மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ஆம் தேதிமுதல் 8-ல் ஆட்சிபெறுகிறார். எனவே அவருக்கு மறைவு தோஷம் பாதிக்காது. அவருடன் 5-க்குடைய சூரியனும் இணைகிறார். உங்கள் திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறுவதில் சற்று தாமதமானாலும் காரியம் தடைப்படாது. 10-ல் சனி ஆட்சி. தொழில் இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். உத்தியோகத் துறையில் இருப்பவர்களுக்கும் பிரச்சினைக்கு இடமில்லை. கடந்த மாதம் குரு 11-ல் மாறியிருப்பது உத்தமம். செய்தொழிலில் லாபம், முன்னேற்றம் போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். 2-ஆமிடத்து ராகு குடும்பத்தில் சில குளறுபடிகளை ஏற்படுத்தினாலும், சில விஷயங்களில் கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்ற அடிப்படையில் உங்கள் செயல்கள் அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பாதிக்காது. புதிய பொறுப்புகளும் வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4- ஆம் தேதிமுதல் 9-ல் மாறுகிறார். அவருடன் சனி ஆட்சியாக இருந்து இணைகிறார். ராசிநாதன் திரிகோணம் பெறுவது பலம். உங்கள் செயல்களில் சாமர்த்தியம் உண்டாகும். அரசுத் துறையினருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அது விரும்பிய இடமாற்றமாகவும் அமையும். 4-க்குடைய சூரியன் 7-ல் இருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். கணவரால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். கொடுத்த பணிகளையும் எடுத்த காரியத்தையும் செவ்வனே முடிக்கும் திறன் உருவாகும். கணவன் அல்லது மனைவிவழி உறவினர்கள்வகையில் சில இழப்புகள் ஏற்படலாம். 16-ஆம் தேதிமுதல் சூரியன் 8-ல் மறைவதால் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டானாலும் ஆதாயமும் ஏற்படும். சகோதரவழி சகாயம் கைகொடுக்கும். வரவுக்கேற்ற செலவும் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 4-ஆம் தேதிமுதல் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 12-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவு. சனி 8-ல் ஆட்சி. "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதற்கிணங்க உங்கள் முயற்சிகளில் தளர்ச்சியில்லாத வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நல்ல மாற்றமாகவே அமையும். 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். அவர் ராசியையும் பார்க்கிறார். ஆகவே "குரு பார்க்க கோடி நன்மை' என்ற மொழிக்கேற்ப அட்டமத்துச் சனியின் வேகம் அடங்கிவிடும். 3-க்குடைய சூரியன் 7-ல் 16-ஆம் தேதிமுதல் மாறி, அவரும் ராசியைப் பார்க்கிறார். கூட்டுத்தொழில் புரிகிறவர்களுக்கிடையே சில சங்கடம் உண்டாகலாம். எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத நிலைபோன்று மனதில் ஒருவித பய உணர்வு ஏற்படட்டும். என்றாலும் குரு பார்வை நல்வழி நடத்தும்.
கடகம்
கடக ராசிக்கு 6-ஆம் தேதிமுதல் 5-ல் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். நீங்கள் எடுத்த முயற்சிகள் தடையில்லாமல் நிறைவேறும். என்றாலும் குரு 8-ல் மறைவதால் எந்த காரியத்தையும் பகீரதப் பிரயத்தனப் பட்டுதான் நிறைவேற்றும் அமைப்பு ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு நற்பெயர் அமையும் என்பதில் ஐயமில்லை. 5-ஆம் தேதிமுதல் 7-ல் சுக்கிரன் மாறுவது- களஸ்திரகாரகன் களஸ்திர ஸ்தானத்தில் இருப்பது நல்லதல்ல என்பது ஜோதிட மொழி. கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் வந்துவிலகும். அடிக்கடி சிறுசிறு சச்சரவுகள் தோன்றி மறையும். 8-ல் குரு மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்ப ஒற்றுமை பாதிக்காது. பிள்ளைகள்வகையில் எடுத்த காரியத்தை முடிக்கலாம். எதிர்பார்த்த பணவரவு உரிய நேரத்தில் கிடைக்கும். அது பெரும் உதவியாகவும் அமையும். சகோதர சகாயம் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 16-ஆம் தேதிவரை 4-ல் கேந்திரம் பெறுகிறார். எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்கும் முனைப்போடு செயல்படுவீர்கள். 16-ஆம் தேதிமுதல் ராசிநாதன் சூரியன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். சூரியனுக்கு வீடுகொடுத்த குரு 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். ஆக, கும்பிடப்போன தெய்வம் எதிரே வந்ததுபோல மாதப் பிற்பகுதியில் எல்லாம் உங்களுக்கு அனுகூலமாக அமையும். தடை, தாமதங்கள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நாணயமாக நடந்துகொள்ளலாம். வேலையிலும் சக ஊழியர்களிடையே நற்பெயர் எடுக்கலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அனுகூல சிந்தனைகள் தோன்றி வெற்றிபெறலாம்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் மாத ஆரம்பத்திலேயே கேந்திரம் பெறுகிறார். திடீர் இடமாற்றம் உண்டாகும். புதனுக்கு வீடுகொடுத்த குரு 6-ல் மறைந்து 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். விரயங்கள் அதிகரிக்கும். வரவு வருமென்றாலும் வரவை மீறிய செலவும் வருவதால் சமாளிப்பது சற்று கடினமான விஷயமாகும். இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவுகாலமோ என்று மனதில் புலம்பல்கள் அதிகமாகும். 3-க்குடைய செவ்வாய் ஆட்சி பெறுவதால் இவற்றையெல்லாம் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உருவாகும். 2-க்குடைய சுக்கிரன் 5-ல் மாறுகிறார். (5-ஆம் தேதி). கணவர்வழியே அனுகூலம் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கணவர்வழியே தொல்லைகளும் ஏற்படலாம். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தாய்வழி உறவினரால் சகாயம் ஏற்படும்.
துலாம்
இம்மாதம் 5-ஆம் தேதிமுதல் துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். சனி அங்கு ஆட்சியாக இருக்கிறார். துலா ராசிக்கு குருபார்வையும் கிடைக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நன்மையான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் தரும் அலைச்சலாக அமையும். 12-க்குடைய புதன் 3-ல் மறைகிறார். "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்ற ஜோதிடமொழிக் கேற்ப தனவரவும் நன்றாக இருக்கும். மாதப் பிற்பாதியில் செலவுகளும் அதிகமாகக் காணப்படும். வரவேண்டிய பணம் வருவதில் தாமதமாகலாம். 5-ஆமிடத்து குரு உங்கள் திட்டங்களை செயல்படுத்தித் தருவார். ஒருசிலருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். அரசு வேலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படும். வாகனப் பரிவர்த்தனை உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ஆம் தேதிமுதல் ஜென்மத்தில் ஆட்சியாக அமர்கிறார். 10-க்குடைய சூரியனும் ஜென்ம ராசியில் செவ்வாயுடன் இணைகிறார். உங்கள் முயற்சி, செயல் இவற்றில் தடைகளுக்கு இடமேதுமில்லை. என்றாலும் ஜென்ம கேது, சப்தம ராகு தாமதத்தையும் அலைச்சலையும் ஏற்படுத்தலாம். உத்தியோகத்துறையில் இருப்பவர்களுக்கு வேலைகள் சற்று கடுமையாக இருக்கும். சகோதரவழியில் சகாயம் ஏற்படும். ஒருசிலருக்கு குடியிருப்பு மாற்றம் அல்லது வாகனவகையில் மாற்றம் உண்டாகும். அது நல்ல மாற்றமாகவும் அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் உருவாகலாம். 7-ல் ராகு திருமணத்தில் தாமதத்தை உண்டாக்குவார். 8-ஆமிடத்தை 2-க்குடைய குரு பார்க்கிறார். திடீர் யோகமும் ஏற்பட இடமுண்டு. தேகநலனில் முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைவென்றா லும் 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதரவழியில் சில சங்கடங்கள் நேரலாம். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் ஒரு முடிவுக்கு வரும். ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச் சனி நடப்பதால், இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு பொங்குசனியாக செயல்படும். தந்தைவழியில் உதவி, பூர்வீக சொத்து சம்பந்தமான சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். வியாபாரத்துறையினருக்கு சற்று சுமாரான பலன்கள் உண்டாகும். அடிக்கடி அலைச்சல் ஏற்படும். 12-ல் செவ்வாய் ஆட்சி என்பதால் விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். 2-ல் சனி ஆட்சி என்பதால் பணவரவும் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமதப்பலன்களை சந்திக்கநேரும். நண்பர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடமிருப்பதால் கவனமுடன் பழகவேண்டும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஆட்சி. 12-க்குடைய குரு 2-ல் நிற்கிறார். தனவரவு நன்றாக இருக்கும். குடும்ப ஒற்றுமை, கணவன்- மனைவி அன்யோன்யம் சிறப்பாக விளங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலும் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை வாய்ப்புகளும் முடிவாகும். திட்டமிட்டு செயல்படுத்தும் காரியங்கள் பூர்த்தியாகும். பிறரை நம்பி ஒப்படைத்த செயல்கள் தாமதமாவதால், நீங்கள் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. சுயதொழில் புரிகிறவர்களுக்கு முன்னேற்றகரமான சூழல் உருவாகும். திடீர் பயணம் ஆதாயம் தரும். சகோதரர்களால் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும் அந்தஸ்தும் கூடும். ஒருசிலருக்கு குடும்பத்தைவிட்டு விலகி வேறிடத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலையும் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் அக்கறையும் குறையும்; கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. முதல்சுற்று நடப் பவர்களுக்கு மங்குசனியும், இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு பொங்குசனியும், மூன்றாவது சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனியும் நடக்கிறது. மரணச்சனி என்றால் மரணம் சம்பவிக்கும் என்று அர்த்த மல்ல. அதற்குச் சமமான பலன்களை ஏற்படுத்தும். உடல் உபாதை, நோய்த் தொந்தரவுகள். மனக்கவலைகளை உருவாக்கு தல் போன்ற பலன்கள் நடைபெறலாம். (மூன்றாவது சுற்று நடப்பவர்களுக்கு மட்டும்.) ராசிநாதன் சனி விரயஸ்தானத்தில் இருப்பதால் திடீர் விரயங்கள் உண்டாகும். 2-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். ஆகவே, உங்கள் மனதில் உதயமாகும் திட்டங் கள் பூர்த்தியாகும். திருமணத்தடைகள் விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு நற்பலன் தரும். பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பும் உண்டாகும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். ராசிநாதன் 12-ல் மறைவது ஒருவகையில் மைனஸ்தான். 2, 9-க்குடைய செவ்வாய் 9-ல் ஆட்சிபெறுவது ஒருவகையில் நன்மை. கட்டட வேலை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுகூலமான பலன்கள் நடைபெறும். சிப்பந்திகளால் உண்டான பிரச்சினைக்கு சுமூக தீர்வு உண்டாகும். 8-க்குடைய சுக்கிரன் 11-ல் 5-ஆம் தேதிமுதல் மாறுகிறார். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம். என்றாலும் எடுத்த வேலையை நல்லமுறையில் முடிக்கும் அமைப்புகள் உண்டாகும். நண்பர்களால் உதவி ஒத்தாசையும் கிடைக்கும். கொடுத்த வாக்கை நாணயத்துடன் காப்பாற்றப் போராட வேண்டியதிருக்கும். என்றா லும் முயற்சியில் நேர்மையிருந்தால் முடிவுகளும் சுமூகமாக நிறைவேற இறைவன் அருள்புரிவார். விரலுக்கேற்ற வீக்கம் இருந்தால்தானே நல்லது. அகலக்கால் வைப்பதைத் தவிருங்கள்.