சனாதன தர்மம் என முன்பு அழைக்கப்பட்ட இன்றைய இந்துமதத்தின் ஆணி வேரான வேதங்கள், ஆதிகாலத்தில் இறைவனிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட போது ஒன்றாகவே இருந்தன. அதை நான்கு பகுதிகளாக வேத வியாசர் பிரித்துக் கொடுத்தார். தைத்திரிய ஆரண்யகம் வேதங்களை, "ஸர்வ வேதா யத்ரைகம் பவந்தி' எனப் போற்றுகிறது. அதாவது இறைவனால் படைக்கப்பட்ட வேதமும் இறைவனும் ஒன்றே என்கிறது.
சூரிய பகவானிடமே நேரடியாக வேதத்தைக் கற்ற பெருமை யாக்ஞவல்கியர் (யாஜ்ஞவல்கியர்) என்ற மகரிஷிக்கு மட்டுமே உண்டு. இவரை "யோகீஸ்வரர்' என்றும் அழைப்பர். இவரால் வேதத்திற்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றுகூட சொல்லலாம்.
இன்றைய குஜராத் மாநிலத்தில் இருக்கும் வேத் நகருக்கு முற்காலத்தில் சமத்காரபுரம் என்று பெயர். இங்கு வசித்த பிரம்மரதன்- சுனந்தா தம்பதியருக்கு மகனாக- சூரிய பகவானின் அம்சமாக யாக்ஞவல்கியர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி, சதய நட்சத்திரம் அன்று நல்ல நேரத்தில் பிறந்தார். அன்றைய துவாதசியை "யோகீஸ்வர துவாதசி' எனச் சொல்வதுண்டு. இறையம்சத்துடன் பிறந்த அந்த குழந்தைக்கு வைசம் பாயன மகரிஷியின் (சுனந்தாவின் சகோதரர்) குருகுலத்தில் வேதசாஸ்திரங்களைக் கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. பகவான் வேதவியாசரின் நேரடி சீடர்தான் கைவசம்பாயன மகரிஷி. யஜுர் வேதம் மொத்தம் 101 சாகைகளைக் (பிரிவு) கொண்டது. இதில் 59 சாகைகளை வேத வியாசர் மூலமும், 27 சாகைகளை தன் தாய்மாமனும்- குருவுமான வைசம்பாயன மகரிஷி மூலமும் யாக்ஞவல்கியர் கற்றார். 101 சாகைகளில் அன்றைய காலகட்டத்தில் 86 சாகைகள் மட்டுமே குருவின்மூலம் நேரடியாக சொல்லிக்கொடுக்கப்பட்டது.
யாக்ஞவல்கியர் மிகுந்த அறிவுக்கூர்மையுடனும், ஆர்வத்துடனும் வேத மந்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். ஆசிரமத்தில் உடன்பயின்ற மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தே காணப்பட்டார். எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படும் திறமை இயற்கையாகவே அவரிடம் குடிகொண்டிருந்தது. தர்மசாஸ்திரத்தில் அவருக்கு அபார நம்பிக்கை இருந்ததால், அவற்றை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் அவருக்கும் குருவான வைசம் பாயன மகரிஷிக்குமிடையே சிலசமயம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
மேருமலையில் நடைபெற்ற ரிஷிகளின் வேதசாஸ்திர மாநாட்டில் வைசம்பாயன மகரிஷி கலந்துகொள்ளாததால், அவருக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதில் குரு- சீடருக்கிடையே மனவருத்தம் ஏற்பட்டது. இளம்வயதிலேயே ஞானியாக விளங்கிய யாக்ஞவல்கியரின் வளர்ச்சியைக்கண்டு வைசம்பாயன மகரிஷிக்கு சற்று தாழ்வு மனப்பான்மை உண்டானது.
வைசம்பாயன மகரிஷியின் ஆசிரமம் இருந்த பகுதியை ஆண்ட சுப்ரியன் என்கிற சிற்றரசன் தவறான பாதையில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்ததால், அரசனுக்கு தீராத பால்வினை நோய் ஏற்பட்டது. தனது குலகுருவான வைசம்பாயன மகரிஷியுடைய ஆலோசனையின் பேரில் பரிகார ஹோமங் கள், பூஜைகள் செய்து வந்தான். இதை நடத்திவைக்க ஆசிரமத்திலிருந்து தினமும் ஒரு பிரம்மச்சாரி மாணவன் அரண்மனைக்குச் செல்வான். நாட்கள் செல்லச்செல்ல நோயின் தன்மை அதிகமாயிற்றே தவிர குணமடையவில்லை. இதனால் அரசன் பெரிதும் துன்புற்றான்.
ஒருநாள் மேற்படி பரிகாரப் பூஜைகளை நடத்த குரு வைசம்பாயன மகரிஷி யாக்ஞவல்கியரை அரண்மனைக்குச் செல்லப் பணித்தார். இதை யாக்ஞவல்கியர் ஏற்கவில்லை. "அரசன் தர்மநெறி தவறி தவறான பாதைக்குச் சென்றதால்தான் அவனுக்கு நோய் ஏற்பட்டது. இது ஒருவகையில் அரசனுக்கு இறைவன் கொடுத்த தண்டனை. இதைத் தவிர்க்க நாமே பரிகாரப் பூஜைகளை செய்யக்கூடாது' என யாக்ஞவல்கியர் வாதாடினார். கடைசியில் குருவின் ஆணையை மீறமுடியாமல் அரண்மனைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.
நோய் குணமடையவில்லையே என்கிற விரக்தியிலிருந்த அரசன் அரண்மனைக்குச் சென்ற யாக்ஞவல்கியரை மரியாதையாக வரவேற்கவுமில்லை; மதிக்கவுமில்லை. ஏற்கெனவே வேண்டா வெறுப்புடன் சென்ற யாக்ஞவல்கியருக்கு இந்தச் செயல் சற்று மனவருத்தத்தை அளித்தாலும், தன் குருவுக்காகப் பொறுத்துக்கொண்டார். ஹோமம், பரிகாரப் பூஜைகளைச் செவ்வனே நடத்திவிட்டு, கடைசியில் ஹோமப் பிரசாதம், அட்சதை, கலசப் புனிதநீர் போன்றவற்றை அரசனுக்குக் கொடுக்கச் சென்றபோது, அரசன் அலட்சியத்துடன் பிரசாத்தைப் பெற வந்தான். அதைக்கண்டு சினமுற்ற யாக்ஞவல்கியர், சட்டென புனித நீரை அங்கிருந்த தூணின்மேல் ஊற்றிவிட்டு, அட்சதையைத் தூவிவிட்டு அரண் மனையைவிட்டு வெளியேறினார். எந்த தூணின்மீது அட்சதையைப் போட்டாரோ அந்த அரிசியானது உடனே முளைத்து வளரத் தொடங்கியது. இந்த அதிசயக் காட்சியைக்கண்டு அரசன் உட்பட அனைவரும் வியந்து நின்றனர். தினமும் வந்து செல்லும் மற்ற பிரம்மச்சாரி மாணவர்கள்போல இன்று வந்த யாக்ஞவல்கியர் இல்லை; இவர் ஒரு அவதார புருஷர் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
வந்தவரை மதிக்காமல் அறியாமையால் அவமானப்படுத்தியதை நினைத்து அரசன் வருந்தினான். உடனே தன்னுடைய குடும்பத்தினருடன் வைசம்பாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றான். தன்னை மன்னித்து, மீண்டும் ஒருமுறை யாக்ஞவல்கியரே ஹோமம், பூஜைகளை நடத்தித்தரவேண்டும் என வேண்டினான்.
அரசன்மீது வைத்திருந்த அன்பினால் வைசம்பாயன மகரிஷி அதற்கு ஒப்புக்கொண்டாலும், யாக்ஞவல்கியர் ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் தானே நடத்துவது சாஸ்திர நெறிக்கு எதிரானது என மறுத்தார். இதனால் கோபமடைந்த வைசம்பாயன மகரிஷி, ""யாக்ஞவல்கியா, குருவின் பேச்சை நீ கேட்கவில்லை. என்மூலம் கற்ற அனைத்து வேத மந்திரங்களையும் திரும்பத் தந்துவிட்டு ஆசிரமத்தைவிட்டு வெளியேறு'' என்றார். பின்னர் அரசனை சமாதானப்படுத்தி வழியனுப்பிவைத்தார். குருவின் ஆணையால் மனம் கலங்கிய யாக்ஞவல்கியர், பின்னர் தான் கற்ற யஜுர் வேதத்தை தன்னுடைய யோக சக்தியால் வாய்வழியாக தரையில் துப்பினார்.
அவர் கக்கிய இடத்தில் தீப்பிழப்பின் அனலும், வெப்பமும் அதிகரித்தது. இதைக்கண்டு வைசம்பாயன மகரிஷி, கோபத்தினால் நல்ல சீடரை இழந்துவிட்டோமே என மனம்வருந்தினார். வைசம்பாயனர் மற்ற சீடர்களை அழைத்து, யாக்ஞவல்கியர் கக்கிய வேத மந்திரங்களை உண்ணுமாறு கட்டளையிட்டார். ஆனால் சீடர்கள் தயங்கினர். உடனே வைசம்பாயனர் பறவைகளாக மாறி உண்ணுமாறு கூறி, கமண்டலத்திலிருந்த நீரை சீடர்கள்மீது தெளித்தார். அவர்கள் உடனே தித்திரிப் பறவைகளாக மாறி உண்ணத் தொடங்கினார்கள். தித்திரி என்றால் தீக்கோழி என்னும் பறவை இனமாகும். தித்திரி என்பது காலப்போக்கில் மருவி, இந்த வேதப்பகுதிக்கு "தைத்ரீயம்' எனப் பெயர் வந்தது. மைத்திரயணி, வைசம்பாயனிகம் முதலான கிளைகள் யஜுர் வேதத்திற்கு உண்டு.
குரு வைசம்பாயன மகரிஷிமூலம் கற்ற 27 சாகைகள் கொண்ட யஜுர்வேத மந்திரங்கள் தன்னைவிட்டுச் சென்றுவிட்டதை நினைத்து யாக்ஞவல்கியர் பெரிதும் வருந்தினார்.
பின்னர் சூரியபகவானை நோக்கி நீண்டநாட்கள் கடுந்தவம் புரிந்தார். அதன் பயனாக சூரியபகவான் அவர்முன் தோன்றினார். "யஜுர் வேதத்தின் மீதி 15 சாகைகளை உபதேசிக்க வேண்டும்' என யாக்ஞவல்கியர் சூரிய பகவானிடம் வேண்டினார். அதன்படி உலகில் யாரும் அதுவரை அறிந்திராத 15 சாகைகளை சூரிய பகவான் யாக்ஞவல்கியருக்கு உபதேசித்தார்.
சூரிய பகவான் ஒரே இடத்தில் நீண்ட நேரம் தங்கமுடியாத காரணத்தால், அவர் சஞ்சரித்துச் செல்லும் பாதையில் குதிரைமேல் அமர்ந்து பயணித்தபடி கற்றார்.
இந்த சாகைகளுக்கு "சுக்லயஜுர் வேதம்' (வாஜஸனேய ஸம்ஹிதை) எனப் பெயர். மற்ற 86 சாகைகள் கொண்ட யஜுர்வேத மந்திரங்களுக்கு "கிருஷ்ண யஜுர் வேதம்' எனப்பெயர்.
நீண்டகாலம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் மட்டுமே இருந்த சுக்லயஜுர் வேதம், காயத்ரி தேவியின் அருளால் சூரிய பகவான்மூலம் யாக்ஞவல்கியருக்குக் கிடைக்க, அவர்மூலம் மனிதர்களுக்குக் கிடைத்தது. யஜுர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகச் சொல்லப்படுவது "ஸ்ரீருத்ரம்'. சிவபெருமானுக்கு உகந்த மந்திரம் ஸ்ரீருத்ரமாகும். இது யஜுர் வேதத்தின் தைத்ரீய சம்ஹிதையில் உள்ளது. பொதுவாக யஜுர்வேதம் என்றால் நடைமுறையில் கிருஷ்ண யஜுர் வேதத்தைதான் குறிக்கும். மிக சக்திவாய்ந்த ஸ்ரீருத்ரம் நமகம், சமகம் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
யாக்ஞவல்கியர்மூலம் வந்த சுக்லயஜுர் வேதத்திற்கு உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம், ஜாத்யம், அபிநிஹிதம், ஸர்வானுதாத்தம் என்னும் ஏழு முக்கிய ஸ்வரங்கள் உண்டு. இவற்றில் உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் முக்கியமானவை. பொதுவாக வேத மந்திரங்களுக்கு ஸ்வரம்தான் முக்கியம்.
யாக்ஞவல்கியரின் நற்குணம், அறிவுத்திறமை, வேதத்தில் இருந்த அபாரப்புலமை போன்றவற்றை அறிந்த காத்யாயன முனிவர், தன்னுடைய மகளான காத்யாயனியை யாக்ஞவல்கியருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். காத்யாயனியும் வேத சாஸ்திரத்தில் மிகுந்த புலமை பெற்றிருந்தார். இத்தம்பதியினருக்கு சந்திரகாந்தன், மகாமேகன், விஜயன் ஆகிய மகன்கள் பிறந்தனர். இவர்களும் பிற்காலத்தில் பண்டிதர்களாக விளங்கினர்.
விதேக நாட்டை ஆண்டுவந்த ஜனகர் நீதிநெறி தவறாது ஆன்மிக அரசை நடத்தி வந்தார். இம்மன்னர் மிகப்பெரிய யாகம் ஒன்றைச் செய்தார். இதில் பல பகுதிகளிலிருந்தும் வேத விற்பன்னர்கள், பண்டிதர்கள் கலந்துகொண்டனர். இந்த யாகத்தில் யாக்ஞவல்கியரும் கலந்துகொண்டார். வந்திருந்த பண்டிதர்களில் யார் பிரம்மஞானி என்பதை அறிந்துகொள்ள மன்னர் விரும்பினார். அவர்மூலம் மேலும் பிரம்ம தத்துவங்களைக் கற்க ஆசைப்பட்டார்.
யாகம் நடக்குமிடத்தில் ஆயிரம் பசுக்களைக் கொண்டுவந்து நிறுத்தி, அவற்றின் கொம்புகளில் பத்து பொற்காசுகள் வீதம் கட்டினார். பின்னர் அங்கு கூடியிருந்த வேதபண்டிதர்களை நோக்கி, ""உங்களுள் எவர் சிறந்த பிரம்மஞானியோ (பிரம்மிஷ்டர்) அவர் இப்பசுக்களையெல்லாம் ஓட்டிச்செல்லலாம்'' என அறிவித்தார் மன்னர். வந்த பண்டிதர்கள் மன்னர் முன்னிலையில் நாமே எப்படி பிரம்மஞானி எனச் சொல்வதென்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். எவரும் துணிந்து சபைக்குமுன் வரவில்லை. யாக்ஞவல்கியர் எழுந்து தனது சீடரைப் பார்த்து, ""பசுக்களை ஆசிரமத்திற்கு ஓட்டிச்செல்'' எனக் கூறினார். கூடியிருந்த மற்ற பண்டிதர்களுக்கு வியப்பு மேலிட, ""தாங்கள் மட்டும் பிரம்மஞானி என நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது?'' என வினவினர். உடனே யாக்ஞவல்கியர், ""இங்கு கூடியிருக்கும் மிகச்சிறந்த பண்டிதர்களை வணங்குகிறேன். நான் பெரிய பண்டிதன் என எண்ணி பசுக்களை ஒட்டிச்செல்லவில்லை. எனக்கு பசுக்கள் தேவைப்படுவதால் ஓட்டிச்செல்கிறேன்'' எனக் கூறினார்.
பண்டிதர்களில் சிலர் தங்கள் கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டும் என யாக்ஞவல்கியரை நிர்பந்தித்தனர்.
அதற்கு யாக்ஞவல்கியர் சம்மதிக்க, முதலில் அஸ்வல முனிவர், அவரைத் தொடர்ந்து ஆர்த்தபாக முனிவர், புஜ்ஜயு முனிவர், உஷஸ்த முனிவர், வசக்னு முனிவரின் மகளும் அரசசபையில் முக்கிய பொறுப்பு வகித்தவளுமான கார்கி என்ற பிரம்மவாதி, சாகல்ய முனிவர் என பலரும் வேதாந்தத்திலிருந்து நுட்பமான கேள்விகளாகக் கேட்டனர்.
அனைத்திற்கும் தக்க பதிலைத் தந்ததால் சபையில் யாக்ஞவல்கியரின் மதிப்பு கூடியது. ஜனக மன்னர் யாக்ஞவல்கியரே சிறந்த பிரம்மஞானி என முடிவு செய்து, அவரை வணங்கி கௌரவித்தார். யாக்ஞவல்கியர் அரண்மனையில் பல நாட்கள் தங்கி ஜனக மன்னருக்கு உபதேசங்களைச் செய்தார். யாக்ஞவல்கியருக்கும் மற்ற முனிவர்களுக்குமிடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் "பிருஹதாரண்யக உபநிஷ'த்தில் விவரமாக உள்ளன.
யாக்ஞவல்கியர் உடனிருந்து தத்துவ உபதேசம் பெறவேண்டும் என்பதற்காக, மைத்ரேயி என்னும் பிரம்மவாதினி (இறைவாழ்வில் நாட்டம் உடையவள்), முதல் மனைவியான காத்யாயனியின் அனுமதியுடன் இரண்டாவது மனைவியாக தான் இருக்க வேண்டினாள். அதன்படி மைத்ரேயியை மணந்த யாக்ஞவல்கியர் அவளுக்கு குருவாக இருந்து பல வேதாந்த ஆத்ம தத்துவங்களை உபதேசித்தார்.
அத்திரி, ஆங்கிரசர், வசிஷ்டர், யாக்ஞ வல்கியர், உஷணர், கௌதமர், பிருஹஸ்பதி போன்றவர்கள்தான் இந்து மதத்திற்கான தர்மசாஸ்திரத்தை விளக்கி எழுதியுள்ளனர்.
யாக்ஞவல்கியர் எழுதிய "யாக்ஞவல்கிய ஸ்மிருதி' என்கிற நூலானது இன்றளவும் சிறந்த சட்டநூலாக உள்ளது. யோக சாஸ்திரத்தைப் பற்றியும் நுல் எழுதியுள்ளார்.
போற்றுதலுக்குரிய மகானாக விளங்கிய யாக்ஞவல்கியரை-
வந்தேஹம் மங்காளத்மாநம்
பாஸ்வந்தம் வேதவிக்ரஹம்
யாக்ஞவல்க்யம் முநிச்ரேஷ்டம்
ஜிஷ்ணும் ஹரிஹரப்ரபம்
ஜிதேந்த்ரியம் ஜிதக்ரோதம்
ஸதாத்யாத பராயணம்
ஆநந்த நிலயம் வந்தே
யோகாநந்தம் முநீஸ்வரம்'
என்னும் குருவந்தன சுலோகத்தின்மூலம் வழிபட்டால் நிச்சயம் அவருடைய ஆசி கிட்டும். யோகீஸ்வரரான யாக்ஞவல்கியருக்கு சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தில், ஸ்ரீயாக்ஞவல்கிய சபா சார்பில் தனிக்கோவில் உள்ளது. தொலைபேசி: 044- 22477215
ப்