அட்சய திரிதியை- 26-4-2020
"அட்சய' என்றால் குறைவற்றது என்று பொருள். இந்த அட்சய திரிதியை நன்னாளில் ஸ்ரீமகாலட்சுமி யைப் போற்றி வணங்குவது சிறந்த தாகும். இந்நாளில் நம் முன்னோர் களைப் போற்றி வணங்குவதும் சாலச்சிறந்தது. காரணம், முன்னோர் கள் அருளால் குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம், ஐஸ்வர்யங்கள் கிடைக்குமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சித்திரை மாதத்தில் அமாவாசைக் குப்பிறகு வரும் மூன்றாவது திதிதான் அட்சய திரிதியை நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷத்தில் உச்சம்பெற்று- அதேநேரத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும்போதுதான் அட்சய திரிதியை பிறக்கிறது.
இந்தநாளில் தங்கம் வாங்கும் பழக்கம் சமீப காலமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நன்னாளில் தங்கம் போன்ற ஆபரணங்களை வாங்குவதைவிட, பசித்தோருக்கு உணவு வழங்குதல், வறியவர்களுக்கு ஆடை தானம் செய்தல், ஏழைகளுக்கு இயன்றவரை உதவிபுரிதல் போன்ற நற்காரியங்களைச் செய்தால் மகாலட்சுமியின் அருளை எளிதில் பெறமுடியும் என்பது ஐதீகம். அன்று நம் வீட்டிற்குத் தேவையான பொருளை வாங்குவதும் நன்மை பயக்குமாம். குறிப்பாக அரிசி, உப்பு போன்ற உணவுப் பொருட்களை வாங்குவது சிறப் பென்று கூறப்படுகிறது.
* செல்வத்திற்கு அதிபதியான குபேரன், தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை மறுபடியும் பெற்றது-
* பாண்டவர்கள் வனவாசத்தின்போது சூரிய பகவானிடமிருந்து அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் பெற்றது-
* மணிமேகலையும் அட்சய பாத்திரம் பெற்றது-
* சிவபெருமான் அனைத்து வளங்களையும் இழந்து பிச்சாடனராய் மாறி, தன் கையிலிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடம் உணவு பெற்று "பிரம்மஹத்தி' தோஷத்திலிருந்து விடுபட்டது-
* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழைப் பெண்ணுக்கு தங்க நெல்லிக்கனி மழை பெய்யச் செய்தது-
* கிருஷ்ண பகவான் தனது ஏழை நண்பன் குசேலனிடம் அவல் பெற்றுண்டு, அவனது வாழ்க்கையில் வளம் சேர்த்தது போன்ற அற்புதங்கள் யாவும் நிகழ்ந்தது ஒரு அட்சய திரிதியை நன்னாளில்தான்.
இத்தனை சிறப்புகளை ஒருங்கே பெற்ற அற்புதத் திருநாளில் மகாலட்சுமி சமேதராய்க் காட்சிதரும் நாராயணரை வணங்குவதும் மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் ஏழை எளியவர்களுக்கு நம்மாலியன்ற உதவிகளைச் செய்து புண்ணியம் பெறுவோம்.