ஏத்தனை இடர்கள் எதிர்பட்டாலும் அசையா உறுதியுடன், "கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே' என்று இறைவனின் பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டு வாழ்ந்து, இறுதியில் இறையருள் பெற்று அவருள் இரண்டறக் கலந்த அடியார்கள்பற்றி நாம் அறிந்திருக்கிறோம். மனம் ஒன்றாத வழிபாடு வழிபாடே அல்ல. இன்னும் சொல்வதென்றால், மனமொன்றி ஈடுபட்டால் அங்கு மந்திரங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்களுக்குத் தேவையே இருப்பதில்லை.
எல்லா இடங்களிலும் தெய்வீக இருப்பை கவனித்துணர்ந்து, முழுமையான அர்ப்பணிப்புடன், "இறைவா, உன் விருப்பமே நடைபெறும்; எனக்கென்று தனி விருப்பமில்லை' என்று பிரார்த்தனை செய்யும் திடமான நம்பிக்கையே பக்தியோகம்.
இறையருளை முழுமையாக அனுபவிக்கவேண்டுமானால் உண்மையான பக்தியும், அசைக்கமுடியாத நம்பிக்கையும் மனம் முழுக்க நிறைந்திருக்க வேண்டும். இறைவனை தோழமை நெறியில் அணுகி, "உன்னால் பிறந்து வளரும் எங்களை உன்னதமாக்கி அருள்புரிவாய்' என்று நிதம் அவரது நினைவோடு வாழ்ந்து, பல பக்திப் பாடல்களையும் பாடி, இறைவனையும் காணப்பெற்று, என்றும் மறையாமல் இருக்கும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களே இதற்கு நல்ல உதாரணம்.
அனுபவம் மூலமாகதான் இறைவனை உணரமுடியும். "நான், எனது' என்னும் எண்ணம் நமக்குள் இருக்கும்வரை பணிவென்பது வர வாய்ப்பில்லை.
அவற்றிலிருந்து விடுபட்டு இறைவனிடம் முழுமையாக அடிபணிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இறைவன்மீதுள்ள நம்பிக்கையை இழக்காமல், இம்மியளவும் குறையாமல் இருக்கும் மனநிலை வேண்டும்.
சிறந்த பெற்றோர்கள், நல்ல நண்பர்களை அடைந்தவர்கள், நன்னடத்தை கொண்டவர்கள் பூர்வஜென்ம புண்ணியத்தால் இயற்கையாகவே இறைவனைத் தேடுவார்கள். இத்தகைய தூயமனம் பெற்றவர்களுக்கு சித்தர்களும் ஞானிகளும் உறுதுணையாய் இருந்து இறைவனையடைய வழிகாட்டுவார்கள்.
இறைவனையே மனதிலிருத்தி வாழும்போது நம் மனம் தவறுசெய்யத் துணியாது; பிறர் வாழ்வைக் கெடுக்காது; பிறர் அழிவை விரும்பாது; பொய் சொல்லாது; பாசாங்கு காட்டாது; பேராசை கொள்ளாது; சகதியில் சிக்கினாலும் தூய்மை கெடாது; சக்திவாய்ந்த பல இயந்திரங்கள் ஓடும் தொழிற்சாலையில் அமர்ந்திருந்தாலும் உள்ளம் அமைதி இழக்காது; தவறான தீய எண்ணங்கள் மனதில் எழவே எழாது.
இந்த நிலையைவிட ஒருவரின் நல்வாழ்க்கைக்கு வேறென்ன வேண்டும்? எப்போதும் பூஜைகள் வேண்டாம்; ஆலயங்களிலேயே குடியிருக்க வேண்டாம்; தெரியாத மொழிகளில் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்க வேண்டுமென்பதும் இல்லை.
காலையில் கண்விழித்ததும், "கடவுளே, என்னுடன் இருங்கள்' என்று முழு மனதுடனும் நம்பிக்கையுடனும், ஒரு தாயானவள் குழந்தையுடன் உணர்ந்து பேசுவதைப்போல அல்லது குழந்தை தாய்- தந்தையுடன் பேசுவதுபோல வேண்டி பொழுதைத் தொடங்கி, நாள் முழுவதும் அவருடன் உரையாடி, கூடவே அமரவைத்து, அமர்ந்து, உணவு கொடுத்து, உணவுண்டு, நம் தொழிலிலும் அவரை மனதார வைத்துக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஒருசில நாட்களாவது வாழ்ந்து பார்த்தால், அதன்பின்னர் நாம் வாழ்க்கையைக் கையாளும் விதமே உன்னதமாகிவிடும்.
ஆண்டாள் நாச்சியார்- பெருமாள், அனுமன்- இராமபிரான், பூசலார்- சிவபெருமான் என, மெய்சிலிர்க்க வைக்கும் பல்வேறு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
கடவுளுடன் நம்மைத் தொடர்புகொள்ள வைக்கும் பலமான சாதனம் பிரார்த்தனையாகும். ஒருவரது பிரார்த்தனையின் தன்மை, ஆழம், நம்பிக்கை, அன்பு, அடிபணிதல், உரிமையோடு கடவுளுடன் உரையாடுதல், அழுகை, நன்றி, ஆனந்தம், சுகம், சோகம், கோபம், கருணை என எல்லாம் கலந்த உணர்வாய், மெய்ம்மறந்து அவருடன் ஒன்றி நாம் இருக்கும்போது, கடவுளே மெய்சிலிர்த் துப்போகும் தருணமாக அது அமையும்.
யோகம், தியானம்போல் சிறந்தவொரு மன சாதனம் உண்டென்றால், அது சரணாகதியுடன்கூடிய இறையன்புதான். இதற்கு தெய்வம் வேண்டுமென்று இல்லை. தெய்வீகம்தான் வேண்டும். ஒருமைப்பட்ட உணர்வு, ஆழ்ந்த நம்பிக்கை தேவை.
அர்ப்பணிப்புடன்கூடிய இறையன்பில் நம்முள்ளே இருக்கும் ஏதோவொன்று உயிர்பெறுகிறது. புதிய துடிப்பு தொடங்கு கிறது. இவ்வுணர்வானது காரண அறிவைப் பொருட்படுத்துவதில்லை. ஒருவருடன் அன்புடனும் நம்பிக்கையுடனும் இணைவது எவ்வளவுக்கெவ்வளவு உன்னதமானதோ அதே அளவு எளிதானதும்கூட! உடல் உழைப் பில்லை; பணச் செலவில்லை; கண்டம்விட்டு கண்டம் செல்லத் தேவையில்லை. அன்றாட வேலைகள்- அதை இறைத் துணையுடன், அவரை சக தோழராய், தாய்- தந்தையாய், மகனாய்- மகளாய், நமக்குப் பிடித்த நல்ல துணை யாய் ஏற்று உடனுறைவது; அவ்வளவே.
அர்ப்பணிப்புடன்கூடிய இறையன்பு இவ்வளவு வலிமை வாய்ந்ததென்றால், நாம் விரும்பும் எல்லா காரியங்களும் நம் விருப்பப்படி நடக்கவேண்டுமல்லவா என்று நாம் எண்ணலாம். நமது ஆசைகள், வேண்டுகோள்கள் நடந்தால் மகிழ்வோம்; இறைவனுக்கு நன்றி சொல்வோம். நடக்க வில்லையெனில், நமக்கு எது உகந்ததோ- எது சரியானதோ அதைத்தான் பகவான் தருவார். நமக்கு சரியில்லாதது கிடைக்கவில்லை; நடக்கவில்லை என நம்பவேண்டும்.
நம் மனம் என்னும் ஒன்றுதான் இதற்கெல் லாம் காரணமாக உள்ளது. கடலில் நீருக்குமேல் நீந்துபவர் மேலோடு வந்துவிடுகி றார். ஆழத்தில் மூழ்குபவர் மட்டுமே முத்து களை அள்ளிக்கொண்டுவருகிறார்.
ஒவ்வொரு கணமும் உள்ளும் புறமும் இறைவனைத் துதித்துக்கொண்டிருந்த பிரகலாதன் பற்றி நாம் அறிவோம். பிரகலாதனின் தந்தை இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம்செய்யும்போது, அவனது தவத்தைக் கலைக்க, இந்திரன் நிறைமாத கர்ப்பிணியான இரணியனின் மனைவியைக் கடத்திச் சென்றுவிடுகிறான். இது சரியான செயலல்ல என்றுணர்ந்த நாரதர், வழியிலேயே அவனைத் தடுத்து இரணியனின் மனைவியைமீட்டு தனது ஆசிரமத்தில் தங்க வைத்தார்.
எப்படியும் இரணியன் தன் வலிமையால் வரம்பெறுவது உறுதியென்று அறிந்த நாரதர், இரணியனின் கர்ப்பிணி மனைவிக்கு மகாவிஷ்ணுவின் பெருமைகளை விவரித்தார். மனைவியோ உறங்கிவிட, கருவிலிருந்த சிசு அவர் சொன்னதையெல்லாம் "ம்... ம்...' என்று ஆமோதித்துக் கேட்டது. இவ்வாறு கருவிலேயே இறைபக்தி ஊட்டப்பட்ட பிரகலாதன், தன் வாழ்நாள் முழுவதும் உள்ளும் புறமும் இறைவனின் நினைவாகவே மாறிவிட்டதில் ஆச்சரியமில்லை.
தன் ஒவ்வொரு சுவாசத்திலும் இறைவனின் நாமம் மட்டுமே அவனுக்குள் ஓடியது. முடிவில் பிரகலாதன் பெற்ற பேரின்பம் அனைவரும் அறிந்ததே. பக்தி யோகத்தில் மூழ்கிநின்ற அவனை பகவானே நேரில்வந்து அழைத்துச்சென்றார். உயர்ந்த, அப்பழுக்கற்ற, பாசாங்கில்லாத உண்மை பக்தியினால் மட்டுமே தன்னை அடையமுடியும் என்று சொல்கிறார் கிருஷ்ணபகவான். இதை அடிக்கடி படிக்கிறோம்; கேட்கிறோம்; பேசுகிறோம். எனினும் பின்பற்றுகிறோமா என்பது சந்தேகமே.
சரணாகதியுடன்கூடிய முழு இறையன்பை அழுத்தம் திருத்தமாகப் பின்பற்றியவர் ஆண்டாள் நாச்சியார். அதையே அவர்-
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன்தன்னோடு உற்றோமே ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம்'
என்று பிறருக்கும் எடுத்துரைத்தார். அதனாலேயே பெரியாழ்வார் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திருவரங்கத் திருமாலினுள் இரண்டறக் கலந்து எட்டாத பாக்கியத்தைப் பெற்றுக்காட்டினார் கோதை நாச்சியார்.
இறைவனையடைய கர்மயோகம், ஞானயோகம் என பல வழிமுறைகள் உள்ளன. இதில் "நீயே கதி' என்று ஆத்ம சமர்ப்பணம் செய்வதே பக்தியோகம்.
இறைவன்மீது கொண்ட உயர்பக்தியால், தன் காலடி படக்கூடாதென்று, தலையாலே நடந்து கயிலைக்கு வருகிறார் காரைக்கால் அம்மையார். "அப்பா' என்று இறைவனை அழைக்கிறார். இறைவனோ அதற்கும் ஒருபடி முன்னே வந்து, "அம்மா' என்று அவரை அழைத்தார்.
இவர்கள் இறைவன்பால் கொண்டிருந்த நெருக்கம் பற்றிப் படிக்கும்போது, நம் பிறவியின் பயன் என்னவென்று மனம் ஏங்கவேண்டும். ஒருசில துளியேனும் நம் வாழ்நாளில் ருசிக்கவேண்டும். நாமும் இறைவனிடம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அவருக்காக ஏங்கி உருகிக் காத்திருந்து, பக்திப் பரவசத் துடன் நல்வாழ்வு வாழ்வோம்.