சாந்திக் கிரியைகள் எனப்படும் சடங்குகள் நமது இந்து மதத்தில் முக்கிய பங்குவகிக்கின்றன. அதாவது குற்றம் நீக்கி அமைதி தரும் செயல்கள் என்று பொருள் கொள்ளலாம். உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி போன்றவை மனிதனிடம் ஜீவகாருண்யத்தை ஏற்படுத்தி, அன்பை வளர்த்து புனிதனாக்க உதவுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சாந்தி ஹோமங்கள் முக்கிய பலவித கிரியைகளுடன் விளங்குவன. சாந்தியானது சிறப்பு நாளில், சிறப்புப் பலனைப் பெற்றிடும் நோக்கில் செய்யப்படுவதனால், இதனை சுய ஆடம்பரத்திற்கும், பெருமைக்கும் என்று செய்யாமல், மிகுந்த பக்தி சிரத்தையுடன், தக்க ஆசாரியன்மூலமாக செய்துகொள்ளவேண்டும்.
சிறப்புமிக்க மூலமந்திரம் தீட்சைமூலம் சீடனுக்குக் கிடைத்தவுடன், அந்த மந்திரத்தின் சாதகனாக விரும்பும் ஒரு சீடன் எவ்வாறு ஜெபம் முதலான மந்திரக் கிரியைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, அந்த மந்திரத்தை சித்திபெறச்செய்து, அறிகுறிகளால் சோதித்து அறிந்து, பின்பு அம்மந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறையோ, அவ்வாறே சாந்திகளிலும் தெய்வங்களைத் தவறாது மகிழ்வித்து, பிழைகளைப் பொருத்தருள வேண்டி வணங்கித் துதித்துப் பலன் பெறுதல் செயல்முறை.
பொதுவாக சாந்தி ஹோமங்களில் முறையே கலச ஸ்தாபனத்தைச் செய்து, கலசதேவதா பூஜையுடன் வேதாகம காம்ய மந்திராதிகளின் ஜெபம் செய்வது முறை. சகலவிதமான தீமைகளைப் போக்கும் பத்துப் பொருட்கள் கொண்டு ஆஹுதி செய்ய வேண்டும். சீந்தல்கொடித் துண்டுகளை "முஞ்சாமித்வேதி' மந்திரத்தாலும், அறுகம்புல்லை "யதஇந்ரேதி' மந்திரத்தாலும், நாயுருவி சமித்தை "அபைதும் ருத்யு' மந்திரத்தாலும், பொரசு சமித்தை "ஜாதவேதயஸே' என்ற மந்திரத்தாலும், எள்ளை "காயத்ரி' மந்திரத்தாலும், நெல்லை "த்ரயம்பக' மந்திரத்தாலும், யவைதானியத்தை எஜமானரின் நட்சத்திர அஷ்டவாக்கியத் தாலும், அரிசியை "தத்விஷ்ணோ' என்ற மந்திரத்தாலும், ஹவிஸை (அன்னத்தை) "ப்ரஜாபதே' மந்திரத்தாலும், நெய்யை "யோப்ரம்மா' எனும் ஆயுஷ்ய சூக்தத்தாலும் 1008 முறை ஆஹுதிகள்செய்து பிறகு நவகிரக மந்திரத்தாலும், 28 அஷ்டவாக்கிய மந்திரத்தாலும் ஆஹுதியைச்செய்து, பிறகு ஜயாதி, மூவகை மந்திரங்களையும் ஆஹுதிசெய்து பூர்ணாஹுதியைச் செய்து ஹோமத்தை முடிக்கவேண்டும்.
பிறகு மீண்டும் கலசத்தில் பூஜை செய்த பின்பு பலவகை ரிஷிகள் இயற்றிய மஹிம்னஸ்தவங்களால் துதித்தும், தெய்வப்பெயரை மட்டுமே கூறுகிற நாம மந்திரத்தைப் பாராயணம் செய்தும், 1008 பெயர் கூறும் சகஸ்ரநாமங்களால் தேவதைக்குரிய பத்ரபுஷ்பாதிகளால் போற்றி அர்ச்சித்தும், பின்பு அத்தெய்வத்தை வலம்வந்து நமஸ்கரிக்கவும் வேண்டும். பிறகு அந்த கலசநீரில் முழுக்காடி வந்து அனைத்து தெய்வங்களின் பிரீதிக்கான தான வகைகளையும், நிமித்தப்பயனை ஏற்படுத்துகிற விசேஷ தான வகைகளையும் அத்தருணத்திலேயே மகிழ்வுடன் செய்து, முதலில் பிராமணர்களுக்கு போஜனத்தைச் செய்வித்து, பிறகு தாம் உறவினர்களுடன் உணவருந்தியபிறகு மூத்த உறவினர்களின் நல்லாசிகளைப் பெறவேண்டும்.
"அத்வரஸ்யேவ தக்ஷிணா' என்று மகாகவி காளிதாசர் கூறிய உவமைக்கேற்ப, எந்த ஒரு கிரியாபாகமும் தட்சணையை முக்கிய உறுப்பாகக் கொண்டுள்ளது. முடிவில் ஆசார்யர், ரித்விஜர், ஜாபகர்களுக்கு பொற்காசுகளால் தட்சணையையும் அரிய வெகுமதியையும் அளித்து (பூஜித்து) அவர்களிடம் ஆசிபெறுவது அவசியம். அக்னியின் பிரதிநிதியாயும், பூரணசுப கிரகமான- தேவகுருவுமான குருவின் உலோகமாகவும் தங்கமே உள்ளதால், தெய்வீகக் கிரியைகளில் தட்சணை என்பது பொற்காசுடனேயே தரப்படவேண்டும் என்று சிவாகமங்கள் வலியுறுத்துகின்றன. இதனை ஆகமங்கள் கிரியை உடல் என்றும், தட்சணையே அந்த கிரியைக்கு உயிர் என்றும் போதிக்கின்றன. காலப்போக்கில் இம்முறை கைவிடப்பட்டுள்ளது தவறு. இதுவே முழுப்பயனைத் தராமைக்கு காரணமாகி வருத்தமளிக்கிறது. அடியவர்கள் சிறிதளவாவது ஜீவஹேதுவாகிய தங்கத்துடன் பணத்தையும் அளித்துப் பயன் பெற முயலவேண்டும்.
யாக்ஞவல்கிய மகரிஷி, தினமும் தானமாக ஏதாவது ஒரு பொருளை வாங்கி, அதை நல்வழியில் உபயோகிக்கும் பாத்திரமாகிய ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்றும், புண்ணிய காலங்களிலும், யக்ஞாதிகளிலும், வேதாத்யயன சம்பத்துள்ள வேதமறிந்த பெரியோர்களுக்கே தானத்தைச் செய்ய வேண்டும் என்றும், யாசித்தாலும் தன் சக்திக்குத் தகுந்தபடி சிரத்தையுடன் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தான விதிமுறைகளைக் கூறியுள்ளார்.
தான பலபாக விதி (தானத்தின் உன்னதப் பயன்கள்)
தானத்தால் ஒருவன் அடையும் பயன்கள்பற்றி இனி அறிவோம்.
தாகம் தீர்க்கும் குடிநீரை தானம் கொடுப்பவன் திருப்தியையும்; அன்னத்தை தானம் கொடுப்பவன் குறைவில்லா சுகத்தையும்; எள்ளை தானமாகக் கொடுப்பவன் நல்ல சந்ததியையும் (மகனையும்); தீபத்தை தானமாகக் கொடுப்பவன் நல்ல கண்களையும் (பார்வையையும்); பூமியை தானமாகக் கொடுப்பவன் பூமிலாபத்தையும்; தங்கத்தை தானமாகக் கொடுப்பவன் தீர்க்கமான நீண்ட ஆயுளையும்; வீட்டை தானமாகக் கொடுப்பவன் உயர்ந்த வீடுகளையும்; வெள்ளியை தானமாகக் கொடுப்பவன் உயர்தர தோற்ற அழகையும்; வேஷ்டியை தானமாகக் கொடுப்பவன் சந்திர லோகத்தையும்; காளைமாட்டை தானமாகக் கொடுப்பவன் அகண்ட ஐஸ்வர்யத்தையும்; பசுவை தானமாகக் கொடுப்பவன் சூரியலோகத்தையும்; வண்டி அல்லது படுக்கையை தானமாகக் கொடுப்பவன் அழகான மனைவியையும்; தம்மைப் புகலிடமாய் தஞ்சம்புகுந்தவனுக்கு அபயதானம் கொடுப்பவன் தனத்தையும் செல்வச் செழிப்பையும்; நெல் முதலிய தானியங் களை தானமாகக் கொடுப்பவன் சாசுவதமான (நிலையான) சௌக்கியத்தையும்; வேதம் சொல்லித்தருவதாகிய வேத தானம் செய்பவன் பிரம்மலோகத்தையும் அடைவான் என்று ஸ்மிருதியில் மனுவால் கூறப்பட்டுள்ளது.
தானத்தை யாருக்கும் செய்யலாம். ஆனால் சத்பாத்திரமாகும் தானம் வாங்குவோர் மற்றும் காலம் ஆகியவற்றை அனுசரித்து அதற்குப் பலன் அதிகமாகக் கிடைக்கும். கலியுகத்தில் தானத்திற்கு மகிமை அதிகம். தானம் யாவும் யாசிக்காதவருக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அன்னம், கன்யாவை மட்டும் யாசிக்கிற அதிகாரியைப் பார்த்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று சாண்டில்யர் சிறப்பு விதியைக் கூறுவார். தானமளிப்பவர் இத்தானங்களை அளிக்க இப்பிறவியில் தமக்கு வாய்ப்பு பாக்கியம் கிட்டியதே என்று கருதி, பக்தி சிரத்தையுடனும், நன்னன்பிக்கையுடனும், மன உவகையுடனும் அளித்திட வேண்டும். நன்னம்பிக்கை எனும் சிரத்தை இல்லையேல் அளிக்கக்கூடாது. சாந்தி கர்மாக்களில் முக்கியமாக நவகிரகப்ரீதி தானம், கோதானம், தேவதைகளின் ப்ரீதிதான வகைககள், தச தான வகைகள், உக்ர தான வகைகள், ஏழைகளுக்கான அளவற்ற பூரிதான வகைகள் என்று பலவகை தானங்கள் கட்டாயம் செய்யத்தக்கதாக விதிக்கப்பட்டுள்ளது.
பல தெய்வங்களையும், தெய்வக்குழுக்களை யும் பூஜித்து மகிழ்விக்கும் தனிச்சிறப்பு டையது சாந்திக்கிரியையாகும். மேலும் பாவம் அகற்றி நமக்கு அருள்தரவல்ல அகோரமூர்த்தி, திருநீலகண்டராகிய மிருத்யுஞ்ஜயாதி மூர்த்திகளிடம் தவறுகளுக்கு மன்னிப்புக்கோரி, விருப்பத்தை வேண்டுகோளாகத் தெரிவித்திடுவதும், தெய்வங்களின் ஆயுதப்படையாகிய அஸ்திரங்களைப் போற்றியும், எள்ளினால் திலஹோமம் முதலிய பாவத்தை நீக்குகிற விசேஷ ஹோமங்களை உடையதும் இந்த சாந்தி ஹோமங்களே ஆகும். எனவே சாந்தியே இஷ்டசித்தி தருவதாம்.
நால்வேத சாரமான ஐந்தெழுத்தைக் கொண்டது சதருத்ரீயம் என்னும் ஸ்ரீருத்ர வேதப்பகுதி. சதருத்ரீயத்தை ஒருமுறை ஜெபம் செய்த உடனே சகலபாவங்களும் நீங்கும் என்கிறது ஸ்காந்தம். அனைத்துப் பாவங்களையும் போக்கிட செய்யப்படுகிற சாந்திஹோமமானது ஸ்மார்த்தமுறையில் கூஷ்மாண்ட ஹோமம் எனக் கூறப்படுவது ஆகும். இதைப்போன்றே பாவம் அழிந்திடவும், விருப்பப்பயன் கிடைத்திடவும், தீமைகள் விலகவும் வைச்வதேவத்தில் சித்ரபலிக்கு முன்பாக செய்யத்தக்கதாக ஸ்ரீமாதா மகாதேவிக்கான ஆவஹந்தீஹோமம் கூறப் படுகிறது. இதனால் அன்னபூரணி தேவியின் அருளும் அன்னசம்ருத்தியும் ஏற்படும். மேலும் பாவத்தை அகற்றும் சாந்தி ஹோமங்களில் யஜுர்வேதத்திலுள்ள சதருத்ரீயம் எனப்படுகிற ஸ்ரீருத்ரத்தைப் பலவாறு பகுத்துக்கொண்டு செய்யப்படுகிற ஏகாதச ருத்ரஹோமமானது, ருத்ரைகாதசினீ என்று சிறப்புப் பெயர் பெற்ற சிறந்த சாந்தி ஹோமமாகும். தினமும் ருத்ரத்தைக் கூறினாலே பாவமகன்று முக்திகிட்டும் என்கிறது ருத்ரமஹாத்மியம். ருத்ரத்தை ஒருமுறை கூறியவன் புனிதனாகிறான்.
மங்களம் தருகின்ற ருத்திரரின் திருவுருவை நினைப்பதே பாவமகற்றும். முப்புரம் எரித்த திரிபுராந்தகராகவும் வில்லம்பு ஏந்திய வருமாகவே ஜகத்ரட்சகரான சிவனார் தியானிக்கப்படுகிறார். எனவே இவருக்குச் செய்யப்படுகின்ற ருத்ரைகாதசினீ ஹோமம் சாந்திகளில் முன்னதாக செய்யத்தக்கது.
(தொடரும்)