மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் மேஷ ராசியை சேர்ந்தவர்கள். இவர்கள் ராசி நாயகன் செவ்வாய். இவர்களின் பிறப்பு எண் 9 ஆகும். உங்கள் கிரக தத்துவம் நெருப்பு ஆகும். எனவே உங்கள் தொழிலில், நெருப்பு சம்பந்தம் இருப்பது நல்ல மேன்மை தரும். இந்த மாதம் நல்ல பணவரவும் இருக்கும். அதற்கு மீறிய செலவும் வரும். உங்கள் வீட்டில் திருமணம் போன்ற சுபசெலவுகள் செய்யும்போது, திட்டமிட்ட பட்ஜெட்டை மீறி செலவு வந்துவிடும். அதனால், எதற்கும் கொஞ்ச பணத்தை இருப்பில் வைத்துக்கொண்டேயிருங்கள். உங்கள் பணியாள் இதோ இப்போதே, வேலையைவிட்டு போய்விடுகிறேன் என்று ஆட்டம் காட்டுவார். ஆனால் வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். உங்கள் இளைய சகோதரனுக்கு, வேலை கிடைத்தும், அதனை ஒப்புக்கொள்ள, வெளியூர், வெளிநாடு செல்ல சில இன்னல் ஏற்பட்டு சரியாகும். பயணங்கள் மற்றும் சொத்து விஷயங்களில் கவனம் தேவை. வாரிசுகள் சம்பந்த விஷயங்கள், இந்த மாதம் நல்ல அனுகூலம் பெறும். அதுபோல், அரசு துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளும் நல்ல மேன்மை கிடைக்கப்பெறுவர். அதிர்ஷ்டமான பணவரவுண்டு. சுபச்செலவுகள் அதிகரிக்கும். அரசியலில், தொழிலில் உள்ளோர், ஒரு பெரிய ஏற்றமும், மாற்றமும் காண்பீர்கள். குடும்பத்தோடு, நிறைய சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. மலைமேல் உள்ள முருகரை வணங்கவும். சூரியனின் சன்னிதிக்கு தீபமேற்றி வழி படுங்கள். இளவயது பையன்களின் வாகன பழுது பார்க்கும் செலவை, நீங்கள் முடிந்தமட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஏப்ரல் 20 முதல் மே 20 வரை

இம்மாத நாட்களில் பிறந்தவர் களின் பிறப்பு எண் 6. ராசி ரிஷபம். அதிபதி சுக்கிரன். நில தத்துவம் உடையவர்கள் நீங்கள். எனவே தொழிலில் ஈரத்தன்மையுடைய நிலம் இருப்பது தொழில் மேன்மைக்கு உதவும். இந்த மாதம் பணவரவு, லாபம் இவையெல்லாம் மிகுதியாக கிடைக்கும். என்ன ஒன்று, அனைத்தும் எதிர்மறையாக புறவாசல் வழியாகவே கிடைக்கும். இந்த அதிக பணவரவு கடன்களை அடைப்பதோடு, பிறருக்கு கடன் கொடுக்கவும் வழிவகை செய்யும். வீடு, வாகனத்தில் முதலீடு செய்வீர்கள். மனை விற்கும்போது, வெகு கவனம் தேவை. உங்களில் ஒருசிலர் அரசுவகை வீடு வாங்க, பணம் கட்டுவீர்கள். மருமகன் வரும் நேரமிது. உங்களில் ஒருசிலரின் வாரிசுகள் அரசியலில் ஈடுபடுவர். சில வாரிசுகள் கலையுலகில் காலடி எடுத்துவைப்பர். கலைத்துறையில் எடிட்டிங், கம்ப்யூட்டர் துறை சம்பந்த வேலை கிடைக்கும். உங்கள் பெற்றோர் காரணமாக, சில தம்பதிகள் பிரியக்கூடும். திருமண பேச்சு தடைப்பட்டு நிற்கும். சில மறைவான செய்திகள் வெளிவரும். அரசு சம்பந்தமான தண்டனைகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டால், எதையாவது கொடுத்து, சட்டென்று வெளியேவரும் வழியை பாருங்கள். மாமனார், இளைய சகோதரன் உடல்நலத்தில் கவனம் தேவை. வள்ளி, தெய்வானையோடு முருகனுக்கு மல்லிகை மலர் சரம்கொண்டு வணங்கவும். சூரியன் சந்நிதிக்கு தாமரை அல்லது செவ்வந்தி பூ கொண்டு சேவிக்கவும். வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுவர்களை பாதுகாக்கவும்.

மே 21 முதல் ஜூன் 20 வரை

இந்த மாத தினங்களில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 5. ராசி மிதுனம். காற்று ராசி. அதிபர் புதன் ஆவார். இந்த மாதம், உங்கள் தைரியம் அதிரிபுதிரியாக இருக்கும். இதனால் கடன்காரன், எதிரி என்று யார் வந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி பதில் சண்டை போடுவீர்கள். காசு பண புழக்கம் சற்று டல்லாக இருக்கும். வீடு, வாகன விஷயம் சற்று இன்னல் கொடுத்து, பின் சரியாகும். உங்களின் சில வாரிசுகள், தொழில் விஷயமாக வெளிநாடு செல்வர். சில வாரிசுகள், முதல் போட்டு, சொந்தத் தொழிலை ஆரம்பித்துவிடுவர். இதில் முதல் போட ஒரு பங்குதாரரையும் சேர்த்துக்கொள்வர். தொழில் அனேக மாக வெளிநாட்டு பயணம் அல்லது போக்குவரத்து துறை சார்ந்ததாக அமையும். இந்த மாதம் கண்டிப்பாக காதல் திருமணம் நடக்கும். சிலர் காதல் கல்யாணம் செய்துவிட்டு, ஓடியும் போவீர்கள். பூர்வீக வீட்டை விற்க முனைவீர்கள். இந்த மாதம் உங்கள் எதிரிகள் சற்று ப்யூஸ்போன பல்ஃப் மாதிரி தெரிவர். திருமணம் நடத்துவோர், வெளியூர், வெளி நாட்டு பயணம் மேற்கொண்டு கல்யாணம் நடத்துவர். உங்கள் தந்தை, அவருக்குரிய கௌரவம் கிடைக்கவில்லை என்று வீட்டைவிட்டு வெளிநடப்பு செய்வார். தொழில் வெளிநாட்டு அளவிற்கு விருத்தியாகும். உங்கள் தாயார் நலன் கெட்டு பின் சீராகும். இந்த மாதம் புது கைபேசி வாங்குவீர்கள். எனினும் கேரண்டி விஷயத்தை கவனியுங்கள். உங்களில் சிலருக்கு அரசு பணியாளர்கள் கிடைப்பார்கள். நரசிம்மரை வணங்கவும். முருகருக்கு பச்சை சாற்றி வழிபடவும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கட்டவும்.

ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை

இந்த நாட்களில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 2 மற்றும் 7 ஆகும். இவர்களின் ராசி கடகம். ராசிநாதன் சந்திரன் நீர் தத்துவம். இந்த மாதம் பணவரவு செழிப்பாக இருக்கும். வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வேலை கிடைக்கும். முரண்டுபிடித்து, உங்களை விட்டு, விலகிச் சென்ற இளைய சகோதரன் மீண்டும் சமாதானமாகி வந்துசேர்வான். உங்கள் மூத்த சகோதரியால் ஒரு அதிர்ஷ்டமான நன்மை கிடைக்கும். அடுக்கு மாடி குடியிருப்பில், முதலீடு செய்வீர்கள். அரசாங்கத்திலிருந்து, உங்களுக்கு வரவேண்டிய பணம் கிடைக்கும். திருமண பேச்சுக்களை உங்கள் தாயாரும், மூத்த சகோதரியும் விரைவுபடுத்துவார்கள். உங்கள் வீட்டு பெண்களில் ஒருவர் அரசியலில் பங்கேற்பார். அல்லது அரசியல் சம்பந்தமான வேலை கிடைக்கும். சில பெண்கள் சமையல் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்வர். அதில் அசைவமும் இருக்கும். வெளி இன பணியாளர்கள் அனுகூலமாக இருப்பர். உங்கள் தொழில் மேன்மையைக் கண்ட, அரசு வகையறா அதிகாரிகள், ரொம்ப தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவர். இதனால் பண விஷயம் சற்று பாதிக்கப்படும். உங்கள் வாரிசுகள் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் நிறைய நல்லது நடக்கும்போது, திருஷ்டி கழிப்புமாதிரி, சிலருக்கு உடல்நலக்குறைவு அல்லது பங்கு பத்திர நஷ்டம், காதலில் அவமானம் அல்லது வாரிசுகளால் கௌரவக் குறைவு என ஏதேனும் ஒன்று நடக்கும். கவனம் தேவை. அரசியல்வாதிகள், கடுமையான சேவை ஆற்றுவார். திருச்செந்தூர் முருகரை வணங்கவும். முருகருக்கு அபிஷேகப் பொருள் வாங்கிக்கொடுங்கள். விளையாடும் வாலிபர்கள் குடிப்பதற்கு சத்துள்ள பானங்கள் வாங்கிக் கொடுங்கள்.

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை

இந்த நாட்களில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 1 மற்றும் 4 ஆகும். இவர்களின் ராசி சிம்மம். ராசிநாதன் சூரியன். இந்த மாதம் மனவலிமை மிக அதிகமாகும். எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தூள் தூளாக்கி விடுவீர்கள். உங்கள் மன தைரியம், உங்கள் சொற்கள் அதிரசெய்யும். வாக்கில் அவ்வப்போது, நிறைய கெட்ட வார்த்தைகளும், பிறரை நையாண்டி செய்யும்விதமான பேச்சும் வரும். இதனால் உங்களுக்கு வரவேண்டிய பணமும், நிறைவேற வேண்டிய நல்ல செயல்களும் ஒத்தி போடப்படும். உங்களின் சொற்கள், உங்கள் இளைய சகோதரியை செம காண்டாக்கிவிட, அவள் கோபத்தில், செமத்தியாக உங்களை அறைந்து, கௌரவ குறைச்சலை உண்டாக்கிவிடுவாள். உங்கள் பெற்றோர், கோபித்துக்கொண்டு, வேறிடம் கிளம்பிவிடுவர். அந்த இடம் மோசமானதாக இருக்கும். உங்கள் வாரிசு செய்யும் தொழிலில், பணியாளர்களால், பெரிய பிரச்சினை வரக்கூடும். பங்கு சந்தை குழப்பம் தரும். விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. கலைஞர்கள் பழக்கமில்லாத இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது, மிக கவனமாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் செய்யும் நல்ல செயல்களும், இவர்களுக்கு எதிராக திரும்பிவிடும். இந்த மாதம் பிரபலமான இளம் பெண்கள், நடிகைகள் இவர்களிடம் வெகு கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்கு வரும் கைபேசி தகவல்களில் மிக விழிப்புடன் இருங்கள். பணம் சுத்தமாக துடைத்து எடுக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் மனை விஷயமாக எந்த முடிவும் எடுக்கவேண்டாம். உங்கள் மாமியார். வேண்டாத குசும்பு பண்ணி விடுவார். உங்கள் மாமனார் அதற்கு ஒத்து ஊதுவார். திருமணத்தில் சற்று கலப்பு இருக்கும். மலைமேல் அமர்ந்திருக்கும் சிவனையும், முருகப் பெருமானையும் வணங்கவும். முருகர் சந்நிதிக்கு விளக்கேற்றி வணங்கவும். அரசியலில், கீழ்மட்ட தொண்டர்களின் படிக்கும் பையனுக்கு உதவுங்கள்.

ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை

இந்த தினங்களில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 5. ராசி கன்னி. அதிபதி புதன். இந்த மாதம் உங்களுக்கு எதைக் கண்டாலும் பயம். யாரைக் கண்டாலும் உதறல் என இருக்கும். இத்தனைக்கும் பணவரவு என்னவோ சரளமாகவே அமையும். இந்த மாதம் கல்யாணம் நடக்கும். கல்யாணம் என்னவோ, வெகு சிறப்பாக, நல்ல வசதியான இடத்தில்தான் நடக்கும். சிலர் பெண் கொடுத்து, பெண் எடுக்கவும் செய்வீர்கள். ஆனால் கடைசியில், நீங்கள் பயந்த மாதிரியே, உங்கள் பெற்றோர், வேண்டாத்தனம் செய்து சொதப்பி விடுவார்கள். நீங்கள் நொந்து போய்விடுவீர்கள். உங்கள் இளைய சகோதரருக்கு நெருப்புக்காயம் ஏற்படும். அல்லது அரசியலில் சேர்ந்து, ஒரு வில்லங்கம் உண்டாக்கிவிடுவார். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்கள், கைபேசி, பணியாளர்கள் இளைய சகோதரர், ஒப்பந்தம் என இவற்றில் வெகு கவனமாக இருக்கவேண்டும். அரசு ஒப்பந்தங்களை இந்த மாதம் தவிர்ப்பது நல்லது. வாரிசுக்கு அல்லது உங்களுக்கு வேலை கிடைக்கும். அது கொஞ்சகாலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு பின் திரும்புவது போல் அமையும். பங்கு வர்த்தகம் பரவாயில்லை. கையை கடிக்காமல் பணமும் கிடைக்கும். கலைஞர்கள் வேறுமொழி படங்கள், சீரியலில் நடிக்க முனைவர் கலைத்தொழிலில் உள்ளவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கைத்துணை அல்லது பங்குதாரர் கிடைக்கப்பெறுவர். அரசியலில் உள்ளவர்கள் பெரிய, மோசமான வதந்திக்கு உள்ளாகி அவமானப்படுவர். அரசியல் தலைவர்களின் அருகே இருக்கும் சீருடை பணியாளர்கள் கவனமாக இருக்கவும். ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாளை வணங்கவும். கருடாழ்வாருக்கு தீபமேற்றி சேவியுங்கள். வயதான செக்யூரிட்டி வேலை பார்ப்பவர்களுக்கு தேவைக் கேட்டறிந்து உதவுங்கள்.

செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை

இந்த வாரங்களில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 6. ராசி துலாம். அதிபதி சுக்கிரன். நீங்கள் காற்று தத்துவம் கொண்டவர்கள். எனவே உங்கள் தொழிலில் காற்றின் பங்கீடு இருப்பது நலம். இந்த மாதம் நீங்கள் வேலை செய்யும் இடத்தில், இன்னொருவர் வேலையை, பரிவர்த்தனையாக மாற்றிவிடுவர். இதில் உங்களின் கௌரவம் கொஞ்சம் டேமேஜ் ஆகும். பண வரவு வருமா- வராதா எனும் ஊசலாட்ட நிலையில் அமையும். உங்களின் கோப சொற்கள் குடும்பத்தில் குழப்பம் தரும். உங்கள் இளைய சகோதரியால், ஏற்பட இருந்த இன்னல், கடவுள் புண்ணியத்தால் நீங்கும். ஒப்பந்ததின் பாதிப்பு, கடைசி நேரத்தில் தெரிந்து, சரி செய்வீர்கள். உங்கள் பணியாளர் செய்யும் ஒரு தவறு திருத்தப்படும். வீடு, வாகன விஷயங்கள், ஒரு முடிவுக்கு வராது. காதல் கசக்கும். பங்கு வர்த்தகம் திகில் தரும். கலைஞர்கள், வேலை வாய்ப்பு கிடைக்கும் நேரம், சில விருப்பத்தகாத இன்னலையும் சேர்த்துப் பெறுவர். உடல்நலம் சிறிது சீர் கெட்டாலும், உடனே மருத்துவரை பார்த்துவிடுங்கள். இதன்மூலம் பெரிய செலவு நீங்கும். திருமணம் கூடிவரும் நேரத்தில், ஒரு வேண்டாத செய்தியால், திருமணம் சில தடைக்குப்பிறகு நடக்கும். அரசியலில் உள்ளவர்கள் மிகப்பெரிய மக்கள் ஆதரவு பெறும் நேரத்தில், அவர்களின் சொற்கள் அல்லது குடும்பம்மூலம் பெரும் பின்னடைவை சந்திப்பார்கள். உங்கள் மூத்த சகோதரன் மிகப் பெரிய நன்மையையும், மிகப்பெரிய தீமையையும் ஒருங்கே சந்திப்பார். கல்வி சம்பந்தமான வெளிநாட்டு பயணம், ஒரு தடைக்குப் பிறகு வெற்றியாகும். மாமனார்- மாமியாரின் நலன் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் பெற்றோர்கள் சவால்களை சமாளித்துவிடுவர். வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவும். பிறமத வழிபாட்டுத் தலங்களில், வேலை செய்பவருக்கு வஸ்திரம் வாங்கிக்கொடுங்கள். கடைகளில் வேலை செய்யும் பையன்களுக்கு உதவுங்கள்.

அக்டோபர் 21 முதல் டிசம்பர் 20 வரை

இந்த நாட்களில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 9 ஆகும். ராசி விருச்சிகம். ராசிநாதன் செவ்வாய் ஆகும். நீங்கள் நீர் தத்துவம் கொண்டவர்கள். உங்கள் தொழிலில் வெப்பமான நீர் தன்மை இடம் பெற்றால் தொழில் சிறக்கும். உங்களில் பலருக்கு, அரசு வேலைக்கு ஆர்டர் கையில் கிடைக்கும். ஆனால் அந்த அரசு வேலையில் சேரமுடியுமா அல்லது நீதிமன்றம் ஏதாவது தடை செய்துவிடுமா, அதனால் வேலையில் சேருவது நடக்குமா என பெரும் மன போராட்டம் நடக்கும். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள், வேலை ஆர்டர் கையில் இருந்தாலும், யாரிடமும் பெருமை அடித்துக்கொண்டு திரிய வேண்டாம். எப்போது என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். வேறு சிலர், அட இன்னைக்கு காதல் பூ பூத்தாயிற்றா, அப்புறம் என்ன நாளைக்கு கல்யாணம்தான் என, ஜோடியை இழுத்துக்கொண்டு ஓடிப்போய், கல்யாணம் கட்டிக்கொள்வீர்கள்.வரவேண்டிய தொகை இழுத்தடிக்கும். மனை, வீடு, வாகனம் என இவற்றை ஒன்றை கொடுத்து, புதிது மாற்றிக்கொள்வீர்கள். உங்களில் சிலர், சினிமாவில் சேர, வீட்டைவிட்டு ஓடிவிடுவீர்கள். ஏற்கெனவே கலையுலகில் இருப்பவர்கள் பிறமொழி பேசுபவருடன் திருமணம் செய்துகொள்வர். சிலர் வியாபார விஷயமாக வெளியூர், வெளிநாட்டு அலைச்சல் வரும். பங்கு வர்த்தகத்தில் ஒன்றை கொடுத்துவிட்டு, இன்னொன்று வாங்குவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களின் நிலை பிரகாசமாக இருப்பினும், அங்கு வேலை செய்பவர்களால், வேலை நடக்கமுடியாத அளவிற்கு பிரச்சினை பெரிதாகும். உங்கள் பெண் மற்றும் மருமகனால் இம்சைவந்து நீங்கும். அரசியலில் உள்ளவர்கள், அதிலும் மந்திரிகள் ஒரு பிரச்சினை ஏற்பட்டு பின் சரியாக காண்பீர்கள். அரசியல் சார்ந்த ஒரு காதல் திருமணம் நடக்கும். அரசியல், தொழில் என எத்தனை செய்தாலும், குகை போன்ற இடத்திலுள்ள சுப்பிரமணியரை வணங்கவேண்டும். இதனால் உங்களை சுற்றி உள்ளவர்களால் உண்டாகும் பிரச்சினை நீங்கும். வெயில் காலத்தில், விளையாடும் பையன்களுக்கு மோர் வாங்கிக் கொடுங்கள்.

நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை

இந்த மாதத்தில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 3 ஆகும். ராசி தனசு அதிபதி குரு ஆவார். உங்களின் தத்துவம் நெருப்பு. நீங்கள் உங்கள் தொழிலில் ஆன்மிக நெருப்பு சம்பந்தம் கொண்டால் தொழில் சிறக்கும். இந்த மாதம் உங்களுக்கும் வேலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலை பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, பதவி உயர்வுமூலம் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்ய நல்ல பணியாளர்கள் கிடைப்பர். வீடு கட்டுமான ஒப்பந்தம் கையெழுத்தாகும். வீடு கட்ட கடன் கிடைக்கும். உங்கள் பூர்வீகம் சம்பந்தமான அதிர்ஷ்டம் உண்டு. உங்கள் வாரிசு மிகப் பெருமை தருவார். பங்கு வர்த்தகம் ரொம்ப மேன்மை தரும், அதே நேரம் புது பங்குகள் வாங்க வேண்டாம். கலையுலகினர், மிக அதிர்ஷ்டமும், வீடு வாங்கும் யோகமும் பெறுவர். சில கலைஞர்கள், சிறுதடைக்கு பிறகு சொந்த படம் தயாரிப்பார்கள். சிலர் பேரன்- பேத்தி அல்லது வாரிசு யோகம் கிடைக்கும். அதேநேரத்தில் மருத்துவ உதவியை, கவனமாகக் கைக்கொள்ளவும். அரசியல்வாதிகள், தாங்கள் பிறந்த ஊரில், மிகக் கடுமையாக சேவையாற்றுவர். இதற்கு இவர்கள், சொந்தத் தொழிலிலுள்ள தொழிலாளர், பங்குதாரர்களை மிக பயன்படுத்திக்கொள்வர். சமையல் கலைஞர்கள் பாரம்பரிய அசைவ உணவில் அசத்துவார்கள். குடும்பத்துடன், குலதெய்வ வழிபாட்டிற்கு செல்லும்போது, பயணத்தில் சிறு விபத்தும், சிராயப்பும் ஏற்படும் வாய்ப்பு வரும். குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைத்துவிட்டு, செல்லவும். உங்கள் மூத்த சகோதரி வீட்டு விஷயத்தில், கடன் வாங்க உதவுவார். தொழிலில் உங்கள் யோசனைகள் வேகமாக இருப்பினும், முடிவுகளும் சரியாக வருமா என சிந்தியுங்கள். வேலுடன் உள்ள முருகரை வணங்கவும். முருகருக்கு மஞ்சள் வஸ்த்திரம் வாங்கி சார்ற்றவும். அடிப்பட்ட இளைஞருக்கு வேண்டிய உதவிச் செய்யவும்.

டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை

இந்த மாதத்தில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 8. ராசி மகரம். ராசிநாதன் சனி ஆவார். உங்கள் ராசியின் தத்துவம் நிலம். எனவே உங்கள் தொழிலில் நிலம், பூமி சம்பந்தம் இருந்தால் நல்லது. இந்த மாதம் பண ரொட்டேஷன் இருந்துகொண்டே இருக்கும். தொழிலில், குத்தகை ஒப்பந்தம் சம்பந்தமான இனங் களில் கையெழுத்து போடுவீர்கள். கலைஞர்கள், புதுபட அக்ரிமெண்ட்டில் இணைவீர்கள். சில மந்திரிகள் வெளிநாட்டு வர்த்தக தொழில் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்வர். புதிய பங்குவர்த்தக ஏற்பாடு செய்வீர்கள். பயணங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். வேலை விஷயமான சந்திப்புகள் உண்டு. தொழிலில் பணியாளர்கள் சேர்க்கை சம்பந்தமான நபர்களுடன் பேசுவீர்கள். உங்களில் சிலர் வேலை கிடைப்பது பற்றி, குறுஞ்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். உங்களின் இளைய சகோதரி, தன் கணவருடன் வெளிநாடு செல்வாள். உங்கள் வாழ்க்கைத் துணையின் வேலையில் அரசு சார்பில் ஒரு நல்லதும் கெட்டதும் நடக்கும். உங்கள் தாயார், பயணத்தில் அடிபட நேரும்; கவனம் தேவை. கோவில், குலதெய்வ தரிசனம், சிறு தடையுடன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, தங்கள் கூட இருப்பவர்களால் வெகு துன்பமும் வருத்தமும் அடைவர். இவர்களின் வீட்டுக்கு அரசு தொல்லை கொடுக்கும். உங்கள் வாரிசுக்கு, வெளிநாடு செல்ல, தகவல் வரும். உங்கள் மாமனாரும், மாமியாரும் மிக வதந்தி, குசும்பு பேசுவார்கள். உங்கள் பெற்றோரின் நிலை கவனிக்கப்பட வேண்டும். இந்த மாதம் உங்களின் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்துவரி என இவற்றை, ஒழுங்காக கட்டிவிடுங்கள். இல்லையெனில் வீடு ஜப்தி அளவிற்கு போய்விடும். ஜாக்கிரதை. வைத்தீஸ்வரன் கோவில் முருகரை வணங்கவும். முருகருக்கு அரளி பூமாலை கொண்டு வணங்கவும். பொதுசேவை செய்யும் இளைஞர்களுக்கு தேவைக் கேட்டறிந்து உதவவும்.

ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை

இந்த மாதத்தில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 8 ஆகும். ராசி கும்பம். ராசிநாதன் சனீஸ்வரர் ஆவார். உங்கள் ராசி தத்துவம் காற்று ஆகும். எனவே சற்று மந்தமான குளிர்ந்த காற்றுகொண்ட தொழில், சற்று நன்மை தரும். இந்த மாதம் பண வரவு பலவகையிலும், கையில் புரளும். அது வீடு, வாகனம்மூலமும் வரலாம். பெற்றோர்கள் மூலமும் கிடைக்கும். லஞ்சப் பண கொடுக்கல்- வாங்கல்மூலமும் கிடைக்கும். இவ்விதம் வரும் பணத்தை, நன்கு முதலீடும் செய்வீர்கள். பிறரிடம் மிகத் தைரியமாக பேசுவீர்கள். பணியாளர்கள், குத்தகை தாரர்களிடம் நன்கு சவுண்ட் விடுவீர்கள். ஆனால் மனசுக்குள், ஏதாவது பெரிய நோய்வந்து, ஒன்றுகிடக்க ஒன்னு ஆகிவிடுமோ என்று பயந்து நடுங்குவீர்கள். பில்டிங் ஸ்டராங்கு, பேஸ்மண்ட் வீக்கு என்கிற கதையாக இருக்கும். உங்கள் வாரிசுகள் எதிர்பாராத சம்பாத்தியம் பெறுவர். அது வெளிநாடு சார்ந்ததாக அமையும். சில வாரிசுகள், ஏதேனும் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளக்கூடும். பங்குவர்த்தகத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் சிலர் எதிர்பாராத வருமானத் தையும், சிலர் எதிர்பாராத வில்லங்கத்தையும் சந்திப்பர். ஏற்றுமதி- இறக்குமதி செய்வோர். சிறு தடைக்குப்பின் நல்ல லாபம் காண்பர். திருமணம் ஓஹோவென்று நடந்து, பின் பெரிய சண்டையில் முடியும். அரசு சார்ந்த ஒப்பந்தம் மிக நன்றாக இருப்பினும், நிறைய கடன் வாங்கவேண்டி வந்துவிடும். அரசியல்வாதிகள், தங்கள் பிறந்த ஊர் சம்பந்தமாக பெரிய அதிர்ஷ்டம் காண்பர். சில அரசியல்வாதிகள், தங்களுக்கு பதிலாக தனது பேரன் அல்லது பேத்தியை அரசியலில் சீட் கேட்டு நுழைக்க முயற்சித்து வெற்றிபெறுவர். இந்த மாதம் உங்கள் வேலை சார்ந்து தொழில் தொடங்கும் முயற்சியை தள்ளிவையுங்கள். சொந்த ஊருக்கு சுப பயணம் அடிக்கடி செல்லவேண்டி இருக்கும். வேலும், மயிலும்கொண்ட முருகரை வணங்கவும். முருகர் சன்னிதிக்கு விளக்கேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கிக் கொடுங்கள். விளையாடும்போது அடிபடும் பையன்களுக்கு, மருந்து வாங்கிக் கொடுத்து உதவுங்கள்.

பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை

இந்த நாட்களில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 3 ஆகும். ராசி மீனம். ராசிநாதன் குரு ஆவார். உங்கள் ராசி தத்துவம் நீர் ஆகும். உங்கள் தொழிலில் நீர் சம்பந்தம், குறிப்பாக கடல்நீர் சம்பந்தம் அமைவது நன்று. இந்த மாதம் அமையும். தைரியம் அதிரிபுதிரியாக அமையும். எவ்வளவு பெரிய இன்னல் வந்தாலும், அதனை துணிச்சலாக எதிர்த்து கேள்வி கேட்பீர்கள். முக்கியமாக ஏற்றுமதி- இறக்குமதி செய்வோர் மிக அபரிதமான லாபம் பெறுவர். மேலும் உங்கள் குத்தகை, ஒப்பற்ற விஷயங்கள் நல்ல நன்மை தரும். இடமாற்றம் உண்டு. அது வீடு மாறுவதாகவும் இருக்கலாம். தொழில் செய்யும் இடமாறுதலாகவும் இருக்கலாம். தொழில் சம்பந்தமான வாகனத்தை மாற்றுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் வேலை, சிறிய தடைக்குபின் சீராகும். வாரிசின் பொருட்டு, அல்லது உடல்நிலை சார்ந்து கடன் வாங்க நேரிடும். வாரிசுகளின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரியும். காதல் கழன்றுவிடும். திருமணம், ஒரு பெரிய பரிவர்த்தனை மாற்றத்துடன் நடக்கும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில், நீங்களே ஒரு பங்குதாரர் ஆகும் வாய்ப்பு உண்டாகும். இளம் பெண்களிடம், வியாபார சம்பந்தமாக பேசும்போது, கவனம் தேவை. குலதெய்வக் கோவில் வழிபாட்டில் தடை உண்டாகும். உங்கள் பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் தொழில் செய்யும் இடத்தில், கட்டாய நிர்பந்தத்தின் பேரில் ஒரு மாற்றம் செய்யவேண்டியிருக்கும். அரசியல்வாதிகள், தங்கள் மேல் போடப்படும் பழி, குற்றங்களையும்கூட தனக்கு நன்மை தரும்விதமாக மாற்றிக்கொள்வர். இது இவர்களின் கரைகண்ட சாமர்த்தியத்தால் நடக்கும். உங்கள் மாமனாரும், மாமியாரும் இடம் மாறிக்கொள்வார்கள். திருச்செந்தூர் முருகனை வணங்கவும் அருகிலுள்ள முருகருக்கு மஞ்சள் வஸ்திரமும், மஞ்சள் பூக்களும் கொண்டு வணங்கலாம். உடல்நிலை சரி இல்லாத இளைஞர்களுக்கு உதவவும்.