ட தமிழகத்தின் பல கிராமங்களில் ஊர் எல்லையில் திரௌபதை யம்மன், எல்லையம்மன், பிடாரியம்மன், செல்லியம்மன், அங்காளம்மன் என காளியின் அம்ச மாக அன்னை கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரத்தைப் போக்கி அருளாட்சி செய்துவருகி றாள். அவ்வகையில் கொடிக்களத்தில் கோவில் கொண்ட செல்லியம்ம னின் வரலாறு மெய் சிலிர்க்க வைப்பது.

கடலூர் மாவட்டத் தின் மையப்பகுதியில் உள்ளது கொடிக்களம் கிராமம். ஊருக்கு வடக் கில் அழகிய இலுப்பை மரங்கள் அடர்ந்த தோப்பில் கோவில் கொண்டுள்ளாள் செல்லியம்மன். எதிரே அழகிய குளம்.

Chelliyamman

செல்லியம்மனோடு சேர்த்து மொத்தம் ஏழு சகோதரிகள். இவர்கள் கீழ்மத்தூர், பெருமத்தூர், வேள்விமங்கலம், தொளார், கோவிலூர், சிறுமங்கலம், கொடிக்களம் என ஏழு ஊர்களில் கோவில் கொண்டுள்ளனர்.

Advertisment

இவர்களில் யாருக்கு ஊர்மக்கள் விழா நடத்தினாலும், மற்ற சகோதரிகளையும் அழைத்து வந்து விருந்தினராகத் தங்க வைப்பர். விழாவைக் கண்டுகளித்தபிறகு அவரவர் இருப்பிடம் நோக்கிச் செல்வார்கள்.

இப்படி ஒருமுறை கொடிக்களம் செல்லியம் மனுக்கு விழா நடத்த காப்பு கட்டினார் கள் ஊரார்கள். அதையடுத்து தனது சகோதரி யான தொளார் செல்லியம்மனை அழைக் கப்போனாள் கொடிக்களம் செல்லி. ஆனால், விழாவுக்கு வரமறுத்து சோகமாக இருந்தாள் தொளார் செல்லி. "ஏன்' என்று சகோதரியை வலியுறுத்திக் கேட்க, அவளோ, ""என்னை ஒரு பிராமணன் மந்திரக்கட்டால் கட்டி விட்டதோடு, என்னைத் தன் வீட்டு வேலை யெல்லாம் செய்யச் சொல்லி, துன்புறுத்துகிறான்'' என்று சொல்ல, கோபமான கொடிக்களம் செல்லி, ""பயப்பட வேண்டாம். நீ முன்னே கொடிக்களம் போய்விடு. நான் அந்த பிராமணனுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு வருகிறேன்'' என்றுகூறி, பிராமணன் போட்ட மந்திரக்கட்டை அறுத்து கொடிக்களம் அனுப்பிவிட்டாள். கொடிக் களம் செல்லி, தொளார் ஆலயத்தில் அமர்ந்து பிராமணன் வருகைக்காகக் காத்திருந்தாள்.

காலையில் கோவிலின் முன் வந்த பிராமணன், ""அடியே செல்லி! வாடி வெளியே... வீட்டுவேலை அப்படியே கிடக்கிறது. வயலில் நடவுவேலை இருக்கிறது. புறப்படு'' என்று சத்தம் போட்டான்.

Advertisment

எப்போதும் பயந்து கொண்டு கதவைத் திறந்து வெளியே வரும் செல்லி அன்று வரவில்லை. கோபமடைந்த பிராமணன், ""அடியே செல்லி! வாடி வெளியே'' என்று கதவை எட்டி உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனான். அங்கே செல்லி ஆக்ரோஷமாக நின்றதைக்கண்டு மிரண்டான். ""உன்னைத்தானடா எதிர்பார்த்தேன்'' என்று தன் சூலத்தால் வதம்செய்தாள் கொடிக்களம் செல்லி.

பிறகு கொடிக்களம் சென்று சகோதரிகள் திருவிழாவைக் கண்டு ரசித்தனர். விழா முடிந்து தொளாருக்குப் போகுமாறு கொடிக் களம் செல்லி சொல்ல, தொளார் செல்லியம்மனின் முகம் வாடிப்போனது. ""ஏன்'' என்று கேட்க, ""உனது ஊர்மக்கள் இவ்வளவு சிறப்பாக உனக்கு விழா எடுக்கிறார்கள். இவர்களையும் இந்த ஊரையும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் நான் இங்கேயே இருந்துகொள்கிறேன். நீ தொளருக்குச் சென்று என் இடத்தில் அமர்ந்து அங்குள்ள பக்தர்களைக் காப்பாற்று'' என்று சொல்ல, சகோதரி விருப்பப்படியே தொளாருக்குச் சென்றுவிட்டாள் கொடிக்களம் செல்லி. இப்படி இடம் மாறிய செல்லியம்மன்கள் பக்தர்கள்மீது அளப்பரிய அன்பும் கருணையும் காட்டி மெய்சிலிர்க்கச் செய்கிறார்கள்.

Chelliyamman

அப்படி இடம் மாறிய கொடிக்களம் செல்லியம்மன் கோவிலைப் புனரமைப்பு செய்து ஆண்டுதோறும் விழா நடத்தினார்கள் ஊர் முக்கியஸ்தர்களான கோபால், ரங்கராஜ், ஞானசம்பந்தன் ஆகியோர். இவர்களுக்கு பெரிய சோதனை உண்டானது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு செல்லியம்ம னின் உற்சவர் சிலையை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இந்த திருட்டு சம்பந்தமாக விசாரணை செய்த போலீசார், மேற்படி முக்கியஸ்தர்கள்மீது சந்தேகப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடுத்து சிறைக்கு அனுப்பி விட்டனர். ஜாமீனில் வந்த அவர்கள் வழக்குக் காக நீதிமன்றத்திற்கு அலைந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை ஆரம்பமானது. அப்போது நீதிபதி மூவரையும் பார்த்து, ""நீங்கள் சிலையைத் திருடவில்லையென்று சொல்கிறீர்கள். அப்படி யானால் அதை நிரூபிக்க சாட்சியை அழைத்துவாருங்கள்'' என்று உத்தரவிட்டார். ஊருக்குவந்த மூன்றுபேரும் குளித்துமுடித்து செல்லியம்மனிடம் ஓடினார்கள்.

""அம்மா தாயே! உனக்குப் பணி செய்வதே எங்கள் கடமையென்று வாழ்கிறோம். எங்கள்மீது விழுந்துள்ள திருட்டுப்பழியை நீதான் போக்கவேண்டும்'' என்று மனமார வேண்டிக்கொண்டனர்.

Chelliyamman மறுநாள் நீதிமன்றம் சென்றனர்.

அவர்கள் மூவரையும் பார்த்த நீதிபதி, ""நீங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சி உள்ளதா?'' என்று கேட்டு முடிப்பதற்குள், பாவாடை சட்டையணிந்த ஆறு வயது சிறுமி சரசரவென வந்து, நீதிபதி முன்பிருந்த கூண்டிலேறி, ""அய்யா, நான் சொல்கிறேன். இவர்கள் நிரபராதிகள். சிலை திருடிய கும்பல் வேறு'' என்று சொல்ல, ""நீ யாரம்மா?'' என்று நீதிபதி கேட்க, ""நான் யாரென்று இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?'' என்று சொல்லி கலகலவென சிரிக்க, அந்த சிறுமியின் உருவம் அதே இடத்தில் மறைந்துபோனது. நீதிபதி உட்பட அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார் கள். சாட்சி சொல்லவந்தது சாட்சாத் செல்லியம்மனே என்பதை உணர்ந்த நீதிபதி மேற்படி மூவரையும் விடுதலை செய்துவிட்டார்.

இதுமட்டுமா? இதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் ஒரு பண்ணையாரிடம் கணக்குப் பிள்ளை பணி செய்துவந்தார். மிக நேர்மையான மாணிக்கத்திடம் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பொய்க்கணக்கு எழுதி முதலாளிக்குத் தெரியாமல் பணம் கேட்டனர். மாணிக்கம் மறுத்துவிட்டார். இதனால் கோபமான அவர்கள் ஒருநாள் அந்த குடும்பத்துப் பெண்களின் நகைகளைத் திருடி மூட்டைகட்டி மறைத்துவிட்டு, மாணிக்கம்தான் திருடிவிட்டார் என்று சொல்ல, அந்த முதலாளியும் தீர விசாரிக் காமல் போலீசில் புகார் கொடுத்து விட்டார். போலீஸ் மாணிக்கத்தை அழைத்துப்போய் தீவிரமாக விசாரித்தனர். அவரோ, ""நான் அப்பாவி. எங்கள் ஊர் செல்லியம் மன்மீது ஆணையாக நான் திருட வில்லை'' என்று கண்ணீரோடு மன்றாடினார். கடவுள்மீது சத்தியம் செய்யும் இவர் திருடனா?

இல்லையா என்று யோசித்த காவல்துறை அதிகாரி, இன்று போய் நாளைக்கு மீண்டும் விசாரணைக்கு வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார்.

அன்றிரவு அந்த காவல்துறை அதிகாரி தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு. அதில் பாவாடை சட்டையுடன் நீதிமன்றம் வந்து சாட்சி சொன்ன அதே சிறுமி அதிகாரி முன் தோன்றி, "மாணிக்கம் அப்பாவி. அவர் திருட வில்லை. அந்த நகைகளை அந்தக் குடும்பத்தினரே மூட்டைகட்டி அதே வீட்டு கிணற்றில் போட்டுள்ளனர்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். மறுநாள் பொழுதுவிடிந்ததும் அந்த ஊருக்கு சக காவல்துறையினருடன் வந்த அதிகாரி, முதலாளி வீட்டு கிணற்றில் ஆட்களைவிட்டு மூழ்கித் தேடச்சொன்னார்.

என்ன அதிசயம்! அந்த நகை மூட்டை கிடைத்துவிட்டது. இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொன்னார் அந்த அதிகாரி. ""அது சாட்சாத் எங்கள் ஊர் செல்லியம்மன்தான்'' என்று மக்கள் சொல்ல, மெய்சிலிர்த்துப்போனவர் கோவிலுக்குச் சென்று செல்லியம்மனை மனமுருக வழிபட்டார். மாணிக்கம்மீது விழுந்த திருட்டுப்பழியைத் துடைத்த இந்த செல்லியம்மனின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம் என்கிறார், அந்த மாணிக்கத்தின் மகன் சுந்தரமூர்த்தி.

இப்படி தன் பக்தர்களை கண்ணிமைபோல காத்துவரும் செல்லியம்மனுக்கு கடந்த பிப்ரவரி 23, 24 தேதிகளில் சண்டியாகப் பெருவிழா மிகச்சிறப்பாக நடத்தினார் கள். உபயதாரர்களில் ஒருவரான அமரர் அருணாச்சலம் ரெட்டியார் மகன் பிரகாஷ் தலைமையில், ஊர்மக்களின் ஒத்துழைப்போடு, பல கிராம மக்கள் திரளாக வருகைதந்து விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்ததோடு, நற்பேறுகளும் கிடைக்கப்பெற்றனர் அம்மன் அருளால்.

""இந்த சண்டியாகம் என்பது யாகங்களிலேயே மிக வலிமையானது, பெரியது. இந்த யாகமானது பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று பெருந் தெய்வங்களை வைத்தே நடத்தப்படும். இந்த யாகம் செல்லியம்மன், பிடாரி யம்மன், அங்காளம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் போன்ற காளியின் அம்சங்களாக உள்ள கோவில்களில் நடத்தப்பட வேண்டும். மேலும் அம்மன் தனித்தனியாக அமர்ந்து ஆட்சி செய்யும் கோவில்களில் மட்டுமே நடத்தவேண்டும். நினைத்த காரியத்தில் வெற்றி, சகல சித்திகள், நோயற்ற வாழ்வு, படிப்பு, பணியில் பதவி உயர்வு, திருஷ்டி நீக்கம், எதிரிகள் தொல்லை அகலுதல், செல்வப் பெருக்கம், மனக்கவலை தீருதல், நீண்ட ஆயுள், மகப்பேறு போன்ற பல்வேறு நன்மைகள் இந்த யாகத்தின்மூலம் கிடைக்கும். இதை நடத்தும் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கும் எல்லா பலனும் கிடைக்கும்.

இந்த யாகத்தை 14 அத்தியாயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தனித் தனியாக யாகப்பொருட்களுடன் புடவை உட்பட பல பொருட்கள் யாகத்தில் இடப் படும். 700 சுலோகங்கள் சொல்லி நடத்தப் படும் மிகப்பெரிய யாகம்'' என்கிறார் தன் குழுவினருடன் மிகச்சிறப்பாக யாகத்தை நடத்திமுடித்த திருக்கடவூர் எம்.கே. மகேஷ்வர சிவாச்சாரியார்.

இப்படிப்பட்ட செல்லியம்மனுக்கும், அய்யனாருக்கும், இவர்களின் பரிவார தெய்வங்களான கருப்புசாமி, ராய முனியப்பா, பாலாம்பிகை, மாரியம்மன் ஆகியோருக்கும் ஆடிமாதம் எட்டு நாள் திருவிழா நடத்தப்படும். இதற்கு முன்னோட்ட மாக காப்பு கட்டும் நாள் நள்ளிரவில் சூலப்பிடாரி எடுத்துச் சென்று தெருக்களில் அறிவிப்பு செய்யப்படும். அப்போது யாரும் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள். வீட்டுக்குள் இருந்துகொண்டு அறிவிப்பை மட்டும் காதில் வாங்குவார்கள். எட்டு நாட்களும் சாமி ஊர்வலம், வாணவேடிக்கை, தெருக்கூத்து என நடத்தப்படும். இறுதியில் அய்யனாருக்கும் செல்லியம்மனுக்கும் பொங்கல் விழா நடைபெறும். இதில் அனைத்து சமூகத்தினரும் கலந்துகொள்வார் கள். அனைத்து சமூக மக்களும் உபயதாரர்களாக இருந்து விழா நடத்துவது சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

""இந்த செல்லியம்மனின் பெருமையைக் கேள்விப்பட்ட உளுந்தூர்பேட்டை பத்மா என்பவர் தன் மகளுக்கு குழந்தைப்பேறு வேண்டி, நேரில் வராமல் அங்கிருந்தபடியே வேண்டிக்கொள்ள குழந்தை பாக்கியம் கிடைத்தது. அதேபோல கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தெலுங்குபேசும் செட்டியார் குடும் பத்து ஆண்பிள்ளைக்கு பெண் கிடைக்காமல் இருந்தது. ஊரிலிருந்தபடியே அம்மனை வேண்டிக்கொண்டனர். சில நாட்களிலேயே பெண் அமைந்து திருமணம் நடந்தது. அந்த இரண்டு குடும்பத்தினரும் ஆலயம் வந்து தரிசனம் செய்து சென்றனர்'' என்கிறார் கோவில் அர்ச்சகர் பரமசிவம் குருசாமி.

பல ஊர் கடந்தும், கடல் கடந்தும் வாழும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதோடு திருமணத்தடை, மகப் பேறின்மை, வாத நோய் போன்றவற்றை நீக்கி, நீதிமன்ற வழக்குகளில் நல்ல தீர்ப்பு தந்து, படிப்பில், பணியில் உயர்வு என சகல நன்மைகளையும் தரும் கீர்த்திமிகு செல்லியம்மன் ஆலயம் கடலூர் மாவட்டம், விருத் தாசலம்- தொழுதூர் நெடுஞ்சாலையில் அமைந் துள்ளது. பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே நான்கு கிலோமீட்டரில் உள்ளது. (இங்கிருந்து ஒரு கிலோமீட்டரில் உள்ளது- தேவாரப்பாடல் பெற்ற தலமா திருவட்டதுறை அறத்துறைநாதர், திரிபுரசுந்தரி ஆலயம்.)

செல்லியம்மனை வணங்கி எல்லா நன்மைகளைப் பெறுவோம்.

தொடர்புக்கு: அலைபேசி: 94424 78268