வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு!
4
பக்தி செலுத்துவதற்குரிய வழிகளில் ஒன்றான வழிபாட்டின்போது பின்பற்றவேண்டிய சில வரைமுறைகளை நம் முன்னோர்கள் காரணங்களோடு சொல்லி−த் தந்துள்ளனர். காரணமறிந்து காரியம் செய்யும்போது அதில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடுதான் பக்திக்கு அடிப்படை.
ஆலய வழிபாட்டின் தொடக்கம் சுகாதாரத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. எல்லா ஆலயங்களின் வெளிப்புறத்தில் கிணறோ, தண்ணீர்க் குழாய்களோ அமைத்திருப்பார்கள். சில ஆலயங்களில், "கால்களைக் கழுவிய பின் உள்ளே வரவும்' என எழுதிவைத்திருப்பார்கள். நம் கால்களின் சுத்தம் நமக்குத் தெரியும். அப்படியிருக்க ஏன் கால்களைக் கழுவ வேண்டும் என நாம் யோசிப்பதையே முன்னோர்கள் வேறுவிதமாக- அதாவது சுத்தத்தைவிட சுகாதாரத்தைப் பற்றி யோசித்தார்கள். கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கால்களில் எளிதில் தொற்றிக்கொள்ளும். அப்படியே ஆலயங்களுக்குள் நுழையும்போது அங்கு வந்திருக்கின்ற குழந்தைகள், வயதில் மூத்தவர்களை கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அதனால் கால்களைக் கழுவிய பின்னரே உள்ளே வரவேண்டுமென வரையறுத்தார்கள். அப்படிச் செய்யாதபோது சனி பகவான் நம்மைப் பிடித்துக் கொள்வார் என பீடிகை போட்டுவைத்தார்கள்.
சும்மா சொன்னால் எதையும் செய்ய மறுப்பது மனித இயல்பு. அதனாலேயே இருளைக் காட்டிக் குழந்தைகளை பயமுறுத்திச் சாப்பிட வைப்பதைப் போல, சனீஸ்வரரைக் காட்டி நம்மைச் செய்யவைத்தார்கள். கால்களை சுத்தம் செய்தபிறகு வாசல் திறந்திருக்கிறது என்பதற்காக உள்ளே பாய்ந்துவிடக்கூடாது. ஆலய வாயிலி−ன் இருபுறமும் வாயில் காவலர்களாக இருக்கக்கூடிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்ற பின்பே உள்ளே செல்லவேண்டும். திருமாலையும், மகாலட்சுமியையும் வைகுண்டத்தில் எந்நேரமும் சந்திக்க பிரம்மாவின் புதல்வர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோர் அனுமதி பெற்றிருந்தனர். அப்படியிருந்தும் அவர்கள் அங்கு செல்லும் ஒவ்வொருமுறையும் துவாரபாலகர்களின் அனுமதி பெற்ற பின்பே வைகுண்டத்தினுள்ளே சென்றுவந்தனர். "உத்தரவு பெற்று உள்ளே செல்லவும்' என்பது பிறர் வீட்டிற்குள் நுழைய மட்டுமல்ல; ஆலயத்திற்குள் நுழைவதற்கும்தான்!
வாயில் தாண்டி உள்ளே நுழைந்ததும் நம் முதுகுத்தண்டை குறிக்கக்கூடிய "துவஜஸ்தம்பம்' என்றழைக்கப்படும் கொடிமரம் இருக்கும். இதன் அடிப்பாகம் படைப்பை உணர்த்தும் பிரம்மாவின் பாகமாகும். அதன்மேல் அமைந்திருக்கும் எண்கோண வடிவிலான பாகம் காத்தலைக் குறிக்கும் திருமாலி−ன் பாகமாகும். அதற்குமேல் நம் முதுகுத்தண்டில் உள்ள 32 கட்டுகளைக் குறிக்கும் வகையில் 32 வளையங்களுடன் அமைந்திருக்கும் பாகம் அழித்தலைச் சுட்டும் சிவனின் பாகமாகும். முத்தொழிலைச் செய்யும் மூம்மூர்த்திகளை வணங்கிச் செல்லும் முகமாக கொடிமரத்தை வணங்கிச் செல்லவேண்டும்.
எல்லா ஆலயங்களிலும் வாசலி−ன் ஓரத்தில் விநாயகர் வீற்றிருப்பார். அவரை வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும். ஆலய வழிபாட்டில்கூட விநாயகருக்கு வழிபாடு நடந்த பிறகே மற்ற தெய்வங்களுக்கு வழிபாடு நடக்கும். இந்த ஐதீகம் வடகயிலையில் தொடங்கித் தென்னிலங்கை வரை நடைமுறையில் இருக்கிறது. இந்த ஐதீகத்திற்கு ஒரு கதை உண்டு.
வேதங்களை வகைப்படுத்திய வியாசர் பதினெண் புராணங்களைச் செய்யுள் வடிவமாக்க முயன்றபோது, அதன் பொருள் புரியாமல் குழம்பிப் போனார்.
தன் குழப்பத்திற்கான காரணமறிய பிரம்மனிடம் வந்தார். நடந்தவற்றைக் கேட்டறிந்த பிரம்மன், ""வேதவிற்பன்னரே, அண்டமாக, அவனியாக, முழுமுதற்கடவுளாக இருக்கின்ற விநாயகரின் பாதம் பணியாது இந்தக் காரியத்தை ஆரம்பித்துள்ளீர்கள். அதனால்தான் ஆரம்பமே குழப்பமாகிவிட்டது.
அந்த இராமபிரானேகூட விநாயகரை மனதில் நினைக்காததாலேயே வாலிலியை நேர்நின்று கொல்லும் சக்தியற்றவரானார். இதனாலேயே வேதத்தைச் சொல்லத் தொடங்கிய சிவபெருமான் "ஓம்' என்கின்ற ஓங்கார மந்திரத்தை முதலி−ல் அமைத்தே வேதத்தை அருளினார். சிவபெருமான் மட்டுமல்ல; நான், இந்திரன், திருமால் உள்ளிட்டோரும் விநாயகரைத் துதித்த பின்பே எங்கள் பணியைச் செய்ய ஆரம்பிக்கிறோம். அவ்வாறே நீங்களும் விநாயகரை வணங்கி உங்கள் காரியத்தைச் செய்ய ஆரம்பியுங்கள்'' என ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனையும் ஆசியும் பெற்று வந்த வியாசர், விநாயகரைத் துதித்துக் காரியத்தை ஆரம்பித்தார். நினைத்தபடியே பதினெண் புராணங்களைச் செய்யுள் வடிவமாக்கி முடித்தார். இப்படி இறைவனுக்கெல்லாம் இறைவனாய் விநாயகர் இருப்பதாலயே கணபதி பூஜை செய்தும், பிள்ளையார் சுழி போட்டும் செயல்களை ஆரம்பிக்கிறோம்.
சிவன் ஆலயங்களில் சிவனை வழிபடுவதற்குமுன் அவரின் உதவியாளர் நந்தி தேவரிடம் அனுமதி பெறவேண்டும். அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்திலி−ருந்து தங்களைக் காக்க சிவனிடம் சென்று முறையிட்டனர். அப்படிச் சென்ற அவசரத்திலும்கூட அவர்கள் நந்தியிடம் அனுமதி பெற்றே சென்றனர்.
தேவர்கள் வகுத்துக் கொடுத்த மரபைப் பின்பற்றி இறைவனை வழிபட்ட பின் நந்தியிடம் நம் வேண்டுதலை ரகசியமாய் சொல்லி−விட்டு வரவேண்டும். அப்படிச் சொல்லி−விட்டு வந்தால் அதை அவர் நேரம் வாய்க்கும்போது இறைவனின் நினைவூட்டலுக்குக் கொண்டு வருவார் என்பது நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை!
வாயில் காப்பாளரான துவாரபாலகர்களிடம் அனுமதிபெற்று ஆலயத்திற்குள் சென்றதைப்போல, வெளியேறும்போது ஆலயக் காப்பாளரான சண்டிகேஸ்வரிடம் சொல்லி−விட்டு வரவேண்டும். அவர் எப்பொழுதும் சிவ தியானத்தில் இருப்பவர். தியான நிஷ்டையின்மூலம் தன் முன்வந்து நிற்பவர்களை அவர் அறிந்துகொள்வார். அவர்முன் வந்து நின்று, "இந்த ஆலயத்தில் இருந்து நான் எதையும் எடுத்துச்செல்லவில்லை' என்பதன் அடையாளமாக இரண்டு கைகளையும் விரித்து மட்டும் காட்டவேண்டும். நாமோ, கைகளை விரித்துக் காட்டுவதற்குப் பதில் கை தட்டியும், சொடக்குப் போட்டும் சண்டிகேஸ்வரரின் தியானத்தைக் கலைத்து விடுகிறோம்.
கூடவே புது ஆடை கிடைக்குமெனச் சொல்லி−க்கொண்டு, அணிந்திருக்கும் ஆடைகளிலுள்ள நூல்களை உருவி அவர்மீது வீசி அவருடைய இருப்பிடத்தையும் பஞ்சு மில் கூடாரமாக்கிவிடுகிறோம். புது ஆடை வாங்கித் தருவது சண்டிகேஸ்வரரின் வேலையல்ல; அது அவரவர் பெற்றோ ரின் கடமை என உணர்ந்தால் அது ஆலயத் தூய்மைக்கான ஆரம்பமாக இருக்கும்.
(தொடரும்)