ஒருவருக்கு "நான்' என்னும் மமதை- அகங்காரம் இருக்கக் கூடாது. மற்றவர்களையும் மதிக்கவேண்டும். அலட்சியம் செய்யக்கூடாது. பணிவு, மரியாதை, அன்யோன்ய பாவம் தேவை. "வித்யா வினய ஸம்பன்ன'- அறிவுள்ளவன் அடக்கமுடைய வனாக இருக்கவேண்டும் என்பது நியதி.
துவாரகாதீசன் தனது நன்பன் ஏழை குசேலனை மதித்தான். இராமர் சபரி, குகன் இவர்களையும் மதித்தார்!
ஒருசமயம் அகத்தியர் தனது ஐம்பது முனிவர்களுடன் வரமுனி என்னும் மகாதபஸ்வியைக் காணவந்தார். அகத்தியர் சாமானியமானவரா? சிவ- பார்வதி கல்யாணத்தின்போது வடபகுதி தாழ, அதை சமன்செய்ய தென்பகுதிக்கு குறுமுனியான அகத்தியரையல்லவா சிவபெருமான் அனுப்பினார்!
ஹயக்ரீவர் (விஷ்ணு அவதாரம்) அகத் தியருக்கல்லவா உன்னதமான லலிதா சகஸ்ரநாமம் உரைத்தார்! அகத்தியர் இல்லா விடில் நமக்கு காவிரி கிடைத்திருக்குமா? கங்கையில் நீராடுபவர்களின் பாவத்தை சுமக்கும் அவள், அந்தப் பாவத்தைக் காவிரியில் நீராடியல்லவா போக்கிக்கொள்கிறாள்?
தன்னைக் காணவந்த அகத்தியரை வரமுனி மதிக்கவில்லை. ஆகவே, "மதிகெட்ட மஹிஷனாக (எருமையாக) போகக்கடவாய்' என்று அவரை அகத்தியர் சபித்தார். ரம்பன் என்னும் அசுரனுக்கும், ஒரு பெண் எருமைக்கும் பிறந்தவன் மஹிஷாசுரன். பூர்வஜென்ம வாசனையால் பிரம்மனைக் குறித்துத் தவம்செய்து சாகாவரம் பெற்றான். (கன்னிப்பெண்ணால் மரணம் நேரக்கூடாது என்பது அவன் வரத்தில் இடம்பெறவில்லை.)
வரம் பெற்றவன் சுகமாக வாழ்த்திடக் கூடாதோ! இரண்யகசிபு நிலை என்ன- அதே! அவன் சகல லோகங்களையும் தன்வசப்படுத்த, தேவர்கள் யாவரும் முறையிட, பிரம்ம- சிவ- விஷ்ணு ஒன்றிய சக்தியாக- துர்க்கையாக பராசக்தி அவதரித்தாள்.
சண்டன், முண்டன், மதுடைபன், சும்ப நிகம்பன், தூம்ரலோசனன், ரக்தபீஜன் போன்ற எல்லா அசுரர்களையும் அழித்தாள். இறுதியில் கன்னியான தேவி மகிஷனுடன் போரிட்டு அவனையும் அழித்தாள்.
அதனால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள்.
தேவி பக்தர்கள் பலருண்டு. ஒரு துதியைக் காண்போமா?
"சந்த்ர இந்த்ர சூர்ய மனு ஷண்முக நந்திகேச
விக்னேச விஷ்ணு பரமேஸ்வர கும்பநாதான்
துர்வாஸயம் முனிவரம் ப்ரணமாமி லோபாமுத்ராம்
சிவாங்க்ரி ஸரஸுருஹ பக்தியுத்தான் ஸ்மாராமி.'
இதையே தமிழாக்கம்போல அபிராமி பட்டர்-
"ஆதித்தன் அம்புலி சூரியன் அமரர்தங்கோன்
போதிற் புராரி முராரி பொதிய முனி
காதி பொருபடை கந்தன் கணபதி முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையனையே.' என்று பாடுகிறார்.
ஒருசில தேவி பக்தர்களை சிந்திப்போம்.
காஞ்சி காமாட்சி கோவிலில், கோவில் பணிகளைச் செவ்வனே செய்யும் ஒரு வாய்பேச இயலாதவன் இருந்தான். அவனது பெயர் தெரியாது. ஒருநாள் காமாட்சி தேவியே சுமங்கலி வடிவமாய் வந்து அவனிடம், "வாயைத் திற' என்றாள்.
ஏனென்று கேட்க முடியாதே? வாயைத் திறந்தான். தேவி தன் தாம்பூல எச்சிலை அவன் வாயில் உமிழ்ந்தாள். உடனே அவன் கவிபாடும் வல்லமை பெற்றான். கவிகள் பீறிட்டுவந்தன. "மூக பஞ்சதசி' என்று 500 துதிகள் காமாட்சிமீது செய்தான். (முக என்றால் ஊமை). ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரிபோல் அபரிமிதமான துதிகள்! (பார்வதியின் ஞானப்பாலால்தானே மூன்று வயது குழந்தை "தோடுடைய செவியன்' என்று தேவாரம் பாடியது!
அகிலாண்டேஸ்வரி (திருச்சி) ஒருசமயம் சுமங்கலி வடிவாக வந்தாள். ஒரு யோகியைக் கண்டு "வாயைத்திற' என்றாள். அவன் முறைத்துப்பார்த்து அலட்சியம் செய்தான். அவனது அருகில் ஒரு மூடனான சீடன் இருந்தான்.
அவன் வாயைத் திறந்தான். தேவி தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள். உண்ட அவன் காளமேகப் புலவனானான்.
கும்பகோணத்தில், சாரங்கபாணி தீட்சிதர் என்னும் ஆன்மிகரின் புதல்வரான புருஷோத்தமன் பிறவி ஊமை. மருத்துவம், மந்திரம், எந்திரம், தந்திரம் யாவும் பலிக்காமல் போகவே, பூந்தோட்டம் தலம்வந்து சரஸ்வதியை ஒரு மண்டல காலம் துதித்தார். கடைசிநாள் சரஸ்வதியே ஒரு சுமங்கலி வடிவமாய் வந்து, புருஷோத்தமனின் வாயில் தன் தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள். அவன் புருஷோத்தம பாரதி எனும் கவிஞனானான். நிறைய சம்பாதித்து கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தானாம்.
ஒட்டக்கூத்தரும் பூந்தோட்ட சரஸ்வதி அருளால் மூன்று அரசர்களுக்கு அவைக்கவிஞரானார். ஊர் பெயரும் கூத்தனூர் ஆயிற்று. கம்ப இராமாயணம் எழுதிய கம்பர் சரஸ்வதி பக்தர். சரஸ்வதி அந்தாதி பாடியுள்ளார்.
முருகனருளால் "கந்தர் கலிவெண்பா' பாடிய குமரகுருபரர், காசியில் மடம் கட்ட இடம்வேண்ட, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த முகம்மதிய மன்னன் "உருது மொழியில் பேசு' என்றான். குமரகுருபரர் சரஸ்வதியைத் துதித்து "சகலகலாவல்லி மாலை' பாட, சிம்ம வாகனம் வந்தது. அதிலமர்ந்து மன்னனுடன் உருதுமொழியில் உரையாட, மடம்கட்ட இடம் கிடைத்தது. அதை இப்போதும் அனுமான் காட்டில் காணலாம்!
அபிராமி பட்டரை தேவிபக்தர்கள் அறிவார்கள். சுப்ரமணியன் என்பவர் ஆழ்ந்த தேவி பக்தர். அரசர் ஒருநாள் அவரிடம், "இன்று என்ன திதி?' என்று வினவ, அவர் "பௌர்ணமி' என்றார். "இரவு சந்திரன் தோன்றுமா' என்று வினவ, "சந்தேகம் என்ன' என்றார். அன்று தை அமாவாசை! "இது எப்படி நிகழும்?' என்று கேட்க, "அது தேவவாக்கு' என்று "அபிராமி அந்தாதி' பாடினார். அன்னை தன் காதணியை வானில் வீசி சந்திரனாகப் பிரகாசிக்கச் செய்தாளே!
அதன் பலஸ்ருதி துதியை சிந்திப்போமே!
"தனம் தரும் கல்விதரும்
ஒருநாளும் தனர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே!'
இவை யாவும் அவசியம் தேவைதானே.
இப்போது இதேபோன்ற சம்பவம் நடந்த மயிலாடுதுறைக்கு வருவோமா! இங்குள்ள அம்பாள் பெயர் அபயாம்பாள். பெயர்போலவே அதிசயமாக அபயகரகம் கொண்டவள். அபயகரத்து அம்பிகையைக் காண்பது துர்லபம்! பக்தியின் ஆழத்தை சித்தித்துவிட்டு கோவிலுக்குப் போவோம்.
கிருஷ்ணய்யர் என்பவர் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் 250 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்.
பெற்றோர் பெயர், வாழ்ந்த வருடங்கள் விவரம் சரியாகத் தெரியவில்லை. சிறுவயதிலேயே தாய்- தந்தையரை இழந்தார். தேவியானவள் ஒரு மாது உருவம்கொண்டு, அபயாம்பாள் சந்நிதியில் நிவேதிக்கப்பட்ட அருளமுதம் ஈந்தாள். ஆக, கோவிலிலேயே அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்தவர். ஸ்ரீவித்யா உபாசகர். எவரிடம் சாக்த ஸ்ரீவித்யை கற்றார் என்னும் விவரமும் தெரியவி.ல்லை.
அன்னைமீது அபார பக்தியுடையவர் என்பதால்
"அபயாம்பிகை பட்டர்' என அழைக்கப் பெற்றார்.
தினமும் அர்த்தஜாமப் பூஜை முடிந்தபிறகு இரவு தன் இல்லம் செல்வது வழக்கம். ஒருசமயம் வழியில் இருட்டில் கால்தவறி விழுந்துவிட்டார். "அகிலாண்டேஸ்வரியே, ஜோதிஸ்வரூபிணியே, ஆதிபரஞ்ஜோதியே, ஜ்வாலாமுகியே, அபயாம்பிகையே... நான் சரியாக நடந்துசெல்ல சிறு ஒளியைக் காண்பிக்கக் கூடாதா' என வேண்டினார்.
மறுநாளிலிருந்து அவர் முன்னே ஒளி சென்றதாம்! அன்னையின் அருளில் நனைந்த அவர், "உன்னை எப்படிப் புகழ்வேன்' என்று ஏங்க, அவள் "செந்தமிழால் எனக் குப் பாமாலை சூடு' என்றாளாம். அவர் "நான் கவிபாடும் ஞானம் பெறவில்லையே' என்று உருக, உடனே "அபயாம்பிகை சதக' 100 பாடல்கள் எழுந்தன! எட்டு வரிப் பாடல்கள். "மயிலாபுரியில் வளர் ஈசன் வாழ்வே அபயாம்பிகைத்தாயே' என்று ஒவ்வொரு துதியும் முடியும்.
முதல் பாடல் அம்பிகையைப் பாதத்திலிருந்து ஆரம்பித்து, கேசம்வரை துதிக்கிறது.
"பாதாம்புயத்திற் சிறுசதங்கைப் பணியும்
சிலம்பும் கிண்கிணியும்
படர் பாடகமும் தண்டையுடன்
படியுங் கொலுசும் தழைத்தருளும்
பீதாம்பரமும் துவள் இடையும்
பிரியா அரைஞாண் மாலைகளும்
பெருகும் தரள நவமணியும்
புனையும் குயமும் இருபுயமும்
போதார் அமுத வசனமொழி புகலும் வாயும்
கயல் விழியும் புண்டரீகத் திருநுதலும்
பொன்போற் சடையும் மதிமுகமும்
வாதாடிய பேரின்ப ரசவதனக் கொடியே
உனை அடுத்தேன் மயிலாபுரியில் வளர்
ஈசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே!'
அபிராமிபட்டர் பதங்கள்போல்
அபயாம்பிகை பட்டர் பதங்களும் எளிமையானவை!
இப்போது மயிலாடுதுறை தலச்சிறப்பு சிந்திப்போம்.
திருமயிலாடுதுறை, மாயூரம், தென்மயிலை, பிரம்மவனம், கௌரி மாயூரம், சிகண்டிபுரம் என பலபெயர்கள் உண்டு.
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்பது பழமொழி.
முக்தியைத் தரும் திருத்தலம்; பிணி தீர்க்கும் தலம்.
"தணியார் மதி செஞ்சடையான் தன்
அணியார்ந்தவர்க்கு அருள் என்னும்
பிணியாயின தீர்த்தருள் செய்யும்
மணியான் மயிலாடுதுறையே!'
என்பது ஞானசம்பந்தர் பாடல்.
அன்னை (சென்னை மயிலாப்பூர் போல்) மயில் உருக்கொண்டு தவம் செய்தாள். மகிழ்ந்த ஈசன் ஆண்மயில் உருவம்கொண்டு வர, இருவரும் ஆடினர். அதற்கு "கௌரி மயூர தாண்டவம்' எனப்பெயர்.
இங்கு காவிரிநதி பாய்கிறது. ஐப்பசி மாதத்தில் கங்கை போன்ற புண்ணிய நதிகள் தங்களைப் புனிதம் செய்ய இங்கு சங்கமமாகின்றன.
சிவன் பெயர் வள்ளலார், பிரம்மலிங்கம், மயூரநாதர். அன்னை பெயர் அஞ்சலை, அஞ்சல்நாயகி, மயிலம்மை, அபய ப்ரதாம்பிகை.
திருஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரம் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
முத்துஸ்வாமி தீட்சிதர் "அபயாம்பிகை நவாவரணம்' பாடியுள்ளார். உருக்கமான பாடல்கள். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் கலந்த மணிப்ரவாளப் பாடல்! மீனாட்சி சுந்தரம்பிள்ளை 1895 பாடல்களால் மாயூரபுராணம் பாடியுள்ளார்.
சென்னை மயிலை தென்மயிலை; இது வடமயிலை.
சூரியன், சந்திரன், விஷ்ணு, பைரவர், சனீஸ்வரர், தேவி, இந்திரன், அகத்தியர், தர்மன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றனர்.
கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை ஆகியவையும் சிவனை வழிபட்ட தலம்.
தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பைச் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இன்றும் தினமும் அவர் சிவனை பூஜைசெய்கிறாராம். பௌர்ணமி தினம் விசேட ஆராதனைகள் நடக்கின்றன.
ஆக, ஆன்மிக அன்பர்கள் அம்பிகையை, ஈசனை தரிசித்து மகிழலாமே! அபயாம்பிகை சதகமும் பாடி நெகிழலாமே!