"துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது தம்பி.
உள்ளதைச் சொல்! நல்லதைச் செய்! தெய்வம் இருப்பதை நம்பி'
என்பது கவிஞரின் வரி.
நல்ல குறிக்கோளுடன் லட்சியத்தை நோக்கிப் பயணிப்பதுதான் வாழ்க்கை. அந்தப் பயணத்தின்போது வரும் தடைகளையெல்லாம் இறையருளால் தகர்த்தெறிந்து எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்று சகாப்தம் படைப்பவர்கள்தான் சரித்திரத்தில் சிரஞ்சீவிகளாய் வாழ்கின்றனர்.
பலர் சிறுதடைகள் வந்தாலும் பலமிழந்து போய், "இப்படி ஆகிவிட்டதே' என்று புலம்பித் தீர்ப்பார்கள். ஆனால்...
ஆங்கிலேயரின் அடக்குமுறை ஒருபக்கம், வறுமை ஒருபக்கம் வாட்டி வதைத்தபோதிலும், அதற்கெல்லாம் சோர்ந்துவிடாமல் தான் வாழ்ந்த 39 வயதிற்குள்ளேயே வரலாறு படைத்தவர்தான் மகாகவி பாரதியார்.
ஒருவர் தன் நண்பரிடம், ""எனக்கு அதிர்ஷ்டமே இல்லை. சர்க்கரை நோயால் அவதிப்படும் நான் என் ஏழு வயசு மகனை எப்படி வளர்க்கப்போறேனோ தெரியல. உப்பு விக்கப்போனா மழை பெய்யுது. மாவு விக்கப்போனா பெருங்காத்து வீசுது'' என்று புலம்பினார்.
அதற்கு நண்பர், ""அப்படின்னா உப்புமா வித்துப் பாரேன்!'' என்றார். சிரிக்காமல் சற்றே சிந்தித்துப் பார்த்தால், உப்பையும் மாவையும் உப்புமாவாக்கி, ஒழுங் கான முறையில் பாத்திரத்திலோ அட்டைப் பெட்டியிலோ வைத்து விற்பனை செய்தால் எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காதே! நம்மிடமுள்ள குறையையும், நாம் செயல்படும் முறையையும் கூர்ந்து கவனித்துத் திருத்திக்கொள்ளவே தடைகள் நமக்கு சந்தர்ப்பமளிக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாமே.
அடுத்தடுத்து தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந் தாலும் முயற்சியை விடாதவன் வெற்றியடைவது உறுதி என்கிறார் வள்ளுவர்.
ஏற்கெனவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டும், தொழிலில் ஏற்பட்ட சில பிரச்சினைகளாலும் கவலையுடன் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தார் அப்பா.
அவர் மகன் கையில் பாடப்புத்தகங்களை வைத்துக் கொண்டு ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்பு வரிசையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். ""பாடம் படிக்காமல் என்ன எறும்புகளோடு விளையாட்டு?'' என்று கோபமாகக் கேட்டார் அப்பா.
அதற்கு மகன், ""இந்த எறும்பு வரிசைமுன்னே ஒரு சிறு கல்லைப் போட்டேன். அவை கல்லின்மீது ஏறிச்சென்றன. உடனே ஒரு பெரிய செங்கல்லை அதன் பாதையில் வைத்தேன். விறுவிறுவென்று கல்லைச்சுற்றிச் சென்று விட்டன. பிறகு ஒரு பெரிய காகிதத்தைப் போட்டேன்.
அதன்கீழே இருந்த சிறு இடை வெளிவழியாக அவை தம் பாதையில் முன்னேறின. எப்படி அப்பா? எறும்பு எங்கும் நிற்காமல் எந்தத் தடைக்கும் அஞ்சாமல் சென்றுகொண்டே இருக்கின்றன?'' என்று கேட்டான்.
பாடம் படிக்காமல் விளையாடிய மகனின் கேள்வி அப்பாவுக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்பித்த

பாடம் படிக்காமல் விளையாடிய மகனின் கேள்வி அப்பாவுக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்பித்துவிட்டது. தன் வழியில் எந்தத் தடை ஏற்பட்டாலும் அந்தத் தடை விலகட்டும் என்று எறும்பு ஒருபோதும் காத்திருப்பதில்லை. எந்த வகையிலேனும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருப்பதுபோல நாமும் தடைகளை எப்படியாவது கடந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். தடைகள் விலகட்டுமென்று காலவிரயம் செய்வதோ, கவலைப்பட்டுக் கலங்குவதோ கூடாது என்பதை அப்பா புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கினார்.
பெரியவர்கள் நம்மை "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!' என வாழ்த்தி அருள்வதைப் பார்த்திருக்கிறோம்.
நோயின்மை, கல்வி, தனம், தானியம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், வெற்றி, அதிர்ஷ்டம், நுகர்ச்சி என்பவையே அந்தப் பதினாறு பேறுகள். இந்தப் பதினாறு பேறுகளில் முதன்மையானது நோயின்மை. தேகசுகம் சிறப்புற அமைந்தால்தானே மற்ற பதினைந்து பேறுகளையும் ஒருவன் அனுபவிக்கமுடியும்?
ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி, "நலமா?... சௌக்கியமா?' என்பது தானே! கடிதம் எழுதும்போதும் முதன்மை வாசகம் "நலம்; நலமறிய அவா!' என்பதுதான். அதற்கு ஆதாரமாக விளங்குகின்ற ஆரோக்கியத்தை விருத்தி செய்கின்றதொரு திருத்தலம்தான் வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: வெண்ணிக் கரும்பேஸ்வரர்.
இறைவி: சௌந்தரநாயகி.
புராணப்பெயர்: வெண்ணிப்பரந்தலை, திருவெண்ணியூர்.
ஊர்: கோவில்வெண்ணி.
தலவிருட்சம்: நந்தியாவர்த்தம்.
தீர்த்தம்: சூரிய, சந்திர தீர்த்தங்கள்.
ஏழு புனித நதிகளில் கங்கைக்கு இணையான நதி காவேரி. காவேரியின் வடகரையிலும், தென்கரையிலும் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 190. அதில் காவேரி தென்கரையில் அமைந்துள்ள 102-ஆவது தலம்தான் வெண்ணிக் கரும்பேஸ்வரர் ஆலயம். அப்பர், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலம் சுமார் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமையுடன் நோய் தீர்க்கும் ஆலயமாகத் திகழ்கிறது.
"காற்றினைக் கனலைக் கதிர்மாமணி
நீற்றினை நினைப்பார் வினைநீக்கிடும்
கூற்றினை யுதைத்திட்ட குணமுடை
வீற்றினைநெரு நற்கண்ட வெண்ணியே!'
-அப்பர்
கி.பி. முதலாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் கரிகாற் பெருவளத்தான், 16 வயது இளைஞனாக இருந்தபோது அரியணை ஏறினான்.
அவன் சேர, பாண்டிய மன்னர்களோடு 11 வேளிர்குல சிற்றரசர்களையும் வென்று வெற்றிவாகை சூடிய இடமிது. "வெண்ணிப்பறந்தலை' என்று இலக்கியங்களில் கூறப்பட்டதே இன்றைய "கோவில் வெண்ணி!'
சோழர் வம்ச மன்னன் முசுகுந்த சக்ரவர்த்தியின் படையினர் போர்க்காலத்தில் கூடாரங்களை அமைக்க பூமியைத் தோண்டியபோது, ஓரிடத்தில் உரத்த ஓசையுடன் ரத்தம் போன்ற சிவந்த திரவம் வெளிப்பட்டு ஆறுபோல் பெருக்கெடுத்தது. இதைப் பார்த்தவர்கள் பணியை நிறுத்திவிட்டு மன்னனிடம் கூற விரைந்தார்கள். அன்றிரவு அரசனின் கனவில் சுவாமி தோன்றி, அந்த இடத்தில் தாம் இருப்பதாகவும் தமக்கு கோவில் அமைக்குமாறும் கட்டளையிட்டார். மன்னனும் இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு மறுநாளே கோவில்வெண்ணி புறப்பட்டான்.
முசுகுந்த சக்ரவர்த்தி முன்ஜென்மத்தில் குரங்காகப் பிறந்தவன். அப்போது ஒரு சிங்கத்திற்கு அஞ்சி வில்வமரத்தின்மீது ஏறி அமர்ந்த அந்தக் குரங்கு தூக்கம் வராமலிருக்க அம்மரத்தின் இலைகளைப் பறித்துப் போட்டுக்கொண்டே இருந்தது. திடீரென்று அக்குரங்கின்முன் சிவபெருமான் தோன்றி, "உன் பூஜை ஏற்றுக்கொள்ளப்பட்டது. உனக்கு என்ன வரம்வேண்டுமோ கேள்!' என்றார். அதிர்ச்சியடைந்த குரங்கு, "நான் எந்த பூஜையும் செய்யவில்லையே!' என்று பதிலளித்தது. அதற்கு சிவபெருமான், "இன்று சிவராத்திரி. நீ விடியவிடிய உறங் காமல் வில்வங்களைப் பறித்து கீழே அமர்ந் திருக்கும் எனக்கு அர்ச்சனை செய்தாய். எனவே உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்' என்றார். ஓரிரு நிமிடத்தில் நடந்ததை உணர்ந்த குரங்கு மூன்று வரங்களைக் கேட்டது.
முதலாவதாக, தான் மானிடனாகப் பிறக்க வாய்ப்புக் கிடைத்தால் சிவத்தொண்டு புரியும் பக்தனாக வாழவேண்டு மென்றும், இரண்டாவதாக குரங்கினம் அழியக்கூடாது என்றும், மூன்றாவதாக தான் மானிடனாகப் பிறந் தாலும் முகம் மட்டும் குரங்கின் அம்சமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டது. அப்படியே வரமளித்தார் சிவபெருமான். அந்த வரத்தினைப் பெற்றவன்தான் முசுகுந்த சக்ரவர்த்தி. அவனு டைய சிவப்பணியால் சுமார் 2000 ஆண்டு களுக்குமுன்பு கட்டப்பட்டதே இவ்வாலயம்.
முற்காலத்தில் இத்தலம் கரும்புக்காடாக இருந்தது. அப்போது இரு முனிவர்கள் தல யாத்திரை செய்து இவ்வழியாக வந்தனர். அப்போது ஓரிடத்தில் கரும்புப் புதருக்கிடையில் இறைவன் திருமேனி இருப்பதைக் கண்டு பூஜை செய்தனர். "இவ்விறைவனின் தலவிருட்சம் கரும்பு. எனவே இவருக்கு கரும்பேஸ்வரர் என்று பெயர் சூட்டுவோம்' என்றார் ஒரு முனிவர். மற்றொரு முனிவர் "நந்தியாவட்டம்' என்றார். இரு முனிவருக்குள்ளும் கருத்து முற்றி வாதம் பெரிதாகிப்போனது. அப்போது அங்கு வந்த அரசர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
அச்சமயம் பல சிவத்தலங்களை தரிசனம் செய்த முனிவர் ஒருவர், தீராத சர்க்கரை நோயுடன் இத்தலத்தின் முன்னுள்ள பொய்கையை வந்தடைந்தார். இருபுறங் களிலும் சூரிய, சந்திர தீர்த்தம் என்ற இரு பொய்கைகளைப் பார்த்தார்.
சூரிய தீர்த்தத்தில் முனிவர் மூழ்கி தன் பிணி போகவேண்டுமென்று பிரார்த்திக்க, அவர் விரும்பியவாறு பிணி நீங்கியது. பிணியைத் தீர்த்த பெருமானை தரிசிக்க வந்தார். அப்போது அரசர் முனிவரை அழைத்து, அங்கு நடந்த சர்ச்சைகளைக்கூறி, இருவருக்கும் பொதுவான பெயரை வழங்குமாறு கூறினார். சிறிதும் யோசிக்காத முனிவர் "வெண்ணிக் கரும்பேஸ்வரர் என்று வைக்கலாம்' என கூறினார். அனைவரும் மகிழும்படியாக பெயர் அமைந்தது.
அப்போது இறைவன் அசரீரியாக, "எனது பெயரில் கரும்பும், தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்' என்றருளினார். அன்றுமுதல் இறைவன் "கரும்பேஸ்வரர்' ஆனார்.
"வெண்ணி' என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் எனும் மலர்ச்செடியாகும். இதுதான் இத்தலத்தின் தலவிருட்சம். சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களுள் மிக முக்கியமானது இம்மலர். ஊரின் பெயரும் மலரின் பெயரிலேயே வெண்ணி என்றமைந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது தாவரங்களுக்கு தமிழர்கள் கொடுத்த மதிப்பு தனித்துவம் வாய்ந்தது என தெரியவரும்.
காமிய ஆகம விதிப்படி அனுதினமும் நான்குகால பூஜைகள் நடக்கின்ற இவ்வாலயம் "தேவகோட்டை செட்டியார்' குடும்பத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு, சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
சிறப்பம்சங்கள்
* இத்தல இறைவனுக்கு திரியம்ப கேஸ்வரர், ரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர் என்ற திருநாமங்கள் இருந்தாலும் "கரும்பேஸ்வரர்' என்றே மக்கள் மனதில் பதிவாகியுள்ளது.
* இறைவனின் திருமேனி-
அதாவது பாணம் கரும்புக்கட்டுபோல காட்சியளிப்பது சிறப்பு. இவர் சுயம்பு மூர்த்தி.
* சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும் புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானூற்றுப் பாடல் கரிகாற்சோழனின் வெண்ணிப்போரைக் கூறுகிறது.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச் சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் சமஅளவில் கலந்து இத்தல இறைவனின் திருவடிகளில் வைத்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, பின் அதை எடுத்து பிராகாரத்தை வலம்வருகையில் ஆங்காங்கே எறும்புகளுக்கு உணவாக இடவேண்டும். எறும்புகள் அதை உண்டுவிட்டு காணாமல் போவதுபோல், பிரார்த்தனையுடையோரின் சர்க்கரை நோயும் காணாமல் போய்விடும். இது கண்கூடான உண்மை.
* பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து 18, 24, 27, 48 அல்லது அவரவர் வயதிற்கேற்ப ஆலயத்தை வலம் வந்து வழிபடுவது நடை முறையில் தற்பொழுது உள்ளது.
* பங்குனி 1, 2, 3, 4-ஆம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின்மீது படுவது தெய்வீக உணர்வை வெளிப்படுத்துகிறது.
* எதிரி பயம் இல்லாதிருக்க இவ்வூரிலுள்ள பிடாரியம்மனை கரிகாற்சோழன் வழிபட்டு வந்ததாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
* சர்க்கரை நோய் எனும் இனிப்புப்பிணி ஆதிகாலம் முதலே ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் இருந்துவந்து, இங்கு வந்து நிவர்த்தி பெற்றதாகவும், நான்கு யுகங்களிலும் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதாகவும் சோழர் கால கல்வெட்டுக்கள்- குறிப்பாக ராஜராஜன், குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
* பெண்களுக்கு முதல் பிரசவம் (தலைப்பிரசவம்) சுகப்பிரசவமாக அமைய, வளைகாப்பின்போது அம்பாளுக்கு 16 வளையல்கள் எடுத்து வைத்து, அதைக் கொண்டுவந்து அம்பாள் சந்நிதியில் கட்டிப் பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக சுகப்பிரசவம் உண்டாகும்.
* சுக்கிர தோஷமுள்ளவர்கள் லிங்கோத் பவர் சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறு நல்லெண்ணெய் தீபம் ஏற்றியபின், மூலவர் கரும்பேஸ்வரர்க்கு வில்வம் மற்றும் வெண்ணிறப் பூக்களால் மாலையிட்டு, நவகிரகத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண் மொச்சை, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட சுக்கிரதோஷம் விலகி சுக்கிர பலம் கூடும்.
* வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள்; பரணி, பூரம், பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்; வெள்ளிக்கிழமை ருதுவானவர்கள்; தற்போது சுக்கிர தசாபுக்தி நடப்பவர்கள் மேற்சொன்ன பரிகாரத்தைச் செய்தால் சுக்கிரபலத்தைக் கூட்டி சுகமுடன் வாழ்வர்.
அமைப்பு
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தில் அனைத்து பரிவார மூர்த்திகளும் சிறப்புடன் அருள்கின்றனர்.
"வெண்ணிறக் கரும்பே' என்று சுந்தரர் தன்னுடைய க்ஷேத்திரக்கோவையில் போற்றிப் பாடிய தலமாம்- "வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்' என்று திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலமாம்- "இலையினால் கொன்றை சூடிய ஈசனார்' என்று திருக்குறுந்தொகையில் பாடப்பட்டதலமாம்- "அட, அவருக்கென்ன சுகவாசி' என்று மற்றவர்கள் போற்றும் அளவுக்கு சுக்கிர தோஷத்தையகற்றி சுக்கிரபலத்தைத் தரவல்லதொரு திருத் தலமாம்- பெண்களுக்கு மறுஜென்மம் போன்ற பிரசவத்தை சுகப்பிரசவமாக்குகின்ற அழகிய சௌந்தரநாயகி அருள்கின்ற தலமான வெண்ணியில், சர்க்கரை நோய் தீர்த்து எறும்புபோல் சுறுசுறுப்புடன் செயல்படவைக்கும் பிறைசூடனாம் கரும்பேஸ்வரரை கனிவுடன் வழிபடுவோம்! இகபர சுகங்களைப் பெறுவோம்!
காலை 8.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: பிரபாகர சிவாச்சார்யார், அலைபேசி: 99768 13313.
வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக் கோவில், நீடாமங்கலம் தாலுகா, கோவில்வெண்ணி அஞ்சல், திருவாரூர் மாவட்டம்-614 403.
ராஜாகுருக்கள், அலைபேசி: 96267 69424.
அமைவிடம்: திருவாருர் மாவட்டம், நீடாமங்கலத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தெலைவிலும், தஞ்சாவூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கோவில்வெண்ணி திருத்தலம். பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.
படங்கள்: போட்டோ கருணா