உமாபதிசிவம், தில்லைவாழ் அந்தணர்கள் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஏகோபித்த பூஜை உரிமைகளைப் பாரம்பரியமாக தம்வசம் உடையவர்கள். இந்த வகுப்பில் பிறந்த உமாபதிசிவம் வேதங்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள் என அனைத்திலும் நல்ல ஞானம் பெற்றார். இவர் தில்லைக் கோவிலின் பிரசித்திபெற்ற சிவாச்சாரியராக தீட்சிதர் வகுப்பில் விளங்கினார். இவரின் ஞானத்தைக் கண்ட சோழமன்னன் இவரை கௌரவிக்கும் வகையில் முத்துப் பல்லக்கு, வேலையாட்கள் என்று அனைத்தையும் பரிசளித்தான்.
ஒருமுறை அவர் கோவிலில் பூஜை முடித்தபின், அக்கால வழக்கப்படி முன்னே கையில் தீப்பந்தமேந்தி சிலர் செல்ல, இவர் பல்லக்கில் அமர்ந்து பின் செல்லலானார். அது ஒரு பகல்பொழுது. பல்லக்கு ஒரு பிரதான சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. வழியில் மறைஞானசம்பந்தர் என்ற ஒரு பெரிய மகான், தன் சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இந்த பல்லக்கு ஊர்வலத்தைக் கண்ணுற்ற அவர் சற்று உரக்க, ""அங்கே பார்! பகல் குருடன் ஒருவன் பட்ட மரத்தில் ஊர்வலம் போகிறான்'' என்று கூறினார்.
இதைக்கேட்ட உமாபதி சிவம் அந்த கூற்றின் உள்ளர்த்தம் உணர்ந்தவராய், பல்லக்கு சாளரத்திலிருந்து எட்டிப்பார்த்தார். உமாபதி சற்று பக்குவப்பட்ட ஆன்மாவாக இருப்பதாலும், அவர் தனக்கான ஞானகுருவைத் தேடிவந்ததாலும், இந்த வார்த்தைகள் அவரைக் கோபம் கொள்ள வைக்கவில்லை.
மாறாக கூறியவர் ஒரு மகான் என்று புரிந்துகொண்டார். உமாபதிசிவம் பார்த்த இடத்தில், மறைஞானசம்பந்தருக்கு பதிலாக அங்கு நடராஜர் வீற்றிருப்பதைக் கண்டார்.
உடனே பல்லக்கிலிருந்து இறங்கி, மறைஞானசம்பந்தர் இருந்த இடம்சென்று அவர் கால்களில்விழுந்து வணங்கினார். ஆனால் மறைஞான சம்பந்தரோ, உமாபதிசிவம் எழுந்திருப்பதற்குள் அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். உமாபதியும் அவரைத்தொடர்ந்து ஓட ஆரம்பித்தார். அது கோடைக்காலமானதால், மறைஞானசம்பந்தரும், உமாபதியும் அதிக தூரம் ஓடமுடியாமல் ஒரு நெசவாளர் வீட்டுத் திண்ணையில் தளர்ந்துபோய் அமர்ந்தனர்.
மறைஞானசம்பந்தர் அந்த வீட்டில் தன் களைப்பைப் போக்க உணவு வேண்டினார்.
அந்த வீட்டிலோ நூலிற்கு இடவேண்டிய கஞ்சி மட்டுமே இருந்தது. அதை மறைஞானசம்பந்தர் வாங்கிப் பருகினார். அப்போது அந்த கஞ்சி அவரது முழங்கையில் வழிந்தோடவே, அதை குரு பிரசாதமாகக் கருதி உமாபதிசிவமும் அந்த சில துளிகளைப் பருகினார்.
இந்த நிகழ்வைக் கேள்வியுற்ற தில்லைவாழ் அந்தணர்கள், எச்சில் உணவை உண்டதால் உமாபதி சிவத்தை கோவிலிலிருந்தும் ஊரிலிருந்தும் ஒதுக்கிவைத்தனர். இதைப்பற்றிக் கவலைப்படாத உமாபதிசிவம், மறைஞான சம்பந்தரின் சீடனாகி முடிவில் ஞானமடைந்தார். பிற்காலத்தில் கொற்றவன் குடி என்ற இடத்தில் ஒரு மடம் அமைத்து நல்போதனைகளைச் செய்துவந்தார்.
இவ்வாறு இருக்கும்போது, சிதம்பரம் கோவில் திருவிழாவில் கொடியேற்ற முயன்றபோது கொடி ஏறவில்லை. மாறாக, "உமாபதிசிவம் வந்து ஏற்றினால் தான் கொடி ஏறும்' என்று அசரீரி கேட்கவே, தில்லைவாழ் அந்தணர்கள் உமாபதிசிவத்தை சந்தித்து, கோவிலுக்கு வந்து கொடியேற்றி வைக்குமாறு வேண்டினர்.
கோவிலை அடைந்த உமாபதிசிவம், கொடிக்கயிறைத் தொடாமல் கொடிமரத்தை நோக்கி நான்கு கவிகள் பாடினார். யாருடைய முயற்சியுமில்லாமல் கொடி தானாகவே ஏறியது. (இன்றளவும் பெரும்பாலான சிவன் கோவில்களில் கொடியேற்றத்தின்போது இந்தப்பாடல் பாடப்படுகிறது.) இந்த கொடியேற்றம் முடிந்தவுடன், தம் குருவான மறைஞானசம்பந்தருக்கு கஞ்சியளித்த செங்குந்தர் சமுதாய மக்களை அழைத்து, அவர்கள் தம் குருவின் பசிதீர்த்த காரணத்தினால் அன்றிலிருந்து அவர்களே கோவில் விழாவிற்கு கொடி கொடுக்கும் சிறப்பினைக் கொடுத்தார். இந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப் படுகிறது.
இவ்வாறு உமாபதிசிவம் இறையரு ளோடு சிதம்பரத்தில் வாழ்ந்துவந்தார்.
அதேசமயத்தில் சம்பன் என்ற புலையர் இனத்தைச்சேர்ந்த ஒருவன் சிவன்மீது அழியா பக்திகொண்டவனாயிருந்தான். அவனால் அக்கால மரபின் படி, கோவிலினுள் சென்று நடராஜரை வணங்கமுடியாமல் இருந்தது. இருந்தாலும் சம்பனது சொல்லிலும், செயலிலும், உணர்விலும் சிவன்பால் உள்ள அன்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.
சம்பனுக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் அவனுக்குக் காட்சியளித்தார். வேண்டும் வரம் யாதென கேட்க, சம்பனும் தமக்கு மோட்சம் அளித்தருளுமாறு வேண்டினான். சம்பனின் பக்தியை உலகுக்கு உணர்த்தவும், உமாபதிசிவத்தின் மேன்மையைக் காட்டவும் எண்ணிய சிவபெருமான், சம்பனை உமாபதிசிவத்திடம் சென்று தீட்சை பெறுமாறு, தாமே எழுதி கையொப்பமிட்ட ஒரு ஓலையைக் கொடுத்தார்.
சம்பன், உமாபதிசிவத்தை சந்திக்க பெருமுயற்சி எடுத்தான். ஆனாலும் காலச்சூழ்நிலை இடம்தரவில்லை. தினமும் உமாபதிசிவத்தின் மடத்திற்கு விறகு கொண்டுவைக்கும் வேலையைச் செய்துவந்தான். அதைக்கொண்டு எப்படியாவது உமாபதிசிவத்தைப் பார்த்துவிடலாமென்று ஒரு எண்ணம். இந்த செயல் வெகுநாட்கள் நீடித்தது. ஆனால் உமாபதிசிவத்தைப் பார்க்க முடியவில்லை. இதற்குமேலும் தாமதம் வேண்டாமென்று நினைத்த சிவபெருமான், பெரும் மழை பெய்யச்செய்தார். இதனால் மடத்திற்கு சம்பனால் விறகு கொடுக்க முடியாமற்போனது.
மேலும் விறகில்லாமல் மடத்தில் காரியங்கள் எதுவும் செய்யமுடியாமல் தடைப்பட்டது. இதைக்கேள்வியுற்ற உமாபதிசிவம், விறகு வைப்பவரை அடுத்த நாள் தம்மிடம் அழைத்து வருமாறு ஆணையிட, அவருடைய சீடர்கள் சம்பனை உமாபதிசிவத்திடம் கொண்டுசேர்த்தனர். சம்பனும் ஈசன் கொடுத்த ஓலையை அவரிடம் கொடுத்தான்.
ஈசனின் கையொப்பமும், சம்பனின் அன்பையும் புரிந்துகொண்ட உமாபதிசிவம், சம்பனுக்கு நயன தீட்சை அருளினார். தீட்சை கொடுத்த மாத்திரத்தில் சம்பன் ஒளியாக மாறி ஈசனிடம் சேர்ந்தான். உமாபதிசிவமும் சம்பனும் கால தேச வர்த்தமானங்கள் கடந்து இன்றளவும் வாழ்வதற்குக் காரணம் அவர்களின் தூய அன்பு மட்டுமே. குடிப்பிறப்பும், கல்வியுமே ஈசனை அடையத் தகுதிகள் என்ற தவறான கோட்பாட்டை நீக்கித் தெளிவுகொடுக்கவே, ஈசன் உமாபதிசிவம் மற்றும் சம்பனைக்கொண்டு இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார்.