"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.'
-திருவள்ளுவர்
ஊழ் என்பது பூர்வஜென்மத்தையும் விதியையும் குறிக்கும். பூர்வ ஜென்மத்தின் எதிரொலியைக்கொண்டே இந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது. இதனை "ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்' என்கிறார் இளங்கோவடிகள்.
நாம் எண்ணியது நடந்தாலும் நடக்கா விட்டாலும், எண்ணாதது நடந்தாலும் யாவும் விதியின் விளைவே. முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு. எல்லாவற்றிற்கும் காலநேரம் வரவேண்டும் என்கிறார்களே... அதற் கென்ன காரணம்? இந்த காரியங்கள் இந்த காலகட்டங்களில் நடக்கும் என்று ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான். நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஹிட்லருக்கு இருந்த வசதியும் ஆயுதப் பெருக்கமும் வேறெந்த நாட்டிற்கும் இல்லை. ஒரே நாளில் போலந்து நாட்டைப் பிடித்தான். வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லோ வாகியாவைப் பிடித்தான். குண்டு போடாம லேயே பிரான்சைப் பிடித்தான். அவன் விரும்பி யிருந்தால் ஐரோப்பாவையும் ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம். வெறும் வாய் வேட்டு களையே விட்டுக்கொண்டிருந்த சர்ச்சிலை அவன் கனடாவுக்குத் துரத்தியடித்திருக்கலாம். (சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓட திட்ட மிட்டிருந்தார்).
முழு ஐரோப்பாவையும் பிடித்துவிட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் காலனி யாக இருந்த ஆசிய- ஆப்பிரிக்க- அரேபிய நாடுகள் சுமார் எண்பது குண்டுகள் போடாம லேயே அவன் கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும். இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதுதான். ஆனால் விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சிபுரிந்தது.
பிரிட்டனை "கோழிக்குஞ்சு' என்று அவன் கேலி செய்துவிட்டு, யானையை சாப்பிட்டால்தான் பசி அடங்கும் என்று சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.
அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப் படுகிறது என்று விதி சிரித்தது.
சோவியத் யூனியனின் பருவகாலத்தில் சிக்கி அவன் இழுபட, அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களைத் தயார் செய்துகொண்டுவிட்டன. உலகத்தையே ஆண்டிருக்கக்கூடிய ஹிட்லர் எச்சரிக்கையாக இல்லாததால் தன் பிணத் தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்து போனான்.
எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பிவிடும் விதி. ஹிட்லரின் ஆணவம், அகந்தை அழிவை நோக்கித் திருப்பிவிட்டது. அதேசமயம் இறையுணர் வோடு தூய அன்பை வெளிப்படுத்தி செயல் பட்டால் எங்கும் எதிலும் வெற்றிதான் கிட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காக குழிதோண்டும்பொழுது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் கொண்டுசென்றபோது, "சுடுகாட்டில் கிடைத் ததை நீயே வைத்துக்கொள். சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்' என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான்.
இறைவழிபாடு என்றால் என்னவென்று தெரியாத வெட்டியானும், அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணமெரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டிலிருந்த சாம்பல் முழுவதும் கரைந்துவிட்டது.
சிவலிங்கத்துக்கு அபிஷேகம்செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவன் விராட்டிகளை அடுக்கித் தீயைமூட்டி, தனது மனைவியிடம் "நான் இந்தத் தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக்கொண்டு சிவலிங்கத் துக்கு அபிஷேகம்செய்' என்று கூறினான்.
ஆனால் மனைவியோ, "நீங்கள் இறந்துவிட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும். எனவே நானே தீயில் குதிக்கிறேன்' என்று கூறிவிட்டு தீயில் வீழ்ந்தாள்.
இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்யட்ச மாகி, மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார். இதைக் கேள்விப்பட்ட அரசன், "தங்கத்தாலான சிவலிங்கத் திற்கு பன்னீர், பஞ்சாமிர்தம், வாசனைத் திரவியங்கள் என்று அபிஷேகம்செய்த எனக்கு காட்சிதராத இறைவன் சுடுகாட்டுச் சாம்பலையும் பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே' என்று வருந்தினான். பக்தி என்பது ஆணவத்திலோ, ஆடம்பரத்திலோ இல்லை; அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்துகொண்டான். இப்படி அரசனுக்கு மட்டுமல்ல; பலரையும் பல கோணங்களில் உணரவைத்து அருள்கின்றதொரு திருத்தலம்தான் கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோவில்.
இறைவன்: கடைமுடிநாதர் (அந்தஸம் ரக்ஷணேஸ்வரர்).
இறைவி: அபிராமியம்மை.
விசேஷமூர்த்தி: கிளுவைநாதர்.
விநாயகர்: கடைமுடி விநாயகர்.
புராணப்பெயர்: திருக்கடைமுடி, கிளுவையூர்.
ஊர்: கீழையூர்.
தலவிருட்சம்: கிளுவை மரம்.
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், கருணா தீர்த்தம்.
இவ்வாலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந் தது. தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களுள் 72-ஆவது தலம்; காவிரி வடகரையில் 18-ஆவது தலம். திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்பு களைப் பெற்றதொரு திருத்தலம்தான் கீழையூர் கடைமுடிநாதர் ஆலயம்.
"மறையவன் உலகவன் மாயனவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் எனவுலகு ஏத்தும் கண்டங்
கறையவன் வளநகர் கடைமுடியே.'
-திருஞானசம்பந்தர்
தல வரலாறு
ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு வழிபடும்போது பிரம்மா இத்தலத்தின் சிறப்பை யுணர்ந்து இங்கு இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி, தனது பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அப்புனித நீரால் இறைவனுக்கு அபிஷேகம்செய்து வழிபட்டு வந்தார். வழிபாட்டில் மகிழ்ந்த சிவன் அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சிதந்தார். பிராகாரத்திலுள்ள கிளுவை மரத்தின்கீழ் கிளுவை நாதர் இருக்கிறார். இவரே இக்கோவிலின் ஆதிமூர்த்தியாவார்.
பிரம்மா தனக்கு மன்னிப்பு மற்றும் நிவாரணத்தை நாடியபோது, தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி இத்தல இறைவனை வழிபட்டுத் தன் புண்ணியப் பலன்களைப் பெருக்கிக்கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பு. இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்றும் கண்வ மகான் துறை என்று காரணப்பெயர் கொண்டு விளங்குகிறது.
சிறப்பம்சங்கள்
✷ மூலவர் கடைமுடிநாதர் மேற்கு நோக்கி சுயம்புலிங்க மூர்த்தியாக எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் இயங்கிவருகிறது.
✷ இறைவனின் கடைமுடிநாதர் என்ற பெயரினால், நாம் நமது ஆயுளின் கடைசிக் காலத்தில் அவரைப் பற்றவேண்டும் என்றும்;
அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில்- அதாவது இறுதிக்காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்றும் நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகிறார்.
✷ மூலவரான சிவலிங்கத்தில் ஷோடசலிங்கம் என்றழைக்கப்படும் 16 கோடுகள் உள்ளன. இவரை வணங்குபவர்கள் 16 வகையான செல்வங்களையும் அடைவார்கள் என்று தல புராணம் உரைக்கிறது.
✷ மறைமதியை நிறைமதி யாக்கி திருக்கடவூரிலே அற்புதம் நிகழ்த்திய அன்னை, அதே பெயரில் அபிராமியம்மை என்ற திருநாமத்துடன் திருக்கடவூரைப் பார்த்தவண்ணம் தெற்கு நோக்கி நின்றநிலையில் வரப்ரசாதியாக இருக்கிறாள்.
✷ காவிரி கண்வ மகான் துறையில் நீராடி, அபிராமி அன்னையை வெள்ளிக்கிழமை தரிசனம் செய்து சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
✷ திருமணத்தடையுள்ளவர்கள் இந்த அம்பாளுக்கு வித்தியாசமான பிரார்த்தனையாக திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர்.
திருமணமாகாத பெண்கள் இவளுக்குத் தாலிகட்டி வேண்டிக் கொள்கின்றனர். வரன் அமைந்தபிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியைத் தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். "இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலியாகவே இருப்பர் என்பது இப்பகுதி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை என்கிறார் ஆலய அர்ச்சகர்.
✷ பிராகாரத்திலுள்ள நவகிரக சந்நிதியில், வலதுபுறம் திரும்பிய அறுங்கோண வடிவிலுள்ள ஆவுடையாரின்மீது நவகிரகங்கள் நேர்வரிசையில் இல்லாமல் ஒருவருக்கொருவர் முன்னும்பின்னுமாகப் பார்த்திருப்பது தனிச்சிறப்பு.
✷ காவிரி நதி வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஓட்டத்தில், காவிரியின் வளையம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மேற்கு நோக்கிய இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் வளையமில்லாமல் இருக்கிறார். இது சிறப்பான அமைப்பு.
✷ இதேபோல் மேற்கு நோக்கிய பைரவரின் இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் ஒன்றுமில்லாமல் அருள்புரிவது சிறப்பு.
✷ விக்ரமசோழன் காலக் கல்வெட்டில் இத்தல ஈசன் "திருச்சதைமுடி உதயமகாதேவர்' என்று குறிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன், பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் கண்டெடுக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரரின் படம் ஆதித்யசோழர் காலக் கல்லமைப்புடன் கட்டப் பட்டதாகத் தெரிகிறது. அது தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் உள்ளது.
✷ எவரிடமும் சொல்ல முடியாத சங்கடமான சூழ்நிலையில் உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று கடைமுடி விநாயகரை தரிசித்து வழிபட்டால் வம்பு வழக்குகள் தீர்ந்து வளமுடன் வாழலாம்.
✷ மாத சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபி ஷேகம் மற்றும் சிவாலயத்திற்குரிய அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடக்கின்றன.
✷ கட்டளைதாரர்கள் வேண்டுதலுக் கிணங்க இவ்வாலயத்தில் மிருத்யுஞ்சய ஹோமம் நடக்கிறது. இந்த ஹோமம் செய்து வழிபட்டால் எமனையும் வெல்லலாம். மிருத் யுஞ்சயம் என்றால் எமனை வெல்வதென்று பொருள்படும். பொதுவாக, ஒருவரது ஜாதகத்தில் குரு, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால், அவருக்கு எதிர்பாராத விபத்தின்மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால் அவருக்கு எதிர்பாராத விபத்தின்மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இதுபோன்று பல கிரக காரணங்களால் ஒருவருக்கு மரணகண்டங் கள் வரும்போது, அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள செய்யப்படும் ருத்ர வழிபாடே இந்த மிருத்யுஞ்சய ஹோம வழிபாடாகும்.
சிவனை அழிக்கும் கடவுள் என்று வேதங் கள் கூறுவதாகச் சொல்கின்றனர். ஆனால் சிவன் அழிக்கும் கடவுளல்ல; அளிக்கும் கடவுள். ஈசனிடம் வரம் பெற்ற இராவணனை அழிக்க திருமாலே மனித ரூபம் தாங்கிவர வேண்டியதாயிற்று. எனில் வரமளித்த ஈசன் எப்படிப்பட்டவன்? திருமால் மேற்சொன்ன இந்த ஹோமத்தைச் செய்தே ஈசனிடம் இருந்து சுதர்சன சக்கரத்தைப் பெற்றார்.
மிருகண்டு முனிவர் தனது மகன் மார்க்கண் டேயனுக்காக இந்த ஹோமத்தைச் செய்ய, அவன் தீர்க்காயுளைப் பெற்றான்.
"ஓம் நமோ பகவதே ருத்ராய
ஓம் நமஸ்தே ருத்ர மன்யவ உதோத
இஷவே நம
நமஸ்தே அஸ்து தன்வனே
பாஹுப்யா முத தே நம'
என்று ருத்ரம் ஓதியபடி யாககுண்டம் அமைத்து யாகம் செய்தல் வேண்டும். இறுதியில் ருத்ரரை மனமுருக வேண்டி அபிஷேக நீரை ஜாதகரின்மேல் ஊற்றி அங்க சுத்தி செய்வித்து ஈசனை வணங்க, ஜாதகருக்கு சகலபாவமும் தீர்ந்து நிறைந்த ஆயுள்பலம் ஏற்படும். அதுமட்டுமல்ல; அதிக எதிரிகளைக் கொண்டவர்கள் இந்த ஹோமத்தைச் செய்ய, எதிரிகள் பலம் குறைந்து இவர்கள் பலம் அதிகரிக்கும் என்று பெருமிதத் துடன் கூறுகிறார்கள் ஆலய அர்ச்சகர்களான சங்கர் குருக்கள், சுவாமிநாத குருக்கள்.
காவிரி வடக்கு முகமாக வந்து, பின் மேற்காக வளையம்போல் காட்சிதந்து ஓடுகிற மகிமைவாய்ந்த தலமாம்- செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களுக்கு மனஅமைதி யைத் தருகிற தலமாம்- சஷ்டியப்தப் பூர்த்தி, சதாபிஷேகம், மிருத்யுஞ்சய ஹோமப் பூஜைகள் நடக்கிற தலமாம்- பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ 16 பட்டைகளுடன் ஷோடஷலிங்கமாய் அருள்கிற தலமாம்- நெடுநாட்கள் முடிவுக்கு வராத பிரச்சினைகளுக்கு நல்ல முடிவைத் தருகிற தலமாம் கீழையூரில் அருள்தரும் அன்னை அபிராமி சமேத கடைமுடிநாதரை விநாயகர் பிறந்த மாதமான ஆவணி மாதத்தில் கடைமுடி விநாயகருடன் வழிபடுவோம். வாழ்வில் அதீத பலன்களைப் பெறுவோம்.
காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: சுவாமிநாத குருக்கள், செல்: 79047 83688, சங்கர் குருக்கள், செல்: 90951 20653.
கடைமுடிநாதர் திருக்கோவில், கீழையூர் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்- 609304.
அமைவிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செம்பனார்கோவில். அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழித் தடத்தில் இரண்டு கிலோமீட்டர் தொலை வில் உள்ளது கீழையூர். கீழையூர் பஸ் நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது கடைமுடிநாதர் கோவில். மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் மேலப்பாதியைக் கடந்தும் கீழையூர் வரலாம். பஸ் வசதி குறைவாக உள்ளது.