வர்தா புயல் வந்தது; நிஃபா வைரஸ் வந்தது; எபோலா வைரஸ் வந்தது. இதற் கெல்லாம் முன்னோட்டமாக சுனாமியெனும் பேரழிவு வந்தது. இப்படி பல எதிர்மறை (negative) நிகழ்வுகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
வர்தா புயலுக்குப்பிறகு, கொடுமையான "கொரோனா' தொற்று நோய் பரவிய சூழ்நிலை. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு. இல்லாதவர் எவரும் பேரழிவைப்பற்றிக் கவலைப்படவில்லை. கொள்ளையடித்து சேர்த்துவைத்தவரும், உள்நாட்டில் பதுக் கியவரும், வெளிநாட்டில் வங்கிகளில் பதுக்கியவரும் உறக்கமில்லாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். தனிமை எப்படிப்பட்டது? இது ஒரு தனிமனிதனின் பிரச்சினையா? தனிமை ஆரோக்கியமானது என்பதை நம் முன்னோர்கள் சொல்லிலியிருக்கிறார்கள். குறிப்பாக, "தனித்திரு, விழித்திரு, பசித்திரு' என்பதையெல்லாம் இராமலிலிங்க வள்ளலாரின் படைப்புகளில் நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.
உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா தனிமைச்சிறையில் சுமார் 25 ஆண்டுகாலம் இருந்தார். சிறைவாசம் முடிந்து வெளியே வந்ததும், தென்னாப்பிரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அந்நாட்டின் ஜனாதி பதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருட்டுச்சிறையில் 25 ஆண்டுக்காலம் இருந்த நெல்சன் மண்டேலாவுக்கு அளப்பரிய மனோதைரியம், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல், இவற்றையெல்லாம் கடந்து நன்மையே நடக்குமென்ற தன்னம்பிக்கை இருந்தது. இதுவே அவரை உயர்த்தியது. தன்னம்பிக்கை எனும் நேர்மறை ஆற்றல் (positive)நல்ல சிந்தனை, ஒழுக்க சிந்தனை, கருணை, பக்தியுடன்கூடிய இறைசிந்தனை, தனிமையாக இருக்கமுடியுமெனும் தன்னம்பிக்கை ஆகியவையெல்லாம் எப்பேற்பட்ட வைரசையும் அழித்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
ஒருவர் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகிக் கொண்டேயிருந்தால், அவரது உடல், மனம், புத்தி அனைத் திலுமுள்ள கழிவுகள் மிக எளிதாக வெளியேறிவிடும்.
அவர் ஒரு முழுமையான நேர்மறை சக்தி கொண்டவராக இருப்பார். எந்த நோயையும் எதிர்க்கக்கூடிய ஆற்றல் உடலிலிலும் மனதிலும் உருவெடுத்துவிடும். பயம் வேண்டியதில்லை.
நம் முன்னோர்கள் பல நல்ல நூல்கள் வாயிலாகவும், பழமையான கோவில் வழிபாடு வழியாகவும் நல்லபல விஷயங்கள் நடக்குமென்பதைச் சொல்லிலியுள்ளார்கள். அதை நாம் கடைப்பிடிக்கிறோமா? நல்லதை ஒருவர் உருவாக்கும்போது, அதில் பாதிப்பு இருப்பதில்லை.
அதேசமயம், ஒருவர் தனியாகவோ, ஒரு குழுவாகவோ தீமையை உண்டாக்குமெனத் தெரிந்தும் ஒன்றை உருவாக்குவது குற்றமான செயலாகும். அறிவியல்ரீதியாக ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்யும்போது, அதனால் உண்டாகும் பாதிப்பைத் தடுக்கவும், சரிசெய்யவும் தெரிந்திருக்கவேண்டும்.
உதாரணமாக, அணுசக்தியின் பயன் பாட்டை எடுத்துக்கொள்வோம். அணு ஆராய்ச்சி முதலிலில் நோயைத் தடுக்கவும், ஆராய்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டது.
அணுவானது ஆக்கப்பூர்வமான செயல் களுக்குப் பயன்படுகிறதென்று அதனை விரிவாக்கம் செய்தது.
விளைவு- இன்று அமெரிக்கா அணுக் கழிவுகளை எப்படிப் பாதுகாப்பதெனப் புரியாமலும், பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திலும் விழிபிதுங்கி நிற்கிறது. அணு ஆற்றலைப் பயன்படுத்திய பல நாடுகளும் இன்று விழிபிதுங்கி நிற்கின்றன. அணுக்கழிவுகளின் விளைவு மிக மோசமானதாக இருக்கும். அணுக்கழிவுகளால் பாதிப்பு ஏற்படுமாயின், குறைந்தது 400 கிலோமீட்டர் தொலைவுக்குக் கடும் விளைவுகளை உண்டாக்கும். ரஷ்யாவில் செர்னோபில் அணு உலையே இதற்கு உதாரணமாகும்.
சரி; இதை ஏன் இங்கே நினைவூட்டுகிறோம்? ஒரு விஷயத்தை உருவாக்கத் தெரிந்தவருக்கு அதை அழிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். அழிக்கத் தெரிந்தவருக்கு மீண்டும் அதை உருவாக்கவும் தெரிந்திருக்கவேண்டும். தீமையின் விளைவைப் பற்றி வாழ்வியல் ஞானி திருவள்ளுவர்,
""பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்'
என்கிறார்.
ஒருவர் பிறருக்குத் தீங்குதரும் செயல்களை முற்பகலிலில் செய்துவிட்டால், அதன்விளைவாக அத்தீங்கை செய்யக் காரணமானவருக்கு அவர் செய்ததைவிட பன்மடங்கு தீமை பிற்பகலிலில் வந்து சேர்ந்துவிடும். "வினை விதைத்தவன் வினையறுப்பான்', "தினை விதைத்தவன் தினையறுப்பான்'. "கொரோனா' வைரஸ் இதற்கு ஒரு உதாரணமாகும்.
அப்படியென்றால், இதுபோன்ற கொடுமைகளிலிருந்து எவ்வாறு நம்மைத் தற்காத்துக்கொள்வது? இயற்கையை நேசிப்பது, இயற்கையை வாழ்த்துவது, இயற்கையோடு ஒன்றிய இறைபக்தியோடு வாழ்வது மிகச்சிறந்த வழியாகும். இறையன்பு ஐ.ஏ.எஸ், "கண்ணுக்குத் தெரிந்தவற்றையெல்லாம் நாம் அழித்ததால், கண்ணுக்குத் தெரியாதவை நம்மை இப்போது அழித்துக் கொண்டிருக்கின்றன' என்றார். அட்டூழி யங்கள் பூமியில் அதிகரிக்கும்போது அதனை சரிசெய்ய நேர்மறை ஆற்றலாக இருக்கும் பரம்பொருளே எதிர்மறையாக செயல்படுகிறது. பிரளயம் ஏற்படும் காலத்தில், பேரழிவு ஏற்படும் காலத்தில் நம்மைக்காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். இறைவன் சிவப்பரம்பொருளே நம்மைக் காப்பாற்றமுடியும். திருமந்திரச்சிற்பி திருமூலர்-
""இலயங்கள் மூன்றினும் ஒன்றுகள் பாந்த
நிலையென்(று) இழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலம் தான்வந் ததுவே'
என்கிறார்.
லயம் என்றால் லயித்திருத்தல், ஒன்றுதல், அடங்குதல், ஒடுங்குதல் எனப் பொருள். இருப்பிடம், வசிப்பிடம் எனவும் பொருளுண்டு. அது இறைவன் சிவப் பரம்பொருளின் இருப்பிடமாகும். இங்கே லயம் என்பது ஒடுக்கமாகும். இது மூவகையில் உண்டாகக் கூடியதாகும். அவற்றுள் ஒன்று ஊழிக்காலத்தில் வரும் பிரளயம். ""இந்த உலகம் நிலையற்றது; அழியக்கூடியது என்பதை நான் என் தவவலிலிமையால் உணர்ந்தேன். இவ்வுலகம் ஊழிக்காலத்தில் உலையிலிலடப்பட்ட அரிசியானது மேலும் கீழும் கொதிப்பதுபோல புரண்டு அழியும். மலைகள் குலுங்கி பூமிப்பந்து வெந்து (எரிந்து) அழியும் என்பதும் உண்மை'' என்கி றார்.
உயிர்கள் உறங்கி எழுவது தினப்பிரளயம்; உயிரானது உடலைவிட்டுப் பிரிவது இடைப்பிரளயம்; உலக முடிவில் எல்லாம் சிதைந்து அழிவது மகாப் பிரளயம்.
ஊழிக்காலத்தில் உலகமே ஒடுங்கிவிடும் எனும் உண்மையை நாம் உணரவேண்டும். எங்கும் ஓடி ஒளியமுடியாது. இந்த உடலும், உள்ளமும் ஆனந்தம் பெறவேண்டுமெனில், நமது பாவச்செயல்களுக்கு வெட்கித் தலை குனிந்து நம் சுயநலத்தைத் தொலைத்து இறைவனிடம் கையேந்தி பரிபூரணமான பக்திகொண்டு பரிகாரம் தேடவேண்டும்.
""தீயவைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயும்வைத் தான்உணர்வு ஆரவைத் தானே""
என்று திருமூலர் கூறியுள்ளார்.
உயிர்களைப் பற்றிக்கொண்டிருக்கும் வினைத்தொடர்புகளை, பிறவித் துயருக்குக் காரணமான பாவங்களைப் பொசுக்கி அழித்துவிட்டு, இறைவன் சிவபெருமானின் அருளில் திளையுங்கள். வினைத்தொடர்புகளை அழிக்கின்றவனான சிவப்பரம்பொருள் உண்டாக்கி வைத்துள்ள உயர்ந்த இடமொன்று இருக்கிறது. அத்தகைய உயர்ந்த இடத்தை சிவபெருமான் மனித உடலிலில் இடம்பெறச் செய்துள்ளார். உடலிலில் எங்கும் கலந்து நிலைத்திருக்கும்விதமாக, உணர்வலைகளை உண்டாக்கும் உயிர்த்திரள்களை வைத்து, மனமெனும் மேடையில் உள்ளமும் உணர்வும் ஒடுங்கிப்பொருந்தும்படி அதனை சிவப்பரம்பொருள் அமைத்துள்ளார்.
இங்கே உயிர்த்திரள், உணர்வலைகள் என்னும் வார்த்தையை திருமூலர் கையாண்டி ருக்கிறார். உணர்வலைகள் மனதில் எண்ண அலைகளாக உருவெடுத்து, அது உணர்வலை களாக மாறி உயிர்த்திரள் (செல்கள்) எனும் மூலக்கூறுகளுக்கு ஆதாரமான மையக் கருவில் இணைந்தியங்காமல் அமர்ந்து, பரம்பொருள் சிவபெருமான் அண்டத்தையும் பிண்டத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தைப் பார்ப்போம்.
""ஏனையாவரும் எய்திடல் உற்றுமற்று
இன்னது என்று அறியாத தேனை
ஆன்நெயைக் கரும்பின் இன்தேறலை
சிவனை என்சிவலோகக்
கோனை மான்அன நோக்கி தன்கூறனைக்
குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான்இருந்து ஓம்புகின்றேன்
நேமியேன் உயிர் ஓயாதே.'
உள்ளத்துள் உண்மை பக்தி இல்லாத, மற்ற எவரும் அடைய முற்பட்டாலும், தன் இயல்பு என்னவென அறிந்துகொள்ள முடியாதவனை, மெய்யன்பர்கள் உள்ளத்துள்ளே தேனாகவும் நெய்யாகவும் கரும்புச் சாறாகவும் தித்தித்திருக்கும் சிவபெருமானை, சிவபோகநாதனை, மான்போலும் மருண்ட பார்வையுடையவளைத் தனது இடப்பாகம் கொண்டிருப்பவனை நான் இன்னும் நெருங்கினேன் இல்லை. நீண்டநெடுங்காலமாக இந்த உள்ளத்தை, சதை உடம்பைப் பேணிப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்து வந்துள்ளேன். இதற்கு நான் உயிரையே விட்டிருக்கலாம். உயிர்போகாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன், கெட்டழி வேன் என உருகுகிறார் மாணிக்கவாசகர்.
""உள்ளத்தை, சதை உடம்பைப் பேணிப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார். அதாவது, அவர் மனதில் சதா சிவனையே நினைந்து உருகி உருகி வாழ்ந்து வந்ததமையால், உள்ளத்தை சதை உடம்பாக இருந்தாலும், அது பரம்பொருள் சிவபெருமான் குடியிருக்கும் பரிசுத்தமான வீடாக மாறிவிடும் என்பதே இதன் உட்பொருளாகும். சதை உடம்பு ஆரோக்கியமாக இருக்கவேண்டுமெனில் உள்ளம் சரியாக இருக்கவேண்டும். உள்ளமும், உடம்பும் சரியாக இருக்க எண்ணம் தூய்மையாக இருக்கவேண்டும். எண்ணம் நலமாக இருக்கும்போது எல்லாம் நலமாக இருக்கும். கிருமிகளை அழித்தொழிக்கும் அஷ்டபுஜ பைரவரை பிரார்த்திப்போம்.
அரனின் அருளைப் பெறுவோம்.