ஆடிக்கிருத்திகை 2-8-2021
நல்லவர்களைக் காப்பாற்றவும், தீயவர்களை அழிக்கவும் ஆதி சிவனாரின் நெற்றிக்கண்ணின் கனலால் சரவணப் பொய்கையில் அவதரித்தவரே முருகப்பெருமான். முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம் எனப் பொருள்கள் பலவுண்டு.
ஆற்றுப்படை என்றால், ஆற்றுப் படுத்துதல், வழிகாட்டுதல் என்பது பொருள். முருகப்பெருமான் திருக்கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறப்பான தலங் களுக்கு பக்தர்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்டுவதாக அமைந்த நூலே திரு முருகாற்றுப்டை.
சங்ககாலப் புலவர் நக்கீரர் அருளியது திருமுருகாற்றுப்படை. இது தோன்றிய விதமே விந்தையானது. மதுரை பாண்டிய மன்னனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உள்ளதா எனும் சந்தேகம் எழுந்தபோது, அதைத் தீர்க்கும்பொருட்டு சிவபெருமானே அங்கு புலவர்வடிவில் வந்தார்; "மணம் உண்டு' என்றார். அவைப்புலவர் நக்கீரர் அதை மறுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் வந்தது. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்றார் நக்கீரர். சினம்கொண்ட சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க, தீப்பொறி வெப்பம் நக்கீரரைத் தாக்கியது. அவர் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி வெப்பம் நீங்கப்பெற்றார். ஆனால் தொழுநோய் அவரைப் பற்றியது. தன் தவறுக்கு வருந்தி, நோய் குணமாவதற்கான வழிகேட்க, சிவபெருமான், "கயிலையை தரிசித்தால் நலம்பெறுவாய்' என்று கூறியருளினார்.
அதன்படி கயிலை செல்லும் வழியில் திருப்பரங்குன்றம் வந்தார் நக்கீரர். மாலைப் பொழுதானதால் குளக்கரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். அதுவரை நக்கீரர் தமிழ்க்கடவுள் முருகனைப் பாடியதில்லை. அவரது பாடல்கேட்க விருப்பம்கொண்ட முருகன் நாரதரைப் பார்க்க, தன் சுபாவ வேலையை மேற்கொண்டார் நாரதர்.
நக்கீரர் அமர்ந்திருந்த குளக்கரையின் அருகிலிருந்த மரத்தில்மேல் உக்ரன், அண்டாபரணன் எனும் இரு முருக பூதகணத் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒரு இலையைக் கீழே விழச்செய்தனர். அது கரையில் பாதியும் நீரில் பாதியுமாக விழுந்தது. சற்றுநேரத்தில் நீரிலிருந்த இலையின் பாகம் மீனாகவும், நிலத்திலிருந்த இலையின் பாகம் ஒரு பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தன. பறவை இழுப்பதில் மீன் தரைக்கு வந்தால் அது இறந்துவிடும். மீன் இழுப்பதில் பறவை நீரில் மூழ்கினால் பறவை இறந்து விடும். இந்த சத்தத்தில் நக்கீரரின் தியானம் கலைந்தது. அவற்றைக் காப்பாற்ற எண்ணி அவர் மீனையும் பறவையையும் இணைத்திருந்த இலைநரம்பு போன்ற பாகத்தைக் கிள்ளினார்.
அவை விடுதலையாகிவிடும் என்றெண்ணினார்.
ஆனால் அவையிரண் டும் இறந்துபோயின. அப்போது கற்கிமுகி என்னும் பூதகணம் நக்கீரரை ஒரு மலைக் குகையில் அடைத்து, "முருகன் உறையும் இத்தலத்தில் இரு உயிர்களைக் கொன்றதால் உம்மை இந்த குகையில் அடைத்தோம்' என்றது.
"இதுவரை குகனைப் பாடாததால் குகையில் அடைபட்டேனோ' என்று உள்ளம் உருகிய நக்கீரர், "உலகம் உவப்ப' என்று தொடங்கி "பழமுதிர்சோலை கிழவோனே' என்று முடியும் 317 அடிகள்கொண்ட திருமுருகாற்றுப்படை நூலை ஆறுபடை வீடுகளிலுள்ள முருகன் மீது பாடினார். மனம்குளிர்ந்த முருகன் நவவீரர் சூழ மயிலேறி காட்சிதந்தார். நக்கீரர் முருகன்தாள் பணிந்தார். கந்தனின் வேல் குகையின் வாயிலை உடைக்க, நக்கீரர் விடுபட்டார்.
தன் நோய் பற்றியும், சிவபெருமான் கயிலையை தரிசிக்க அருளியது குறித்தும் முருகப்பெருமானிடம் நக்கீரர் விண்ணப் பிக்க, "இந்த சொர்ணமுகி குளத்தில் மூழ்கி, தென்கயிலையாகிய திருக்காளத்தி சென்று சிவபெருமானை வழிபடுக. உமது நோய் நீங்கும்' என்றருளினார் முருகன்.
அவ்வாறே சென்று நலம்பெற்றார் நக்கீரர்.
திருமுருகாற்றுப்படையில் கூறப் பட்ட முருகனின் ஆறு கோவில்களும், பேச்சுவழக்கில் முருகனின் ஆறுபடை வீடுகளாக மாறிவிட்டன. திருப்பரங் குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகியவையே முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்களில் ஆறுதலைத் தரும் ஆறு தலங்களாகும்.
திருப்பரங்குன்றம்
மதுரைக்குத் தென்மேற்கே திருப்பரங் குன்றம் அமைந்துள்ளது. இக்கோவில் மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு முருகன் வடக்குநோக்கி அமைந்த வண்ணம் காட்சியளிக்கிறார். முருகன்- தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத் தில் நடந்தது. திருமணத்தடை உள்ளவர்களின் தோஷம் நீக்கும் பாரிகாரத் தலமாக இது விளங்குகிறது. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால், சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிக்கிறார்.
இம்மலையை வலம்வந்து வழிபட்டால் தீயவினைகளெல்லாம் தீர்ந்துவிடும்.
திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச் செந்தூர் அமையப்பெற்றுள்ளது. முருகப் பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந் துள்ள ஒரு கோவில். முருகப்பெருமான், சிவபெருமானின் கட்டளையை ஏற்று சூரபத்மனை அழிக்க இங்குவந்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கைவேலினால் நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களைத் தீர்க்கும் குணமுடையது. திருச்செந்தூர் கோவிலின் இடப்பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்பு தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
திரு ஆவினன்குடி
மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில்மீது அமர்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். திருமகள், காமதேனு, சூரியன், செவ்வாய், அக்னி வழிபட்ட தலம். தெய்வானையுடன் திருவாவினன்குடியில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார். இத்தலத்திலுள்ள பெருமானை வழிபட்ட பின்னரே பழனி மலைக்கோவிலுக்குச் சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.
திருவேரகம் (சுவாமிமலை)
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தார். சுவாமிநாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடை யாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாதமூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சிதருவதே இந்த படைவீட்டின் சிறப்பு.
குன்றுதோறாடல் (திருத்தனிகை)
திருவள்ளூர் மாவட்டத்தில் இது அமைந் துள்ளது. போருக்குப் பின்னர் முருகப் பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகையாகும். இங்கு முருகன், பச்சிலைமாலைக்குள் சாதிக்காயையும், தாக்கோல காயையும், காட்டு மல்லிகை மலர்களையும், வெண்மையான கூதாள மலர் களையும் சேர்த்துக்கட்டிய தலைமாலையை அணிந்து மக்களுக்குக் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன், இடக்கையை தொடையில் வைத்து, ஞான சக்திபெற்றவராகக் காட்சிதருகிறார்.
பழமுதிர்சோலை
மதுரை அழகர் கோவிலுக்கு அருகி லுள்ள பழமுதிர்சோலை முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகன் சிறுவனாய் வந்து சோதித்தது இங்குதான். வள்ளிநாயகிக்கு அருள்புரிந்த முருகவேளே பழமுதிர்சோலை யில் எழுந்தருளியவன் என்று கந்தபுராணம் கூறுகிறது. கண்கண்ட தெய்வமாம் கலியுகவரதனாகிய முருகப்பெருமானின் திருவடியைச் சிந்தித்து, ஆறுபடை வீடுகளையும் தரிசித்து, திருப் புகழை வந்தித்து, அனைவரும் பிறவியின் பயனைப் பெற்று இனிது வாழ்வோமாக.