தமிழ்ச் சமுதாயம் என்பது சங்க காலத்தைத் தழுவிய தொன்மைமிக்க நிலைப்பாடுடைய சமுதாயமாகும்.
இயற்கைச் சீற்றமும் "ஆவி' நம்பிக்கையும்!
தொன்மை நாட்களில் குறிஞ்சிநில மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்வினை வாழ்ந்துவந்தனர். இயற்கையின் நிலைகண்டு அஞ்சிய மக்கள், தம் அச்சத்தைப்போக்கிட குழுவாக வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் இயற்கையின் பேராற்றலைக் கண்டும், அதனால் தமக்குள் எழுந்த பயங்கரமான கனவுகளைக் கண்டும் அஞ்சினார்கள்.
இரவில் ஏற்பட்ட இடி, மின்னல், காற்றோடு சேர்ந்த மழை, பயங்கர வெள்ளம் ஆகியவற்றைக்கண்ட அச்ச அதிர்வுகளிலிருந்து தம்மை மீட்டெடுக்க வும், சமாதானப்படுத்திக் கொள்ளவும், தங்களுக்குள்ளே சில சடங்குகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். தங்களை அச்சுறுத்திய இயற்கை யின் சீற்றங்களில், சில ஆற்றல்கள் அல்லது ஆவி இருப்பதாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையை அடிப் படையாக வைத்து சில வழிபாடுகளை உருவாக்கினார்கள். பின் இயற்கை மரணங் களைக்கண்டும் அஞ்சினார்கள். தம்மைப் போன்றே இயற்கைப் பொருட்களுக்கும் உணர்வுகள் உண்டென்று நம்பினார்கள்.
சமயச்சடங்குகளும் சித்தர் கோட்பாடுகளும்!
அந்த இயற்கை உணர்வெழுச்சியின் காரணமாகவே இடி, மின்னல், புயல், வெள்ளம், காட்டுத்தீ, பூகம்பம், வறட்சி ஆகியவை ஏற்படுகின்றன என நம்பினார் கள். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வத்தை உருவாக்கி, அந்த ஆவியின் துணையுடன், இயற்கையின் சீற்றங் களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொண்டார்கள். இதன் விளை வாகவே இயக்கவியல், ஆவி கருத்தியல் உருவானது. இந்த ஆவிக் கோட்பாட் டை அடிப்படை யாக வைத்தே, பல சமய நிறுவனங்கள் உருவாயின. இயற்கைச் சீற்றங்களுக்கான காரணங்களை அறியமுடியாத மனித இனங் கள், தம் மனதிற்கு நிறைவான விடையான அந்த நிறுவனங்கள் சொன்ன வழிபாட்டை நம்பினர்.
இயற்கையின் இயக்கவியலில் ஆவி உறைந்திருக்கிறது என அந்நிறுவனத் தலைவர்கள் விடைகாணமுடியாத மக்களை நம்பவைத்தார்கள். இவ்வாறுதான் சங்க காலத்தில் ஆவிசார் சிந்தனைகள் தோன்றலாயிற்று. அதே நேரத்தில் சில பகுத்தறிவாளர்கள் இயற்கையின் ஆற்றலை விளங்கிக்கொண்டு, அவற்றை மேலாண்மை செய்யவும் முயற்சித்து வந்தனர். இவர்களே பின்னாளில் சித்தர்கள் அல்லது அறிவர்கள் என்று போற்றப்பட்டனர்.
இவ்வாறு சங்க காலத்தில் ஒரே காலத்தில் ஆவிசார் சமயச் சடங்குகளும் அறிவுசார் சித்தர்களின் கோட்பாடுகளும் வளரத் தொடங்கின.
பேயோட்டும் முதியோர் கூட்டம்!
அக்காலத்தில் மனிதன் கனவு, நினைவு, உறக்கம், இறப்பு ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான். அதன் விளைவாக தம் மூதாதையரின் இறப்பு நீண்ட ஆழ்ந்த உறக்கம் எனவும், அவர்களின் விழிப்பு புதிதான குழந்தையின் பிறப்பு எனவும் கொண்ட தத்துவவியலின் கோட்பாடு உருவானது.
இந்த ஆவிசார் கோட்பாட்டை வைத்து உருவானதே "அணங்கு' தெய்வ வழிபாட்டு முறையாகும்.
இந்த அணங்கு வழிபாட்டுமுறை, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு முறையாகக் கொண்டிருந்தாலும், சில வேறுபாடுகளைக் கொண்டதாகவும் இருந்தது. இதை, சங்க இலக்கியங்களில் பேய், அணங்கு, முருகணங்கு, சூர், கொல்லிப் பாவை, சூரரமகளிர், வானர மகளிர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பேய் என்பது, மனித இறப்பிற்குப் பிறகு வெளியுலகில் திரிகின்ற ஆவி எனவும், அது அச்சம் தரக்கூடிய பகுதிகளில் உறைந் திருப்பதாகவும், அப்பகுதிக்குச் செல்லும் மனிதர்களைப் பிடித்துக்கொள்ளும் என்றும் தொன்மைக்கால மனிதர்கள் நம்பினர்.
அக இலக்கியங்கள் இதை "வெறியாட்டு நிகழ்வு' என்ற சடங்குகளில், பேய் நம்பிக்கை சங்ககால மக்களிடம் சிறப்புற இருந்ததாகக் காட்டுகிறது. பேயோட்டுவதற்காக அந்தக் காலம் தொட்டு, ஒரு முதியோர் கூட்டமே இருந்துவந்திருக்கிறது.
பேய்க்கு பெண் உருவம்!
இதேபோல், சங்ககாலப் புறப்பாடலில் போர் பண்பாட்டுச் சூழல்களை விளக்கு கின்ற பாடல்களில் "தொடாக் காஞ்சி' என்ற துறை, பேயுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. அதில் "புண்பட்ட வீரனைப் பேய் காத்த பேஎய் பக்கம்' என்ற வரிகளில், போரின்போது போர்க்களத்தில் கிடக்கும் நிணங்களைப் பேய் தின்னவரும். அவ்வாறு வரும் பேய்கள் புண்பெற்று மடிந்த வீரனைத் தொடாதவாறு, அவனுடைய இல்லாள் வந்து வீரனை அரவணைத்துக் காப்பாள் எனக் கூறப் படுகிறது.
"பகலும் கூவும் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கிற் பேஎய் மகளிரோடு
அஞ்சுவர் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு'
என புறநானூற்றுப் பாடல் சுடுகாட்டுப் பேய் பற்றிக்கூறுகிறது.
மேலும், பசியுடைய பேய், கூகை, நரி இவற்றோடு நிணங்களைத் தின்று பசியாறிய பின் "துணங்கை' என்ற கூத்தை ஆடும் என "நிணம் தின் வாயள் துணங்கை தூங்க' என்ற அடிகள்மூலம் புறநானூறு பேய் பற்றிக் குறிப்பிடுகிறது.
இதேபோல் தொல்காப்பியர், போரில் காயம்பட்டுக் கிடந்தோரைப் பேய் காக்கும் என "பேஎய்ப் பக்கம்' என்ற துறையில் கூறுகிறார்.
அதோடு மற்றுமின்றி, சங்ககாலத்தில் பேய்க்குப் பெண் உருவம் கொடுத்து, பேய் மகளிர் எனப் புனைந்து, அவை தங்களை வந்து அணுகாதவாறு தடுப்பதற்கு, அந்தக் காலத்தில் இரவ மரத்தின் இலைகளையும் வேப்ப மரத்தின் இலைகளையும் வீட்டைச் சுற்றி கூரைகளில் செருகி வைத்தார்கள் என்பதனை-
"தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
ஐயவி சிதறி யாம்பல் ஊதி'
என்ற புறப்பாடல் பதிவு செய்துள்ளது.
பெண்ணுடலில் உறையும் தெய்வம்!
இவ்வாறு ஏற்பட்ட முறையின் பரிணாம வளர்ச்சியில் உருவானதே அணங்குத் தெய்வம். அணங்கு என்பது அச்சம்தரும் பெண் தெய்வம். இந்த தெய்வம் காடு, மலை, முகடு, குகை, பாழடைந்த இடங்கள், மரம், சுனை, நீர்வீழ்ச்சி போன்ற இடங்களில் உறைந்திருந்ததாக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
அணங்குடை நெடுங்காடு, அணங்குடைச் சிலம்பு, அணங்குச் சாரல் என கூறுவதோடு, பேயைப் போன்று விகாரமாகச் சித்தரிக் கப்படவில்லை. அதனால், பேயின் வளர் நிலையே அணங்கானது. இது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட, அவனால் உய்த்துரைக்க முடியாத ஆற்றல் வாய்ந்த சக்தி. இது வளமைதந்து காக்கும் பெண் தெய்வம். ஆனால், இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை வருத்தும் தெய்வம். இது பெதும்பை பருவத்துப் பெண். அதாவது, பருவம் எய்திய பெண்களின் மார்பகங் களிலும், அல்குலிலும் உறையும் "வீற்றுத் தெய்வம்' என சங்க இலக்கியங்கள் கூறுகின் றன. "வீற்று' என்றால் பெண்ணின் உடலில் உறையும் தெய்வம் என்று பொருள். ஆதலால், சங்க காலத்துப் பெண்கள், தலைவனோடு களவு ஒழுக்க காலத்தில் உடல் பூரிப்படைவது அணங்கின் செயலே எனவும், தலைவன் பிரிந்திருக்கும்போது தலைவியின் உடல் மெலிந்து, "பசலை' நோய் வருவதும் அணங்கின் செயல்தான் எனவும் சங்க காலத்தவர் கருதினார்கள்.
"சுணங்கு வளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ'
என நற்றினை 149 பாடல் கூறுகிறது.
வழிபாட்டுச் சடங்கான வெறியாட்டு!
இதே அணங்குத் தெய்வம் குறிஞ்சி நிலத்தில் முருகனோடு இயைந்து செயல் படுவதாகவும், முருகணங்கு என வணங்கி வந்ததாகவும் சங்க இலக்கியங்கள் குறிப் பிடுகின்றன.
ஒரு பெதும்பைப் பருவத்துப் பெண் ணோடு முருகன் அணங்கியதால், அவள் உடல் மெலிவுற்றது எனக் கருதி, அது போகவேண்டும் என்றால், குறிஞ்சி மலைக் கூட்டத்தாரின் தலைவன் "வெறியாட்டு' என்ற வழிபாட்டுச் சடங்கினை மேற்கொண்டு, அப் பெண்ணின் மெலிவு நோயை அகற்றியதாக தொல்காப்பியமே பதிவு செய்துள்ளது.
"வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தள்'
-தொல் நூல்: 1006
தலைவியின் உடல் மெலிவைக் கண்ட செவிலி அது எதனால் ஏற்பட்டது என்பதை அறிய, "கட்டுவிச்சியை' அழைத்து நெற்குறியும், வேலனை அழைத்து கழங்குக் குறியும் பார்ப்பாள். வெறியாட்டு அயர்பவன் "வேலன்' எனப்படுவான்.
கட்டுவிச்சி, தலைவியின் மெலிவுக்குக் காரணம் "முருகு' என்ற அழகன் என குறிபார்த்து உணர்த்துவாள். அவள் கூறிய குறியிலிருந்து தலைவியானவள், யாரோ ஒரு அழகனோடு களவியலில் இருந்து, தற்போது அவனைவிட்டுப் பிரிந்திருக்கும் துன்பத்திலிருக்கிறாள் என உணர்த்துவாள்.
அதன்பின் வேலனை அழைத்து வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வார்கள். குறிஞ்சிநில மக்கள் அனைவரும் கூடியிருக் கும் வேளையில், வேலன் முருகனை வணங்கி, அவனைத் தன்னிடம் வரவழைத்து, பெண்ணின் பசலை நோய்க்குக் காரணம் முருகனே எனக்கூறி, அதற்குத் தேவையான தீர்வைக் குறிப்பால் உணர்த்துவான்.
அதுவே தலைவியின் திருமணச் சடங்கு என முடிப்பான்!
வரும் இதழில் ஆதிப் பழங்குடித் தமிழர்களின் துடியான அணங்கு தெய்வ வழிபாட்டு முறைகளை அதன் ஆதிமூலத்திலிருந்து அறிவோம்.
தொடர்புக்கு:
அலைபேசி: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்