பிரிந்தவரை இணைத்து வைக்கும் கொற்கை கொன்றைப் பிரியன்! - கோவை ஆறுமுகம்

/idhalgal/om/coimbatore-arumugam-0

"தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார்

அவம்செய்வார் ஆசையுள் பட்டு'

-திருவள்ளுவர்

ஒருவர் தனது அன்றாடக் கடமைகளை ஒழுங்குபடச் செய்கிறார் என்றால் அவர் தவம் செய்பவராக இருக்கவேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறார் திருவள்ளுவர். இன்னொரு பக்கம், எதையோ தொடங்கி அது எதிலோ சென்று முடிந்து தடுமாறுபவர்களைப் பார்த்து, இவர்கள் தங்கள் வேலையைச் செய்வதாய் நினைத்து அவம் செய்கிறார்கள் என்கிறார்.

எனவே, எவ்வளவுதான் சிக்கல் வந்தாலும் பதறாமலிருப்பதே முதல் வெற்றி. அதன்பிறகு சூழ்நிலையை சரியாக ஆராய்ந்து, நாம் மேற்கொள் கிற முடிவால் அந்த சிக்கலிலிருந்து மீள்வதற்குரிய புதிய வழியைக் கண்டடைய வேண்டும். இப்படி ஒரு சிக்கல் வந்துவிட்டதே என்று பதறினால் அப்புறம் நமக்கு ஒன்றுமே தோன்றாது.

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்சு மாவீரன் நெப்போலியன் கடைசிக் காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி யடைந்தார். பிரிட்டிஷ் இராணுவம் அவரை சிறைப்பிடித்து ஆப்பிரிக்க சிறையில் தனிமைப்படுத்தி வைத்தது. சிறையில் மனவுளைச்சலில் அவரது கடைசிக்காலம் கழிந்தது.

kk

அவரைப் பார்க்கவந்த நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து, "இது உங்களின் சிந்தனையை செயல்படவைக்கும். தனிமையைப் போக்கும்' என்றார்.

எனினும், "சிறைப்படுத்திவிட்டார்களே' என்ற மனஉளைச்சலிலிருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன்மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்சு அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடமிருந்த சதுரங்க அட்டையை ஏலம்விட ஆய்வுசெய்தபோது, அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதற்கான வழி இருந்தது. ஆனால், அவரின் மனவுளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் செய்து தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

உறுதியான சிமென்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும் நகத்தாலும் குடைந்து ஓட்டைபோடும் எலி, அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக்கொண்டால் ஏற்படும் மனஉளைச்சலாலும் பதட்டத்தாலும் அந்த பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு, அந்த பொறியின் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று மனிதர்களிடம் மாட்டிக்கொண்டுவிடும்.

மாவீரனுக்கும் சரி... சாதாரண எலிக்கும் சரி... பதட்டமும் மனவுளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்துவிடுகிறது.

"தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார்

அவம்செய்வார் ஆசையுள் பட்டு'

-திருவள்ளுவர்

ஒருவர் தனது அன்றாடக் கடமைகளை ஒழுங்குபடச் செய்கிறார் என்றால் அவர் தவம் செய்பவராக இருக்கவேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறார் திருவள்ளுவர். இன்னொரு பக்கம், எதையோ தொடங்கி அது எதிலோ சென்று முடிந்து தடுமாறுபவர்களைப் பார்த்து, இவர்கள் தங்கள் வேலையைச் செய்வதாய் நினைத்து அவம் செய்கிறார்கள் என்கிறார்.

எனவே, எவ்வளவுதான் சிக்கல் வந்தாலும் பதறாமலிருப்பதே முதல் வெற்றி. அதன்பிறகு சூழ்நிலையை சரியாக ஆராய்ந்து, நாம் மேற்கொள் கிற முடிவால் அந்த சிக்கலிலிருந்து மீள்வதற்குரிய புதிய வழியைக் கண்டடைய வேண்டும். இப்படி ஒரு சிக்கல் வந்துவிட்டதே என்று பதறினால் அப்புறம் நமக்கு ஒன்றுமே தோன்றாது.

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்சு மாவீரன் நெப்போலியன் கடைசிக் காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி யடைந்தார். பிரிட்டிஷ் இராணுவம் அவரை சிறைப்பிடித்து ஆப்பிரிக்க சிறையில் தனிமைப்படுத்தி வைத்தது. சிறையில் மனவுளைச்சலில் அவரது கடைசிக்காலம் கழிந்தது.

kk

அவரைப் பார்க்கவந்த நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து, "இது உங்களின் சிந்தனையை செயல்படவைக்கும். தனிமையைப் போக்கும்' என்றார்.

எனினும், "சிறைப்படுத்திவிட்டார்களே' என்ற மனஉளைச்சலிலிருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன்மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்சு அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடமிருந்த சதுரங்க அட்டையை ஏலம்விட ஆய்வுசெய்தபோது, அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதற்கான வழி இருந்தது. ஆனால், அவரின் மனவுளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் செய்து தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

உறுதியான சிமென்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும் நகத்தாலும் குடைந்து ஓட்டைபோடும் எலி, அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக்கொண்டால் ஏற்படும் மனஉளைச்சலாலும் பதட்டத்தாலும் அந்த பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு, அந்த பொறியின் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று மனிதர்களிடம் மாட்டிக்கொண்டுவிடும்.

மாவீரனுக்கும் சரி... சாதாரண எலிக்கும் சரி... பதட்டமும் மனவுளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்துவிடுகிறது. மனிதனுடைய பல பிரச்சினைகளுக்குக் காரணம் மனவுளைச்சல்தான். இப்படி மனஉளைச்சல், பதட்டம் போன்ற பிரச்சினைளோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மன அழுத்தங்களைப் போக்கி, அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியோடு மனநிறைவைத் தரவல்லதொரு திருத்தலம்தான் கொற்கையில் அமைந்துள்ள வீரட்டேஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீவீரட்டேஸ்வரர்.

இறைவி: ஞானாம்பிகை.

உற்சவர்: யோகேஸ்வரர்.

விநாயகர்: குறுக்கை விநாயகர்.

புராணப்பெயர்: திருக் குறுக்கை.

ஊர்: கொற்கை.

தலவிருட்சம்: கடுக்காய் மரம். (அரிதகி வனம்).

தீர்த்தம்: திரிசூலகங்கை பசுபதி தீர்த்தம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தேவாரப் பாடல்பெற்ற சிவத் தலங்கள் 274-ல் காவிரி வடகரைத் தலங்களில் 26-ஆவதாகத் திகழ்வ தும், தருமபுர ஆதீனத்தின் அருளாட்சியின்கீழ் சிறப்பாக இயங்கிவருவதும், அப்பரால் பதிகங்கள் பாடப்பட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்குவதுமான தலம்தான் கொற்கை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்.

kk

"நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து

ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனா

ரைக் கொல்வான்

சாற்றுநாள் அற்றதென்று தருமரா சற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.'

  -அப்பர்

சிவனின் வீரம் வெளிப்பட்ட தலங்கள் எட்டு. அவற்றை அட்ட வீரட்டத் தலங்கள் என்பர். அவையாவன: 1. பிரம்மனின் சிரசை எடுத்து பிரம்மசிர கண்டீஸ்வரராகக் காட்சி தந்தது திருக்கண்டியூர் (திருவையாறு அருகில்). 2. அந்தகாசுரனை வதம் செய்தது திருக்கோவிலூர். 3. திரிபுரத்தகனம் செய்தது திருவதிகை (பண்ருட்டி அருகில்). 4. சிவனை அழைக்காமல் தட்சயாகம் செய்ததால் தட்சனின் சிரசை எடுத்து தட்ச சம்ஹார மூர்த்தியாய் அருளியது திருப்பறியலூர் (பரசலூர்). 5. ஜலந்தராசுரனை வதம்செய்தது திருவிற்குடி (திருவாரூர்). 6. மன்மதனை எரித்து காமதகன மூர்த்தியாய்க் காட்சிதந்தது திருக்குறுக்கை (கொற்கை). 7. காலனை காலால் உதைத்து காலசம்ஹார மூர்த்தியாய் அருளியது திருக்கடவூர் (திருக்கடையூர்). 8. யானைத்தோலை உரித்து கஜசம்ஹார மூர்த்தியாய் அருளியது திருவழுவூர் (வழுவூர்). இவற்றில் நாம் காணவிருப்பது 6-ஆவது தலமான கொற்கை சிவாலயம்.

தீர்க்கவாகு என்ற முனிவர் இங்குள்ள இறைவனை திருமுழுக்காட்ட ஆகாய கங்கையைப் பெற தம் நீண்ட கைகளை நீட்ட, அவை இறையருளால் குறுகிவிட்டனவாம். இதனால் இத்தலம் குறுக்கை என அழைக்கப் பட்டதாம்.

தல வரலாறு

முற்காலத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் சூரபத்மன், தாரகாசுரன் ஆகியோர் கடுமையான துன்பம் கொடுத்துவந்தனர். அவர்களிடமிருந்து தேவர்களைக் காப்பாற்ற சிவபெருமானால் மட்டுமே முடியும். இதற்காக அவர் உமையம்மையைத் திருமணம் புரிந்து ஒரு குமாரனை அளிக்கவேண்டும். அதற்கு சிவபெருமானின் தவநிலையைக் கலைக்க வேண்டும். எனவே சிவபெருமானின் மோனநிலையைக் கலைத்து காமப்பற்றை விளைவிக்க பிரம்மா, இந்திரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதன் கயிலைக்குச் சென்றான். நந்தியெம்பெருமான் அனுமதி யுடன் சிவபெருமான் இருந்த இடத்தை அணுகினான்.

இறைவனிருந்த தவநிலையைக் கலைக்க மன்மதன் பஞ்சபாணங்களை எய்தான். அந்த மலரம்புகள் இறைவன் மீது பட, அவர் மன்மதனை சிறிதே பார்த்தார். அந்த அளவில் இறைவனின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டெரித்தது. மன்மதன் சாம்பலானான். (காமனைத் தகனம்செய்த இடம் விபூதிக்குட்டை என்ற பெயரில் இத்தலத்தின் அருகே உள்ளது. இங்குள்ள மணல் விபூதியாகவே காணப்படுகிறது.) இறைவன் உமாதேவியை மணம் செய்துகொண்டபின்னர், மன்மதனின் மனைவி ரதியின் வேண்டுகோளின்படி அவனை உயிர்ப்பித்தார். மன்மதன் பிறரின் கண்களுக்குத் தெரியாமல் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி இறைவன் வரமளித்தார்.

இந்த தலத்தைச் சுற்றியுள்ள பல ஊர்கள் காமனைக் கண்ணால் எரித்த செயலுடன் இணைத்துப் பேசப்படுகின்றன. இறைவன்மீது மலரம்புகளை எய்யச் சென்ற மாரவேளின் செயலைக்காண தேவர்கள் குழுமியிருந்த இடம் தேவனூர்; காமன் சிவபெருமானின் யோகநிலையைக் கலைக்க கங்கணம் கட்டிய இடம் கங்கணப்புத்தூர்; மன்மதன் வில்லைத் தயார்செய்த இடம் வில்லியனூர்; ஐந்து மலரம்புகளைத் தயார்செய்த இடம் ஐவநல்லூர் (பஞ்சபாணநல்லூர்); வில்லில் நாணேற்றிய இடம் நாணேற்றுப்பாக்கம்; அம்பை எய்யக் காலை வளைத்த இடம் கால்வளைமேடு என்று அழைக்கப்பெறுகின்றன.

காமனது உயிரைக் கவர காலன் தங்கிய ஊர் கூற்றுவன்வாணி; மதன் சோர்ந்து வீழ்ந்த இடம் சோர்ந்தமங்கலம் என்றும் கூறப்படுகின்றன. இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் காமன் நீறாக எரிக்கப்பட்ட திருநீற்றுக்குழி உள்ளது. அது தான் தற்பொழுது விபூதிக்குட்டை எனப் படுகிறது.

kk

சிறப்பம்சங்கள்

✷ இங்கு மூலவரான சிவபெருமான் யோகேஸ்வரர், வீரட்டேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

✷ யோகீஸ்வரர் என்ற பெயர் கொண்ட உற்சவராக உள்ள காமதகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் அபயமுத்திரை யுடன், இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதருவது தனிச்சிறப்பு.

✷ மன்மதன் எய்த பஞ்சபாணங்களில் ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள தழும்பை லிங்கப்பெருமான்மீது இன்றும் காணலாம். இந்த வீரட்டேஸ்வரரை தரிசனம் செய்யும்போது ஈசன் யோகத்தில் அமர்ந் திருப்பது போன்றே சிவலிங்கம் காட்சி யளிப்பது கூர்ந்து நோக்குபவர்களுக்குத் தெரியும்.

✷ சிவன் யோகமூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதில் பார்க்க வியலாது. எப்படியாவது தடங்கல் வந்துவிடும்.

அதையும்மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோகநிலை கைகூடும். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக உள்ளதால், தெரியாமல் தவறு செய்தவர்கள் இவரை வணங்கினால் தவறை மன்னித்து அனுக் கிரகம் புரிகிறார்.

✷ அம்பாள் ஞானாம்பிகை என்னும் திருநாமம் கொண்டு ஆளுயரத் திருமேனி யாக மேற்கரங்களில் அட்ச மாலை, தாமரைப்பூவுடனும், கீழ்க்கரங்கள் அபய வரத கரங்களாகக்கொண்டு, தெற்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் அருள் புரிவது சிறப்பு.

✷ க்ஷேத்திர கணபதியாக உள்ள குறுக்கை கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

✷கல்யாண வரம் வேண்டுவோர் அம்மனுக்கு கல்யாணமாலை சாற்றுகிறார் கள்.புதுப்புடவை சாற்றுதல், அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு சாற்றுதல் போன்ற முக்கிய நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள்.

✷ மகாவிஷ்ணுவின் புத்திரனாக விளங்கிய மன்மதனை சிவன் எரித்து சாம்பலாக்கியதால் புத்திர சோகத்தில் ஆழ்ந்த மகாவிஷ்ணு, திருக்குறுக்கை வந்து இறைவனை வணங்கி புத்திர சோகத்திலிருந்து மீண்டு ஆறுதல் பெற்றார். ஆகவே இத்தலம் புத்திர சோகம் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது.

✷ அப்பர் பெருமானால் பதிகங்கள் பாடப்பெற்றதுடன், மகாவித்வான் மீனாட்சி சுந்தரரும் பாடியுள்ளதாகத் தலபுராணம் கூறுகிறது.

✷ மாசி மகம், காமதகன விழா பத்து நாட்கள், பிரம்மோற்சவம் போன்ற விழாக்களுடன், பஞ்சமூர்த்திகள் புறப் பாடு, மார்கழித் திருவாதிரை, வீதியுலா, சுவாமி புறப்பாடு ஆகிய விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

✷முதலாம் ராஜராஜன், விக்ரம சோழன், கோப்பெருஞ்சிங்கன், விஜய நகர வேந்தன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் காலத்திய 21 கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் காணப் படுகின்றன.

✷ தொடர்ந்து ஐந்து பிரதோஷங்கள் வழிபாடு செய்தால் காமக்குரோதங்கள் விலகி யோகநிலையை அருளக்கூடியவர்தான் இந்த கொற்கை வீரட்டேஸ்வரர்.

திருக்கோவில் அமைப்பு

காவிரி வடபகுதியில் சுமார் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அழகான ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி வீரட்டேஸ்வரசுவாமி கோவில் காட்சியளிக்கிறது. எதிரில் திரிசூலகங்கை என்னும் பசுபதி தீர்த்தக்குளம் உள்ளது. ராஜகோபுரத்தில் கண்கவரும் வண்ணம் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் அமைந்துள்ளது.

மகாமண்டபத்தில் அழகிய விமானத் தின்கீழ் காமதகன மூர்த்தியை தரிசிக்கலாம். கருவறையில் யோக நிலையில் மேற்கு நோக்கி வீரட்டேஸ்வரர் அருட்காட்சியளிக்கிறார்.

குறுங்கை முனிவர், குறுங்கை விநாயகரும் கஜபிருஷ்ட விமானத்தின்கீழ் அருட்காட்சி தருகின்றனர்.

மகாமண்டபத்தின் மேல்தளம் அனைத்தும் முற்கால அரண்மனை விதானக் கூரைகள் போன்றே உள்ளன. சுவாமியின் கர்ப்பக்கிரக விமானத்தில் இறைவன் யோகத்தில் இருப்பது, மன்மதன் மலர்களைத் தொடுப்பது, காமனை இறைவன் எரிப்பது போன்ற நிகழ்வுகள் சுதைச்சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் மன்மதன், ரதி திருவுருவங்களும் உள்ளன.

இறைவன் தாட்சாயணியைப் பிரிந்து தவம்புரியத் தகுந்த இடம் இதுதான் என்று எழுந்தருளிய தலமாம்- பிரம்மன் பொய் கூறியதை இறைவன் மன்னித்த இடமாம்- ராமன் பிதுர்க்கடன் ஆற்றிய தலமாம்- புத்திர சோகத்தைப் போக்கி புத்திர வரம் கிடைக்கும் வகையில் புத்திர காமேஷ்டி யாகம் நடக்கின்ற தலமாம்- அன்பு, பிரியம், நேசம், விருப்பம் மற்றும் பாசத்திற்கு ஏங்குபவர்கள் தாங்கள் விரும்பும் நபரிடம் கிடைக்கும் வண்ணம் காமதகனமூர்த்தி அருள்கின்ற தலமாம்- ஜாதகமே பார்க்காமல் திடீரென்று திருமணம் புரிந்து பின் கருத்துவேறுபாட்டால் மனக்கஷ்டத்துடன் வாழ்பவர்களின் மனவுளைச்சலைப் போக்கி பாசத்தை வரவழைக்கின்ற தலமாம் கொற்கையில் அருளும் கொன்றைப்பிரியனான வீரட்டேஸ்வரரை வழிபடுவோம். சுபயோக நிலையைப் பெறுவோம்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: சோமசுந்தர குருக்கள், அலை பேசி: 94435 27044, 95854 49862. அ/மி வீரட்டேஸ்வரர் திருக்கோவில், கொற்கை, நாகை மாவட்டம்-609 203.

மெய்க்காவலர் செந்தில், அலைபேசி: 99761 30893.

அமைவிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து நீடூரைக் கடந்து மணல்மேடு செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொற்கை கிராமம். (பஸ் வசதி குறைவு).

படங்கள்: போட்டோ கருணா

m010819
இதையும் படியுங்கள்
Subscribe