சீதா ஜெயந்தி 9-4-2018

ஸ்ரீராமநவமிக்கு அடுத்த நவமியில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சீதை அவதரித்தாள் என்று புராணம் கூறுகிறது.

ஒரு சமயம் ஜனகர், யாகபூமி யைத் தங்கக்கலப்பையால் உழுது கொண்டிருந்தபோது, கலப்பை நுனியின் தூண்டுதலால் பூமியிலிருந்து வெளிவந்தது ஒரு தங்கப்பெட்டி. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தார் ஜனகர்.

பெட்டிக்குள் ஓர் அழகிய பெண் குழந்தை ஜனகரைப் பார்த்து சிரித்தது. அந்தக் குழந்தையைத் தூக்கியெடுத்தார், குழந்தைச் செல்வமில்லாத ஜனகர்.

Advertisment

வடமொழியில் பூமியில் உழுத கோட்டிற்கு "ஸீதா' என்று பெயர். அந்தப் பெயரே குழந்தைக்கு சூட்டப்பட்டது. மேலும் "மைதிலி' என்ற பெயரும் உண்டு.

மிதிலாபுரியை ஆட்சிபுரிந்த ஜனகர் ராஜரிஷிகளுக்குள் முதலிடம் பெற்றவர். அரசனாக இருந்த வண்ணமே தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஜனகர் என்பது இவரது வம்சாவளிப் பெயர். இவரது இயற்பெயர் சீரத்வஜன். ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களிலும், ஏழு அங்கங்களுடன் கூடிய ராஜ்ய சாஸ்திரத்திலும், எட்டு அங்கங்கள் கூடிய யோக சாஸ்திரத்திலும் ஜனகர் மகாநிபுணர் என்கிறது புராணம்.

ஜனகபுரியில் செல்வாக்குடன் வளர்ந்த சீதை அனைத்துக் கலைகளி லும் நிபுணத்துவம் பெற்றுத் திகழ்ந்தாள்.

Advertisment

அவளுக்குத் தகுந்த வரன் கிடைக்க வேண்டுமே என்று ஜனகர் வருந்தியிருந்த சமயத்தில்தான் விசுவாமித்திரர் ராமரையும் லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு மிதிலைநகருக்கு வந்தார். ராமபிரானின் தோற்றத்தினைக்கண்டு வியந்த ஜனகர், "இந்த இளைஞனே நம் சீதைக்கேற்ற மணாளன்' என்று நினைத்தார். அதேசமயம், "சிவதனுசைத் தூக்கி நாணேற்றி வெற்றிபெற வேண்டுமே' என்ற கவலையும் வந்தது.

ஜனகருக்கு சீதை கிடைத்ததுபோல் சிவதனுசும் கிடைத்தது. அதுபற்றி புராணம் கூறும் தகவல்...

தட்ச யாகத்தை அழிக்க வில்லுடன் சென்ற சிவபெருமான், யாகம் பாதியில் நின்றுபோனதால் சினம் தணிந்தார். தான் எடுத்துச்சென்ற வில்லை ஜனக மன்னரின் முன்னோரான தேவராத மன்னரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். பரம்பரையா கப் பாதுகாக்கப்பட்ட அந்த வில் ஜனகரை வந்தடைந்தது.

ஒருநாள் சிறுமியாக இருந்த சீதை தோழியர்களுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருக்கையில், பந்து அந்த வில்லின்கீழே சிக்கிக்கொண்டது. பராக்கிரமர்கள் பலர் ஒன்றுசேர்ந்தும் அசைக்கமுடியாத அந்த வில்லை, சிறுமியான சீதை தன் இடக்கரத்தால் தூக்கி வலக்கரத்தால் பந்தை எடுத்து விளையாட்டினைத் தொடர்ந்தாள். இதனையறிந்த ஜனகர், "இவ்வளவு பராக்கிரமம் பெற்ற இவளை, இந்த வில்லை எடுத்து யார் ஒருவன் நாண் ஏற்றுகிறானோ அவனுக்கே மாலையிடச் செய்யவேண்டும்' என்று முடிவு செய்தார். சீதை திருமணவயதை அடைந்ததும், இந்த விவரத்தை அனைவருக்கும் அறிவித்தார். பல நாட்டு மன்னர்களும், இளைஞர்களும் சிவதனுசில் நாண் பூட்டும் வைபவத்தில் பங்கேற்று தோல்விகண்டு வெளியேறினார்கள்.

இந்நிலையில்தான் விசுவாமித்திரர் ராம- லட்சுமணருடன் அங்கு வந்தார்.

இளைஞர்கள் இருவரும் அயோத்தி மன்னன் தசரதரின் குமாரர்கள் என்று விசுவாமித்திரர் ஜனகருக்கு விளக்கினார். அப்போது ஜனகர், தன் வளர்ப்பு மகள் சீதாவைப் பற்றிக்கூறி, ""சிவதனுசுக்கு யார் நாண் ஏற்றுகிறார்களோ, அவருக்கே என் பெண்ணை மணம் முடிப்பது என்று அறிவித்தேன். பலரும் வந்து முயன்று தோல்வி கண்டனர். ராமன் அந்த வில்லில் நாணேற்றினால் என் மகள் சீதையை அவருக்கு மணம் முடித்து வைக்கிறேன்'' என்றார்.

விசுவாமித்திரர் ராமனைக் குறிப்புடன் பார்க்க, ராமன் எழுந்து சென்று சிவதனுசை மிக எளிதாகத் தூக்கி நாணேற்ற, அது பெருஞ்சத்தத்துடன் இரண்டாக உடைந்தது.

அதற்குப்பின், தசரத மன்னர் சம்மதத் துடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

திருமாலின் அவதாரமாகிய ராமனுக்கும், லட்சுமியின் அவதாரமான சீதைக்கும் மிதிலையில் நடைபெறும் திருமணத்தைக் காணும் ஆவலில் பிரம்மதேவனும், சிவ- பார்வதியும், தேவர்களும் வானில் காத்து நின்றார்களாம்.

மணமேடையில் சீதாதேவியின் தளிர்கரங்களைப் பற்றியபடி ராமர் தீயை வலம்வந்தார். சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் ராமர்- சீதாதேவி திருமணம் பங்குனிமாதப் பௌர்ணமி நன்னாளில் நடந்ததாகப் புராணம் கூறுகிறது. மேலும் ஜனகரின் தம்பி சேத்துவாசனின் புதல்வியர் மாண்டவியை பரதனும், ஊர்மிளையை லட்சுமணனும், சுருத கீர்த்தியை சத்ருக்னனும் மணம் புரிந்தனர்.

இதன்பின்னர் அயோத்தியில் ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதர் ஏற்பாடு செய்தார்.

அப்போது விதி குறுக்கிட்டது.

கைகேயி தசரதரிடம் கேட்ட வரத்தின் காரணமாக ராமர் 14 ஆண்டுகள் வனம் செல்ல நேரிட்டது. ராமர் சீதையுடன் வனவாசம் மேற்கொண்டார். அவர்களுடன் லட்சுமணனும் சென்றான்.

வனத்தில் இராவணனால் சீதை அபகரிக்கப்பட்டது, பின்னர் வானரப்படை உதவியுடன் இலங்கை சென்ற ராமன் இராவண வதம் புரிந்து சீதையை மீட்டது என பல நிகழ்வுகளும் நடந்தேறின.

பின்னர் அயோத்தி திரும்பிய ராமருக்கு மிகச்சிறப்பாக பட்டாபிஷேகம் நடந்தது. பட்டாபிஷேகத்திற்குப் பிறகு ஒருநாள் அயோத்தி அரண்மனைக்கு அகத்திய மாமுனிவர் வருகை தந்தார். ராமரை வாழ்த்திய அகத்தியர், ""ராமா, உன்னிடம் ஒரு வேண்டுகோள். முனிவர்களையும் மக்களையும் சதகண்ட இராவணன் என்பவன் துன்புறுத்தி வருகிறான். பத்துத் தலைகள் கொண்ட இராவணனை நீ வதம் செய்ததுபோல், இந்த நூறு தலைகள் கொண்ட அசுர குலத்தவனையும் வதம்செய்ய வேண்டும்'' என்றார்.

poodevi

""சதகண்ட இராவணனா? யார் அவன்? சற்று விளக்கமாகக் கூறுங்கள் சுவாமி'' என்றார் ராமர்.

""கச்யப முனிவரின் அசுர மைந்தர்களுள் ஒருவன்; அரிய வரங்கள் பெற்றவன். இவனை அழிப்பது உன் கடமை'' என்றார் அகத்தியர்.

அவரது வேண்டுகோளை ஏற்ற ராமர் போருக்குத் தயாரானார். அப்போது சீதை, தானும் போர்க்களம் வருவதாகக் கூறினாள்.

""தேவி, நீ ஏன் போர்முனைக்கு வர விரும்புகிறாய்?'' என்றார் ராமபிரான்.

""சுவாமி, போர்க்களத்தில் உங்கள் பராக்கிரமங்களை நேரில்காண ஆசைப்படுகிறேன். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிட்டாது'' என்றாள் அன்புடன். அதை ஏற்றுக்கொண்ட ராமர், சீதையுடன் சதகண்ட இராவணனிடம் போரிடப் படையுடன் சென்றார்.

அந்த அசுரனின் கோட்டையை முற்றுகையிட்டார் ராமர். "இனி நல்வழியில் செல்ல வேண்டும்' என்று அறிவுறுத்தினார். ஆனால் அவன் ஏற்க மறுத்தான்.

போர் தொடங்கி உச்சகட்டத்தை எட்டியது. ஒரு கட்டத்தில் ராமர் களைப்படைந்தவர்போல் தேர்த்தட்டில் சாய்ந்தார். இதனைக்கண்ட சீதாதேவி, ""சுவாமி ஆயுதத்தை என்னிடம் கொடுங்கள். எதிரிகளை அழிக்கிறேன்'' என்று ராமரிடமிருந்த வில்லையும், அம்பறாத்தூணியையும் வாங்கிக்கொண்டு, அந்த அரக்கர்கள்மீது சரமாரி பொழிந்தாள்.

சீதாதேவியின் அம்புகளால் மகாபலவான், அக்னிகண்ணன், யமகண்டன், பஞ்சகண்டன், நிஷ்கண்டன், நிசாரன் ஆகிய அசுரத்தளபதிகள் ஒருவர்பின் ஒருவராக வீழ்ந்ததையும், சீதையின் பராக்கிரமத்தையும் ராமர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

"சிறுவயதில் சிவதனுசை இடக்கையால் தூக்கியவளாயிற்றே' என்பதை நினைத்து மகிழ்ந்தார்.

அதேசமயம் இலங்கையிலிருந்து மீட்டுவந்ததும் தீக் குளிக்க வைத்துவிட்டோமே என்று அவர் மனம் வருந்தியது.

இறுதியில் சதகண்ட இராவணனே தேரேறி நேரில் வந்தான். "என் ராமன் சத்யவான் என்பதும், நான் கற்புக்கரசி என்பதும் உண்மையானால், இந்த அஸ்திரம் சதகண்ட இராவணனை வீழ்த்தட்டும்' என்று பிரார்த்தனை செய்த சீதை, சதகண்டனை நோக்கி அஸ்திரம் எய்தாள். அது சதகண்ட இராவணனை தேரிலிருந்து வீழ்த்தி அவன் உயிரைக் குடித்தது. அதைக்கண்டு ராமர், ""தேவி உன்னைப் பார்க்கும்போது பெருமிதமாக உள்ளது'' என்று பூரிப்புடன் சொன்னார்.

""சுவாமி, அன்று எனக்காக தாங்கள் பத்துத்தலைகள் கொண்ட இராவணனை அழித்தீர்கள். இன்று உங்களுக்காக சதகண்ட இராவணனை வதம் செய்தேன். அனைத்தும் தங்களின் அருளே'' என்றாள் அமைதியாக.

சீதாதேவியின் பெருமை யையும், அவளது நேர்மை, கற்புநெறியையும் உலகிற்கு உணர்த்த ராமர் திருவுள்ளப்படி விளைந்த சம்பவமே இது என்பதை முனிவர்கள் அறிந்து போற்றினார்கள்.

இந்தக் கற்புக்கரசியைப் பற்றி யாரோ ஒரு துணிவெளுப்பவன் அபவாதமாகப் பேசியதன் காரணமாக, சீதையை வனத்தில் விட்டு வருமாறு லட்சுமணனுக்குக் கட்டளையிட்டார் ராமர். அப்பொழுது சீதை கருவுற்றிருந்தாள்.

ராமரின் ஆணைப்படி சீதை காட்டில் வால்மீகி ஆசிரமத்தில் தங்க நேரிட்டது. வால்மீகி, ஒரு காலத்தில் வேட்டைக்காரனாக, வழிப்பறி செய்யும் திருடனாக இருந்தவர். பின்னர் நாரதரின் அறிவுரையை ஏற்று ராமநாம தியானத்தில் ஈடுபட்டார். பல ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்ததால், அவர் இருந்த இடத்தைச்சுற்றி புற்றே எழுந்துவிட்டது. புற்று என்றால் பூமியின் காது என்று பொருள். சமஸ்கிருதத்தில் வன்மீகம் என்பர். இதனால் அவர் "வான்மீகி' என பெயர் பெற்றார்.

அதனால் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்பட்டார். அது போல் தங்கக் கலப்பையைக் கொண்டு பூமியை உழுதபோது சீதாதேவியும் ஜனகருக்குக் கிடைத்தாள். எனவே, அவளும் பூமித்தாயின் மகளாகிறாள். அந்த வகையில் இருவரும் சகோதர- சகோதரிகள்.

பெண்கள் பிரசவத்திற்குத் தாய்வீட்டிற்குப் போவார்கள். சீதாதேவி வால்மீகி குடிலில் தங்கினாள்.

சீதையை ராமர் காட்டுக்கு அனுப்பியது தண்டனைபோல் தோன்றினாலும், அதிலும் தர்மத்துடன் நடந்துகொண்டவர் ராமர் என்று ஆன்றோர்கள் சொல்வர்.

வால்மீகி முனிவர் சீதையைத் தன் மகள்போல் கவனித்துக்கொண்டார்.

அங்கேயே லவ- குசன் என்ற இரண்டு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தாள் சீதை.

இந்நிலையில் ராமர் அசுவமேத யாகம் செய்தார். யாகக் குதிரையை சுதந்திரமாக விடவேண்டும்; அது தடுப்பாரின்றி தேச சஞ்சாரம் செய்து திரும்பினால்தான் யாகம் பூர்த்தியடையும். அவ்வாறு வந்த யாகக்குதிரை சீதாதேவி இருந்த வனத் தின் பக்கம் வந்தது. அதை லவ- குசர்கள் பிடித்துக் கட்டி வைத்தனர். லட்சுமணனா லும் குதிரையை மீட்கமுடியாத நிலையில், ராமரே லவ- குசருடன் போரிட கானகம் வந்தார்.

அங்கு சீதாதேவியைப் பார்த்தார்.

அவளும் ராமரைப் பார்த்தாள்.

""உங்கள் மகன்களை உங்களிடம் சேர்த்துவிட்டேன். இந்தப் பூவுலக வாழ்வு போதும்'' என்று ராமரைப் பார்த்துக் கூறியவள் தன் அன்னை பூமாதேவியை வேண்டினாள். பூமி பிளந்தது. சீதையை பூமாதேவி ஏற்றுக்கொண்டாள் என்கிறது புராணம்.

பூமிக்குள்ளிருந்து வெளிப்பட்ட சீதை, இறுதியில் பூமிக்குள்ளேயே சென்றுவிட்டாள்.

தென்னகத்தில் ஸ்ரீராமநவமியை வெகுசிறப்பாகக் கொண்டாடுவதைக் காணலாம். ஆனால் சீதாதேவி ஜெயந்தியைக் கொண்டாடுவதில்லை. வடநாட்டில் பல மாநிலங்களில் சீதாதேவி பூமியிலிருந்து தோன்றிய நாளை ராமர் கோவில்களில் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீராமநவமிக்கு அடுத்து வரும் நவமியில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சீதையின் அவதாரம் நிகழ்ந்ததால், சீதாதேவியின் அவதாரத் திருநாளை "சீதாநவமி' என்று விழா எடுத்துப் போற்றுகிறார்கள். மேலும், சீதாதேவி பூமியிலிருந்து வெளிப்பட்டது முதல் பூமிக்குள் ஐக்கியமானது வரையிலான நிகழ்வுகளை மிக அழகாகக் கோவில்களில் சித்திரமாக வரைந்துள்ளதையும் காணலாம்.

குறிப்பு: ஜனகர் ஆட்சிபுரிந்த ஜனக்பூர் நேபாளத்தில் உள்ளது. அவர், வயலில் உழும்போது தங்கப்பெட்டியில் சீதையைக் கண்டெடுத்த "சீதாமடி' என்ற இடம் பீகாரில் உள்ளது. அன்னை சீதாதேவி வளர்ந்த மிதிலாபுரி எனும் ஜனக்பூர் 51 அட்சரசக்தி பீடங்களுள் 20-ஆவது பீடமாகக் கருதப்படுகிறது. அவ்விடத்து அட்சர தேவியின் திருப்பெயர் "கண்டாகர்ஷிணி.' மிதிலாபுரியில் உள்ள ராமர் கோவிலில் சீதையின் வாழ்க்கை வரலாற்றை அழகிய சிற்பங்களாக அமைத்துள்ளனர். இங்கு சீதா ஜெயந்தி பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.