"தாமரை இலை தண்ணீர்போல' என்பது அழகிய பழமொழி. நமது வாழ்க்கையில் மற்றவர்களிடம் எப்படி பழக்கம் வைத்திருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கும் பழமொழியாகும்.

எத்தனையோ விதமான இலைகள் இவ்வுலகில் இருக்கின்றன. ஆனால் அவற்றின்மீது தண்ணீர் பட்டால் நீண்டநேரம் அதிலேயே நிற்கும். ஆனால் தாமரை இலைமீது தண்ணீர் பட்டால் இலையின்மீது ஒட்டுவதில்லை. ஒரு துளி நீர் விழுந்தாலும் அது வழுக்கிக் கொண்டு கீழே விழுந்துவிடும். தாமரை இலையின் மேற் பரப்பில் மெழுகு போன்ற தன்மையுள்ளது. அதனால் தான் அதன்மீது தண்ணீர் ஒட்டுவதில்லை.

vageshwar

கம்பர் ஒருமுறை வயல்வெளியில் நடந்து செல்லும்பொழுது, ஏற்றம் இறைத்த பாமரர்கள் பாடிய இரண்டுவரி அவர் சிந்தனையைத் தூண்டியதாகச் சொல்வார்கள். அவர்கள் பாடிய பாடலும் இலையில் விழுந்த நீரைப் பற்றியதுதான். "மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே' என்ற இரண்டு வரிகளைப் பாடியவர்கள் அதற்கு அடுத்த வரியைப் பாடாமல் சென்றுவிட்டார்கள்.

Advertisment

இதைக் கேட்டுக்கொண்டிருந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை. அதற்கு அடுத்த வரி என்னவாக இருக்குமென்று சிந்தித்துக் கொண்டே இருந்தார். மறுநாள் காலையில் வயலுக்குச் சென்று அவர்கள் பாடலின் தொடர்ச்சியைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அப்பாடல்...

"மூங்கில் இலை மேலே

தூங்கும் பனி நீரே

Advertisment

தூங்கும் பனி நீரை

வாங்கும் கதிரோனே!'

கதிரவன் தன் கதிர்களால் தண்ணீரை உள்வாங்கிக் கொள்வதை எளிய நடையில் பாடிய அந்தப்பாடல் கம்பனை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல் தாமரை இலையில் பட்ட நீர் நமது உறவுமுறைகளுக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கிறது.

நமது உறவினர்கள் சிலரிடம் நெருங்கிப் பழகமுடியாது. அவர்கள் பெருந்தன்மை இல்லாதவர்களாக இருக்கலாம். நமது பிரச்சினைகளை மனம்விட்டுப் பேசினால் அதைப் பெரிதாக்கி மற்றவர்களிடம் பிரபலப்படுத்தி விடுவார்கள். அத்தகையவர்களிடம் நாம் நம்மைப்பற்றிய தகவல்களை தேவையானதை மட்டும் சொல்லவேண்டும். சொல்லாவிட்டாலும் பிரச்சினை வரும். எனவே தாமரை இலை தண்ணீர்போல விஷயத்தைப் பட்டும் படாமலும் சொல்லவேண்டும்.

சாதாரண மனிதர்கள், உறவுக்காரர்கள் சிலரிடம் இப்படி பட்டும் படாமலும் பழகிக் கொள்ளலாம். ஆனால், தெய்வத்திடம் உறவு வைப்பதென்றால் தாமரை இலைபோல் பட்டும்படாமல் இருக்காமல் மெய்யன்போடு தன்னை அர்ப் பணித்து வழிபட வேண் டும். அவ்வாறு சரணாகதி அடைந்து வழிபடுபவரின் நியாயமான கோரிக்கை களை ஒருபோதும் இறைவன் நிறைவேற்றத் தயங்கு வதில்லை. இதை உணர்த்துவதோடு, அவர்களுக்கு அருள்மழை பொழிந்து அருள்கின்றதொரு திருத்தலம்தான் பெருஞ்சேரி வாகீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன் : வாகீஸ்வரர்.

இறைவி: சுவாதந்தர நாயகி.

விசேஷமூர்த்தி: ஆதிகுரு தட்சிணாமூர்த்தி.

புராணப்பெயர்: தாருகாவனம், தேவதாருவனம்.

ஊர்: பெருஞ்சேரி.

தீர்த்தம்: ஞானதீர்த்தம்.

தலவிருட்சம்: பன்னீர்மரம்.

அப்பர், சம்பந்தரால் பாடப்பட்டிருந்தாலும் தேவார வைப்புத்தலமாகவே போற்றப்படுவதுடன், தென்கரைத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற இவ்வாலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப் பாட்டில் நன்கு இயங்கி வருகிறது. வியாழன், சந்திரன், தாரை, சரஸ்வதி, பிரம்மா, தத்தசோழன் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றதலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களோடு இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயம்.

"கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர் சோதியானை

இருங்கடல் அமுதம் தன்னை இறப் பொடு பிறப்பிலானை

பெரும்பொருள் கிளவியானை பெருந்தவ முனிவர் ஏத்தும்

அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே.'

-அப்பர்

திருவிளையாடற் புராணத் திற்கும் மாயூர புராணத்திற்கும் சம்பந்தப்பட்ட இவ்வாலயம் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.

vageshwar

தலக்குறிப்பு

ரிஷிகள் தவம் செய்வதற்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய எண்ணி பிரம்மாவை அணுகினர். அப்போது பிரம்மா தர்ப்பையினால் ஒரு வளையம் செய்து, "இதை நான் வீசுகிறேன். அது பூமியில் எங்கு சென்று விழுகிறதோ அவ்விடத்தில் தவம் செய்ய லாம்' என்றார். அதேபோல் பிரம்மா தர்ப்பை விளையத்தை "ஓம் நமசிவாய' என்று உச்சரித்து வீசினார். அது பூமியில் தேவதாரு மரங்கள் அடர்ந்த சோலைகளின் நடுவே, வீரசோழன் ஆற்றின் வடகரையில் தாருகாவனத்தில் விழுந்தது. அங்கே 48,000 மகரிஷிகள் தவம் செய்தனர்.

மக்கள் அதிகம் வசிக்குமிடத்தை அந்தக் கால கட்டத்தில் "சேரி' என்பர். 48,000 முனிவர்கள் தவம் செய்தமையால் பெரியசேரி- பெருஞ்சேரி என பெயர்பெற்றது.

அங்கு பெருந் தவம் புரிந்த ரிஷிகள் முடிவில் சிவனையே அழிப்பதற்காக ஆபிசார ஹோமம் செய்தனர்.

(அப்பர் பாடலில் "பெருந்தவம்' என்பது 48,000 மகரிஷிகள் தவம் செய்ததைக் குறிக்கும்). அந்த ஹோமத்தின்மூலம் பலவகையான ஆயுதங்களை உருவாக்கி சிவ பெருமான்மீது ஏவி னர். இறுதியில் யானையை ஏவினர். சிவன் தன் மத்தகத்தால் யானையைத்தட்ட, அது தன்னை ஏவியவர் களையே அழிக்கவந்தது. இதையறிந்த ரிஷிகள் தங்கள் தவறுக்கு வருந்தி, சிவனிடமே தஞ்சமடைந்து பேறுபெற்றனர் என்று தலபுராணம் சொல்கிறது. இது ஒரு குருபரிகாரத் தலமும்கூட.

வியாழன் வழிபட்டது

பெரிய ஞானியான வியாழன் முக்காலத்தையும் உணரும் சக்தியுடையவர். வேத ஆகமங்களைக் கற்றவர். அவரது மனைவி தாரை பேரழகி. வியாழனின் குருகுலத்தில் தங்கி மாணவனாக இருந்தவர்களில் சந்திரனும் ஒருவன். தாரையுடன் சந்திரன் பழகி குரு துரோகம் செய்தான். இதையறிந்த வியாழன் சந்திரனுக்கு குஷ்டரோகம் உண்டாகும்படி சபித்தார். எனினும் அவரது மனக்கலக்கம் நீங்கவில்லை. தலயாத்திரை புறப் பட்டார்.

பல சிவாலயங்களில் தரிசனம் முடித்துவிட்டு, இறுதியாக உமாதேவி மயில் வடிவில் சிவனை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் அக்னிகுண்டம் அமைத்து வழிபாடு செய்தார். அப்போது அசரீரி வாக்கு "வேண்டும் வரம் யாது' என கேட்க, அதற்கு வியாழன், "எனது சித்தம் தெளிவாக வேண்டும்.

அத்துடன் தேவர்களுக்கெல்லாம் குருவாக வேண்டும். அதைத் தாங்கள் தான் தரவேண்டும்' என்றார்.

"தெற்குப்புறமுள்ள தாருகாவனத் தில் லிங்க வழிபாடு செய். உன் எண்ணம் நிறைவேறும்' என்று சிவபெருமான் குரல் கொடுத்தார். மகிழ்ந்த வியாழன் தாருகாவனமான பெருஞ்சேரிக்கு வந்து தீர்த்தக்குளம் அமைத்து அதில் நீராடியபின் அவரது சித்தம் தெளிவுபெற்றது. அன்றுமுதல் அது ஞான தீர்த்தமானது. விநாயகரைப் பிரதிஷ்டை செய்து ஞானதீர்த்த விநாயகர் என பெயர் சூட்டி, பின் கிழக்குநோக்கி லிங்கப் பிரதிஷ்டை செய்தார். மனதிற்குள் தோன்றிய அம்பாளின் வடிவத்தை சிலாரூபமாகச் செதுக்கி தெற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்தார். மனதிற்குள் தியானித்த தேவி என்பதால் "சுவாதந்தர நாயகி' எனப் பெயர்சூட்டி வழிபாடு மேற்கொண்டார்.

பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து முடிவில் பஞ்சாக்னி மத்தியில் வழிபடும்போது, ஒரு மார்கழி மாத வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் இணைந்த நாளில் இறைவன் காட்சிதந்து, "இன்றுமுதல் நீர் தேவகுரு. உமது பார்வைபட்டால் கோடி தோஷம் அகன்று கோடி நன்மை பிறக்கும். முதல் குரு, மோனகுரு, ஆதிகுரு தட்சிணாமூர்த்தியாய் உம்மை நியமிக்கிறேன்' என்று வரமளித்து மறைந்தார். இறைவன் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட்டதால் சுவாமி வாகீஸ்வரர் எனவும், ஆதிகுரு தட்சிணாமூர்த்தி வாக்கு நல்கிய வள்ளல் எனவும் பெயர்பெற்றனர்.

வியாழன் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்றதாலும், எண்ணிய எண்ணியாங்கு தேவகுரு ஆனதாலும் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இன்றும் மார்கழிமாத பூச நட்சத்திர நாளில் பஞ்சாக்னி ஹோமம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மனசாந்தி ஏற்பட்ட வியாழன் விருப்பப்படி சந்திரனின் குஷ்டரோகம் நீங்கியது. தாரையும் இறைவனை வணங்கித் தூய்மை பெற்றாள்.

vageshwar

சரஸ்வதி வழிபட்டது

பார்வதியின் தந்தையான தக்கன் சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகத்தைத் தொடங்கினான். அதில் பிரம்மா, இந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அழைக்காத இந்த யாகத்திற்குச் சென்று பார்வதிதேவி அவமானப்பட்டாள். இதைக்கண்ட சிவபெருமான் வீரபத்திரரைத் தோற்றுவித்து தக்கனின் யாகத்தை அழித்தார். அதில் கலந்துகொண்டவர்களையும் கடுமையாக தண்டித்தார்.

மூக்கறுபட்ட சரஸ்வதி தன் கணவரான பிரம்மாவிடம் தன்நிலை குறித்துப் புலம்பி னாள். அதற்கு பிரம்மா, "பெருஞ்சேரியில் குடிகொண்டிருக்கும் வாகீஸ்வர சுவாமியை வேண்டித் தவம் செய்' என்றார்.

அதன்படி சரஸ்வதி பெருஞ்சேரி சென்று வாகீஸ்வர சுவாமிய நோக்கிப் பல ஆண்டுகள் தவமிருந்தாள். தவத்தின் பயனாய் சரஸ்வதிமுன் சிவபெருமான் காட்சிதந்தார். "சுவாமி, எனது அங்கக் குறைபாடு நீக்கி, எல்லாருடைய நாவிலும் வாக்கு விருத்தியளிக்கச் செய்யவேண்டும்' என கேட்க, "அப்படியே ஆகட்டும்' என வரமளித்தார். சரஸ்வதி "வாக்தேவி' என பெயர்பெற்றாள்.

தத்தசோழன் வழிபட்டது

உடல்நலக் குறைவால் (மூச்சுத்திணறல்) சுவாசிக்க இயலாத நிலையில் பல சிவாலய தரிசனம் செய்துவந்த தத்தசோழன் பெருஞ்சேரி வந்து, ஞானதீர்த்தத்தில் நீராடி வழிபட்டுவந்தான். தன் உடல்நிலை தேறி வருவதைக்கண்டு, ஒரு மண்டல காலம் தங்கி இத்தல அம்பிகையை ஆத்மார்த்தமாக வழிபட்டான். உடல் பூரண குணமடையும் சூழ்நிலையில், எதிரிநாட்டுப் படைவீரர்கள் போருக்கு வந்தனர். உடனிருந்தவர்கள் சோழனிடம் விவரம் சொல்ல, "எல்லாம் அம்பாள் பார்த்துக்கொள்வாள்' என்று சொல்லி அம்பாளின் பாதங்களைத் தழுவிக்கொண்டான்.

அம்பாள் சுவாதந்தர நாயகி விஸ்வரூபம் எடுத்து பகைவரைப் போரில் வென்று தத்தசோழனுக்கு வெற்றி தேடித் தந்தாள். ஒரு புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையன்று இச்சம்பவம் நடைபெற்றது. அந்தநாளில் "சோழராஜா காட்சி' என்ற வைபவ நிகழ்ச்சி நடந்தது. இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சிறப்பம்சங்கள்

=மூலவர் வாகீஸ்வரர் சதுர வடிவமான ஆவுடையார்மீது அருள்கிறார். மேலே வட்டவடிவில் இந்திர விமானம் மூலவிமானமாக இருப்பது சிறப்பு வாய்ந்தது.

=மயிலாடுதுறையிலுள்ள மாயூரநாதர் கோவிலிலுள்ள சிவகுருவே நான்கு திக்கிலும் நான்கு வள்ளல்களாக அருள்பாலிக்கிறார். கிழக்கே விளநகரில் துறைகாட்டும் வள்ளல், மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், வடக்கே வள்ளலார் கோவிலில் கைகாட்டும் வள்ளல், தெற்கே பெருஞ்சேரியில் வாக்கு நல்கிய வள்ளலாக அருள்கின்றனர் என்று, மாயூரபுராணம் நாற்றிசைப்படலம் சொல்கிறது.

=தத்தசோழன் தம்பதி சமேதராக அம்பாளை வழிபடும் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.

=சரஸ்வதிதேவி சிவனை வழிபடும் சிற்பம் கோஷ்டத்தில் அற்புதமாக உள்ளது.

=ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பைரவர் என நான்கு பைரவர்கள் அருள்பாலிக் கின்றனர். அவர்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்புப்பூஜை நடைபெறும். கலியுக பைரவர் கஷ்டங்களைப் போக்கி களிப்பைத் தந்துகொண்டிருக்கிறார் என்பது இங்குவரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

=கார்த்திகை மாதம் ஆலயத்தை 128 முறை வலம்வந்து 108 தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.

="ஆசை நிறைவேற பூசத்தில் வழிபடுவீர்' என்ற ஜோதிடப் பொன்மொழிக்கேற்ப, ஜாதகமே இல்லாதவர்கூட பூச நட்சத்திர நாளில் இத்தல தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நினைத்தது நிறைவேறி நிம்மதியடைவர்.

=சங்கடஹர சதுர்த்தியன்று ஞானதீர்த்த விநாயகர், சித்திவிநாயகர் மற்றும் க்ஷேத்திர விநாயகரான மும்மூர்த்தி விநாயகருக்கு அபிஷேக அர்ச்சனை செய்தால் சங்கடங்கள் விலகி சந்தோஷமடைவர்.

=வியாழனுக்கு அருட்காட்சிதந்த வாகீஸ்வரருக்கும், சந்திரன் வழிபட்ட சோமேஸ்வரருக்கும் ஒரேசமயத்தில் எண்ணெய், பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால் குரு, சந்திரனால் ஏற்படுகின்ற யோகம் தடையின்றிக் கிட்டும் என்பதில் சந்தேகமேயில்லை.

=ரிஷி கோவில் என்று ஒரு புத்தர் கோவில் இவ்வாலயத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலையாகும்.

=மார்கழி மாதம் ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் வாகீசர் புறப்பாடு என்ற வீதியுலா நிகழ்வு நடைபெறும். சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் முறைப்படி நடக்கிறது.

அங்கக்குறைபாடு நீங்க லிங்க வழிபாடு மேற்கொண்ட வாணியை வாக்தேவியாக்கிய தலமாம்- வியாழனை தேவர்களுக்கெல்லாம் குருவாக்கிய தலமாம்- 48,000 மகரிஷிகளுக்கு பாடம் புகட்டிய தலமாம்- ஹோமங்களில் க்ஷேமங்களையும், யாகங்களில் யோகங்களையும் வாரி வழங்கும் வாகீசன் குடிகொண்டுள்ள தலமாம்- பெருந்துயரங்களகற்றி பெரும் புண்ணியத்தைத் தரும் தலமான பெருஞ்சேரியில் குடிகொண்டுள்ள ஈசன் வாகீஸ்வரசுவாமியை, மார்கழி மாத பூச நட்சத்திரத்தன்று நடைபெறவுள்ள பஞ்சாக்னி ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபடுவோம். குருவருள் பெறுவோம்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு:

நிர்வாக அதிகாரி, அ/மி வாகீஸ்வரர் திருக்கோவில்,

குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி

(அஞ்சல்),

நாகை மாவட்டம்.

இரா. சாம்பசிவ குருக்கள்: அலைபேசி: 94433 92176, 93602 05564.

அமைவிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் சாலையில், ஏழு கிலோமீட்டர் தொலை விலுள்ள மங்கநல்லூர் அருகே, கிளியனூர் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயம். பஸ்வசதி, ஆட்டோ வசதி உண்டு.

படங்கள் போட்டோ கருணா