதும் பின்னர் அருள்புரிவதும்தான் இனிப்பான வேலையாயிற்றே ஈசனாருக்கு.

அகத்தியர் வழிபட்டது

குறுமுனியாம் அகத்தியர் வடக்கிலிருந்து தென்திசை வரும் சமயம் பற்பல சிவலிங்கங்களைப் பூஜித்து வந்தார்.

அவ்வாறு வந்தவர் இன்னம்பூர் ஈசனை பூஜிக்கலானார். சித்துகளாலும் தவத்தினாலும் சிறப்புப் பெற்ற கும்பமுனி, தேன்தமிழால் திகட்டாத தீஞ்சுவைப் பாடல்களைப் புனைந் திட வேண்டுமென எத்தனித்தார் இறைவன்!

அவர்முன் காட்சிகொடுத்து, தமிழ் எழுத்துகளைக் கற்பித்து, தமிழ் இலக்கணம் முழுவதையும் போதித்தார். சங்கத்தமிழ் வளர்த்த சங்கரனது அருளால் தமிழ் அட்சரங்களைக் கற்று, இலக்கணத்தின் ஆணிவேர்களைப் புரிந்து தேர்ந்தார் அகத்தியர். பின்னர் தமிழில் பாக்கள் பல புனைந்து பலருக்கும் ஞானகுருவானார். அதுமுதல் இத்தல ஈசன் வடமொழியில் அட்சர புரீஸ்வரர் என்றும், செந்தமிழில் எழுத்தறிநாதர் என்றும் பெயர் பெற்றார்.

eshan

சிறப்பம்சங்கள்

 இத்தல இறைவன் சுயம்புமூர்த்தி. எழுத்தறிநாதேஸ்வரர், அட்சரபுரீஸ்வரர், ஐராவதீஸ்வரர், தான்தோன்றீசர் என்ற திருநாமங்கள் இருந்தாலும் பக்தர்கள் மனதில் எழுத்தறிநாதர் என்றே பதிவானதுடன் சொல்வழக்கிலும் உள்ளது.

 இத்தலத்தில் நித்யகல்யாணியம்மை, சுகந்த குந்தளாம்பாள் (பூங்கொம்பு நாயகி) என்று இரண்டு அம்மன்கள் உண்டு.

 மனதிற்குகந்த மணவாளனைத் தேர்வுசெய்யவும், திருமணம் சம்பந்தப்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்களுக்குப் பொருத்தமான வரனை அமையச் செய்யவும் பௌர்ணமியன்று நித்ய கல்யாணியம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்; மனநிறைவான வாழ்க்கை அமையும்.

 தனித்து சாதிக்க நினைக்கும் பெண்கள் சுகந்த குந்தளாம்பாளை வழிபடலாம். சுகந்த குந்தளாம்பாள் என்றால் வாசனை வீசும் கூந்தலை உடையவள் (பூங்குழல் நாயகி) என்று பொருள். அக்ஷ மாலை, நீலோற்பவ புஷ்பம், அபய வரத ஹஸ்தங்களுடன் எழில் சிந்தும் அம்பிகை தவக்கோலத்தில் அருட்காட்சி புரிகிறாள்.

 இது கல்வி அபிவிருத்தியைத் தரும் தலம். பள்ளியில் சேரவுள்ள குழந்தைகள் அதற்குமுன் இங்கு வந்து அர்ச்சனை செய்யலாம். இங்கு நெல்லில் எழுதப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஐந்து வயதிற்குமேலுள்ள குழந்தைகளுக்கு செம்பருத்திப்பூவைத் தட்டில் பரப்பி எழுதப் பயிற்சி தரப்படுகிறது. படிப்பறிவு இல்லாதவர்கள், திக்கித்திக்கிப் பேசுபவர் களுக்கு நாக்கில் நெல்கொண்டு எழுதப் படுகிறது. இதனால் அறிவு கூர்மைபெறும் என்று தலபுராணம் சொல்கிறது.

நவராத்திரி காலத்தில் இவ்வாறு செய்வது மிகுந்த சிறப்பினைத் தரும்.

 விரித்த ஜடாமுடியுடன், இடப்பக்கம் கங்காதேவியும் வலப்பக்கம் நாகமும் கொண்ட நடராஜர் விக்ரகம் சிறப்பு வாய்ந்தது.

 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் இயங்கிவருகிறது இவ்வாலயம்.

 துர்வாச முனிவரின் சாபத்தால் மதம்கொண்ட யானை ஐராவதம், இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றது. அந்த யானையால் உருவாக்கப்பட்ட ஐராவத தீர்த்தம் ஆலயத்தின் எதிரில் அமைந்துள்ளது.

 இங்குள்ள கருவறை விமானம் யானை படுத்திருப்பதுபோல் கஜப்பிருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அனுக்கிரகம் (அருளல்) என்ற ஐந்து தொழில்களையும் இறைவன் செய்வதைக் குறிக்கின்றன.

 கஜப்பிருஷ்ட விமானத்தின் முன்புறம் ரிஷபாரூடர் நடுவே திகழ, இச்சா, கிரியா சக்திகள் இருபக்கமும் வீற்றிருக்க, சுதன்மனும், சோழ மன்னனும் வணங்கிய வண்ணம் சுதைச்சிற்ப வடிவிலுள்ளது தனிச்சிறப்பு.

 குழந்தைப்பேறு இல்லாதோர் தங்களது பிறந்த கிழமை, ஜென்ம நட்சத்திரம், வியாழக்கிழமை, தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷம் இவற்றில் ஏதேனும் ஒருநாளில் இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு காலை நேரத்தில் எண்ணெய் அபிஷேகம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் வீட்டில் குழந்தை விளையாடும்.

 இவ்வூர் "வடகரை இன்னம்பர் நாட்டு இன்னம்பர்' என சோழமன்னன் ராஜகேசரிவர்மன் மற்றும் விஜயநகர மன்னன் வீரகம்பண்ண உடையார் காலத்திய கல்வெட்டு கூறுகிறது. தலவிருட்சம்- செண்பக மரம், தீர்த்தம்- ஐராவத தீர்த்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சூரியன் வழிபட்ட இத்தலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பங்குனி 13, 14, 15, ஆவணி 31, புரட்டாசி 1, 2 தேதிகளில் சுவாமிமீது படர்வது சிறப்பு வாய்ந்தது.

கல்வியில் தேர்ச்சிபெற, பேசாத குழந்தைகள் பேச...

இத்திருத்தலத்திற்கு குழந்தையோடு வந்து அர்ச்சனை செய்து, சுவாமி சந்நிதியில் நாக்கில் அர்ச்சகரால் எழுதப்படவேண்டும். அதன்பிறகு மூன்று திங்கட்கிழமை காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் தங்கள் வீட்டிலுள்ள பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி, அந்த தீபத்தை குழந்தை வணங்க வேண்டும். பிறகு சுவாமிமுன் அமர்ந்து-

"ஓம் அட்சர புரீஸ்வராய நமஹ

ஓம் அகஸ்தியாய நமஹ

ஓம் சரஸ்வதியாயை நமஹ'

என்னும் சுலோகத்தை 54 அல்லது 108 முறை சொல்லவேண்டும். தினசரி ஒரு சொட்டு தேன் நாக்கில் தடவவேண்டும்.

இத்துடன் பொங்கல் அல்லது கேசரி அல்லது கற்கண்டு பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, அப் பிரசாதத்தை உங்கள் தெருவில் உள்ள 16 குழந்தைகளுக்குமேல் வழங்கவேண்டும்.

கல்யாணப் பிரார்த்தனை நிறைவேற...

பௌர்ணமி தினத்தன்று கீழ்க்கண்ட பொருட்களுடன் கோவிலுக்கு வந்து நித்யகல்யாணி அம்பாளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.

மாலை- 1, தேங்காய்- 1, வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம்- 2, எலுமிச்சம்பழம்- 1, ஆண்கள் 60 மஞ்சள், பெண்கள் 61 மஞ்சள்.

(ஆலய அர்ச்சகர்களிடம் தொலைபேசி யில் தொடர்புகொண்டு செல்லவும்).

ஊரின் நடுவே நாற்புறமும் உயரமான அழகிய மதில்களால் சூழப்பெற்று, கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாய்த் திகழ்கிறது ஆலயம். இரண்டு பெரும் பிராகாரங்களைக் கொண்டுள்ளது.

கருவறையானது யானை வலம்வரும் அளவுக்கு மிகவும் விசாலமானது. ஐராவதம் பூஜித்த காரணத்தினால் யானை புகும் அளவுக்கு விசாலமாக அமைத்துள்ள னர் சோழ மன்னர்கள்.

""ஆம்பளைங்க போடறது மனக் கணக்கு; பொம்பளைங்க போடறது வீட்டுக்கணக்கு; ஏழைங்க போடறது நாட்கணக்கு; பணக்காரங்க போடறது பணக்கணக்கு; தீவிரவாதி போடறது பாவக்கணக்கு; அரசியல்வாதி போடறது ஓட்டுக்கணக்கு; ஆன்மிகவாதிங்க போடறது புண்ணியக் கணக்கு; இந்த இன்னம்பூர் ஈசன் போடற கணக்கு எப்பவுமே நியாயக்கணக்குதான். நல்லோர் கணக்கினையும், தீயோர் கணக்கினையும் தன்பால்வைத்து, தக்கமுறையில் அருளும்- எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பூர் ஈசனே என்பதை அனுபவித்தவர்கள் ஆணித்தரமாகச் சொல்கிறார்கள்'', என்று, ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணிய குருக்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்!

பள்ளிக்கூடம் திறக்கவுள்ள இந்தக் கட்டத்தில் இன்னம்பூர் ஈசனடி பணிவோம். இகபரசுகங்களைப் பெறுவோம்!

நடைதிறப்பு: காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரை; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரை.

ஆலயத்தொடர்புக்கு:

என். பாலசுப்பிரமணிய குருக்கள்,

அ/மி எழுத்தறிநாதர் திருக்கோவில், இன்னம்பூர் (அஞ்சல்),

தஞ்சை மாவட்டம்- 612 303.

அலைபேசி: 96558 64958, 97513 73432.

வாட்ஸ்அப்: 88254 19400.

அமைவிடம்: கும்பகோணம்- சுவாமிமலை பேருந்து சாலையிலுள்ள புளியஞ்சேரியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. பஸ் வசதி உண்டு.