ஸ்தினாபுர அரண் மனை!

வானத்தைத் தொடும் பாண்டவர்களின் அழகு மாளிகை. தர்மம் அங்கே குடி கொண்டிருந்ததால், எந்த நேரமும் குதூகலம். செல்வங் கள் அங்கே நிறைய வருவதைக் கண்டு யாரும் மயங்குவதில்லை. அதேபோல அது வெளியே செல்வதைக் கண்டும் யாரும் கலங்குவதில்லை. தண்ணீர் உயர்ந்தால் தாமரை உயரும் என்பதுபோல, தர்மம் உயர உயர பாண்டவர்களின் வாழ்க்கை அங்கே உயர்ந்திருந்தது.

அன்றொரு நாள் மதியம் ஐந்து சகோதரர்களும் அரண்மனையில் ஒன்றாக அமர்ந்து ஆனந்தமாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அங்கே அண்ணன்- தம்பிகளின் பாசமும் பரிவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அர்ஜுனனுக்கு வேண்டியதை அவன் கேட்டு சாப்பிட்டான். பீமன் புளியோதரை சாதத்தை ஒரு பிடிபிடித்துக்கொண்டிருந்தான். கட்டித் தயிர் என்றால் நகுலனுக்கு வெகு பிரியம். கண்ணனைப்போல அவனும் அதை ஆசையோடு ருசித்துக் கொண்டிருந்தான். கேட்டவர் களுக்குக் கேட்டபடி

dd

Advertisment

பரிமாறிக்கொண்டிருந்தாள் திரௌபதை. அப்போது சகாதேவன் நாட்டு நிலைமையைப் பற்றி எடுத்துக்கூறினான். வில்வித்தையில் சிறந்த அர்ஜுனனோ வீரத்தைப் பற்றிப் பேசினான். வலிமை மிக்க பீமனோ தன் வலிமையை உண்டு முடிப்பதிலேயே காட்டினான்.

இப்படியாக அவரவர் இருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு அந்தணர் பிச்சைகேட்டு உள்ளே நுழைந்து விட்டார். பஞ்சத்தில் அடிபட்ட அந்த பிராமணரைப் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. மன்னரின் மணி மாளிகையில், மடிப்பிச்சை கேட்டு வந்துவிட்டார்.

பீமன் ஆத்திரக்காரன். அர்ஜுனன் அவசரக்காரன். அந்தணரை இந்த நேரத்தில் வந்ததற்காகக் கண்டித்தனர்.

Advertisment

"யார் இவரை உள்ளே விட்டது? நாட்டு மன்னர் உணவருந் திக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் இவர் இங்கே வந்த தெப்படி?' என்று ஆளுக்கொரு அம்பாக அந்தணர்மீது வீசினர். பொறுமையின் சிகரமான தர்மர் தன் சகோதரர்களை சமாதானப்படுத்தினார். அவர்களும் அண்ணன் பேச்சைக்கேட்டு அடங்கிப்போனார்கள்.

உணவருந்திக் கொண்டிருக்கும் எச்சில் கையால் எதைக் கொடுப்பது, எப்படிக் கொடுப்பதென்று புரியாமல் கலங்கினார் தர்மர். வந்த அந்தணரோ "என்ன கொடுப்பான், எதைக் கொடுப்பான்' என்ற ஏக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். தர்மர் ஒரு முடிவுக்கு வந்தார். எச்சில் கையால் எதையும் கொடுக்காமல் தனது இடக்கையால் அருகிலிருந்த தங்கக் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அந்தணரும் அதை ஆவலாகப் பெற்றுக்கொண்டு, தலைசாய்த்து மன்னருக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஓடிப்போனார்.

அப்போது சகாதேவன் வேதனையோடு, ""எல்லாம் தெரிந்த அண்ணா! தாங்கள் இப்படி செய்யலாமா? எந்த தர்மத்தையும் வலக்கையால் செய்வதுதானே நியதி. அப்படி யிருக்க ஒரு அந்தணருக்கு இடக்கையால் தர்மம் செய்வது நியாயமா?'' என்று கேட்டான்.

தர்மம் செய்யும் காரியம் தப்பாகாது. அதை விளக்கினார். ""சகாதேவா! இந்த மனம் இருக்கிறதே அது ஒரு குரங்கு. இப்போது இங்கு இருக்கும்.

அடுத்த நிமிடம் அது வேறெங்காவது தாவிவிடும். எரியும் அகல்விளக்கில் காற்றுப்பட்டு சலனம் ஏற்பட்டு அணைவதுபோல தோன்றும். அடுத்த சில நொடிகளில் மீண்டும் பிரகாசமாக எரியும். அப்படித்தான் மனதும். இப்பொழுது ஒன்றை நினைத்து முடிப்பதற்குள் அது மாறி வேறொன்றை நினைக்கும். நாம் அந்த நேரத்தில் எதைக் கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறோமோ அதை அப்போதே கொடுத்துவிடவேண்டும். வலக்கை, எச்சில் கை என நினைத்து கையைக் கழுவிக்கொண்டு வருவதற்குள் மனம் மாறிவிட்டால் என்ன செய்வது? "இந்தப் பஞ்சத்தில் அடிபட்ட அந்தணனுக்கு தங்கைக் கோப்பையைத் தருவதா? திருப்தியாக ஒருவேளை உணவளித்து ஒரு பொற்காசைக் கொடுத்துவிட்டால் போதாதா?' என்று மனம் மாறி அப்படிச் செய்துவிட்டால் தர்மத்தின் தரம் குறைந்துபோய்விடாதா? தேவையறிந்து கொடுக்க மனம் வரவேண்டும். அந்த மனம் மாறுவதற்குள் நினைத்ததைக் கொடுத்துவிடவேண்டும். ஆகையால்தான் எந்தக் கையென்று பாராது உடனே தர்மத்தைச் செய்தேன்'' என்றார். இந்த நியாயமான பதில் அந்த நான்கு சகோதரர்களையும் வாய் பேசமுடியாமல் அமைதியாக்கிவிட்டது.

மறுபரிசீலனைக்குக்கூட நேரம் கொடுக்காமல் சில கட்டளைகளை நிறைவேற்றுவதில்லையா? அதுபோலவே தர்மம் செய்வதும்.

நல்லவனாக இருந்து வாழ்வது கடினம். தர்மஸ்தனாக இருப்பது இன்னும் கடினம். இருந்தாலும் தர்மர் தர்மஸ்தனாக இருந்ததால்தான் மகாபாரதத்தில் தர்மம் வென்றது.