நாம் அறிவியலில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
"அண்டவெளியில் பால்வீதி உள்ளது; பலகோடி நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன' என்று நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. தினம்தினம் ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது சித்த புருஷர்கள் எவ்வித கருவிகளின் துணையுமின்றி, தங்களின் அறிவுக் கண்கள்மூலம் கோள்களைப் பற்றியும், பால்வீதிகளையும், பிரபஞ்ச செயல்பாடுகளையும் கண்டறிந்து, அதை எவ்வாறு பயன்படுத்தினால் நாம் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர்.
சுதந்திரத்திற்குப் பின்பு 1951-ஆம் வருடம் இந்திய அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள்தொகை சுமார் 36 கோடியே 10 லட்சத்து 88 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. மக்களின் வளர்ச்சி- குறிப்பாக பகுத்தறிவு வளர்ச்சி பெற்றதா- ஒழுக்கத்தில் வளர்ச்சியடைந்ததா- உணவு தானிய உற்பத்தி வளர்ச்சிபெற்றதா- தனிமனித பொருளாதாரம் வளர்ச்சிடைந்ததா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் மக்கள் தொகை வளர்ச்சியில் சீனாவை முந்துமளவுக்கு தோராயமாக 130 கோடியைக் கடந்துவிட்டதென்று சொல்லலாம். அபார வளர்ச்சிதான்!
நவீன கண்டுபிடிப்புகள் ஒருபக்கம் மக்களை விழிபிதுங்கச் செய்துகொண்டிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து முப்பது ஆண்டுகளுக்குள்- அதாவது 1980-ஆம் ஆண்டுக்குமுன்பு, "ஓசோன் படலத்தில் துளை விழுந்துவிட்டது. அதன் அளவு ஒரு ரூபாய் நாணயத்தின் அளவில் உள்ளது' என்று அப்போதே ஒரு விஞ்ஞானி கண்டறிந்து கூறினார். மேலும் அவர், "இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் பூமியானது பேரழிவுகளை சந்திக்கும்; இனம் கண்டுகொள்ளமுடியாத பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு மனிதகுலம் ஆளாகும்' என்று எச்சரித்தார். ஆனால் அது அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவு, இன்று மனித சமுதாயம் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது.
அண்டார்டிகா கண்டத்தின் நிலப்பரப்புக்கு சமமாக, ஓசோன் பசுமைக் கவசம் கிழிந்த போர்வையாக மிகப்பெரும் துளை விழுந்து அபாயகரமான நிலையில் இருக்கிறது. பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் மிக மோசமாக பாதிப்படையும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஓசோனில் விழுந்த துளையை அடைக்க வழி கண்டறியப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இது ஒருபுறமிருக்க, "சந்திரனில் தண்ணீரைக் கண்டுபிடித்து விட்டோம்; செவ்வாயில் வீடு கட்டலாம்' என்று ஒரு கூட்டம் கூறிக்கொண்டிருக்கிறது. சில மேதாவிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று, "செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யலாம்' என்று கூறிவருகின்றனர். "கூரையேறி கோழிபிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போனானாம்' என்று சொல்வதுபோல உள்ளது இது!
காரணம் நாம் வாழ்க்கைக் கல்வியைத் தொலைத்துவிட்டோம். அன்பு- அதனால் விளையும் அறம் மடிந்துவிட்டது.
அன்பைப் பற்றித் திருவள்ளுவர்-
"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை'
என்று கூறுகிறார். அறம் செய்வதற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்- தீமையைக் களைந்தெறிவதற்கும் அவ்வன்பே துணையாக இருக்கும் என்பதை.
இப்போது அன்பு எங்கே சென்றது என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இனி குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை போன்ற எவையும் தேவையில்லை. ஆளில்லா பீரங்கிமூலம் எதிரிநாட்டை அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டனர். ட்ரோன் எனும் குட்டி விமானம்மூலம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் நுணுக்கங் களைக் கண்டறிந்துவிட்டனர். இவை யனைத்தும் மனித இனத்தைப் பூண்டோடு அழித்துவிடும். இவையெல்லாம் எதற்கு? மனிதகுலத்திற்கு என்ன ஆயிற்று?
காரணம், அன்பு செலுத்த மறந்தோம்; அறச்செயல்களை மறந்தோம். இதனால் துன்பம் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்கி வருகிறோம். நல்லன மறந்து அல்லன செய்துகொண்டிருக்கிறோம். அறம் செய்வது குறித்துத் திருமூலர்-
"அறமறியார் அண்ணல் பாதம் நினையும்
திறமறியார் சிவலோக நகர்க்குப்
புறமறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறமறிவார் பகை மன்னி நின்றாரே'
என்று கூறுகிறார். நன்மைதரும் செயல் களைச் செய்யத் தெரியாதவர்கள், சிவபரம் பொருளின் திருவடியை நினைத்துப் போற்றும் பக்திவழியை அறியமாட்டார்கள். இவர்கள் சிவலோகத்தின் நிழலைக்கூட தரிசிக்க முடியாதவர்கள். மற்றவர்கள் கூறும் பொய்யுரைகளைக் கேட்டு பாவம்செய்யத் துணிந்த இவர்கள் பாவப் படுகுழியில் வீழ்ந்து கிடப்பார்கள். எனவே தர்ம சிந்தனையோடு புண்ணியச் செயல்களைச் செய்து, சிவனருளைப்பெற சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
உணர்வுள்ள மனித இனத்தை உணர்வில்லாத பொருட்களின்மூலம் அழித்துவிடும் ஆற்றல் பெருகிவருகிறது. காரணம், ஆறறிவு படைத்த மனித சமுதாயம் இப்போது சக மனிதர்களின் தொடர்பைத் துண்டித்து, ஜடப்பொருளான ஆண்ட்ராய்ட் போனுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு விட்டது. எனவே உள்ளம் மரத்துப்போனது. உணர்வுகள் செத்துக் கொண்டிருக்கின்றன. மனநோய் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இயந்திரங்களை நம்பும் மனம், மனித இதயங்களின் உணர்வுகளை நம்ப மறுக்கிறது. இயற்கையை நம்ப மறுக்கிறது ஆனால் மனித இனத்திற்குதான் இயற்கையின் தயவு தேவைப்படுகிறது. இயற்கை மனித இனம் தேவையில்லை என்று நினைத்தால், மனித இனமானது ஒரு நொடியில் அழிந்துவிடும். இயற்கையுள் இருக்கும் இறைசக்தி நினைத் தால், மனித சமுதாயத்தில் நிலவும் ஏற்ற- இறக்கம், உயர்ந்தவன்- தாழ்ந்தவன், ஏழை- பணக்காரன் என்னும் பாகுபாட்டை கணப்பொழுதில் அழித்துவிட்டுத் தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளமுடியும்.
உலகின் மிகச்சிறந்த முன்னோடிகள் நம் தமிழ்ச் சான்றோர்கள். ஏனென்றால் உயிர்வதை செய்வதை அவர்கள் விரும்பிய தில்லை; அதை நமக்கு போதிக்கவுமில்லை.
"அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்'
என்கிறார் வள்ளுவர். எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே மிகச்சிறந்த செயலாகும். உயிரைக் கொல்லுதல் என்பது, பிற தீவினைகள் அனைத்தினாலும் ஏற்படும் விளைவுகளை ஒருங்கே தந்துவிடும்.
நமது சங்க இலக்கியங்களாகட்டும்- சைவ சித்தாந்த நூல்களாகட்டும்- சித்தர் பெருமக்கள் அருளிச் செய்தவையாகட்டும்- அனைத்தும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்வதையே வலியுறுத்துகின்றன. அதனை நாம் பயன்படுத்துவதும் இல்லை; அத்தகைய நல்ல விஷயங்களில் நாம் பயணிப்பதும் இல்லை. நமது பிள்ளைகளில் எத்தனைப் பேர் இன்று தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை செய்கின்றனர்? அவர்கள் செய்யும் வேலைக்கும் படிப்புக்கும் தொடர்புள்ளதா- மருத்துவப்படிப்பு நீங்கலாக? அதிலும்கூட குறைவான சதவிகிதத்தில் மதிப்பெண் எடுத்தவர்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் உண்டு. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த பலர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு அடிப்படைக் கல்வியான பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? நாம் நமது வரலாற்றை மறந்தோம்; மொழியை மறந்தோம்; வாழ்க்கைக் கல்வியை மறந் தோம். அதன் விளைவு சுதந்திரம் பெற்ற அடிமைகளாக, பெருமையுடன் ஷிப்ட் முறையில் அந்நிய நிறுவனங்களில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறோம்.
"போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன்; அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன்' என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. இறைவன், நன்மையானவற்றை மட்டும் அறிந்து செயல்பட மனிதனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். ஆனால் மனித இனமோ சொகுசான வாழ்க்கைக்கும் ஆடம்பரத்திற்கும் ஆசைப்பட்டு பொய், புரட்டு, திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமை என்று மிகவும் கொடூரமான-
தவறான பாதையில் சென்றுகொண்டி ருக்கிறது.
"கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு'
என்கிறார் திருவள்ளுவர். களவு செய்பவர் களுக்குத் தன் சொந்த உடலும் தவறிப் போய் விடும். (கெட்டு அழிந்துவிடும்.) ஆனால் களவு செய்யாதவர்க்கு நெடுந்தொலைவிலுள்ள தேவருலகமும் தவறாமல் கிடைத்துவிடும்.
புலன்களின் இச்சைக்கு நமது அறிவு அடிமையாகும்போது நியாயமான- நன்மையான செயல்கள் நடப்பதில்லை. சமத்துவம், சமதர்ம நோக்கமும் இறந்துவிடு கிறது. எனவே பொய் எனும் மாயையிலிருந்து விடுபட்டு, தில்லை அம்பலத்தான் திருவரு ளைப் பெற முயலவேண்டும். அதற்குத் திருமூலர் கூறிய உபாயத்தைக் காண்போம்.
"எய்திய காலத்து இருபொழுதும் சிவன்
மெய்செயின் மேலை விதியதுவாய் நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீக்கிடில்
ஐயனும் அவ்வழி ஆகி நின்றானே.'
சிவனருளைப் பெறவேண்டு மெனில், அவனை வழிபட கிடைத்த வாய்ப்பான நேரத்தில் காலை- மாலை என இருவேளைகளிலும் பரம்பொருளை மனதிலிருத்தி அன்போடு பணிந்தால், முன்செய்த தீவினைப் பயனால் வரும் துன்பங்கள் அகன்றுவிடும். ஐம்புலன்களினால் வரும் எதிர்மறை சிந்தனைகள் இற்றுப் போய்விடும். அப்போது பரம்பொருள், வழிபடுபவர்களின் உள்ளத்துள், அவர்கள் உணரும் பொருளாகி இருப்பான்.
எனவே நம் முன்னோர்கள் வகுத்த ளித்த ஒழுக்க நெறிகளின்படி வாழக் கற்றுக்கொண்டோமானால் நம்மை எவ்விதத் துன்பமும் நெருங்காது. அன்பும் அறமுமே உருவான அரனைத் துதிப்போம். ஆரோக்கிய- ஆனந்தமயமான வாழ்க்கையில் திளைப்போம்.