காலம், மனிதகுலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ எத்தனையோ அரிய வாய்ப்புகளைக் கொடுத்து நம்மை நல்லவழிக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கிறது.

ஆனால் அவை பெரும்பாலும் தோல்வி களையே சந்திக்கின்றன. காரணம், மனித இனம் தனது அறியாமை, உணராமை எனும் மாய இருளில் சிக்கி உன்னதமான பகுத்தறிவு வெளிச்சத்திற்கு வர மறுக்கிறது. காலத்திற்கு கோபம் வருகிறது. சில நாடுகளில் சூறாவளிப் புயலை உருவாக்கி ஊரையே புரட்டிப் போடுகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில், 170 ஆண்டுகளில் கண்டிராத அளவில் மிக மோசமான ராட்சதப் புயல் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் வீசி, அம்மாகாணத்தையே புரட்டிப்போட்டது. சில நாடுகளில் நிலச்சரிவையும், மேக வெடிப்புகளையும் உருவாக்கி பேரழிவை உண்டாக்குகிறது. இன்னும் சில நாடுகளில் கடலுக்குள் எரிமலை வெடித்துச் சிதறுகிறது.

கடந்த 23-8-2021 அன்று வங்கக்கடலில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் பதிவானது. சென்னை அண்ணாநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் அதன் தாக்கத்தை பலர் உணர்ந்ததாகக் கூறினர்.

ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். எதிர் காலத்தில் நில அதிர்வு ஏற்படும் சமயம் சென்னை மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் இருக்குமென்று ஆய்வுகள் சொல் கின்றன. ஆய்வுகள் அனைத்தும் உண்மை யில்லை என்று கூறிவிட முடியாது.

Advertisment

எது எப்படியோ... காலமும் காலதேவனும் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது மட்டும் உண்மை. இவ்வளவு இடர்கள் வந்தும்கூட மனித இனம் தன்னை மாற்றிக்கொண்டதா என்றால் இல்லை. இப்போதும் சத்தியத் தையும் சட்டத்தையும் மீறும் செயல்களில் நடந்துகொள்கிறது. இங்கு மீண்டும் மீண்டும் கிருஷ்ணரின் உபதேசத்தை நினைவுகூர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இன்று எது உன்னுடையதோ நாளை அது வேறொரு வருடையதாகிறது. இதுதான் இயற்கையின் விதி; நியதி.

ss

இத்தனை நடப்புகளையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இயற்கையோடு இயற்கையாய் இருக்கும் பரம்பொருள் சிவமேயாகும். கிராமங்களில் பெரியவர்கள் சிறு பிள்ளைகள் ஏதாவது செய்தால், "டேய்... சும்மாய் இருடா' என்று அதட்டுவர். அதை அவர்கள் பொருட்படுத்தாதபோது, "டேய்... செவனேன்னு இருக்க மாட்டியா' என்று கண்டிப்பார்கள். இந்த சொற்கள் பலநூறு வருடங்களாக புழக்கத்தில் உள்ளவை. அதன் பொருள் என்னவென்றால், சிவம் என்றால் அமைதி. அதனுள் ஒளிந்து கொண்டிருப்பதே அன்பெனும் பெருங் கருணைக்கு சொந்தமாகவுள்ள பரம்பொருள்.

அது நமக்குப் பல நல்ல வாய்ப்புகளை நல்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மனித இனம் அதைப்பற்றிய புரிதல் சற்றுமின்றி, வாயையும் வயிற்றையும் நிறப்புவதே குறியாக இருக்கிறது. எந்த ஒரு உயிரானது பிறிதொரு உயிரை காயப்படுத்தவும் வலியை ஏற்படுத்தவும் நினைக்கிறதோ, அதற்குக் காரணமான அதே துன்பத்தை அதைவிட பன்மடங்கு அந்த உயிர் அனுபவித்தே தீரும். இதுவே இயற்கையின் பஞ்சபூத தத்துவம்; விதி. 15 நாட்களில் அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணப் பகுதியில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பி லுள்ள மரங்கள் உட்பட இயற்கை வளங்கள் எரிந்து அழிந்துபோயின. பஞ்சபூத சக்தி வெகுண்டெழுந்தால் பிரபஞ்சம் நிர்மூலமாகி விடும். மிகப்பெரிய ஜாம்பவான்களும் சாம்ராஜ்யங்களும் இயற்கைக்கு எதிரான கொள்கையால்தான் அழிந்தன என்பதே வரலாறு. இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது- பிற உயிர்களுக்கு மனதளவிலும் துன்பம் தரக்கூடாது என்பதுதான். இதைப்பற்றி திருவள்ளுவர்-

"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்'

என்று கூறுகிறார். துன்பங்களை எவனொருவன் பிற உயிர்களுக்கு விளைவிக் கிறானோ, அவனிடமே துன்பங்கள் மிகுதியாக வந்துசேரும். எனவே துன்பமில்லாத வாழ்க் கையை விரும்புகிறவன் பிற உயிர்களுக்கு ஒருபோதும் துன்பம் செய்யமாட்டான்.

அன்பு பொதுவானது. பொதுவுடமைத் தத்துவம் கொண்ட சமநோக்குடையது. இன்றைய காலகட்டத்தில் நாயும் பூனையும்கூட நண்பர்களாக இருக்கின்றன. ஆனால் மனித இனம் தன் இனத்தைத் தானே அழிக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அன்பை நாம் மறந்து போனதே இதற்கெல்லாம் காரணம். இறைவனைக்காண அன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைத் திருமூலர்-

"ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை

ஈரம் உடையவர் காண்பார் இணையடி

பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னை

கோர நெறிகொடு கொங்கு புக்காரே'

என்கிறார். சிவம் என்னும் பரம்பொருளை அடையவேண்டும் என்னும் பேரன்பு, சலிப்பில்லாத முயற்சியுடையவர்கள் அவனைக் காணப் பெறுவார்கள். அதுவன்றி ஒருவன் தன் மனதில் இரக்கம், அன்பு கொண்டவனாக இருந்தால், அவன் இறைவ னின் திருவடிகளைக் காணும் பேறுபெற்றவ னாக இருப்பான். இரண்டுமில்லாத துன்பச் சுமையையும் துயரமான விளைவுகளையும் தொடர்ந்து சுமப்பவர்கள் இந்த உலகத்தில் இறப்பையும் பிறப்பையும் மட்டுமே காண் பார்கள். இவர்கள் அன்பில்லாத கொடிய துன்பவழி சென்று துயரக்காற்றில் தவிப்பார்கள்.

கொரோனா என்னும் கொடிய தொற்று உலகமக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. இப்போதா வது ஆறாவது அறிவானது உடல், மன ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு பெற்று விட்டதா என்றால் இல்லை. அன்பு செலுத்து வதில் சக உயிர்களிடம் அக்கறையாக இருக்கி றதா என்றால் இல்லை. சுயநலம் எனும் பேய் இப்போதுதான் மிகவும் தலைவிரித்தாடுகிறது. பணத்திற்காக எத்தகைய கொடூரமான செயலையும் செய்யும் வகையில் ஆறாவது அறிவு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வெட்கித் தலைகுனியவும், வேதனைப்படவும் செய்யும் செயல்களில் ஒரு மனிதக் கூட்டம் மிகவும் வேகமாக செயல்பட்டுக்கொண்டி ருக்கிறது.

உணவுப் பொருட்களில் கலப்படத்தை 50 ஆண்டுகளாக மனசாட்சியில்லாமல் நடத்திக்கொண்டிருக்கிறது. தற்போதுகூட மீன், ஆடு போன்ற பலவகை இறைச்சிகளை பத்திரப்படுத்திப் பாதுகாப்பதற்காக ரசாயன வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த பார்மலின் எனும் வேதிப்பொருள் கலந்த இறைச்சி உணவை உண்ணும்போது, அது உடலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கிறது. குறிப்பாக கேன்சர் எனும் கொடிய நோயை உருவாக்கக்கூடிய காரணியாக பார்மலின் இருக்கிறது. பிணவறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளை உணவுப்பொருளில் கலந்து விற்பவனின் சிந்தனை, இதற்கு உடந்தையாக இருப்பவனின் எண்ணம் போன்றவையனைத் தும் சக மனிதனை- மனித இனத்தை அழிக்கு மென தெரியாமலா செய்கிறார்கள்?

இந்த வியாபாரத்தில் பெரும் பணத்தை அடையும் இவர்களது குடும்பமோ தலைமுறையோ அதை நிம்மதியாக அனுபவிக்கமுடியாது. தொழிலதிபராக இருக்கட்டும்; அரசு அதிகாரி யாக இருக்கட்டும்; வேறு யாராவது வேண்டு மானாலும் இருக்கட்டும்- சக மனிதனுக்குக் குழிதோண்டும் எண்ணம் ஏன் வருகிறது? அடிப்படைக் கல்வியில் கோளாறு உள்ளது.

மரங்கள் மனித இனத்திற்கு நிழலைமட்டும் தருவதில்லை. அவன் உயிர்வாழ உயிர்க்காற் றைத் தருகின்றன. ஆனால் மனிதன் மரங்களை அழிக்கிறான். காரணம் அன்பையும் அறத் தையும் மறந்ததன் விளைவே. அதனால் துயரச் சூழலில் சிக்கி சீரழிகிறான். சுயநலம் எனும் பேய் தலைவிரித்தாடுகிறது. இங்கே வியப்பூட்டும் செய்தி ஒன்றுண்டு. ஈரறிவு முதல் ஆறறிவு வரையான அனைத்து உயிரினங்களும் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) மட்டுமே வெளியிடுகின்றன. ஆனால் ஓரறிவு தாவர இனங்கள் மட்டுமே கரியமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை வெளியிட்டு பூமிப் பந்திலுள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றுகின்றன. மரங்கள், தாவரங்கள் மனித இனம் உயிர்வாழ பிராணவாயுவை வாரி வழங்கிக்கொண்டே இருக்கின்றன. தற்போதைய மனிதக் கூட்டமோ மரங்களை அழித்து பிராணவாயுவை சிலிண்டர்களில் தேடிக்கொண்டிருக்கின்றன.

இயற்கையையும் அதனுள்ளிருக்கும் இறைவனையும் மறந்தவர்களுக்கு பிரபஞ்சப் பேராற் றல் அவனுக்கு புத்தி புகட்டுகிறது. முகக் கவசம் போடாமல் இனி மனிதன் வாழமுடியாது என்னும் நிலையை உருவாக்குகிறார்கள். அதே வேளையில் பிராணவாயுவை அள்ளிக் கொடுத்து வள்ளலாக இருக்கும் மரங்கள் "மாஸ்க்' அணிவதில்லை. சுதந்திரமாக இருக் கின்றன. மரங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை. ஆனால் மனித இனம் இனி முகக்கவசம் இல்லாமல்- தடுப்பூசி இல்லாமல் நடமாட முடியாது எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த இழிவான அவலநிலை?

இறைவன் மனித உயிருக்கு அருட்கொடை யாக வழங்கிய இந்த உடலுக்கு, இந்தப் பெரும் துன்பம் வந்ததற்குக் காரணம், மனிதனின் உடலுக்குள் குடியிருக்கும் உயிரை இயக்கிக் கொண்டிருக்கும் சிவம் எனும் பரம்பொருள் குடிகொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறான். காலம் குறைவாக உள்ளது. மனம் திருந்தவேண்டும். இல்லையெனில் பிரபஞ்சப் பேராற்றல் இந்த பூமிப் பந்தை சிதைத்துவிடும். பகுத்தறிவென்று பறைசாற்றிக்கொண்டு, அதை விட்டுவிட்டு பல்லுயிர் ஓம்புதலை மறந்துவிடாமல், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை மனதிலிருத்தி, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். பகுத்தறிவென்பது மூடநம்பிக்கை யைத் தகர்த்து நேர்மறை ஆற்றலோடு அன்பு, கருணை, இரக்கம் எனும் குணங்களோடு இருப்பதாகும். அன்பை மறந்தவன் இறைவனின் அருளைப் பெறுபவனாக இருக்கமுடியாது.

எனவே, இறைவனின் அன்பைப்பெற வேண்டுமானால் பிற உயிர்கள்மீது அன்பு செலுத்த வேண்டும். அன்பு செய்வோம்; அறம் செய்வோம்; இந்த பேரண்டத்தைக் கட்டிக் காத்தருளும் அரனின் அளப்பரிய அன்புக்கு உரியவர்களாக மாறுவோம்.