"மண்ணில் இருவர் மணவாளர்
மண்ணளந்த கண்ணவன்,
இவன்பேர் காளமுகில் கண்ணன்
அவனுக்கூ ரெண்ணில்
அணியரங்க மொன்றே
இவனுக்கூர் எண்ணாயிரம்'
என சிலேடைக்கவி காளமேகப் புலவர் தனது ஊரென்று குறிப்பிடும் "எண்ணாயிரம்' சிறந்த வைணவத் தலமாகத் திகழ்கிறது.
இங்கே நான்கு திருக் கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் மகா விஷ்ணு. 1. அழகிய சிங்கர் எனப்படும் லட்சுமி நரசிம்மர், 2. ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வைகுண்டவாசப் பெருமாள், 3. லட்சுமி வராகர், 4. வேணு கோபாலர்.
முனிபுங்கவர்களும், சித்தபுருஷர்களும் லட்சுமி நரசிம்மரின் திவ்விய தரிசனத்தை இந்த நடுநாட்டுப் பதியில் தந்தருள வேண்டினர். அதன்படி இங்கே காட்சி கொடுத்தருளினார் பரந்தாமனாகிய ஸ்ரீமந் நாராயணர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ennairam.jpg)
முன்பு பருத்திக்கொல்லை என்று அழைக்கப்பட்ட இவ்வூரில் வசித்துவந்த தீவிர வைணவ பக்தையின் (பருத்திக் கொல்லைம்மாள்) வேண்டுகோளுக்கிணங்கி, இங்குவந்த இராமானுஜர், தனது கூர்மையான அறிவாலும் அருளாலும், ஊருக்கு அருகேயுள்ள எண்ணாயிரம் மலையில் துறவறம் மேற்கொண்டிருந்த 8,000 சமணர்களையும் வைணவத்தைத் தழுவச் செய்தார். இன்றும் இவர்களது வம்சாவளிகள் தங்களை அஷ்ட சகஸ்ர கோத்திரர் என்றே கூறிக்கொள்கின்றனர்.
பல்லவர்களால் எழுப்பப் பட்டு, பின்னர் சோழர்களால் பல மாற்றங்கள் அடைந்துள்ளது இவ்வாலயம். ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகச் சோழன் தனது ஒப்பற்ற கலைத்திறமையைக் கொண்டு, சிறியதாக இருந்த இத்திருமால் ஆலயத்தை கருங்கற்த் தளியாக, பேராலயமாக விரிவுபடுத்தி னான்.
பராந்தகச் சோழனால் சீரமைக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் அவனது பேரனான இராஜராஜ சோழனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் காலத்தில் எசாலம், எண்ணாயிரம், நந்திவாடி மற்றும் பிரம்மதேசம் ஆகிய நான்கு ஊர்களும் இராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
இந்நான்கு ஊர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்களைக் குடியமர்த்தினான் மாமன்னன் இராஜராஜன். இவனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்த இவனது மகன் இராஜேந்திர சோழன் எண்ணாயிரத்தில் வேத பாடசாலை ஒன்றை நிறுவினான். அந்தணர்களுக்கு வேண்டிய பொன்னும், நெல்லும் கொடுத்து, அவர்கள் தங்குமிடத்தையும் அமைத்துத் தந்துள்ளான். சிவ வேதியர்களுக்கும், வைணவப் பட்டர்களுக்கும் போதிய நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளான்.
தரையிலிருந்து சுமார் நான்கடி உயரத்தில், ஆலயம் முழுவதும் கருங் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இருபக்க திண்ணைகளுடன் கூடிய முன்மண்டபம். நடுவே படிகள். உள்ளே நீண்ட மண்டப வரிசை. இங்கே வேணுகோபாலர் காட்சிதருகிறார். இடை மண்டபத்தின் இடப்புறம் லட்சுமி வராகர் அற்புதக் கலைப் படைப்பாகத் திகழ்கிறார்.
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் வீற்றிருக்க... முன்னே லட்சுமி நரசிம்மர் வீற்றருள்கிறார்.
பிரதோஷ வேளைகளிலும், சுவாதி நட்சத்திரத்தன்றும் இங்கு நரசிம்மருக்கு நடந்திடும் திருமஞ்சன சேவையில் கலந்து கொண்டு, நரசிம்மருக்கு பாலாபிஷேகம் செய்து, பானகம் நிவேதனம் செய்பவர்களது தீராத கடன் தொல்லை தீர்கிறது. அவர் களது மாந்திரீக மற்றும் அமானுஷ்ய பிரச்சினைகள் நிவர்த்தியாகின்றன.
குழந்தைவரம் வேண்டுபவர்கள் ரோகிணி நட்சத்திரத்தன்று வேணுகோபாலருக்கு திருமஞ்சனம் செய்து, பால் பாயசம் நிவேதித்துப் பயனடைகின்றனர்.
திருமண வரம் வேண்டிவருபவர்கள் லட்சுமி வராகருக்கு மாலைசாற்றி பிரார்த் திக்கின்றனர்.
விழுப்புரம்- செஞ்சி பேருந்து மார்க்கத் திலுள்ள நேமூரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எண்ணாயிரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-10/ennairam-t.jpg)