தை மாதத்தில் பௌர்ணமி சேருகிற பூச நாள் மிகவும் விசேஷமானதாகும். இது "தைப்பூசத் திருநாள்' என கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் பார்வதி தேவியோடு பரமசிவன் ஆனந்த நடனமாடினார்.
"பஞ்ச துந்துபி ஒலியும் வேத ஒலியும் கந்தர்வருடைய கீத ஒலியும் மிக்கெழ, ஞான சபையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு நின்று ஆனந்த நடனம் அருளினார்' என்றொரு பாடல் கூறுகிறது.
சிவபெருமான் உமையவ ளோடு நடனமாடியது ஏன்?
வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் ஆகியோரும், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களும், திருவுடை அந்தணர் மூவாயிரவரும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண விரும்பினர். ""எம்பெருமானே... இந்த ஞான சபையில் பார்வதி தேவியாரோடு இன்றுமுதல் எக்காலமும் ஆன்மாக்களுக்கு ஆனந்த நடனத்தைப் புலப்படுத்தியருளும்'' என்று மெய்சிலிலிர்க்க, நெஞ்சுருக வேண்டினார்கள். ஈசனும் அதற்கிசைந்தார். தேவர்கள் உயர்ந்த பொன்னாலாகிய ஒரு பெருஞ்சபையை உருவாக்கினார்கள். தேவர்களும், பிறமுனிவர்களும் வணங்க, சிவபெருமான் சிவகாமியம்மையாரோடு திருநடனத்தை அருளு வாராயினர்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் சிவாலயத் தில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
இக்கோவிலைக் கட்டியவரும் பல ஆன்மிகத் திருப் பணிகளைச் செய்தவருமாகிய வீரசோழன் என்ற மன்னர், இங்குள்ள சிவலிங்கத்திற்கு தைப்பூசநாளில் புனித நீராட்டுதலைத் தொடங்கிவைத்தார் என்பது வரலாறு. பூசத்தன்று எம்பெருமான் காவிரியிலுள்ள கல்யாணத் தீர்த்தத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தமளிப்பார். அன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து விழாவில் கலந்து கொள்வார்கள் என்பது நம்பிக்கை.v திருஞானசம்பந்தர் இத்தலத்தின் பெருமையினை-
"பூசம்புகுந்து ஆட பொலிந்து அழகாய்
ஈசன் உறைகின்ற இடைமருதூர்...'
என்று பாடியுள்ளார்.
மேலும் திருஞானசம்பந்தர் தைப்பூசத்தின் மகத்துவத்தை-
மாமயிலைக் கைப்பூசு நீற்றான்
கபாலீச்சரம் அமர்ந்தான்...
தைப்பூசங் காணாதே போதியோ
பூம்பாவாய்...
என்று போற்றிப் பாடியுள்ளார்.
தைப்பூசத் திருநாளில் அதிகாலையில் நீராடி, சிவாலயம் சென்று ஈசனைத் தொழுவோருக்கு காசி சென்று கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும்; பாவங்கள் அகலும் என்பதில் ஐயமில்லை.