லகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும், பிறப்பினால் உண்டாகும் கர்மப் பலன்களை அனுபவித்துவிட்டு மோட்சத்தை அடையவேண்டும் என்பதே விதியாகும். மோட்சம் எங்கே உள்ளது என்று சிலர் கேட்கக்கூடும். மோட்சம் அடைந்தவர்கள் சொல்வதில்லை; சொல்பவர்கள் அடைவதில்லை. இதையே 'கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்பர். மோட்சம் அடைவதற்கு முழுமையான நம்பிக்கையே வழியாகும்.

sorgavasal

கங்கையானது இமயத்திலிருந்து கீழே இறங்கும் முகத்துவாரத்தின் ஆரம்பத்தில் குளித்தெழுபவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கே குளித்துக்கொண்டிருந்தனர். இதைக் கண்ணுற்ற பார்வதிதேவி சிவபெருமானிடம், ""இவ்வளவு மக்களும் சொர்க்கம் சென்றால் அங்கு இடமில்லாமல் போகுமே. இங்கு நீராடுபவர்கள் அனைவரும் உண்மையிலேயே சொர்கத்திற்குச் செல்வார்களா?'' என்று கேட்டாள்.

அதற்கு சிவபெருமான், ""அப்படியல்ல; யார் ஒருவர் இந்த நதித் துவாரத்தில் குளித்தெழுந்தால் தான் செய்த அனைத்து பாவங்களும் தொலைந்தன என்றும், தான் அப்பழுக்கற்றவராவேன் என்றும் உறுதியாக நம்புகிறாரோ, அவரே சொர்க்கத்தை அடையமுடியும். முதலையானது அதே சங்கமத்தில் எப்போதும் மூழ்கிக் கொண்டிருக்கிறது; ஜீவிக்கிறது. அது சொர்க்கத்துக்கு வருவதில்லையே. ஏனெனில் முதலையிடம் அத்தகைய சங்கல்பமும் நம்பிக்கையும் இல்லை. இதனை நிரூபித்துக் காட்டுகிறேன்'' என்று சொல்லி ஒரு சிறிய நாடகத்தை நடத்தினார்.

கங்கையாற்றங் கரையில் ஒரு வயதான கிழவர், குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டு கை கால்கள் ஊனமாகி, மரணப்படுக்கையில் சொல்லொணா துயருடன் இருந்தார். அவருக்கு அருகில் நல்ல அழகு வாய்ந்த, இளம்வயதுள்ள அவரது மனைவி, கணவர் மரணமடையும் தறுவாயில் இருப்பதைக்கண்டு மிக்க துயரத்துடன் அழுது கொண்டிருந்தாள். காண்போர் இதைக்கண்டு வருந்தினர். அதே நேரத்தில் சிலர் பெண்ணின் அழகையும் கண்டு மகிழ்ந்தனர். சற்றுநேரத்தில் வயதான கிழவர் இறந்துவிட்டார்.

நண்பகல் வேளை. கிழவரின் மனைவி, அந்திசாயும் நேரத்திற்குள் பிணத்தை அடக்கம்செய்ய மயானத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்; அதற்கு அங்கு கூடியிருந்தோர் உதவிசெய்ய வேண்டுமென்று சொல்லிக் கதறியழுதாள்.

""என் கணவர் சிறந்த சிவபக்தர். எனவே அவரது பிணத்தைத் தொடுபவர் எந்த ஒரு பாவத்தையும் செய்யாதவராக இருக்க வேண்டும். இறப்பதற்குமுன் என் கணவர் என்னிடம் ஒரு சங்கல்பத்தையும் வாங்கிக்கொண்டார். "பாவம் செய்தவர்கள் என் பிணத்தைத் தொடாமல் இருக்கும்படி பார்த்துக்கொள். அப்படி மீறுபவர்கள் அடுத்த பிறவியில் கழுதையாகப் பிறப் பார்கள்' என்று சொன்னார்'' என்று நிபந்தனையையும் விதித்தாள்.

அங்கிருந்தவர்களெல்லாம் பிணத்தைத் தொடத் தயங்கினார்கள். கங்கை நதியில் குளித்துத் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள நினைத்தவர்கள் யாரும் இந்தப் பெண்ணுக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. ஏனெனில் இந்த ஆற்றில் குளித்தால் நாம்செய்த எல்லா பாவங்களும் நீங்கி நாம் பரிசுத்தமாகிவிடுவோமா என்பதில் சிறிது ஐய உணர்வு அவர்களுக்கிருந்தது. அந்தப் பெண்ணுக்கு உதவிசெய்யப்போய், அவள் சொன்னதுபோல அடுத்த பிறவியில் கழுதையாகப் பிறந் தால் என்ன செய்வதென்று எண்ணினர்.

நேரமோ கடந்துகொண்டிருந்தது. அப்பொழுது பிச்சைக்காரனைப்போல தோற்றம்கொண்ட ஒருவன் கங்கையில் மூழ்கியெழுந்து அந்தப் பெண்ணிடம் வந்தான். ""அம்மணி, நான் உலகத்திலுள்ள எல்லா பாவங்களையும் செய்த மகாபாவி. ஆனால் இந்த கங்கையின் சங்கமத்தில் குளித்ததால் அவையெல்லாம் நீங்கப்பெற்றேன். நான் உங்கள் குறையைத் தீர்க்க சித்தமாக இருக்கிறேன். அருள்கூர்ந்து அனுமதியுங்கள். இந்த வயோதிகரின் பிணத்தைத் தக்கவாறு நான் அடக்கம் செய்கிறேன்'' என்று பணிவோடு கூறினான். உடனே அவ்விடத்திலிருந்த பெண்ணும் மறைந்தாள்; பிணமும் மறைந்தது.

சிவபெருமான் பார்வதி தேவியிடம், ""இந்த ஜீவனே சொர்க்கத்திற்குச் சொந்தமானவன். நீராடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் சொர்க்கத்திற்குச் செல்லத் தகுதியானவர்கள் அல்ல'' என்று கூறி, சொர்க்கத்தை அடைய திடமான நம்பிக்கை எவ்வாறு உதவும் என்பதை உணர்த்தினார்.