வ்வொரு மாதமும் பக்திசெய்வது பற்றியும், அறம்‌ செய்வது பற்றியும், அன்பு செலுத்துவது பற்றியும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் குறித்தும், இயற்கையுள் மறைந்திருக்கும் இறைவனின் கருணை குறித்தும் எழுதி வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த நான்கு மாத காலமாக, கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றின் இரண்டாவது அலை பரவி, அந்த நுண்கிருமியானது காது, மூக்கு, தொண்டை என்று- குறிப்பாக மனித உடலின் ஒன்பது வாயில்களில், தலைப்பகுதியில் அமைந்துள்ள ஏழு துவாரங்களில் புகுந்து உடல் ஆரோக்கியத்தை அழிக்கும்வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த ஏழு வாயில்களில் இந்த வைரஸ் கிருமி எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிய மருத்துவ உலகம் நமது மூக்கிலும் தொண்டையிலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பக்திக்கும் தூய்மைக்கும் என்ன சம்பந்தம்? பக்தி செய்ய உடல்தூய்மை வேண்டும். உள்ளத்தூய்மையும் வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டே பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, "உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று சொல்-லிவைத்தார் திருமந்திரம் தந்தருளிய திருமூலர். அது எத்தகைய உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பலரது வீடுகளில் பார்க்கிறோம். பூஜையறை என்னும் பெயரில் கிடைத்த படங்களையெல்லாம் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். படங்கள் அதிகரிக்க அதிகரிக்க பூஜையறை குப்பைத் தொட்டிபோல மாறிவிடுகிறது. கேட்டால் நேரமில்லை என்று சொல்கிறார்கள்.

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழா னாலும் குளித்துக் குடி' என்று சொல்லி-வைத்த நம் முன்னோர்களின் அறிவுரையை நாம் மறந்துபோனதன் விளைவு, கொரோனா போன்ற கொடிய விளைவுகளுக்கெல்லாம் காரணமாகிறது.

பல்லாயிரங்கணக்கான குடும்பங்களை நிர்க்கதி ஆக்கியிருக்கிறது இந்த வைரஸ். அதே சமயம் இந்த கிருமிமேல் நம்மால் குறைசொல்ல முடியாது. நாம் மறந்துபோன பழைய பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வைத்திருக் கிறது இது. நமது இயற்கை உணவை கடைப்பிடிக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாம் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தவு டன், கை கால்களை அலம்பி, துணிகளைத் துவைத்து விட்டு குளிப்பது என்பது போன்ற உயரிய பழக்கங் களை மீண்டும் நாம் கடைப் பிடிக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இந்த வைரஸ் குறித்தே பேசுகிறேனே என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். நான் ஒரு பரம்பரை சித்த வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவன்; மரபியல் தமிழ் மருத்துவ பட்டயப்படிப்பு படித்த வன்; கடந்த 15 வருடங்களாக யோகப் பயிற்சியின்மூலம் உடல், மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிமுறைகளைச் சொல்லி-வருகிறவன் என்னும் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

Advertisment

ஒன்றை நிச்சயமாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்றைக் கண்டு பயப்படுகிறவர்களே பெருமளவில் பாதிக்கப் படுகின்றனர். அதை துச்சமென நினைத்து, எச்சரிக்கை உணர்வுடன், தைரியமாக இருப்பவர் களைக் கண்டு இந்த வைரஸ் பயந்து ஓடி ஒழிந்தே போய்விடும். நாம் கவனமாக, எச்சரிக்கை உணர்வோடு செயல்படவேண்டும் என்பதே முக்கியம்.

"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்'

Advertisment

என்கிறார் வள்ளுவர். எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னதாகவே அறிந்து தம்மை காத்துக்கொள்ளவேண்டும் என்னும் அறிவுடையவர்க்கு, அவர் அஞ்சி நடுங்கக் கூடிய எந்த ஒரு துன்பமோ நோயோ இல்லை என்கிறார்.

ss

தூய்மைக்கும் பக்திக்கும் என்ன தொடர்பு? அதிகாலையில் எழுந்து சூரிய வணக்கம் செய்யும் பயிற்சி செய்யவேண்டும். இதைச் செய்யும்முன் காலைக்கடன்களை முடித்துவிடவேண்டும். அதன்பின் குளித்து முடித்து, அருகிலுள்ள கருங்கற்களால் கட்டப்பட்ட பழமையான ஆலயம் சென்று இறைதரிசனம் செய்து, கோவிலினுள்ளே ஏதேனும் ஓரிடத்தில் கிழக்குநோக்கி அமர்ந்து, இறைவனை நினைத்து நமது மூச்சுக் காற்றை ஒரு பத்துநிமிட நேரம் கண்களை மூடி கவனிக்கவேண்டும். மேலும் கோவி-லில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் வில்வ இலை, துளசி இலை, துளசி தீர்த்தம் போன்றவற்றை அங்கேயே அமர்ந்து ருசித்து சாப்பிட வேண்டும். இது நமது உடலுறுப்பு களைத் தூய்மை செய்யும். துளசியானது நமது பிராணவாயுவின் (ஆக்சிஜன்) அளவை அதிகப்படுத்தும்.

இதற்கு ஏதேனும் அறிவியல் சார்ந்த ஆதாரம் உள்ளதா என்று கேட்பது சுலபம். அவ்வாறு கேட்பவர்கள் அவர் களே ஆராய்ச்சி செய்யட்டும். ஆராய்ச்சி யின் முடிவில் இது உண்மையென்று அவர்களுக்கே புரியும்.

சில நாட்களுக்குமுன் சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்திலுள்ள ஆராய்ச்சி யாளர்கள் "முத்ரா சக்தி'யைப் பற்றிய ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். அந்த முத்திரையின் பெயர் "-ங்க முத்ரா.' லிங்க முத்திரைப் பயிற்சியில் ஈடுபடும் "போது பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது என்றும்; உடலி-ன் வெப்பநிலை சமநிலையில் உள்ளது என்றும் கண்டறிந்தனர். ("தினசரி வாழ்வில் நோய் தீர்க்கும் முத்திரைப் பயிற்சி' எனும் நூல், எனது எழுத்தில் நக்கீரன் வெளியீடாக வந்துள்ளது. இயன்றவர்கள் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள். தொலைபேசி: 044- 4399 3000).

இதுபோன்று உடல்நலம், மனநலம் சார்ந்த பல்வேறு விஷயங் களை ஆராய்ந்து பயிற்சிசெய்து, அதன் பயனை அனுபவித்து, அது தங்கள் சந்ததிக்குப் பயன் படவேண்டும் என்னும் நோக்கில் நம் முன்னோர்கள் அவற்றை பொக்கிஷங் களாக வழங்கிச் சென்றுள்ளனர். அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். சுத்தம் சோறுபோடும் என்பது பழமொழி; சுத்தம் பக்தியுடன் கூடிய சுகாதாரத்தைக் கொடுக்கும் என்பது புதுமொழி.

அவ்வாறாயின் இந்த வைரஸ் நோய் யாரைத் தாக்குகிறது? தூய்மை இல்லாதவரையா? ஆம்; உணவில் ஒழுக்கம், உடையில் தூய்மை- இதில் ஒழுங்காக இருப்பவரின் உடல் ஆரோக் கியமாக இருக்கும். ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், பலதரப்பட்ட நவீன உணவுகள்- நமது உடலுக்கு சேராத உணவுகளை ருசியாக இருக் கிறது என்பதற்காக உண்பதன் விளைவு, இன்று குழந்தைகள்முதல் 40 வயதுள்ளோர்வரை மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இயற்கை உணவை மறந்து ஆரோக்கிய வாழ்வைத் தொலைத்தோம். எனவே உணவே மருந்து என்பதை நாம் மீண்டும் கைக்கொள்ள வேண்டும்.

"மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபா டில்லை உயிர்க்கு'

என்கிறார் வள்ளுவர். உடல்நிலை, காலச் சூழ்நிலை ஆகியவற்றோடு மாறுபாடு கொள்ளாத உணவை, அதிகம் உண்ணவேண்டும் எனும் ஆசைக்கு இடம்கொடுக்காமல், சற்று வயிற்றில் இடமிருக்குமளவு குறைத்துண்ண வேண்டும். அவ்வாறு உண்பவரின் உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாவதில்லை.

நாம் அனைவரும் சத்தான உணவை சரியான விகிதத்தில் உண்ணும்பொழுது நமது, உட-லிலுள்ள செல்கள், திசுக்கள் உட்பட அனைத்து அவயங்களுக்கும் தேவையான உயிராற்றல், பிராணவாயு போன்ற நன்மைகள் கிடைக்கப் பெற்று, நம் உடல் சிறப்பாக இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல், காலை வெய்யிலை யாரெல்லாம் அனுபவிக்கிறார்களோ, அவர் களுக்கு இயற்கையில் மறைந்திருக்கும் இறைவனின் அருளால் "விட்டமின்- டி' சக்தி கிடைக்கிறது. எந்த மருத்துவமனையிலும் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை.

கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. சொலவடை என்றால் அறிவுரையை ஒரு அடையாளமாகக் கூறுவதென்று பொருள்.

அதாவது அதிகாலை மூன்று மணிக்குத் துயிலெழுபவன் முனிவன்; நான்கு மணிக்கு எழுபவன் ஞானி; ஐந்து மணிக்கு எழுந்து கொள்பவன் அறிஞன்; ஆறு மணிக்கு எழுபவன் அறிவாளி; ஏழு மணிக்கு எழுபவன் எருமை.

இதில் நாம் எந்த ரகம் என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்துவிட்டோம் என்றால், நாம் அறிஞனாகிறோமோ இல்லையோ- நிச்சயம் ஆரோக்கியத்திற்கு சொந்தக்காரனாக மாறிவிடுவோம். இவ்வாறு இயற்கைப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வருபவரின் உடலானது நோய் எதிர்ப்பாற்றலைத் தானாகவே பெருக்கிக் கொள்கிறது. எவரொருவர் இயற்கை உணவோடு சீரான யோகப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறாரோ, அவரது உடலானது எதிர்ப்பு சக்தியையும் உயிராற்றலையும் அதிகரித் துக் கொள்கிறது. அப்போது அவரது உடலென்னும் வீட்டுக்குள் எந்த வைரஸும் நுழையாது. ஒருவேளை தப்பித்தவறி நுழைந்து விட்டாலும், "உடலை இவ்வளவு உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறானே! இவன் உடலில் நாம் ஒன்றும் செய்யமுடியாது' என்று, இரண்டொரு நாளில் அந்த வைரஸ் ஓடிப்போய்விடும்.

இவற்றையெல்லாம் விட்டவிட்டு, நேரம் காலம் பார்க்காமல் சத்துக் குறைவான உணவு களை உண்டு, இரைப்பையை குப்பைத்தொட்டி யாக வைத்திருப்பவரின் உடலெனும் வீட்டுக்குள் இந்த கிருமி நுழைந்தால், அவரது உடலிலுள்ள செல்களுக்கும் பிரதான உடலுறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

தூய்மைக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்? திருமந்திரச் சிற்பி திருமூலர் கூறுவதைக் கேட்போம்.

"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.'

முன்பெல்லாம் என் உடலை ஒரு பாவச் சுமை யாகக் கருதினேன். அவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த நான் இந்த உடலினுள்ளே இருக்கும் சிறந்த செல்வத்தைக் கண்டுகொண் டேன். உட-லினுள் இருக்கும் அந்த செல்வ மென்பது உத்தமனாகிய பரம்பொருள் சிவம் என்பதை உணர்ந்தேன். இறைவா, நீ என்னுள் குடியிருக்கிறாய் எனும் உண்மையை நான் உணர்ந்தபின், இவ்வுடலைப் போற்றி, வாழ்த்தி வணங்கி பேணிப் பாதுகாத்து வருகிறேன்.

இப்போது புரிகிறதல்லவா! உடலுக்குள்ளே தான் இறைவன் குடிகொண்டிருக் கிறான். உடலென்னும் கோவிலை நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மையே ஆரோக்கியத்தின் முதல் படி. தூய்மையான ஆரோக்கியமே இறைவனைக் காண பக்திசெய்ய சிறந்த வழி. தூய்மையாக இருப்போம்; சுகாதாரம் போற்றுவோம்; ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்; பரம்பொருளை நோக்கி பக்திசெய்வோம்.

இந்த பேரிடர்க் காலத்தில், பரம்பரை சித்த வைத்தியக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்னும் வகையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்கவும் உதவும் சில துணை உணவுகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன். பயன்படுத்துங்கள்.

உணவே மருந்து

1. சமையல் மஞ்சள் தூள் மூன்று சிட்டிகை, கருப்பு மிளகுத்தூள் ஒரு சிட்டிகை, தேன் ஒரு ஸ்பூன்- இவை மூன்றையும் குழைத்துக்கொள்ளவும். காலையில் பல் துலக்கியபின் சிறிது தண்ணீர் அருந்திவிட்டு, இந்த கலவையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். காலை ஒரு வேளை மட்டுமே. 10 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இதில் பாதியளவு போதுமானது.

பயன்கள்: மஞ்சளிலுள்ள "குர்க்குமின்' என்னும் வேதிப்பொருளும், மிளகிலுள்ள "பெப்ரைன்' என்னும் வேதிப்பொருளும் சேர்ந்து தேனுடன் வேதிவினை புரிந்து, வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளைத் தடுக்கவும் விரட்டவும் தேவையான சக்தியை உருவாக்குகின்றன. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொண்டை அழற்சி, சுவாசப் பிரச்சினை, நுரையீரல் தொற்று அனைத்தையும் எதிர்க்கும்; தடுக்கும். மலச்சிக்கல் தீரும்.

2. கற்பூரவள்ளி இலை- 4; துளசி இலை- 4; வேப்பிலை- 4; காம்பு நீக்கிய வெற்றிலை- 1; மிளகு- 2. மேற்சொன்ன நான்குவகை இலைகளையும் கிள்ளிப்போட்டு, மிளகைத் தட்டிச் சேர்த்து, ஒரு டம்ளர் (100 மில்லி லிட்டர்)

நீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்டியதும் வெதுவெதுப்பான சூட்டில், உணவுக்குப் பின்பு ஒருவேளை மட்டும் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை பருகலாம்.

பயன்கள்: சளி, இருமல், தொண்டைவலி, சுவாசப் பிரச்சினை, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பிராணவாயுவின் அளவு அதிகரிக்கும்.

3. சுக்குப்பொடி கால் ஸ்பூன்; தனியா விதை (கொத்தமல்லி விதை) ஒன்றரை ஸ்பூன் (பொடித்தது) இரண்டையும் கலந்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, வடித்து தேநீர்போல அருந்தலாம்.

பயன்கள்: தலைவலி- தீரும். பசி உணர்வைத் தூண்டும். தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். மிகச்சிறப்பாக பித்தப்பையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

4. ஆவி பிடித்தல்: ஒரு கைப்பிடியளவு நொச்சி இலை; ஒரு கைப்பிடியளவு புதினா இலை; மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்த்து, நான்கு -லிட்டர் தண்ணீரை கொதிக்கவைத்து இந்தப் பொருட்களை அதில் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஆவி பிடிக்கவும். கிருமியைப்பற்றிய கவலையே வேண்டாம்.

5. நொச்சி இலை- 5; துளசி இலை- 5 சேர்த்துக் கசக்கி, அவ்வப்போது இடைவெளிவிட்டு முகர்ந்துவந்தால் பிராண வாயுவின் அளவு சீராவதை உணர முடியும்.

பொதுவெளியில் இடைவெளியைக் கடைப்பிடிப்போம். தூய்மையாக- சுகாதார மாக இருப்பதில் சுயநலமாக இருப்போம். அப்போது அனைவருக்குமான ஆரோக்கிய நல்வாழ்வென்பது பொதுநலமாக மாறும்.

அச்சமென்பது எதிர்மறையான ஆற்றலாகும். ஆனால் மிக உயர்ந்த தைரியம், தன்னம் பிக்கை என்பது நேர்மறை ஆற்றல் எனும் இறையாற்றலாகும். பயத்தை அகற்றுவோம். தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் கிருமியை எதிர்கொண்டு வெல்வோம். தூய்மையான பக்தி செய்வோம். அரனின் அன்பால் ஆரோக்கியத்தைக் காப்போம்.