விண்ணும் மண்ணும் பிரம்மத்தில் நிலை பெற்றிருக்கின்றன. அந்த ஆதிமூலமான பிரம்மம்தான் இதற்கு ஆதாரமென முண்டக உபநிஷத்து கூறுகிறது.
அதேபோல் பிரம்மத் திலிருந்துதான் ஆகாயம் (விண்) தோன்றியது. ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நிலமும் தோன்றின என தைத்தி ரிய உபநிஷத்து கூறுகி றது.
விண்ணும் மண்ணும் தோன்றியது சரி; அதைத் தாங்குவது யார் என்கிற கேள்வி எழுந்தபோது அதற்கு- "விஷ்ணுவாலேதான் இந்த வானமும், பூமியும் தாங்கப்படுகின்றன' என ஸ்ரீவத்ஸ மகரிஷி கூறினார்.
அதாவது மகாவிஷ்ணுவாலேதான் இந்த பூமியும், வானமும் தாங்கப்படுகிறது என்பதற்குக் காரணம், வாமன அவதாரத்தில் தனது முதல் அடியை பூமியிலும், இரண்டாவது அடியை ஆகாயத்திலும் அளந்தார். இதைத்தான் சிலப்பதிகாரத்தில் (ஆய்ச்சியர் குரவை) "மூவுலங்களையும் ஈரடியால் தாவிய திருவடிகள்' என இளங்கோவடிகள் பாடினார்.
முழுமுதற் கடவுளான மகாவிஷ்ணுவின் மனைவியான லட்சுமிதேவியால் ஞானப்பாலை உண்டவர்தான் ஸ்ரீவத்ஸ மகரிஷி. எப்படி உமையம்மையால் ஞானப்பாலை உண்ட திருஞானசம்பந்தர் பின்னாளில் பெரிய ஞானி யாக உருவானாரோ, அதேபோல் அக்ஷமாலா என்னும் பெண்மணியின் மகனாகப் பிறந்த வத்ஸன் பின்னா ளில் ஸ்ரீ வத்ஸ மகரிஷியாக உருவானார்.
இந்த மகரிஷிமூலமே ஏற்றமிகு ஸ்ரீவத்ஸ கோத்திர சந்ததியினர் (குலம்) வழிவழியாக உருவாகினர்.
சத்யலோகத்தில் பிரம்மதேவர் முன்னிலையில் சப்தரிஷிகள், முனிவர்கள், சாதுக்கள் என பலர் தினமும் கூடி வேதம் மற்றும் சாஸ்திரங்களைப் பற்றி சதஸ் (விவாதம்) செய்வது வழக்கம். அதுபோன்று ஒருநாள் சாம காணம் பற்றி துர்வாச முனிவருக்கும், மந்தபாலர் என்னும் முனிவருக்குமிடையே விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விவாதத்தில் சாம காணத்தின் ஸ்வரத்தை துர்வாச முனிவர் தவறாகப் பாடிவிட்டார்.
துர்வாச முனிவர் ஒரு முன்கோபி மட்டுமின்றி, கோபத்தால் சபித்துவிடுவார் என்னும் பயத்தில் சபையில் இருந்தவர்கள் யாரும் தவறை சுட்டிக்காட்டவில்லை. சகல கலைகளுக்கும் அதிபதியான சகலகலாவாணியான சரஸ்வதிதேவி அன்றைய சபையில் இருந்ததால், பிசகுடன் முனிவர் பாடியபோது சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். இதனால் அனைவரும் சிரித்து கேலி செய்தனர். இதனால் துர்வாச முனிவருக்கு வெட்கம் மேலிட, கோபத்துடன் சரஸ்வதிதேவியை பூலோகத்தில் பிறக்குமாறு சபித்தார்.
முனிவரின் சாபத்தால் கலக்கமடைந்த சரஸ்வதி தேவியை பிரம்மதேவன் தேற்றி, "உன்னுடன் துணைக்கு சாவித்திரி தேவியும் வந்து தங்குவாள். பூலோகத்தில் உனக்கு புதுப்பிறவி ஏற்பட்டு, உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்.
அந்த கணமே உனது சாபம் முழுமையாக அகன்றுவிடும்'' எனக்கூறி, பூலோகத்திற்கு இருவரையும் அனுப்பிவைத்தார். சத்யலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்த இருவரும் சோணா நதிக்கரையில் புதுப்பிறவி எடுத்து பூலோகப் பெண்மணிகளாக வசித்துவந்தனர்.
சோணா நதிக்கரையில் ச்யாவனம் என்னுமிடத்தில், பிருகு மகரிஷியின் பரம்பரை யைச் சார்ந்த ச்யாவன (சயவனர்) ரிஷியின் புதல்வரான ததீசி (ததீசன்) என்னும் ரிஷியை சரஸ்வதிதேவி திருமணம் புரிந்து, அவருடைய ஆசிரமத் தில் வாழ்ந்துவந்தாள். அதே பகுதியில் பார்க்கவ குலத்தைச் சார்ந்த அக்ஷமாலா என்ற பெண்ணும் வசித்துவந்தாள். இருவரும் நட்புடன் பழகி வந்தனர். காலப் போக்கில் சரஸ்வதிதேவிக்கும், அக்ஷ மாலாவுக்கும் ஆண் குழந்தைகள் பிறந்தன. சரஸ்வதிதேவி தன் மகனுக்கு ஸாரஸ்வதன் எனப் பெயரிட்டாள். அதேபோன்று அக்ஷமாலா தன் குழந்தைக்கு வத்ஸன் எனப் பெயரிட்டாள். குழந்தை பிறந்தவுடன் துர்வாச முனிவரின் சாபம் அகன்றதால், சரஸ்வதிதேவி தன் அன்பு மகனுக்கு எல்லா கலைகளும், கல்வி ஞானமும் தன் அருளால் கிடைக்கும்படி வாழ்த்திவிட்டு, சாவித்திரி தேவியுடன் மீண்டும் சத்யலோகம் சென்றாள்.
சரஸ்வதிதேவியைப் பிரிந்த ததீசன் குழந்தையை எப்படி காப்பாற்றுவது எனப் புரியாமல், தன் மனைவியின் தோழியான அக்ஷமாலாவிடம் ஸாரஸ்வதனை ஒப்படைத்தார். அக்ஷமாலாவின் ஆசிரமத்தில் இரு குழந்தைகளும் எந்தவிதமான பேதமின்றி ஒற்றுமையாக வளர்ந்துவந்தனர்.
ஒருநாள் பசியால் இரு குழந்தைகளும் அழ, தன்னுடைய குழந்தையின் பசியைப்பற்றிக் கவலைப்படாமல் தன்னிடம் ததீசன் ஒப்படைத்த ஸாரஸ்வதனுக்கு முதலில் அக்ஷமாலா பால் கொடுத்தாள். மற்றொரு குழந்தையான வத்ஸன் தொடர்ந்து அழவே, கருணைக்கடலும், ஞான, பல, ஐச்வர்ய, சக்தி, தயா, வவீர்ய, தேஜஸ் போன்ற கல்யாண குணங்களைக் கொண்டவளுமான மகாலட்சுமிதேவி ஞானப்பாலை ஊட்டி குழந்தையின் பசியைப் போக்கினாள்.
மகாலட்சுமிதேவியை ஸ்ரீ (திருமகள்) என அழைப்பதுண்டு. வத்ஸன் மகாலட்சுமி தேவியிடம் பாலைப் பருகியதால் அக்குழந்தை பின்னாளில் ஸ்ரீ வத்ஸன் என அழைக்கப் பட்டான்.
சரஸ்வதியின் அருளால் சகல கலைகளையும் கற்ற ஸாரஸ்வதன் தன்னு டைய தோழனான ஸ்ரீவத்ஸனுக்கு தான் கற்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்து, நல்ல பெண்ணைத் திருமணமும் செய்து வைத்தான். இருவரும் இல்லற தர்மத் துடன், வேத நெறியுடன் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தனர். எதிர்காலத்தில் பிறப்பை அகற்ற பிரம்மஞானம் இன்றியமையாதது என்பதை உணர்ந்த ஸ்ரீவத்ஸன், கடும் தவத்தை மேற்கொண்டதால், அவரது தபோமகிமையால் ஸ்ரீவத்ஸ மகரிஷி என அழைக்கப்பட் டார்.
இந்த மகரிஷியின் வம்சத்தில் வருபவர்கள்தான் ஸ்ரீவத்ஸ கோத்ர வம்சத்தினர். இவர்களை வாத்ஸாயனர் கள் என்றும் அழைப்பதுண்டு.
இந்த வம்சத்தில்தான் சமஸ்கிருதக் கவிஞர் பட்டபாணர், காமசூத்திரம் நூலை எழுதிய வாத்ஸாயனர், ந்யாய சாஸ்திரத்திற்கு உரையெழுதிய பக்ஷிலர், அத்வைத சித்தாந்ததைப் பரப்பிய பிரம்மஞானி ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்யர் போன்ற பல அறிஞர்களும் மகான்களும் தோன்றினர். சமஸ்கிருத மகாகவியான பட்டபாணர் எழுதிய ஸ்ரீஹர்ஷசரிதம் எனும் நூலில் ஸ்ரீவத்ஸ மகரிஷியின் வரலாற்றைப் பற்றியும் எழுதியுள்ளார். அதேபோல் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீவராஹ மஹா தேசிகன், "ஸ்ரீவத்ஸ வம்சஜன' என்னும் ஸ்லோகத்தில் இந்த வம்சத்தின் பெருமையைப் பற்றிப் பாடியுள்ளார்.
சரஸ்வதியின் அருளிருந்தால் ஞானம் பெருகும் என்பது உறுதி!