குடந்தை நாகேஸ்வரர் திருக்கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இங்கு அமைந்துள்ள வேதநாயகி சமேத விஸ்வநாதர் கோவிலில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் கபால விநாயகர். இவர், மற்ற திருத் தலங்களில் எழுந்தருளியுள்ள விநாயகரைவிட சற்று வித்தியாச மானவர்.
இந்த விநாயகர் பிரளய காலத்தின்போது மூன்று அவதாரம் எடுத்ததாக தலபுராணம் கூறுகிறது. அந்த அவதார கோலத்திலேயே இங்கு அருள்புரிகிறார்.
யானையின் முகத்தில் உள்ளதுபோல் பக்கவாட்டில் கண்கள் அமைந்திராமல், மானிடர்களின் கண்கள்போல் நேர்பார்வையிலுள்ள தோற்றம் கொண்டிருப்பதுடன், கபால மாலையை அணிந்து காட்சிதருவதால் இவரை கபால கணபதி என்று போற்றுவர். கண்கள், நகங்கள், நரம்புகள் அனைத்தும் மனித உடலில் உள்ளதுபோல பிரதிபலிக்கின்றன. அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடுகளாக மாற்றி தன் இடுப்பில் அணிந்து மிருக ரூபமாகவும் காட்சிதருகிறார்.
இதுகுறித்து தலபுராணம் கூறும் தகவல்:
ஒரு காலகட்டத்தில் உலகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது இந்தப் பூவுலகமே தண்ணீரில் மூழ்கி அமிழ்ந்த வேளையில், இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே பிரகாசமாகத் தெரிந்தது. இதைக்கண்ட பிரம்மா, "இந்த இடம் மட்டும் ஏன் பிரளயத்தில் மூழ்காமல் இருக்கிறது?' என்று யோசித்தார். உடனே அவர் கயிலை சென்று சிவபெருமானிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார்.
சிவபெருமானோ, ""நீ மகாவிஷ்ணுவை சந்தித்தால் உனக்கு விளக்கம் கிடைக்கும்'' என்றார். அடுத்து பிரம்மா வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவை சந்தித்தார்.
""பிரம்மனே, உன் சந்தேகத்திற்கு விடை கிடைக்காமல் போனதற்குக் காரணம் நீ விநாயகரை வணங்காமல் சிவபெருமானைச் சந்தித்ததுதான். நீ விநாயகரை தியானித்தால் உனக்கு நல்ல விளக்கம் கிடைக்கும்'' என்றார்.
பிரம்மாவும் விநாயகப் பெருமானை தியானித்தார். அப்போது அவர்முன் தோன்றிய விநாயகர், ""இத்தலம் மிகவும் புனிதமானது. இத் தலத்தில் என் பெற்றோர்கள் எழுந்தருளப் போகிறார்கள். யார் ஒருவருக்கு மறுபிறவி இல்லையோ, அவர்களுக்கு மட்டும் இத்தலத்தில் எழுந்தருளப்போகும் என் தந்தை பரமனை வழிபடும் பாக்கியம் கிட்டும். அப்பொழுது நான் இத்தலத்தில் எழுந்தருளி என்னுடைய நேத்திரத்தை நேராக விழித்துப் பார்ப்பேன். என் கண்கள் மனிதர்களின் கண்கள்போல் நேரிடையாகக் காட்சிதரும். அத்துடன் நகங்கள், நரம்புகள் அனைத்தும் மனித ரூபத்தில் பிரதிபலிக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடாக மாற்றி என் இடுப்பில் மாலையாக அணிந்துகொள்வேன். இப்படி மூன்று ரூபத்தில் இத்தலத்தில் எழுந் தருள்வேன். என்னை பக்தியுடன் வழிபடுபவர் களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகலபாக்கியங்களையும் அளிப்பேன்'' என்றருளினார்.
பிரம்மா விநாயகரின் விளக்கத்தைக் கேட்டுத் தெளிந்து, மீண்டும் விநாயகப் பெருமானை வழிபட்டு அங்கிருந்து சென்றார்.
""இந்த கபால விநாயகருக்கு சந்தனாபிஷேகம் செய்து அர்ச்சித்து வழிபட, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். பார்வை தீர்க்கமாகத் தெரியும். நரம்பு சம்பந்தமான நோய் இருந்தாலும், மனதில் படபடப்பு இருந்தாலும் (டென்ஷன்) அகலும்'' என்று சொல்கிறார் கோவில் குருக்கள்.
இத்தலத்தில் எழுந் தருளியுள்ள மூலவர் விஸ்வநாதரை வழி பட்டதும், பிரசாதமாக பக்தர்கள் அனைவருக் கும் ஒரு ருத்ராட்சத்தை அளிக்கிறார்கள். மேலும் இங்கு அருள்புரியும் அன்னை வேதநாயகியை வழிபடும்போது நம்முடன் பேசுவதற்கு ஏற்றாற்போல் அன்னையின் உதடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தவிர, வலது காலை முன்னெடுத்து வைத்த கோலத்தில் நின்ற நிலையில் தெற்கு திசை நோக்கி தனிச்சந்நிதியில் அருள்புரிகிறாள்.
பொதுவாக, விநாயகரை வழிபட சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அத்துடன் இதுபோல் வித்தியாசமானத் தோற்றத்தில் அருள்புரியும் விநாயகரை வழிபட கூடுதல் பலன்கள் கிட்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
தரிசன நேரம்: காலை 7.00 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். திருநாகேஸ்வரம் கோவிலிலிருந்து வாகன வசதிகள் உள்ளன.
சூடிக்கொடுத்த விநாயகர்
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளியுள்ள ஆண்டாள், தான் அணிந்த மலர் மாலையை வேங்கடாசலபதிக்கு அனுப்பி, அணிவிக்கச் செய்வாள். அதற்காக ஆண்டாள் அணிந்த மலர் மாலை ஸ்ரீவில்லிப்புத்தூர் வீதிகளில் மேளதாளம் முழங்க பவனி வரும்.
அப்போது வடக்கு ரதவீதியில் அமைந் துள்ள விநாயகப் பெருமான் கோவிலின் முன் சிறிதுநேரம் நின்று, அதற்குப்பின் பவனி தொடரும். இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறும். தன் மாமனுக்கு, அத்தையான ஆண்டாள் அனுப்பும் மலர் மாலையை விநாயகப் பெருமான் தரிசித்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதனால், இந்த விநாயகருக்கு "சூடிக்கொடுத்த விநாயகர்' என்று பெயர்.