மதுரை புறநகர்ப் பகுதியில் வசித்துவரும் பானுமதி வரைந்து தந்துவரும் ஓவியங்களில் தெய்வசக்தி இருப்பதைப் பற்றியறிந்து அவரை சந்தித்தோம்.
எந்த வயதிலிருந்து, யாரிடம் கற்றுக்கொண்டு பக்தி ஓவியங்களை வரைந்துவருகிறீர்கள்?
"எனக்கு குரு நானேதான். பதினெட்டு வயதுமுதலே நான் பார்த்து வணங்கிய தெய்வ உருவங்களை என் சுய கற்பனையில் வரையத் துவங்கினேன். பென்சில் வைத்துதான் இப்போதுவரை வரைந்துவருகிறேன். சில தெய்வ வண்ணப் படங்களுக்கு மட்டும் வாட்டர் கலர் பயன்படுத்தி வரைவேன். நான் இயல்பாகவே தெய்வபக்தி அதிகம் உள்ளவள் என்பதால், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப்பரவசம் உண்டாக்கும் தெய்வங்கள், மகான்களின் ஓவியங்களை வரைந்து தள்ளிவிட்டேன். தெய்வ ஓவியங்களுக்கு அணிவிக்க வெள்ளை மற்றும் கலர் டிஸ்யூ பேப்பர்களை வைத்து மாலைகளும் செய்துவிடுவேன்!''
உங்கள் பக்தி ஓவியங்களில் தெய்வசக்தி உள்ளதாக சொல்கிறார்களே?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art_2.jpg)
"என் தோழிகள், உறவினர் களின் பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும்போது, பரிசாக நான் வரைந்த தெய்வீக ஓவியங்களை லேமினேட் செய்துதருவேன். "உன் ஓவிய பரிசைப் பெற்றதுமுதல் எங்கள் வாழ்வில் எதிர்பாராத நன்மைகள் நடக்கிறது. ஆகவே, உன் ஓவியங்களில் தெய்வ சக்தி இருக்கிறது' என்று பாராட்டுவார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் தருகிறது.''
இந்த தெய்வசக்தி எப்படி உங்களுக்குக் கிடைத்திருக்குமென்று நினைக்கிறீர்கள்?
"1997-ஆம் ஆண்டுவரை வாழ்ந்து அமரரான என் தந்தை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக "தினமணி' நாளிதழில் தினப்பலனும், "தினமணி' ஞாயிறு சுடர் இதழில் வார ராசிபலனும் எழுதிப் பிரபலமானவர். தனது 76 வயதில் காலமான கணித கலாநிதி, ஜோதிட வித்வான் எஸ். ரெங்கநாத ஜோஸ்யர் பிறவியிலேயே தெய்வசக்தியுடன் பிறந்தவர். அவர் கைரேகை, ஜாதகம் பார்த்துச் சொன்னது அப்படியே நடந்ததால் மக்கள் அவரை தெய்வப் பிறவியாகவே மதித்தனர். அதுமட்டுமல்ல; என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று நாட்டிற்காக தன் ஒரு கண்ணை இழந்தவர். தமிழ்நாட்டில், இந்தியாவில் பல வி.ஐ.பிக்கள் முதல் நடுத்தர, ஏழை எளிய மனிதர்கள்வரை என் அப்பாவை நடமாடும் தெய்வமாகவே போற்றி மதித்தனர். எனவே, அவருக்கு மகளாகப் பிறந்ததால் அந்த தெய்வசக்தி தானாகவே எனக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தினமும் என் அப்பாவின் புகைப்படத்தை தெய்வமாகப் பூஜித்து வணங்கியபிறகுதான் தெய்வப் படங்கள், பக்திப் படங்களை வரைவதை வழக்கமாக வைத்துள்ளேன்.''
நீங்கள் தெய்வ ஓவியங்களை எப்போது வரைவீர்கள்?
"நான் இல்லத்தரசி. வேலைக்குச் செல்வதில்லை. எனவே, பகல்- இரவு என எல்லா நேரமும், எனக்கு ஓவியம் தீட்டவேண்டுமென்ற ஆர்வம் வரும்போதெல்லாம் வரைய ஆரம்பித்துவிடுவேன். நரசிம்மர், ஐயப்பன் போன்ற தெய்வப் படங்களை வரையும்போது நாள் முழுக்க விரதமிருந்து, எதுவும் சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் வரைவேன். என் குடும்பத்தினர் நான் வரைவதை ஊக்குவித்து வருகிறார்கள். அதனால்தான் நேரம் காலம் பார்க்காமல் என்னால் வரைய முடிகிறது."
எதிர்கால ஓவிய லட்சியமென்ன?
"தினமும் தளர்ச்சியடையாமல் பக்தி ஓவியங்களை வரைந்துகொண்டே இருக்கவேண்டும். என் தெய்வீக ஓவியங்களைப் பெற்றால் நல்லது நடக்கும் என்று நம்பிக் கேட்பவர்களுக்கு இயன்றவரை வரைந்து தரவேண்டும்!'' பானுமதியின் தெய்வசக்தி நிரம்பிய பக்தி ஓவியப் பணி தொடர வாழ்த்தி விடைபெற்றோம்.
பானுமதியை வாழ்த்த, பாராட்ட கைபேசி எண்: 95970 37951
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/art-t.jpg)