றறிவும் ஐம்பொறியும் நம் அனைவருக்குமே இயற்கை தந்த பெருங்கொடை. இதை மூலதனமாகக் கொண்டுதான் மனிதஇனமே முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோடுகிறது.

ஆனால் இந்த ஆறறிவையும் ஐம்பொறிகளையும் பயன்படுத்தி அனைவருமே உச்சநிலையை அடைந்துவிடுவதில்லை.

அதற்குக் காரணம் அவரவர் எண்ணங்களே!

ஒருவர் மாடப்புறா ஒன்றைக் கூட்டிலடைத்து வளர்த்து வந்தார்.

Advertisment

அதற்கு தானியங்கள், பழங்களையெல்லாம் தகுந்த அளவில் தகுந்த நேரங்களில் தந்து தன் சொந்த பிள்ளையைப்போல் போற்றிவந்தார். ஒருநாள் நண்பர்களுக்குத் தன் செல்லப்பறவையைக் காண்பித்தார்.

thiruvdaivasal

ஒருவர், ""இந்தப்பறவையை ஆரம்பத்திலிருந்தே நீங்கள் வளர்த்து வருகிறீர்கள். இப்போது இதற்கு சிறகுகள் அருமையாக வளர்ந்துவிட்டன. கூட்டைத்திறந்து காட்டு கிறீர்கள். புறா அருமையாக நடைபோடுகிறதே தவிர பறந்துவிடவில்லையே'' என்று கேட்டார்.

Advertisment

அதற்கு இன்னொருவர், ""பிறந்ததிலிருந்தே கூட்டுக்குள் அடைபட்டுவிட்டது புறா. தன்னால் பறக்கமுடியாது என்கிற தாழ்வு மனப்பான்மை அதற்கு வந்துவிட்டது'' என்றார்.

தாழ்வு மனப்பான்மை என்பது மனத்தின் நோய். இந்நோய் இருக்கும்வரை எதையுமே சாதிக்கமுடியாது.

அத்தகைய தாழ்வு மனப்பான்மையைப் புறந்தள்ளி, வாழ்வு மனப்பான்மையை வரவழைத்து, வாழ்க்கையில் வசந்தத்தைத் தரவல்லதொரு திருத்தலம்தான் திருவிடைவாசலில் வீற்றிருக்கும் ஸ்ரீபுண்ணியகோடிநாதர் திருக்கோவில்.

இறைவன்: புண்ணியகோடியப்பர், இடைவாய்நாதர்.

இறைவி: அபிராமி உமையாள்.

உற்சவர்: திருவிடைவாயப்பர்.

புராணப் பெயர்: திருவிடைவாய்.

ஊர்: திருவிடைவாசல்.

தீர்த்தம்: புண்ணியகோடி தீர்த்தம்.

தலவிருட்சம்: கஸ்தூரி அரளி.

செந்நெல்லும் செந்தமிழும் இரண்டறக் கலந்து விரவிக்கிடக்கும் சோழவள நாட்டில், அடிமுடி அறியா அருட் பெருங்கருணையாளன் எம்பெருமானார் உலக உயிர்களைக் காத்தருளும் பொருட்டு எழுந்தருளியுள்ள எண்ணிலடங்கா சிவப்பதிகளில், காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ள முக்கியத் தலமானதும், மகா பாரதக் காலத்தில் பஞ்சபாண்டவர்களின் தாகம் தீர்க்க அவர்களின் தாய் குந்திதேவியாரால் உருவாக்கப்பட்டு, இன்றளவும் பாண்டவர்களின் பெயரினைத் தாங்கி பாண்டவையாறு என்ற நாமத்தையுடைய நதிக்கரையில் அமைந் துள்ளதுமான தலம்தான் திருவிடைவாய்த் திருத்தலம்.

"கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முக்தீத்தள்ளித் தலை தக்கனைக் கொண்டு அவர் சார்வாம்வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே' என்று இத்தலத்தைப் பாடுகிறார் திருஞானசம்பந்தர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என்றே பெயர் பெற்றிருந்தபடியால், சம்பந்தப் பெருமானும் "திருவிடைவாய்' என்றே போற்றிப் பதிகம் பாடியுள்ளார்.

சூரிய குலத்து அரசனான விடையன் எனும் மன்னன் இத்தலத்து ஈசனின் அருளுக்குப் பாத்திரமாகி, ஆனந்த மூர்த்தியான ஈசனுக்குத் திருக்கோவில் எடுப்பித்து தன் பக்தியை வெளிப்படுத்தியதால் இத்தலம் திருவிடைவாய் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

thiruvdaivasal

நந்திதேவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றார். இறைவனின் வாகனமாகவும் கொடியாகவும் விடை (நந்திதேவர்) இருப்பதால் இத்தலம் திருவிடைவாசல் என்று பெயர் பெற்றதாகவும் தலபுராணம் சொல்கிறது. பூலோகத்தில் பிறந்த அனைவருக்கும் வாழ்வில் பலவிதமான குழப்பங்களும் மனசஞ்சலங்களும் ஏற்படுவது இயற்கையே.

அத்தனைக்கும் இத்தலத்து ஈசன் விடையாகி வந்தருள்கிறார்.

"ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின்பாகம் எனும்வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆட்கொண்டநேசத்தை என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே.'

பொருள்: சிவனின் இடப் பாகத்தில் வீற்றிருப்பவளே! ஆசை என்னும் கடலில் சிக்கியதால், கருணையற்ற எமனின் பாசக்கயிற்றுக்கு பலியாக இருந்தேன். ஆனால் நறுமணம் மிக்க தாமரைத் திருவடிகளை என் தலைமீது வலியவைத்து ஆட்கொண்டாய். உன் அருளைச்சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

மேற்கண்ட அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிப் பாடலுக்கேற்றவாறு, அதிசயமான வடிவுடைய அன்னை அபிராமி என்ற திருநாமத்துடன் கருணைபொழியும் விழிகளுடன் பக்தர்களுக்குத் திருவருள் புரிகிறாள். ""அன்று திருக்கடவூரிலே அபிராமிபட்டருக்கு தன் தாடங்கத்தினால் மறைமதியன்று முழுமதியைக் காட்டி அருள்புரிந்த அன்னை அபிராமி, "விழிக்கே அருளுண்டு' என்று தன் மலர்விழிகளால் திருவிடைவாசலில் அனைவரையும் காத்தருள்புரிகின்றாள். கருணாசாகரியான அன்னை நாம் வேண்டுவதை வேண்டியபடி அருளும் அற்புதத்தை அனுபவித்தோர் வியந்து போற்றுகின்றனர்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான பாஸ்கர சிவாச்சாரியார்.

அன்பே வடிவான ஈசனை 16 வகையான பொருள்களால் லிங்கரூபம் செய்து வழிபடுவது பெருஞ்சிறப்பு என்று ரிஷிகள் கூறுகிறார்கள்.

1. புற்றுமண் லிங்கம்- முக்தி தரும்.

2. ஆற்றுமண் லிங்கம்- பூமி லாபம் உண்டாகும்.

3. பச்சரிசி லிங்கம்- பொருள் சேரும்.

4. சந்தன லிங்கம்- சுகபோகம் உண்டாகும்.

5. மலர் லிங்கம்- நீண்ட ஆயுள் கிடைக்கும்.

6. அரிசி மாவு லிங்கம்- உடல் வலிமை ஏற்படும்.

7. பழ லிங்கம்- நல்லின்ப வாழ்வு கிட்டும்.

8. தயிர் லிங்கம்- நற்குணம் பெறலாம்.

9. தண்ணீர் லிங்கம்- மேன்மை அடையலாம்.

10. அன்ன லிங்கம்- உணவுப் பஞ்சம் ஏற்படாது.

11. தர்ப்பைப்புல் லிங்கம்- பிறவியில்லா நிலை கிட்டும்.

12. சர்க்கரை, வெல்லத்தாலான லிங்கம்- இன்பம் கிடைக்கும்.

13. பசுஞ்சாண லிங்கம்- நோயற்ற வாழ்வு கிட்டும்.

14. வெண்ணெய் லிங்கம்- மனமகிழ்வு அதிகரிக்கும்.

15. ருத்ராட்ச லிங்கம்- நல்லறிவு வாய்க்கும்.

16. விபூதி லிங்கம்- செல்வ வளம் உயரும்.

ரிஷிகள் சொன்ன பதினாறு வகையான பொருட்களில் லிங்க வழிபாடு செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ அவையனைத்தும் சுயம்புலிங்கத்தை வழிபட்டாலே கிட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய சிறப்பம்சங்கள்

✶ திருவிடைவாயப்பர், இடைவாய்நாதர், புண்ணிய கோடீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சுயம்புவாகத் தோன்றி, தரிசித்த மாத்திரத்திலேயே முக்திக்கு உறுதிதரும் சிறப்புடைய கோவில்.

✶ இங்குள்ள அம்பிகை அபிராமி உமையாள் என்ற திருநாமத்துடன் சர்வ சக்தி படைத்தவளாகத் திகழ்கிறாள்.

✶ தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 274 என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்கான சம்பந்தர் பாடல்கள் 1917-ல் திருமுறை ஏடுகளில் அன்றி கல்வெட்டுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275-ஆவது தலமாக சிறந்து விளங்குகிறது.

✶ மூலவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரியஒளி பட்டுப் பிரகாசிப்பது அற்புத தரிசனம்.

✶ சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் ஆதியில் விடையன் என்னும் சூரிய குலத்து அரசனால் கட்டப்பட்டு, பின்னாளில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டுள்ளது என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

thiruvdaivasal

✶ சிவாகம விதிப்படி பூஜைகள் நடக்கும் இவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக ஊரேகூடி கொண்டாடி மகிழ்வது சிறப்பு.

✶ தோடுடைய செவியன் தூவெண் மதிசூடி கொன்றை மாலை அணிந்து விடையேறும் உமையொரு பாகனின் திருப்பாதங்களை நாம் அடையும் வாயிலாக இத்திருத்தலம் அமைவதால், விடைவாயல் என்றே விளங்குகிறது.

✶ சிற்றரசர் ஐயடிகள் காடவர்கோனும் இத்தலத்தினையும், இங்கு எழுந்தருள்புரியும் ஈசனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

✶ இங்குள்ள சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருள்புரிவது கிடைத்தற்கரிய தரிசனம்.

✶ இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருப்பது மிக மிக விசேஷமான அரிய தரிசனம்.

✶ சிவனும் விஷ்ணுவும் இத்தலத்தில் ஐக்கியமாக இருந்திருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கர்ப்பக்கிரகத்து விமானத்தின்மேல் லட்சுமி நாராயணரது திருவுருவம் அமைந்துள்ளது சிறப்பு.

✶ காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெள்ளாறு, பாண்டவையாறு மற்றும் கடல் ஆகியவை மாலையாக அமைந் துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப் பாகும்.

✶ விடைவாகனராய் நந்திதேவர் இருப்பதால் பிரதோஷ வழிபாடு

சிறப்பு வாய்ந்த ஒன்று.

✶ இவ்வாலயத்தைச் சுற்றி மாரியம்மன், காளியம்மன், லட்சுமி நாராயணர் திருக்கோவிகள் அமைந்திருப்பது சிறப்பு.

✶ பூமியிலிருந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி நாராயணரின் கருங்கல் திருமேனிகள் கிடைத்தது பேரதிசயம். இவற்றுக்கு தனித்தனி சந்நிதிகள் இப்பொழுது அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.

✶ சூரியனும் சந்திரனும் சேர்வதுதான் அமாவாசை. முக்தி க்ஷேத்திரமான இத்தலத்தில் அமாவாசையன்று அம்மையப்பரை தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அவையாவும் அனுதினமும் கிடைக்கும் வண்ணம் சூரிய சந்திரர்கள் அருகருகே வாகனத் துடன் காட்சி தருவது சிறப்பு.

✶ திருமணத்தடை, புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். தங்களது வேண்டுதல் நிறைவேற பஞ்சமூர்த்திகளுக்கும் புதுவஸ்திரம் சாற்றி அபிஷேகம் செய்வது வழக்கம்.

✶ இங்குள்ள புண்ணியகோடி தீர்த்தம் மிகவும் விசேஷமானது. இங்கு நீராடுவதால் கோடி புண்ணியம் கிடைப்பதோடு, உடலிலுள்ள அத்தனை வியாதிகளுக்கும்- குறிப்பாக மனக்கவலைகளுக்கு சிறந்த மருந்தாகச் சொல்லப்படுகிறது. சப்த நதிகளும் இறைவனை வழிபட வந்ததற்கு சாட்சியாக இன்றும் இக்குளம் காட்சியளிக்கிறது. இங்கு தண்ணீர் வற்றவே வற்றாது. இந்தக் குளத்திலிருந்து ஒரு சுரங்கப்பாதை மன்னார்குடி கோவிலுக்குச் செல்வதாக தலபுராணம் கூறுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆரம்பத்தில் ராஜகோபுரம் இன்றி நுழைவாயில் மட்டுமே இருந்தது. தற்சமயம் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமவாசிகள், சிவத்தொண்டர்கள், அரசியல்- ஆன்மிக அன்பர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நூதன ராஜகோபுரம், கொடிமரம் புதியதாக அமைக்கப்பட்டு, மகாகும்பாபிஷேகமானது சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமதி மகாலக்ஷ்மி சுப்ரமணியன் தலைமையில் எட்டுக் காலங்கள் உத்தமபட்ச யாகசாலையாக அமைக்கப்பட்டு, கடந்த 5-12-2016 திங்கட் கிழமையன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணியளவில் வெகுவிமரிசையாக நடந்தது.

கோவில் அமைப்பு

ஆலயத்தின் ஈசான்யத் திக்கில் புண்ணியகோடி தீர்த்தக்குளம் உள்ளது. நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் கிழக்குப் பார்த்த கோவிலாய் உள்ளது.

உள்நுழைவாயிலைக் கடந்தால் கிழக்கு நோக்கி மூலவர் புண்ணியகோடீஸ்வரர் அருட்காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் நடனவிநாயகரும், நால்வர் சிலைகளும் உண்டு. வலப்புறம் தெற்கு நோக்கி நடராஜர், சிவகாமி அருள்புரிகிறார்கள். அதனருகில் தெற்கு நோக்கி அபிராமி உமையாள் நின்ற நிலையில் அருட்காட்சி தருகிறாள்.

சுற்றுப்பிராகாரத்தில் கோஷ்டதெய்வங்கள், நர்த்தன விநாயகர், சிம்மாசன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், ஸ்ரீதுர்க்கை ஆகமவிதிப்படி அமைந்துள்ளனர்.

நிருதி மூலையில் கன்னிமூல கணபதி சந்நிதி உள்ளது. அதனருகில் பூமியில் கிடைக்கப்பெற்ற விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி நாராயணர் சந்நிதிகள் உள்ளன. தலவிருட்சங்களாக கஸ்தூரி அரளியும், வில்வமரமும் உள்ளன. முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகிறார். கஜலக்ஷ்மி சந்நிதியும் உண்டு.

ஈசான்யத் திக்கில் குழந்தை வடிவில் பாலசாஸ்தாவும், அதனருகில் நவகிரகங்கள், பைரவர், சூரிய சந்திரர், நாகராஜரும் அருள்புரிகிறார்கள். சுற்றுப்பிராகாரத்தில் தீர்த்தக் கிணறும் உள்ளது.

"நாதத்து ஒலியார் நவிலும் இடம்' என்று திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம், நம் மனதிலுள்ள அத்தனைக் குழப்பங்களுக்கும் விடை தந்து விடைவாகனரான ஈசன் அருளும் தலம், நம் சம்சார சாகரத்திற்கு விடையாகவும், முக்திக்கு வாயிலாகவும் விளங்குகின்ற தலம், அன்றாட வாழ்விலே அற்புதங்கள் அநேகம் நிகழ்த்தும் அன்னை அபிராமி உமையாள் அருள்கின்ற தலம், தரிசிப்பவருக்கு கோடி புண்ணியத்தை அருள்வதோடு, நல்வாழ்வு வாசலுக்கு வழிகாட்டும் திருவிடைவாசல் தலத்தின் திரிசடை வேந்தனாம் ஸ்ரீபுண்ணிய கோடீஸ்வரரை சித்திரை மாதம் 13-ஆம் நாள் (29-4-2018) ஞாயிறன்று நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமி விழாவில் கலந்துகொண்டு வழிபடுவோம். எண்ணற்ற சிறப்புப் பலன்களைப் பெறுவோம்.

காலை 8.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: எம். பாஸ்கர குருக்கள்,

அலைபேசி: 94892 89077, 70947 99791.

புண்ணியகோடியப்பர் திருக்கோவில்,

அத்திக்கடை (வழி),

திருவிடைவாசல்-613 702.

குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

மெய்க்காவலர்: புகழேந்தி,

அலைபேசி: 98651 89743

படங்கள்: போட்டோ கருணா