யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு ஜெயந்தி விழா 01-12-2018

திருவண்ணாமலை என்றாலே யாவருக்கும் கார்த்திகை தீபம் நினைவுக்கு வரும். அங்குசென்று தரிசிக்க இயலாதவர்கள் தற்காலத்தில் தொலைக்காட்சியில் காண்கிறோம். தொலைக்காட்சி இல்லாத காலத்தில் திருவண்ணாமலை பக்தர்கள் விளக்கேற்றி, அதனருகே அருணாசல படம் வைத்து, "அருணாசல' நாமம் கூறி வலம்வருவர். "அருணாசல', "நம:சிவாய' இரண்டுமே சிவபஞ்சாட்சரங்கள். அருணாசல பஞ்சாட்சரம் ஒருகோடி நமசிவாய பஞ்சாட் சரத்திற்குச் சமம் என புராணம் கூறும்.

திருவாரூரில் பிறக்க முக்தி; காசியில் இறக்க முக்தி; சிதம்பரத்தை தரிசிக்க முக்தி; அருணாசலத்தை நினைக்க முக்தி. நினைப் பதற்கு யாவருக்கும், எங்கும், எப்போதும் இயலுமே. சுலபமே.

"அருணாசல' என்ற பெயர் யாரோ சொல்லக் கேட்க, 16 வயது சிறுவன் வெங்கடராமன் மதுரையைவிட்டுத் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியாகி, 70 வயது வரை திருவண்ணாமலையைவிட்டு எங்கும் செல்லவில்லையே. சேஷாத்ரி சுவாமிகள், குகை நமச்சிவாயர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள், சோணாசலதேவர், சித்தயோகி பாணிபக்தி சுவாமி, ஞானப் ரகாச சுவாமிகள், ஞானதேசிக சுவாமிகள், அம்மணியம்மை, ராதாபாய் அம்மையார் போன்ற மஹனீயர்களை அருணாசலம் காந்தம்போல் ஈர்த்தது. இன்றும் ஈர்க்கிறது.

Advertisment

yogi

சீரடி சாய்பாô சிவ அவதாரம்- ராம அவதாரம் என்பர். "அல்லா மாலிக்' என்பார். மசூதியில் உறங்குவார். அவரது 100-ஆவது வருட சமாதி தினம் 19-10-2018 விஜய தசமியன்று கொண்டாடப்பட்டது. அவரை கபீர் அவதாரம் என்றும் கூறுவர்.

கங்கை நதிக்கரையில் பிறந்து கடைசியில் அருணாசலத்தில் லயித்த யோகி ராம்சுரத்குமாரை கபீர் அவதாரம் என்றார் காஞ்சி மகாபெரியவர். யோகி ராம்சுரத்குமார் பிறந்தது 1-12-1918; ஆக அவரது நூற்றாண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

அவரைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

உத்தரப் பிரதேசத்தில் பாலியா மாவட்டத்தில், நர்தாரா கிராமத்தில் ஸ்ரீராம்தத் குன்வர்- ஸ்ரீமதி குஸும் தேவிக்கு சிவனருளால் உதித்தவர் ராம்சுரத் குன்வர். கங்கைக்கரையில் சாதுக்களிடம் பழகி ஆசிபெற்றவர். கபாடியாபாபா (முன்பு உயர்மன்ற நீதிபதி) என்பவரால் கவரப்பட்டு தெய்வீக, ஆன்மிக போதனைகள் பெற்றவர். தந்தையிடம் ராமாயண, பாகவத, மகாபாரதக் கதைகள் கேட்டு வியந்தார்.

பள்ளியில் அலகாபாத் எவிங் கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் 1941-ல் பெற்று, பீகாரில் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

திருமணத்தில் விருப்பமில்லை. ஒருமுறை நிச்சயதார்த்த சமயம் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். என்றாலும், பெற்றோர் கள் வாக்குக்கு இணங்க 1938-ல் ராமரஞ்சனி என்பவரை மணந்தார். ஒரு மகளும் மூன்று மகன்களும் பிறந்தனர்.

அவர் தனது 12-ஆவது வயதில், வீட்டிலுள்ள கிணற்றில் நீர் எடுத்து கயிறை மேலே வீச, அது ஒரு குருவியின்மீது பட்டு சுருண்டு விழுந்தது. அதற்கு கங்கை நீர் ஊட்டி பிழைக்க வைக்க முயற்சி செய்தும் பயனில்லை. உயிர் பிரிந்துவிட்டது. அதுவும் ஜீவன்தானே. ப்ரம்ம அம்சம்தானே. தான் பிரம்மஹத்தி செய்ததாகவே துன்புற்றார்.

ஒருசமயம் அவரைப் பிடிக்காத பள்ளி நிர்வாகி, இவர் ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் (ஆர்.எஸ்.எஸ்.) என்ற இயக்க முகாமிக்கு 15 நாட்கள் சென்றதால் வேலையைவிட்டு நீக்கினார்.

ஆனாலும் பின்னர் பணியில் சேர்ந்தார்.

1947-ல் கபாடியா பாபாவை சந்திக்க, "குருவருளாலேதான் தெய்வீக நிலையை எய்தமுடியும். எனவே தென்னிந்தியா செல்' என்றாராம்.

1947-ல் வருட விடுமுறையில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் வந்து சேர்ந்தார்.

அரவிந்தர்- அன்னையின் பிரத்யேக தரிசனம் கிட்டவில்லை. ஆயினும் நூலகத்தில் அவர் களின் புத்தகங்கள் வாசித்து மனத்தெளிவும் உறுதியும் பெற்றார். அந்த ஆசிரமமே ஆன்மிக அதிர்வுகள் எழுப்புவதை உணர்ந்தார்.

அங்கு திருவண்ணாமலை ரமண மகரிஷியைப் பற்றிக் கேள்விப்பட்டு, அங்கு சென்று அருணாசல தரிசனம் செய்து, ரமணாசிரமம் வந்து, ரமண மகரிஷியை தரிசித்தார். ரமணர் கண்கள் இவரைப் பார்க்க, அதனால் சொல்லொணா ஆனந்தம், மனசாந்தி பெற்றார். பலமுறை சில நாட்கள், சில மாதங்கள் ஆசிரமத்திலேயே தங்கினார். மனஅமைதி பெற்றார். (அச்சமயம் 1971-ல் அவரை தரிசித்துள்ளேன்.)

கேரள- கான்ஹன்காட் ஸ்வாமி ராமதாஸைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் ஆசிரமத்துக்குச் சென்றார். கையில் பணமில்லை என்பதால் டிக்கெட் இல்லாமலே பயணம். டிக்கெட் பரிசோதகர் ரயிலைவிட்டு இறங்கச் சொன்னால் இறங்குவார். பிச்சை கேட்பார். எவராவது கொடுத்தால் உண்பார். அவரது முதல் தென்னக விஜயத்தில் குறிப்பிடத்தக்க மனமாற்றம், எழுச்சி தோன்றவில்லை. ஆக, பீகாருக்குப் போய்விட்டார். ரிஷிகேஷ், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரி, கேதார் ஆகிய புனிதத் தலங்களை தரிசித்தார். தல தரிசனங் கள் அவ்வப்போது மனசாந்தி தந்தாலும் முழுமனசாந்தி, ஆனந்தம், சமாதிநிலை வாய்க்கவில்லையே என்ற தாக்கம் இருந்தது. 1948-ஆம் வருடம் மீண்டும் அரவிந்தர் ஆசிரமம், ரமணமகரிஷி தரிசனம் செய்து மனஅமைதி பெற்றார். ரமண மகரிஷியையே குருவாக ஏற்க விரும்பினார். ஆனால் ரமண மகரிஷியோ, ""எனக்கு குருவென்று எவருமில்லை. நானும் எவரையும் சீடராக ஏற்பதில்லை. "நான் யார்?' என்று ஆழ்ந்து மனதுக்குள் விசாரம் செய்ய சகஜ சமாதிநிலை எய்தலாமே'' என்றாராம்.

1950-ல் ரமண மகரிஷி, அரவிந்தர் இருவரும் மறைந்ததைக் கண்டு மனம் கலங்கினார். பின்னர் ஊர் சென்றார்.

1952-ல் மீண்டும் சுவாமி ராமதாஸின் ஆனந்தாசிரமம் சென்றார். இச்சமயம் மனைவி, பிள்ளைகளும் இருந்தனர். சுவாமி சச்சிதானந்தரிடம், "ஸ்வாமி ராமதாஸரை எனக்கு தீட்சை தர வேண்டுங்கள்' என்றார். அவர், "நீங்களே அவரை வேண்டலாம்' என்றார்.

அவரும் சுவாமி ராமதாஸைப் பணிந்து தீட்சை கேட்க, "ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்' என்று 24 மணி நேரமும் ஜெபியுங்கள். ராமநாம அருளால் யாதும் சித்திக்கும்' என்றார்.

இரண்டு மாதங்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கி ராமநாமம் ஜெபித்தார். அதற்குமேல் அங்குதங்க அனுமதி இல்லாததால், திருவண்ணாமலை வந்து, ரமணாசிரமத்தில் பல மாதங்கள் தங்கினார். மீண்டும் ஊர் சென்று பள்ளியில் பணிபுரிந்தார். ராமநாம ஜெபம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென்று நினைத்து, கட்டாயமாக மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். சோதனைகள் பல செய்து, "அவர் உடலுக்கு கெடுதல் எதுவுமில்லை. மனம் தான் வேறு எதிலோ ஈடுபடுகிறது. அதற்கு மருத்துவம் கிடையாது. ஆழ்ந்த ஆன்மிகமே வழி' என்று கூறிவிட்டார் மருத்துவர்.

மீண்டும் சுவாமி ராமதாஸர் ஆசிரமம் வந்தார். பல நாட்கள் அங்கு தங்க இயலாது. "ஒரு ஆலமரத்தின்கீழ் மற்றொரு ஆலமரம் வளராது. ராமநாமத்தில் ஆழ்; பிச்சையெடுத்து உண்' என்று ராமதாஸர் போதித்தார்.

அதுமுதல் தன்னைப் "பிச்சைக்காரன்' என்று கூறிக்கொள்வதே அவரது வழக்கமாகிவிட்டது. கையில் விசிறி இருந்ததால் விசிறி சுவாமிகள் என்றும் கூறுவர்.

அவரது மனைவி, குழந்தைகளை அவரது மாமனார் குடும்பத்தினரே கவனித்துக் கொண்டனர். பிள்ளைகளைப் படிக்கவைத்து மணமும் செய்வித்தனர்.

மீண்டும் பல தலங்களை தரிசித்தார். பணமோ, உடையோ, இருக்க இடமோ, உணவோ கிடையாது. கிடைத்த இடத்தில் தூங்குவது, ராமஜெபம், பிச்சையெடுத்துக் கிடைத்த உணவை உண்பது என்று ஆன்மிகத் தேடல்.

1959-ல் ஒரு பெரிய மாற்றம். மீண்டும் திருவண்ணாமலை வந்தார். அதன்பின்பு வேறு தலங்கள், தரிசனம் என்று போகவில்லை. ரமணாசிரமத்திலேயே ஒரு வருடகாலம் தங்கினார்.

நடுநடுவே திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்த சுவாமிகள் ஆசிரமம் சென்று சுவாமிகளுடன் உரையாடுவார். அவரோ, "இதோ, கபீர்தாச புனரவதார ராமநாமப்ரியர் வந்தாரே' என்பாராம். காஞ்சி காமகோடி மகாபெரியவரும், "விசிறி, தேங்காய் முடி ஏந்திய பைத்தியக்காரன் என்று நினைக்காதே. பார்க்க அப்படித்தான். ஆனால் அவர் ஒரு பரமயோகி' என்றாராம்.

அவர் ராமநாமப் பிரியர் ஆயிற்றே என்று, ஒருசமயம் மகாபெரியவர், "கோவிந்தபுரம் போதேந்த்ர சுவாமிகள் அதிஷ்டானம் போய் தரிசனம் செய்யச் சொல். ஆழ்ந்த ஆன்மிகர்களுக்கு ராமநாம ஜெபம் கேட்கும்' என்று ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். யோகியோ, "எனக்கு காஞ்சி மகாபெரியவாளே போதேந்திரர்தான்' என்று காஞ்சிமடம் வந்து தரிசனம் செய்தாராம்.

திருவண்ணாமலையில் கோவில் குகைகள், மலையடிவாரம், பஸ் நிலையம், ரயில் நிலையம், மரத்தடி என்று தங்குவார். இரவில் கடைவாசல்களில் உறங்குவார். பிச்சை எடுத்தே உண்பார். பக்தர்கள் அவரை தரிசித்து பலன்கள் பெற, பக்தர்கள் முயற்சித்து சந்நிதி தெருவில் 1976-ல் ஒரு வீடு வாங்கினர்.

அங்கேயும் அவருக்கு மனமில்லை.

ஜெ. கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடி யிருக்கிறார்.

"அரவிந்தர், ஜெ. கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தர் போன்று உங்கள் நிலையை- ஆனமிகத்தைப் பற்றி எழுதுங்களேன். ரமணர்கூட துதிகள் எழுதியுள்ளார்' என்று பக்தர்கள் வேண்டினர். அவரோ, "எழுதும் வேலையை "அப்பா' எனக்குத் தரவில்லை. பக்தர்கள் கஷ்டம் உணர்ந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவதே என் பணி. முடிந்ததைச் செய்வேன்' என்றார்.

ட்ரூமன் கேய்லர் வாட்லங்டன் என்ற வேறு நாட்டவரே 1971-ல் "யோகி ராம்சுரத்குமார்- தெய்வக்குழந்தை' என்று யோகியைப் பற்றி முதலில் நூல் வெளியிட்டார். அவரிடம் இவர், இந்த பிச்சைக்காரன் 1952-ல் ஸ்வாமிதாஸரிடம் இறந்துவிட்டான். இருப்பது "அப்பாவே'. அவர் ஆணைப்படியே நான் நடக்கிறேன். எனக் கென்று சுயமாக எதுவுமில்லை'' என்றார்.

அவரைத் தொடர்ந்து ரமணாசிரமம் வரும் பல வெளிநாட்டினர் இவரையும் வந்து தரிசித்துள்ளனர்; வியந்துள்ளனர். சிருங்கேரி ஆச்சார்யார், அம்ருதானந்தமயி போன்றவர்களும், "அவர் மகாயோகி ஆயிற்றே. பிச்சைக்காரன் போல்தான் தெரிவார். அவர் மகிமை எவருக்குப் புரியும்' என்றனர்.

ஒரு அமெரிக்கர், "அமெரிக்கா வாருங்க ளேன்; அழைத்துச்செல்வேன்' என்றார்.

"அண்ணாமலையான் என்னை நகரவிட மாட்டான்' என்றார்.

சந்நியாசம் என்று வாங்கவில்லை. குடும்பத்தை விடுவதே சந்நியாசம். காவியுடை அணிவதனால் அல்லவே! ஒருசமயம் அவர் மனைவியே சந்நிதி தெரு வீடு வந்து, "தங்களுக்கு உணவு தயாரித்துத் தரும் பாக்கியம் வேண்டும்' என்றார். "அவ்வெண்ணம் இருந்தால் இங்கு வரவேண்டாம். உலகமக்களே எனது குடும்பம்' என்றாராம். என்ன விவேகம்.

1953 முதல் தொடர்ந்து புகைபிடிக்கலா னார். அதனாலேயே காசநோயும் வந்தது. ஆயினும் வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம், அன்பு மொழிகள் கூறுவதை உடல் இடம்கொடுக்காத போதிலும் நிறுத்தவில்லை. "அப்பாவின் பணியை நான் செய்தே தீரவேண்டும்' என்பார். 1976-லிருந்து 1993 வரை சந்நிதி தெரு வீடு. 1993-2000 வரை ஆசிரமம் அருகே சுதாமா என்ற வீட்டில் தங்கினார். பக்தர்கள் அதிகமாக, இடம் வாங்கி ஆசிரமம் கட்ட அன்பர்கள் விரும்பினர்.

அவரோ மசியவில்லை. கடைசியில் 1996-ல் ரமணாசிரமம் அருகிலேயே ஒரு இடம் தேர்ந்தெடுத்து அவர் அனுமதி பெற்றுவிட்ட னர். ரமணர் முன்பே கூறினாராம். "நமது ஆசிரமம் அருகே ஒரு மகாயோகியின் ஆசிரமம் வரும்' என்று! தீர்க்கதரிசிகளாயிற்றே!

ஆசிரமம் நடுவே மூன்றுக்கு மூன்றடி அகல ஆழமுள்ள குழி தோண்டி, ராமநாமங்களை நிரப்பி அதன்மேல் அவரது பஞ்சலோக விக்ரகத்தை அமைத்துள்ளனர். அதனையே வலம்வந்து பக்தர்கள் நாமஜெபம் செய்கின்றனர்.

1998-லிருந்தே அவர் உடல்நிலை சரிந்தது. புற்றுநோய் என்பது தெரியவந்தது. அமோட், பர்ணசாலை என்று கூறப்படும் இடத்தில் வேப்பமரத்தின்கீழே அமர்ந்து ஆசிபுரிவார். "மற்றவர்கள் துயர் தீர்க்கவே இவ்வுடல் நலிந்துள்ளது. யாதும் நல்லதே' என்பாராம்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு தொண்டையில் புற்று நோய். ரமணமகரிஷிக்கு கையில் புற்று நோய். இவருக்கு வயிற்றில். இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் தேறினார்.

மேலும் சில மாதங்கள் மருத்துவம் செய்ய விரும்பினர். அவர் விரும்பவில்லை. ஆசிரமம் வந்தார். 20-2-2001-ல் அவரது ஆவி விடியற்காலை பிரிந்தது. ஆசிரமத்திலிலேயே சமாதி வைத்து, லிங்கம், கோவில் அமைத்தனர்.

சாய்பாபா சமாதி போன்று இவரது சமாதியும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறது.

அருணாசலம் போகும் பக்தர்கள், யோகியை அறியாதவர்கள் ரமணாசிரமம் அருகே இருக்கும் இவரது ஆசிரமத்தையும் தரிசித்து அருள்பெறலாமே.

Advertisment