"ஆயிரம் இராமன் நின்கேழ் ஆவரோ?' என, இராமபிரானின் தம்பியான பரதனைப் பார்த்து குகன் ஆச்சரியத்துடன் புகழ்ந்தான். "ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் உன்னுடைய நற்குணங்களுக்கு ஈடாகுமா?' என கேட்டான். இராமாயணத்தில் கதாநாயகன் இராமபிரான். மகாவிஷ்ணுவின் அம்சம். அப்பேற்பட்ட இராமபிரானின் தம்பியான பரதனை இவ்வளவு உயர்வாக குகன் புகழக் காரணம், பரதனது பரந்த மனப்பான்மையும் சீரிய ஒழுக்க குணமும்தான்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பரதனை "பரதாழ்வார்' என அழைப்பதுண்டு. ஸ்ரீ மகாவிஷ்ணு தசரதனுக்கு மகனாகப் பிறந்த அதே வேளையில், வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுடன் இருந்த ஆதிசேடன் லட்சுமணனாகவும், சக்கரம் பரதனா கவும், சங்கு சத்ருக்னனாகவும் பிறந்தனர் என கம்பர் கூறுகிறார். பரதனை சக்கரத்தாழ்வாரின் அம்சம் என்றும் சிலர் கூறுவதுண்டு. எனவேதான் பரதனிடம் சீரிய ஒழுக்க குணங்களும், தர்மநெறி சிந்தனையும் குடிகொண்டிருந்தன. "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்னும் பழமொழி இராமபிரானுக்குத்தான் பொருந்தும். இராமபிரான் வனவாசம் செல்லும் வேளையில், லட்சுமணனின் தாயாரான சுமித்ரை-

"ராமம் தசரதம் வித்திமாம் வித்தி

ஜநகாத்மஜாம் அயோத்யாம் அடவீம்

Advertisment

வித்தி கச்சதாத யதா ஸுகம்'

என்று கூறுகிறாள்.

(அயோத்யா காண்டம்)

Advertisment

அதாவது, "காட்டை அயோத்தியாக நினைத்து இராமர், சீதையுடன் சென்றுவா' என முழுமனதுடன் அனுப்பிவைத்தாள். தாயின் சொல்லைத் தட்டாமல் லட்சுமணன் இராமபிரானுடன் மகிழ்வுடன் சென்றான். இராமபிரானும், லட்சுமணனும் எப்படி இணைபிரியாமல் இருந்தார்களோ- அதேபோன்று பரதனும், சத்ருக்னனனும் இருந்தனர். இம்மூவரும் இராமபிரானிடம் தீராத அன்பையும், பாசத்தையும், கூடவே பக்தியையும் கொண்டிருந்தனர்.

அயோத்தி நகரத்தில் சுகமாக வாழவேண்டிய லட்சுமணன் ராஜவாழ்க்கையைத் துறந்து, தன் அண்ணன்- அண்ணியுடன் காட்டிற்குச் செல்லும் நிகழ்வை பெரிய திருவந்தாதி நூலில் சொல்லப்பட்டது போன்று, "நிழலும், அடிதானும் ஆணோம்' என இருந்தான். அதாவது இராமபிரானுக்கு நிழல் போன்றும் அவனது பாதுகை (செருப்பு) போன்றும் உடனிருந்தமை சொல்லப்பட்டுள்ளது. இது லட்சுமணினின் தியாக மனப் பான்மையை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளது.

bb

இதற்கும் மேலாக பரதன் அரசப்பதவியே தன்னைத் தேடிவந்தபோது அதனை ஒதுக்கி, இராமபிரானையே அரச பதவியை ஏற்க வற்புறுத்திய பரந்த மனப் பான்மை உலகில் யாருக்கு வரும்? பேச்சுவழக்கில் "அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்போ காலியாகும்...' எனக் கூறுவதுண்டு. இங்கு அண்ணனின் மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்ச்சியும் லட்சியமும் என்றே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவன் பரதன்.

இக்ஷவாகு குலத்தில் பிறந்த அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்தி நேர்மையுடனும், வீரத்துடனும், தரும சிந்தனையுடனும் நன்கு ஆட்சிபுரிந்து வந்தார். அவருக்கு கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூன்று பட்டத்தரசிகள் மனைவியராக இருந்தனர். தசரத மன்னருக்கு தன் குலத்தை வளரச்செய்ய புதல்வர்கள் இல்லையே என்னும் பெரும் கவலை மட்டும் மனதை வாட்டியது.

குலகுருவான வசிஷ்டரின் அறிவுரைப்படி சரயூ நதிக்கரையில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். அதன்பயனாக கௌசல்யை மகாவிஷ்ணுவின் அம்சமான இராமபிரானையும், கையேயி பரதனையும், சுமித்ரை லட்சுமணன், சத்ருக்னன் ஆகிய இருவரையும் பெற்றெடுத்தனர். இதில் கைகேயி மகனாக பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்ததை கம்பன்-

"ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்தெழ

வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துறப்

பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்

மாசறு கேகயன் மாது மைந்தனை'

என வர்ணித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தசரத சக்கரவர்த்தி தன் மூத்த மகனான இராமபிரானுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவுசெய்தார்.

இராமபிரான் குழந்தையாக இருந்தபோது, கைகேயியின் அந்தரங்கப் பணிப்பெண்ணான மந்தரையின் கூன்விழுந்த முதுகின்மீது மண் உருண்டையை விளையாட்டாகத் தூக்கிப்போட, இராமன் தன்னை அவமானப் படுத்தியாதாக எண்ணிக்கொண்ட மந்தரை இராமன்மீது கோபம் கொண்டாள். இதை கம்பன்-

"தொண்டை வாய்க் கேகயன்

தோகை கோயின்மேல்

மண்டிளாள் வெகுளியின்

மடித்த வாயினாள்

பண்டைநாள் இராகவன்

பாணி வில்லுமிழ்

உண்டை உண்டதனை தன்

உள்ளத்து உள்ளுவாள்'

எனப் பாடியுள்ளார். அன்றே இராமபிரானைப் பழிவாங்கும் எண்ணம் கொண்ட மந்தரை, இராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் நடத்தவிடாமல் சூழ்ச்சி செய்தாள். இதனால் பரதனுக்கு நாடு, இராமனுக்கு காடு என்னும் மாற்றம் வந்தது. சிலப்பதிகாரத்தில் இந்த நிகழ்வை, "அருந்திறல் பிரிந்த அயோத்தி' என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதற்குப்பின்பு நடந்த நிகழ்வுகளையெல்லாம் கேகய நாட்டிலிருந்து அயோத்தி மாநகருக்கு வந்து அறிந்துகொண்ட பரதன், அதற்குக் காரணமான தன் தாயான கைகேயியிடம் தனது வருத்தத்தையும், கோபத்தையும் கொட்டினான். இதற்கு சமாதானம் செய்யவந்த குலகுருவான வசிஷ்டரிடமும் தன் மனவேதனையைத் தெரிவித்து, முடிசூட்டிக்கொள்ளுமாறு வற்புறுத்தியதை நிராகரித்தான்.

தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நாட்டைத் துறந்து காட்டிற்குச் சென்ற இராமபிரானை சமாதானப்படுத்தி, அரச பதவியை ஏற்கவைக்க தன் படைகள், மந்திரி பிரதானிகள், புரோகிதர்கள், அரசவை சான்றோர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கங்கை நதிக்கரையை அடைந்தான். நிஷாதத் தலைவனான குகன் பரதனை எதிர்கொண்டு, படையுடன் வந்த காரணத்தைக் கேட்டான். பரதனின் பெருந்தன்மையை அறிந்து குகன் பாராட்டினான். பரதனின் படை பரிவாரங்களுக்கு வேண்டிய உணவையும், தங்க ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்தான். சித்திரகூடத்தில் தங்கியிருந்த சக்கரவர்த்தித் திருமகனான இராமபிரானைக் காண பரதன் சென்றான்.

பரதன் பெரிய கூட்டத்துடன் வருவதைக் கண்ட லட்சுமணன், இராமபிரானிடம் போரிடத்தான் பரதன் வருகிறான் என தவறாக நினைத்து பதட்டமடைய, இராமபிரான் லட்சுமணைத் தேற்றினான்.

கம்பன் இந்த இடத்தில், "பெருமகன் என்வயின் பிறந்த காதலின்' எனக் கூறுவதாகப் பாடியுள்ளார். தம்பியான பரதனை "பெருமகன்' என்று பெருமையாகக் கூறுவதிலிருந்து பரதனின் நற்குண நலங்களை அறியமுடிகிறது.

அயோத்தி ராஜ்ஜியத்தை ஏற்கவேண்டுமென மன்றாடிய பரதனை இராமபிரான் தேற்றி, தந்தையின் ஆணையை நிறைவேற்றியே தீரவேண்டும் என பிடிவாதமாகக் கூறியதால், பரதன் இராமபிரானின் பாதுகையை அரியாசனத்தில் வைத்து நாட்டை பதினான்கு ஆண்டுகாலம் அரசாள ஒருவாறாக சம்மதித்தான்.

மாணிக்கமும், ரத்தினமும் கொண்டு இழைக்கப்பட்ட இராம பிரானின் பாதுகை அயோத்தியை அரசாள்வதை ஸ்வாமி தேசிகன் "ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்' எனும் நூலில்,

"மாந்யே ரகூத்வஹபதே மணிபாதுகே த்வாம்

விந்யஸ்ய விக்ரஹவதீம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்

ஆலோலம் அக்ஷவலயீ பரத ஜடாவாந்

ஆலம்ப்ய சாமரம் அநந்ய மநா ஸிஷேவே'

என்று கூறியுள்ளார். இராமபிரானின் புனித பாதுகை அரியாசனத்தில் வைக்கப் பட்டபோது ராஜ்யலட்சுமியே அமர்ந்த வண்ணம் இருந்தது; பரதன் பக்தியுடன் சாமரம் வீசினான் என கூறுகிறார்.

தன்னுடைய அண்ணன் இராமபிரானின் நலனே தன் நலன் என கருதியவன் பரதன். புனித ராமநவமியன்று இராமபிரான், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் பரதனையும் சேர்த்து வணங்கினால் நம் மனதில் நல்ல எண்ணங்கள் தானே வரும்.