ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதரும், தாயாரும் ஒரு குழந்தையை வளர்த்து, அவனை பெரும் பண்டிதனாக ஆக்கியுள்ளனர். அந்த தெய்வீக அதிர்ஷ்டசாலி குழந்தையின் பெயர்தான் பராசரபட்டர் (ஸ்ரீரங்கநாதபட்டர்). இவரைப் போற்றும் ஒரு ஸ்லோகம்.
(தனியன்)
"ஸ்ரீவத்ஸசின்ஹா குலவாரிதி ரத்னதீபம்
ஸ்ரீரங்கநாத குருவர்யம் தனயகபாத்ரம்
சிஸ்யார்த்தி நாஸஹரம்
ஆஸ்ரித கல்பவிருடிம்
ஸ்ரீரம்யகேசரி குருத்தமம் ஆஸ்ரயாம.'
ஸ்ரீ வத்ஸ குலத்தில் பிறந்தவரும், ரத்னமாக (கல்வி, ஞானம்)
பிரகாசிப்பவரும், குருவின் கருணைக்குப் பாத்திரமானவரும், சீடர்களின் நலனை விரும்புபவரும், கற்பக மரமாக விளங்குபவருமான ஸ்ரீபராசரபட்டரை (பராசுரபட்டர்) அடிபணிந்து உய்வோமாக என்கிற பொருளில் சொல்லப் பட்டுள்ளது.
ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரர் என்கிற பெயரைக்கொண்ட வைணவ பெரியவர், சிறந்த அறிவாளி. காஞ்சிபுரம் அடுத்த கூரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். இவரது ஆன்மிக செயலாலும், வைணவ சித்தாந்த்தில் இருந்த பற்று மற்றும் பக்தியின் காரணமாக இவரை கூரத்தாழ்வார் (1010-1116) என மரியாதையுடன் அழைக்கப்பட்டார். பெரும் செல்வந்தரான இவர் தினமும் ஏழைகளுக்குத் தவறாமல் அன்னதானம் வழங்கும் திருத்தொண்டை செய்துவந்தார். ஸ்ரீஇராமானுஜரின் உபதேசங்களை ஏற்று அவரது வழியைப் பின்பற்றவேண்டும் என்பதால் எல்லா செல்வங்களையும் துறந்து காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்து அங்கு ஏழ்மையான நிலையில் கோவில் அருகே வசிக்கத் தொடங்கினார்.
அதிலும் வீடுதோறும் சென்று பஜனை பாடியவண்ணம் உணவு மற்றும் தானியங் களைப் பெற்று உஞ்சவிருத்தி நடைமுறையில் அவரும் அவரது மனைவி ஆண்டாளும் எளிமையான வாழ்க்கையை நடத்திவந்தனர்.
ஸ்ரீரங்கநாதப் பெருமாள்மீது கொண்ட பக்தியின் காரணமாக கோவிலில் கைங்கர்யம் செய்துவந்தனர்.
ஒருநாள் உஞ்சவிருத்தி சென்ற சமயத்தில் உணவு தானியங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் கையுடன் வீட்டுக்கு வந்தார். இதுவும் பெருமாளின் எண்ணம்தான் என நினைத்து இருவரும் பட்டினியுடன் இருந்தனர். அன்று இரவு நேரத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அரவணை பிரசாதம் நைவேத்தியம் செய்வதற்காக ஆலயமணி அடிக்கப்பட்டது. மணியோசையை கேட்ட ஆண்டாள் தன் மனதிற்குள், "ரங்கநாதா உனக்கு மட்டும் அருஞ்சுவை உணவு; உன் பக்தனான எங்களுக்குத்தான் எதுவும் இல்லை'' என மனவேதனை யுடன் நினைத்தாள். பக்தையின் மன வேதனையை உணர்ந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில் அர்ச்சகரிடம் பட்டர் தனக்குப் படைத்த பிரசாதத்தை கூரத்தாழ்வார் வீட்டுக்கு எடுத்து செல்லுமாறு அசரீரியாக உத்தரவிட்டார்.
பெருமாளின் உத்தரவு என்பதால் கோவிலில் பணிபுரியும் ஸ்தலத்தர்கள், பட்டர்கள், முக்கியஸ்தர்கள் பிரசாத குடைக்கு மரியாதை தரும்வகையில் மேளவாத்தியம், குடையுடன் கூரத்தாழ்வார் வீட்டிற்கு மிகுந்த மரியாதையுடன் சென்றனர். இதனை அறிந்த கூரத்தாழ்வார் ஆச்சரியப்பட்டு தன் மனைவியிடம் வினவ அவள் தன் மனதில் நினைத்தத்தைக் கேட்டு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அருளியுள்ளார் என பக்திப் பரவசத்துடன் கூறினாள். இதைக்கேட்டு அனைவரும் வியப்பு அடைந்தனர்.
பெருமாளின் பிரசாதம் என்பதால் இரண்டு கைப்பிடி அளவு மட்டுமே எடுத்து இருவரும் அன்றிரவு உண்டனர். நீண்ட நாட்களாக குழந்தை இல்லையே என ஏங்கியிருந்த இத்தம்பதியினருக்கு பெருமாளின் அருள் பிரசாதத்தை சாப்பிட்ட தன் பலனாக தெய்வீக அம்சத்துடன் இரட்டை ஆண் குழந்தைகள் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரம், புதன்கிழமையன்று பிறந்தனர்.
கூரத்தாழ்வாரின் குருவான ஸ்ரீ இராமனுஜர் முதல் குழந்தைக்கு பராசுர மகரிஷியின் நினைவாக பராசுர் என்ற பெயரையும், இரண்டாவது குழந்தைக்கு பகவான் வேத வியாசரின் நினைவாக வியாசர் என்ற பெயரையும் சூட்டினார். இரண்டு குழந்தைகள் இருந்ததால் முதல் குழந்தையை கூரத்தாழ்வார் கோவிலுக்கு கைங்கர்யம் செல்லும்போது உடன் எடுத்துச்செல்வார்.
கூரத்தாழ்வார் கோவில் தூணில் குழந்தையைத் தூங்கவைக்க தூளி கட்டிவிட்டு கோவில் தொண்டுக்குச் சென்றுவிடுவார்.
அந்த சமயத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளும், தாயாரும் குழந்தையை தூங்கவைப்பது, உணவு ஊட்டுவது போன்ற செயல்களை மனித வடிவில் வந்து செய்வது வழக்கம். இதனால் ஸ்ரீரங்கநாதரின் வளர்ப்பு மகனாகவே பராசுரர் வளர்ந்துவந்தான். சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் பெருமாளின் அருளால் தன் குருவான எம்பார் ஸ்வாமிகளிடம் கற்றுத்தேர்ந்தார். இவரும் தன் தந்தையைப் போன்று பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். எனவே இவருக்கு பராசுரபட்டர் என்கிற பெயர் வந்தது.
இவரது மேதாவி தனத்தைப் போற்றும் வகையில் இவரது இளம்வயதில் நடந்த சம்பவத்தைச் சொல்லுவதுண்டு. ஸ்ரீரங்கத்தில் அந்த நாட்களில் தங்கி இருந்த வைணவப் பெரியவர்களிடம் சமய வாதம்புரிய வெளியூரிலிருந்து ஒரு வயதான அறிஞர் வந்திருந்தார். இதைக்கேட்ட சிறுவன் பராசுரர், சகல சாஸ்திரங்களைக் கற்ற அவரிடம் ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றின் மணலை ஒரு கைப்பிடி எடுத்து இதில் எவ்வளவு மணல் இருக்கிறது எனக் கேட்டான்? அந்த அறிஞரோ பதில் எதுவும் சொல்ல முடியாமல் திணறினார். சிறுவன் அவரைப் பார்த்து, என் கையில் இருப்பது ஒரு பிடி அளவு மணல் தான் எனச் சொல்லத் தெரியாத நீங்கள் எப்படி சகலத்தை அறிந்தவர் என ஒப்புக்கொள்வது என மடக்கினான். சிறுவனின் புத்திசாலித் தனத்தை மெச்சிய அவர் பிற்காலத்தில் மிகப்பெரிய பண்டிதராக வருவான் என ஆசி கூறி ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்று விட்டார்.
ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்குத் தொண்டுசெய்துகொண்டே பல பக்தி ஸ்லோகங்களையும், நூல்களையும் எழுதினார். அவற்றில் முக்கியமானது "ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்' (பெருமாளைப் போற்றும் ஸ்தோத்திரம்), "ஸ்ரீ குணரத்ன கோஷம்', (தாயாரின் குணத்தை போற்றும் ஸ்தோத்திரம்), விஷ்ணு சகஸ்சர நாமாவுக்கு விளக்கவுரை மற்றும் வைணவ சித்தாந்தம் பற்றிய நூல்களை எழுதியுள்ளார்.
இந்த நூல்கள்யாவும் விசிஷ்டாத் வைதத்திற்கு உரம் சேர்ப்பவையாக அமைந்துள்ளது.
இதுதவிர ஸ்ரீரங்கநாதப் பெருமான்முன்பு புராணங்களைச் சொல்லும் திருப்பணியை யும் செய்துவந்தார். அப்படி ஒருநாள் பராசரபட்டர் ஏகாதசி நாளில் கைசிக புராணத்தையும், அதன் அர்த்தத்தை யும் சொல்லும்போது பெருமாளே மிகவும் மகிழ்ந்து, தன் பக்தனான பராசுர பட்டருக்கு மோட்சம் (திருநாடு) தருவதாக கூறினார்.