கிருஷ்ணஜெயந்தி- 2-9-2018
மும்பை ராமகிருஷ்ணன்
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ராம- கிருஷ்ண அவதாரங்களுக்கே அதிக கோவில்கள்- சந்நிதிகள் உள்ளன. ராமரை மனித அவதாரம் என்பர்; கிருஷ்ணரை பூரண அவதாரம் என்பர். ராமாவதார மாதங்களில் ராமாயணத்தை நவாவஹமாக பாராயணம் செய்தல்- ஒன்பது நாட்கள் உபன்யாசம் செய்தல் நடக்கும். பஜனை செய்பவர்கள் சீதாகல்யாணம் என்றும் செய்வர்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி மாதங்களில் ஸ்ரீமத் பாகவத படனம், உபன்யாசம் என்று சப்தாஹம்- ஏழு நாட்கள் நடக்கும். பஜனை செய்பவர்கள் ருக்மிணி கல்யாணம் அல்லது ராதா கல்யாணம் செய்வர். நாராயணீயமும் படிப்பார்கள்.
"ராமன் நடந்ததுபோல் நட; சத்தியம், தர்மம் கடைப்பிடி' என்பர். "கிருஷ்ணர் வீடுவீடாக பால், தயிர், வெண்ணெய் திருடினார். பொய் சொன்னார். கோபியர்களுடன் ராஸலீலை என்று நடனமாடினார். நாம் அவ்வாறு செய்யலாகாது. ஆக, கண்ணன் பகவத் கீதையில் கூறியது போல் செய்' என்பர்.
கண்ணனுக்கு துவாரகையில் 16,000 மனைவிகள் இருந்ததாகச் சொல்வர். நாரதர் ஒவ்வொரு வீட்டிற்கும் போக, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கண்ணன் மனைவி, குழந்தைகளுடன் இருந்ததைக் கண்டு வியந்தாராம். ராமரோ ஏகபத்னி விரதன். சீதை என்ற ஒரே மனைவி. ஆக, ராம- கிருஷ்ண அவதாரங்களுக்கு பேதம்- வித்தியாசம் அதிகம்.
தியாகையார் ஆழ்ந்த ராமபக்தர். ராமர்மீதே அதிகம் பாடல்கள் பாடினார்.
மீரா, கண்ணன்மீதே அதிகம் பாடினாள்.
மீராவை புக்ககத்தில் குலதெய்வ காளி கோவில் தரிசனத்திற்கு அழைத்தனர். "மேரே தோ கிரிதர கோபால தூஸரா நகோயி'- "எனக்கு கண்ணன் தவிர வேறு எவருமில்லை' என்று அவள் ஆணித்தரமாகச் சொல்லவில்லையா! இதை "ஏக தைவ அசஞ்சல பக்தி' என்பர். ஒரே தெய்வ உருவின்மீது ஆழ்ந்த பக்தி செலுத்துதல். ஆஞ்சனேயரும் அவ்வாறே. அவர் ஆழ்ந்த ராமபக்தர்.
"அது தவறு; சமரச பக்தி தேவை' என்று சிலர் கூறுவர். ஏகாந்த பக்தியில் தவறு கிடையவே கிடையாது. மற்ற தெய்வ உருவை வெறுப்பது, தூற்றுவதுதான் கூடாது. ஏனெனில் யாதும் ஒரே பரப்பிரம்மத்தின் விதவித ரூபங்கள்; லீலைகள். ரசிக்கும் தன்மை தேவை. ஈடுபாடு இல்லாமல்கூட இருக்கலாம்; வெறுக்கக்கூடாது.
கண்ணனுக்கு ருக்மிணி, சத்யபாமா, சந்த்ரானனா, ஜாம்பவதி, ஸத்ய, மித்ரவிந்தா, பத்ரா, லக்ஷ்மணா என எட்டுப் பட்டத்து ராணிகள் என்பர். இதனில் ராதா இல்லை. "ராதா- கிருஷ்ண' லீலாரசம் அதீதமானது. கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு அடுத்த வளர்பிறை அஷ்டமியில் பகல் 12.00 மணிக்கு பர்ஸானா என்ற பிரம்மகிரியில் (கோவர்த்தனகிரி அருகே) விருஷபானு- கீர்த்திதா தம்பதிக்கு விசாக நட்சத்திரத்தில் உதித்தவள் ராதா. ஸ்வர்ணமயமானவள். கண்ணன் கருநிறமுடையவன்.
கண்ணன் லீலைகளைப் பற்றி விரிவாகக்கூறும் ஸ்ரீமத் பாகவதம், "ராதா' என்னும் பெயரைக்கூட கூறாது.
ஏன்? "ஸ்மரணாத் அருணாசல' -நினைத் தாலே முக்தி என அருணாசல நாமத்தைக் கூறுவதுபோல் "ராதா' நாமமும் அத்த கையதே. ரமண மகரிஷி உணர்ந்தார்; அருணாசலம் வந்தார். வேறெங்கும் போகவில்லையே! அதுபோன்று "ராதா' நாமம் முக்தியளிக்கவல்லது. பாம்பு கடித்து ஏழு நாட்களில் சாகவிருக்கும் பரீட்சித்து மன்னனுக்கு, ஆழ்ந்த கிருஷ்ண பக்தரான சுக முனிவர் ஸ்ரீமத் பாகவதம் உபதேசித்தார். அவரும் ராதா என்னும் பெயரை உச்சரிக்கவில்லை. காரணம் ராதா என்ற பெயரை உச்சரித் தால் அவர் ஆறு மாதம் சமாதிநிலை அடைந்துவிடுவாராம்.
"அருணாசல, ராதா' நாமங்களை நாம் கூறியும் ஒன்றும் ஆகவில்லையே என்றால், நமது ஞான- அனுபூதி நிலை அவ்வளவே! உள்ளார்ந்து உணர வேண்டும். சாதனையால் அனுபவானந்த நிலை பெறலாம்.
இப்போது ருக்மிணிக்கு வருவோம். "ராதா ருக்மிணி சத்யபாமா சமேத கோபாலகிருஷ்ண ஸ்வாமினே நம:' என்போம்.
திவ்யதேசங்களில் ராதையைக் காணமுடியாது. ஆனால் ராதைக்கே முதலிடம். சத்ய பாமாவுக்கு "தான்' என்னும் அகங்காரம் உண்டு.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் கண்ணனுடன் ருக்மிணியைக் காணலாம்.
ருக்மிணிக்கு ஏன் பிரதானம்? ருக்மிணி கல்யாணம் எவ்வாறு நடந்தது?
பீஷ்மகராஜன் புதல்வியாக விதர்ப்ப தேசத்தில் அமராவதியில் மகாலட்சுமியின் அம்சமாக ருக்மிணி உதித்தாள். அவள் ஒருசமயம் உத்யாவனத்தில் வீணை வாசிப்பதைக் கேட்ட நாரதர், "இந்த வீணாவாதினிக்கு வேணுகோபாலன்தான் உகந்த கணவன்' என்று நினைத்து, அவளிடம் துவராகாதீசன் கண்ணன் பெருமைகளைக் கூறினார். பீஷ்மகராஜனுக்கும் சூசகமாகக் கூறினார். பீஷ்மகராஜனும் சபையைக் கூட்டி, "துவாரகாதீசனுக்கு என் மகளை விவாகம் செய்ய விரும்பு கிறேன்' என்றார்.
அவர் மகன் ருக்மி, "கண்ணன் ஒரு திருடன், இடையன். எனவே நம் அரச கௌரவத் திற்கு ஒத்து வராது. அதனால் சிசுபாலனுக்கே மணம் செய்ய வேண்டும்' என்றான்.
வயதான காரணத்தால் பீஷ்ம கராஜனால் எதுவும் கூற இயலவில்லை. "பகவத் சங்கல்பப்படி நடக்கும்' என்று மனம் தேறினார். திருமண ஏற்பாடுகள் நடந்தன.
இந்த செய்தி தோழியின்மூலம் ருக்மிணிக்குத் தெரியவர, அவள் தவித்து கண்ணனுக்கு ஒரு கடிதம்- "புவன சுந்தரா, நான் உம்மையே கணவராக வரித்துவிட்டேன். திருமணத்துக்கு முதல் நாள் தேவி பூஜைக்குச் செல்வேன்.
அப்போது நீவிர் என்னைக் கவர்ந்து சென்று திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என எழுதி, ஒரு உஞ்சவிருத்தி பிராமணரிடம் கொடுத்து அனுப்பினாள்.
மகாராஷ்டிர அமராவதி எங்கே- குஜராத் துவாரகை எங்கே?
பிராமணர் கண்ணனிடம் கடிதம் சமர்ப்பிக்க, கண்ணன் அவரையே படிக்கச் சொல்லி, (வேடிக்கை) "சம்மதம், வந்து காப்பேன்; கவலை வேண்டாம் என்று கூறும்' என்றான். ருக்மிணிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமராவதியில் தேவியை ருக்மிணி வழிபட்டாள். (இன்றும் தேவிகோவில், ருக்மிணி கோவில் அருகருகே காணலாம்). கோவிலுக்கு வெளியே வந்தபோது தோழி ஒவ்வொரு மன்னரின் பெயரையும் கூற, கண்ணனைக் காணவில்லையே என்று ஏங்கி தலைகுனிந்து வந்தவள் நிமிர்ந்து கூந்தலை விலக்கிப் பார்க்க, கண்ணன் தெரிந்தான். கண்ணனும் ருக்மிணி யைக் கைப்பற்றி தேரில் அமர்த்தி செலுத்தினான். ருக்மி தன் படைகளுடன் கண்ணனைத் துரத்தினான். அவனால் கண்ணனை வெல்ல முடியவில்லை. கண்ணன் ருக்மிணியைக் கைப்பற்றி வெட்ட முனைந்த போது, "என் அண்ணனைக், கொல்ல வேண்டாம்' என ருக்மிணி வேண்ட, பாதி தலைமுடியை சீவி வெட்கிக்கச் செய்து அவனை ஓடவைத்தான். (அந்த இடம் "தாடிகாடா' என இன்றும் உள்ளது.)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krishnan_13.jpg)
அவர்கள் துவாரகை வந்து சேர, எல்லார் முன்னிலையிலும் ருக்மிணி- கண்ணன் திருமணம் கோலாகலமாக நடந்தது.
ஸ்ரீநாராயண தீர்த்தர், "ஆலோகயே ருக்மிணி கல்யாண கோபாலம்' என்று தரங்கம் பாடுவார். ஊத்துக்காடு வெங்கடகவியோ, "சொன்னால் மங்களம் தருமே- ருக்மிணி கல்யாணம்' என்று பாடுவார்.
ருக்மிணி கல்யாண வைபவம் கேட்க, சொல்ல, சர்வ சௌபாக்கியங்களையும் பெறலாம். தடைபெற்ற கல்யாணங்கள் நன்கு நடைபெறும்.
ருக்மிணி- கிருஷ்ண ஐக்கிய உருவம்
அன்னை காமாட்சி காஞ்சியிலும் பின்பு திருவண்ணாமலை தலத்திலும் தவம் செய்து சிவனின் இடப்பாகம் பெற்றாள். ஈசன் அர்த்தநாரியானான். விக்ரகங்கள் உளதே!
சங்கரன்கோவிலில் கோமதியம்மன் ஆடி அமாவாசையில் தவம்செய்து தன் இடத்தை விஷ்ணுவுக்குத் தர, சிவனுடன் விஷ்ணு ஒன்றினார். ஈசன் சங்கரநாராயணர் ஆனார். விக்ரகம் உளதே!
ருக்மிணி கண்ணனை வேண்ட, விஸ்வகர்மாமூலம் குழந்தைக் கண்ணன் மத்துடன் நிற்கும் விக்ரகத்தைச் செய்து தர, ருக்மிணி அதனைப் பூஜித்தாள். பின்பு அந்த விக்ரகம் சமுத்ரத்தில் அமிழ்ந்தது. கோபிசந்தனத்தால் மூடப்பட்டு உருண்டைபோல இருந்த அந்த விக்ரகத்தை வெளிநாட்டினர் தங்கள் கப்பலில் எடுத்து வந்தனர். உடுப்பி அருகே வரும்போது புயல்காற்று வீச, கப்பல் தத்தளித்தது. அப்போது கரையிலிருந்த மத்வாச்சாரியார் தனது மேலாடையை கொடிபோல காட்ட, புயல் நிதானித்தது. கப்பல் தலைவன் ஸ்வாமிகளிடம் கப்பலில் இருக்கும் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றான். மத்வர் அந்த கோபிசந்தன உருண்டையைப் பெற்று அதை உடைத்தபோது, அதற்குள் இருந்தது ருக்மிணி பூஜித்த கண்ணன் விக்ரகம். இன்றும் மத்வ மடத்தில் ஆசார்ய பரம்பரை பூஜை செய்யும் விக்ரகம், ருக்மிணி பூஜித்த கண்ணவிக்ரமே என நெகிழவேண்டும்.
மோகனூர் ருக்மிணி கிருஷ்ணன்
நாமக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் மோகனூர் உள்ளது. வாகீச கலாநிதி கி.வ.ஜ பிறந்த ஊர். (எமது உறவினர்). அவர் குலதெய்வமான முருகன் கோவில் சிறிய மலையில் உள்ளது. உன்னதமான விக்ரகம். சிவன் கோவிலும் உண்டு. இவ்வூருக்கு வில்வாரண்ய க்ஷேத்ரம் என்று பெயர். தலவிருட்சம் வில்வமே.
இவ்வூரில் பழமையான பெருமாள் கோவிலும் உள்ளது. ஆதிகாலத்தில் பரமபக்தர் ஒருவர் இங்கிருந்து திருப்பதி வேங்கடாசலபதியை ஒவ்வொரு வருடமும் நடந்தே சென்று தரிசிப்பது வழக்கம். முதுமை காரணமாக அவரால் நடக்க இயலாமல்போகவே, வேங்கடவனை தரிசிக்க முடியவில்லையே என்னும் கவலையில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள காவிரி நதியை நோக்கிச் சென்றார். வழியில் ஒரு நாகம் படமெடுத்து ஆடி அவரைத் தடுத்தது.
எனவே அவர் திரும்பி வந்துவிட்டார். பக்தனின் கவலையைத் தீர்ப்பவனே பகவான். அன்றிரவு அவர் கனவில் ஏழுமலையான் தோன்றி, "நீ நாகத்தைக் கண்ட இடத்தில் நான் குடிகொண்டுள்ளேன். அங்கு ஆலயம் எழுப்புக' என்றருளினார்.
மறுநாள் சென்று பார்த்தபோது அங்கொரு புற்று இருந்தது. காவிரி நீரால் அதனைக் கரைக்க, அங்கே ஸ்ரீதேவி, பூதேவியுடனான கலயாண வேங்கடேசர் விக்ரகம் கண்கவரும் வண்ணம் காட்சி தந்தது. அதைப் பிரதிஷ்டை செய்து அங்கேயே ஆலயம் எழுப்பினர். இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். ஆண்டாள், ருக்மிணி- சத்தியபாமாவுடன் கண்ணன், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, கருடன், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன.
தனி சந்நிதியில் சம்மோஹன கோபாலன் உள்ளார். பாதி உடல் ருக்மிணியாகவும், பாதி உடல் கண்ணனாகவும் உள்ள மனங்கவரும் விக்ரகம். இதுபோன்ற வினோத அமைப்பை வேறெங்கும் காணவியலாது. எட்டுக் கரங்கள். சங்கு, சக்கரம், கரும்புவில், மலரம்பு, பூச்செண்டு, புல்லாங்குழலின் ஒரு பக்கம் கண்ணனின் கரம், மறுபக்கம் ருக்மிணியின் கரம் என திரிபங்கி லலிதாகார உடலமைப்பு. பெயருக்கேற்ப, ஊருக்கேற்ப மனங்கவரும் ரூபம்.
மரீசி மகரிஷி தவமிருந்து, இந்த உருவில் மனம்லயித்து வார்த்த துதி இது:
"ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யஆபரண பூஷிதம்
த்ரிபங்கிலலிதாகாரம் அதி சுந்தர மோஹனம்
பாகம்தக்ஷிணம் புருஷம் அர்யஸ்த்ரீ ரூபிணம்ததா
சங்கம் சக்ரம் ச அங்குசம் புஷ்பபாணம்
ச பங்கஜம்
இட்சி சாபம் வேணுவாத்யம் ஸதா ஆராதயந்த்ம் புஜஅஷ்டகை:
ஸ்வேத கந்தானுலப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர குஜ்வலம்
ஸர்வ காமார்த்த ஸித்யார்த்தம் மோஹனக்ருஷ்ணம் ஆஸ்ரயே.
' இந்த துதியைக் கூறி வணங்கும் தம்பதியர் பேதங்கள் யாவும் தீர்ந்து, சர்வ மங்கள சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பர்.
நாமக்கல் ஆஞ்சனேயர், நரசிம்மரை தரிசிக்கும் பக்தர்கள் இந்த நூதன ஆலய ருக்மிணி கிருஷ்ணனையும் தரிசிக்கலாமே! இன்புறலாமே!
ராதா மோகனன் இங்கு ருக்மிணி மோகனனாகிவிட்டான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-09/krishnan-t.jpg)