மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத ஆரம்பத்தில் விரய ஸ்தானமான மீனத்தில் (12-ல்) இருக்கிறார். திடீர்ப் பயணம்- அதன்மூலம் செலவு, தேவையற்ற அலைச்சல் போன்றவற்றை சந்திக்கநேரும். ஒன்பதாம் தேதிமுதல் செவ்வாய் மீண்டும் மேஷத்தில் ஆட்சியாக அமர்கி றார். எனவே, உங்களுடைய செயல்பாட்டிலிருந்த தடைகள் விலகும். திறமைகள் பளிச்சிடும். இந்த மாத இறுதியில் 26-ஆம் தேதிமுதல் சனி 9-ல் இருந்து 10-ஆம் இடத்துக்கு மாறுகிறார். பத்தாம் இடத்துச் சனி பதிகுலையச் செய்யும் என்பது ஜோதிடமொழி. என்றாலும், இங்கு 10-ல் சனி ஆட்சியாக அமர்வதால் இந்த விதி பொருந்தாது. அத்துடன் 9-க்குடைய குரு 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். சிலருக்கு பதவி மாற்றம் ஏற்படலாம். என்றாலும் அது நன்மையாகவே முடியும். இடமாற்றம் அல்லது ஊர்மாற்றம் ஏற்படலாம். தொழில்யோகம், பாக்கியம், லாபம் உண்டாகும் என்று எதிர்பார்க்கலாம். உடல்நலனில் மருத்துவச் செலவுகள் வந்து விலகும். பாதிப்புகள் ஏற்படாது. விரய ஸ்தானத்தை சனி பார்ப்பதால் தேவையான- அத்தியாவசியமான விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.
ரிஷபம்
இந்த மாதக் கடைசியில் டிசம்பர் 26 அன்று சனிப்பெயர்ச்சி. இதுவரை அட்டமத்துச் சனியாக உங்களை ஆட்டிப்படைத்த சனி இப்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறுகிறார். பொதுவாக ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதால் பெரிய அளவில் கெடுதல் செய்யமாட்டார் என்றாலும், எட்டில் சனி இருந்தபோது குருவும் எட்டில் ஆட்சியானதால் எந்தவித யோகமான பலன்களையும் அனுபவிக்கவில்லை என்றே சொல்லவேண்டும். இப்போது குருவும் ஒன்பதில் இருக்கிறார். சனியும் ஒன்பதில் ஆட்சி பெறுகிறார். உங்களுக்கு எல்லா வகையிலும் விடிவும் விமோசனமும் விடுதலையும் கிடைக்கப்போகிறது. பாக்கிய ஸ்தானத்துக்கு மாறும் சனியால், உடல்நிலையிலிருந்த பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். சகோதர- சகோதரிகளால் சகாயம், நன்மைகள் உண்டாகும். தொழிலில் லாபம், வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
இந்த மாதம் 26-ஆம் தேதிமுதல் சனி 7-ல் இருந்து 8-ஆம் இடத்திற்கு மாறி ஆட்சியும் பெறுகிறார். ஏற்கெ னவே 7-ல் இருந்த குரு 8-ல் மறைந்திருக்கிறார். அட்டமத்துச் சனி தொட்டது துலங்காது என்றும், அகப்பட்டவனுக்கு அட்டமச் சனி என்றும், கெட்டானைத் தொட்டானும் கெட்டான் என்றும் சொல்வதுண்டு. சனி பத்தாம் இடத்தைப் பார்க்கிறார். தொழில் இயக்கம் இருக்கும். தனியார் வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். என்றா லும் முழு அளவில் திருப்தி இருக்காது. சுயதொழில் செய்கிறவர்களுக்கு போட்டியும் பொறாமையும் இருந்தாலும் தொழிலில் பாதிப்பு ஏற்படாது. புதிய தொழில் ஆரம்பிப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும். பிள்ளைகள் வகையில் நல்லவை ஏற்படும். சிலருக்கு சங்கடங்களைக் கொடுத்தாலும் பெரிய பிரச்சினைக்கு இடமிருக்காது.
கடகம்
இந்த மாதம் 26-ஆம் தேதிமுதல் 6-ல் இருந்த சனி 7-ஆம் இடமான மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். சனி இருந்த 6-ஆம் இடம் நல்ல இடமென்றாலும், குரு 6-ல் இருந்த காரணத்தால் சனி பெரிய நன்மைகளைச் செய்யவில்லை. இப்போது 7-ல் மாறும் சனி தன் சொந்தவீட்டில் ஆட்சி பெறுவதால் நன்மைகளைச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். அவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பாக்கியமும் நன்மையும் உண்டாகும். தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துகளால் லாபம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம் இருந்தால் அது சுமூகமான தீர்வுக்கு வரும். 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் நோய் நிவர்த்தி, ஆரோக்கியத்தில் விருத்தி உண்டாகும். முழுத் தெளிவு கிடைக்கும். முயற்சியுடன் பாடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவி அல்லது துணைவருக்கும் தைரியம் வரும். கணவனுக்கு மனைவியே ஆதாரம்.
சிம்மம்
இந்த மாதம் 26-ஆம் தேதிமுதல் சனி 5-ல் இருந்து 6-ஆம் இடத்திற்கு மாறுகிறார். பொதுவாக சனிக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் (உபஜெய ஸ்தானம்) மிகநல்ல இடங்களாகும். 3-ஆம் இடம் சகோதரம், சகாயம், தைரியம், வீரியம், பராக்கிரமம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானம். இதுவரை தெம்பு குறைந்த உங்களுக்கு இனி நம்பிக்கையும் பலமும் தைரியமும் உண்டாகும். எட்டாம் இடத்தை சனி பார்ப்பதால், இந்த இடங்களுக்குரிய கெடுதல்களைப் போக்கி உங்களுக்கு நன்மைகளைத் தருவார். ஏமாற்றம் இருக்காது. விபத்து விலகும். ஆபத்து அகலும். தீர்க்காயுள் உண்டாகும். அவப்பெயரும் அபகீர்த்தியும் மாறும். நஷ்டம் மாறி லாபம் உண்டாகும். 6-ஆம் இடத்துக்கு சனி வருவதால் நோய்கள் நீங்கும். போட்டியும் பொறாமையும் ஒழியும். மனைவி பெயரில் சொத்து சுகங்கள், இடம், பொருள் வாங்கி சுபவிரயம் செய்யலாம்.
கன்னி
இந்த மாத இறுதியில் 26-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. 4-ஆம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்தவர் இனி 5-ல் மாறி ஆட்சியும் பெறுகிறார். 5-ஆம் இடத்துச் சனி 7-ஆம் இடத்தைப் பார்க்கி றார். குடும்பம், மனைவி, மக்கள் என இருந்தும், மற்றவர்களின் விமர்சனத்துக்கு ஆளானவர்களும், வீட்டாரின் வெறுப்புக்கு ஆளானவர்களும் இனிமேல் இந்தப் பிரச்சினையிலிருந்து விலகும்படி நல்ல தீர்வுண்டாகும். திருமணமானவர்களுக்கு மனைவி வகையில் அனுகூலம் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் உண்டாகும். வாக்கு வண்மையும் வாக்குப் பலிதமும் ஏற்படும். எனவே அவச்சொல் ஏதும் சொல்லாமல், நல்ல வார்த்தைகளைப் பேசிப் பழகுங்கள். பேச்சில் நிதானத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
துலாம்
இதுவரை துலா ராசிக்கு 3-ஆம் இடத்திலிருந்த சனி இந்த மாதம் 26-ஆம் தேதி 4-ஆம் இடத்துக்கு மாறி ஆட்சி பெறுகிறார். 4-ல் வரும் சனி உடல்நலக் குறைகளையும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். மனதில் இனம்புரியாத சிறுசிறு கவலைகளும் சஞ்சலங்களும் உண்டாகும். 6-ஆம் இடத்தை சனி பார்ப்பதால் கேட்டபொழுதெல்லாம் கடன் வாங்கலாம். கைநீட்டிய இடங்களிலெல்லாம் தாராளமாகக் கடன் கிடைக்கும். பணப் புழக்கம் உண்டாகும். 10-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். தொழில்துறையில் இதுவரை நிலவிய துன்பங்களும் பிரச்சினைகளும், பொருளாதாரத் தடைகளும், நெருக்கடிநிலையும் இனி மாறும். ஜென்ம ராசியை சனி பார்ப்பதால், உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க ஆற்றலும் திறமையும் உருவாகும். தன்னம்பிக்கையும் வளரும். யாருக்கும் ஜாமின் பொறுப்பேற்க வேண்டாம்.
விருச்சிகம்
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த சனி இப்போது (டிசம்பர் 26) 3-ல் மாறி தன் சொந்தவீட்டில் ஆட்சிபெறுகி றார். மேலும் உங்களை ஆட்டிப்படைத்த ஏழரைச் சனியும் விலகுகிறது. 3-ஆம் இடம் சகோதர, தைரிய, சகாய ஸ்தானமாகும். அங்கு 3-க்குடையவரே அமர்வதால், எதிர்கால வாழ்வைப் பொருத்தவகையில் தைரியமும் நம்பிக்கையும் புத்துணர்வும் உருவாகும். தொழில் செய்வதற்குத் தேவையான முதலீடுகளும் உதவிகளும் கிடைக்கும். 5-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். அவர்களின் எதிர்கால நன்மை கருதி எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். வீண் விரயங்கள் ஏற்பட்டாலும், அவற்றை சுப விரயங்களாக மாற்ற முயற்சியுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்கு ஜென்மத்தில் இருந்த சனி இம்மாதம் 26-ஆம் தேதிமுதல் 2-ஆம் இடத்துக்கு மாறி ஆட்சிபெறுகிறார். ஏழரைச் சனியில் பாதச் சனி நடக்கிறது. 2-ல் மாறிய சனியால் பெரிய நன்மை என்று சொல்லமுடியாமல் போனாலும், பெரிய கெடுதல்களும் நேராது என்று கூறலாம். 4-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். இது பூமி, வீடு, வாகனம், சுகம் ஆகியவற்றைக் குறிக்குமிடம். இவற்றில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். தாய்வழி அனுகூலம், வாக்கு, வித்தை ஆகிய நன்மைகளை அடையலாம். 8-ஆம் இடத்தை சனி பார்ப்பதால் ஆயுள் தீர்க்கமும் விருத்தியும் உண்டாகும். சனி ஆயுள்காரகன். அவர் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஆயுள் விருத்தி ஏற்படும். 11-ஆம் இடத்தை சனி பார்க்கி றார். லாபம், வெற்றி உண்டாகும். கடல்கடந்த வணிகத் தொடர்பும் ஏற்படலாம். எதிர்பாராத தனப்பிராப்தி யோகமும் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதல்கட்டமான விரயச்சனி இந்த மாதம் 26-ஆம் தேதிமுதல் விலகி ஜென்மச் சனி ஆரம்பமாகிறது. மகர ராசிநாதனான சனி அங்கு ஆட்சியாக அமர்கிறார். ஜென்மத்தில் ஆட்சிபெறும் சனி 3-ஆம் இடம், 7-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். சகோதரவகையில் நிலவிய வருத்தம் மாறும். பகையுணர்வு மாறி ஒற்றுமையுணர்வாகும். அனுகூலமும் லாபமும் ஏற்படலாம். 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதால், காலதாமதமான திருமணம் என்றும் சொல்லலாம். என்றா லும் ஜென்மத்தில் இருக்கும் குருவும் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தாமதமானாலும் திருமணம் நடைபெறும். நல்ல வரனாக அமையும். தொழில்துறையில் முன்னேற்றமும் சீர்திருத்தமும் உண்டாகும்.
கும்பம்
இந்த மாதம் 26-ஆம் தேதிமுதல் உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. கும்ப ராசிக்கு சனி ராசிநாதன் மட்டுமல்ல; விரயாதிபதியும் அவரே. முதல்சுற்று நடப்பவர்களுக்கு மங்குசனி; இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்குப் பொங்குசனி; மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனி என்பார்கள். முதல் சுற்றை சந்திப்பவர்களுக்கு விரயம் அதிகரிக்கலாம். படிப்பை முடித்தவர்களும், வேலை தேடி அலைபவர்களும் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வெளியூருக்குப் போகலாம் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம். இரண்டாம் சுற்றை சந்திப்பவர்களுக்கு இக்காலம் நற்காலம். சொந்த வீடு, வாகனம், நிலம் என்ற வகையில் சுபச் செலவுகள் ஏற்படலாம். மூன்றாம் சுற்றை சந்திப்பவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக நடக்கும்.
மீனம்
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த சனி இம்மாதம் 26-ஆம் தேதி முதல் 11-ஆம் இடத்துக்கு மாறி ஆட்சியாகிறார். சனிக்கு யோகம் தரும் இடங்கள் 3, 6, 11-ஆம் இடங்கள்தான். அங்கு வரும் சனி 11-ஆம் இடத்து நற்பலன்களை வாரிவழங்குவார் என்பதில் ஐயமில்லை. அத்துடன் ராசிநாதன் குருவும் 11-ல் இருக்கிறார். மகரம் குருவுக்கு நீச ஸ்தானம் என்றாலும், சனி ஆட்சி பெற்று குருவுடன் இணைவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. உங்கள் திறமை, செயல்பாடு, கீர்த்தி எல்லாம் சிறப் பாக விளங்கும். போட்டி, பொறாமைகள் விலகும். உங்களுடைய நீண்டகால திட்டங்கள் வெற்றியடையும். வீட்டுக்கும் நாட்டுக்கும் பொதுவாழ்வுக்கும் உங்கள் பணியும் தொண்டும் கடமையும் போற்றுதலுக்குரியதாக அமையும்.