தனியொரு மனிதன் உயிர்வாழ உணவு, உடை, இருப்பிடம் என்கிற மூன்று அடிப்படை வசதிகள் அவசியம் தேவைப் படுகின்றன. அதிலும் முக்கியமானது உணவு! மனித உடலுக்குத் தேவையான உயிர் சக்தியைத் தருவது உணவு.
"தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.'
எல்லாருக்கும் உண்ண உணவு கொடுக்கவேண்டுமென்னும் எண்ணத்தில் பாரதியார் பாடியதன்மூலம் உணவின் அவசியத்தை நாம் உணரலாம். நம்முடைய தர்ம சாஸ்திரம் அன்னதானத்தைப் பெரிதும் வலியுறுத்துகிறது. மணிமேகலை யில், "உன்பெரும் தானத்துறுபயன்...' என்னும் வரி வருகிறது. அதன்படி எல்லா தானங்களிலும் அன்னதானமே பெருந் தானம் என சாத்தனார் கூறுகிறார்.
மனித வாழ்க்கை இடையூறின்றி இயங்க உயிர் தேவை; அந்த உயிர் நிலைக்க உணவு தேவை. எனவேதான் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' (புறம் 2/18) என உணவு கொடுத்தவரைப் பெருமையாகச் சொல்வதுண்டு. கோதானம், வஸ்திரதானம், பூமிதானம், சுவர்ணதானம் எனப் பலவகையான தானங் கள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் முக்கியமானது அன்னதானமே! அன்னதானத்தை மனிதர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டுமென்பதில்லை.
சிறு எறும்புகள், பறவைகள், மிருகங்கள் என மற்ற உயிரினங்களுக்குச் செய்தாலும் அதற்கான புண்ணியப்பலன் நிச்சயமுண்டு. அதேபோல் முற்பிறவியின் கர்மவினையும், தோஷமும் விலகுமென சாஸ்திரங்கள் சொல்கின்றன.
எல்லாவிதமான தானங்களையும் செய்த கொடைவள்ளலான கர்ணன் தன் வாழ்நாளில் அன்னதானத்தை மட்டும் செய்யாமல் விட்டதன் பயனை சொர்க்க லோகம் சென்ற பின்னர் உணர்ந்ததாக மகாபாரதத்தில் ஒரு கதையுண்டு. செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றும், கல்வி, ஞானத்திற்கு அதிபதி சரஸ்வதி என்றும் சொல்வதுபோல அன்னத் திற்கு (உணவு) அதிபதியாக அன்னபூரணியைச் சொல்வதுண்டு. "அன்னம்' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உணவு, "பூரணம்' என்பதற்கு முழுமை அல்லது நிறைவு எனப் பொருள். அன்னபூரணி தேவியை வழிபட்டால் நமக்கு நிறைவான அன்னம் கிட்டும் என்பதில் ஐயமில்லை. முழுமுதற்கடவுளான சிவபெருமானே அன்னபூரணி எனப் போற்றப்படும் பார்வதி தேவியிடம் உணவை ஏந்திப்பெற்றார் என்பதை புராணக் கதைமூலம் அறியலாம்.
"ஸ ஈக்ஷதேமே நு லோகாச்ச லோகபாலாச்ச
அன்னமேப்ய: ஸ்ருஜா இதி//'
(உலகில் வாழும் உயிர்களுக்கு உணவை நான் உண்டாக்குவேன் என இறைவன் நினைத்தார்).
இறைவன்தான் முதலில் உணவைப் படைத்தார் என்பதை ஐதரேய உபநிடத மந்திரம் தெரிவிக்கிறது. இறைவனின் திருவருளால் கிடைத்ததுதான் உணவு. உலகில் வாழும் சகல ஜீவராசிகளுக்கும் உணவு முக்கியமான ஒன்று என்பதால், உணவை இறைவனுக்கு இணையாக மதிக்கும் கலாச்சாரம் நம்மிடையே தொன்றுதொட்டு இருந்துவருகிறது. எனவேதான் இறைவனையும், உணவையும் கண்டாலேயே அகமும் முகமும் மலர்கின்றன. உணவை உண்ணும் முன்னர் உணவைப் படைத்த இறைவனை தியானித்து அவனுக்கு நன்றியைச் சொல்லிவிட்டு சாப்பிடும் வழக்கம் இன்றும் உண்டு. உபநயனமானவர்கள் தினமும் சாப்பிடும் முன்னர் (மதியம், இரவு) "பரிசேஷணம்' குறித்த மந்திரத்தைச் சொல்லிவிட்டுதான் சாப்பிட வேண்டும் என்பது மரபு. இதன்மூலம் அன்னத் திற்கு அதிபதியான அன்னபூரணியை தினமும் வணங்குகிறோம்.
உக்ர வடிவமான ஸ்ரீதுர்க்காதேவி பக்தர்களுக்கு சாந்த வடிவில் காமாட்சி யாகவும், மீனாட்சியாகவும், அன்னபூரணி யாகவும் காட்சியளிக்கிறாள். மூகபஞ்சசதியில், மூககவி ஒரு சுலோகத்தில் "காமாட்சியேதான் காசி அன்னபூரணி' எனச் சொல்கிறார். புனிதமான, பழமையான காசி நகரின் அதிதேவதையாக இருப்பவர் விசாலாட்சுமி, அன்னபூரணி சமேத விஸ்வேஸ்வரர். இவருடைய ஆலயத் துக்கு சுமார் 200 அடி தூரத்தில் அன்னபூரணி ஆலயம் அமைந்துள்ளது. இப்பொழுது இருக்கும் சிறிய கோவிலானது 1729-ஆம் ஆண்டு பேஷ்வா பாஜிராவ் என்ற மராட்டிய மன்னரால் கட்டப் பட்டது. பழமை யான கோவில் முஸ்லிம் மன்னர் களால் தகர்க்கப் பட்டது.
இவ்வாலயத்தில் ஒருகையில் அட்சயப் பாத்திரமும், மறுகையில் கரண்டியையும் வைத்துக்கொண்டு அன்னபூரணி அருள் பாலிக்கிறாள். அன்னபூரணி தங்க விக்ரகத் துக்கு முன்னாலிருக்கும் ஸ்ரீமேரு சக்ரத் திற்குதான் அர்ச்சனை செய்யப்படுகிறது. தீபாவளி சமயத்தில் லட்டு கொண்டு செய்யப்படும் சிறிய ரதத்தில் அன்னபூரணி பவனி வருகிறாள். ஆதிசங்கரர் ஒவ்வொரு மூர்த்திக்கும் பலப்பல ஸ்தோத்திரங்களை இயற்றி, அந்த மூர்த்திக்குரிய தியான சுலோகத் தையும் அருளினார். காசி விஸ்வேஸ்வரர், கால பைரவர் ஆகியோருக்கு தியான சுலோகம் இயற்றியதுபோன்று அன்னபூரணிக்கும்-
"நித்யானந்தகரீ வராபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோர பாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ
ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேஸ்வரீ'
எனத் தொடங்கும் துதிப்பாடலை இயற்றினார்.
ஸ்ரீஅன்னபூரணி காசியில் வீற்றிருப்பதால் காசி நகரில் உணவுக்கு என்றும் பஞ்சம் வந்ததில்லை. காசியில் வேத வியாசர் தனது சீடர்களுடன் ஆசிரமம் அமைத்து, அங்கு தங்கி தினமும் காசி விஸ்வேஸ்வரரையும், அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு பின்னர் தமது நித்தியப்பணி களைச் செய்யும் பழக்கத்தைக் கொண்டி ருந்தார். இவர்களுக்கு அந்த நகரில் வாழும் நகரவாசிகள் தினமும் பிக்ஷை (முனிவர்களை சாப்பிட அழைப்பது) அளித்து வந்தனர்.
பொதுவாக முனிவர் கள், துறவிகள் தங்களுக்குத் தேவை யான உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாமல், கிருஹஸ்தர்கள் (குடும்பத்தி னர்) தரும் பிக்ஷையைக் கொண்டுதான் சாப்பிடவேண்டும் என்னும் நியதியுண்டு.
ஒருநாள் காசி நகரில் வாழ்பவர்கள் எவரும் வேத வியாசரையும், அவரது சீடர்களையும் பிக்ஷைக்கு அழைக்கவில்லை. இப்படியே ஓரிரு தினங்கள் சென்றன. நகரவாசிகள் உணவு தராததால் வேத வியாசரும், அவரது சீடர்களும் பட்டினியாக இருந்தனர். இது தொடர்ந்ததால் அவர்களால் பசியைப் பொறுக்க முடியவில்லை. இது எப்படி என்றால், தீராப்பசியால் வாடிய சண்டிகைபோல இருந்தது என ஒப்பிடலாம். மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி அமுதை அளிக்க காயசண்டிகையின் பசி தீர்ந்தது.
காசியில் அன்னபூரணி, விஸ்வேஸ்வரர் கிருபையால் நல்ல வாழ்வு, உணவு, இறுதிக்காலத்தில் நிச்சயம் மோட்சம் (காசியில் இறந்தால் மோட்சம்) என்னும் அகந்தையால் எல்லாரும் தங்களை உதாசீனப் படுத்துவதாக நினைத்த வேதவியாசர், பசியின் கொடுமையால் காசிநகர மக்களை சபிக்க நினைத்தார். இதையறிந்த அன்னபூரணிதேவி ஒரு சாதாரணப் பெண் வடிவில் வேதவியாசரின் ஆசிரமத்திற்கு வந்து, தன் இல்லத்திற்கு உணவுண்ண வருமாறு அழைத்தாள்.
தீராப்பசியால் வாடியிருந்தவர்களுக்கு இந்த அழைப்பு மகிழ்ச்சியடையச் செய்தது. அனைவரும் அந்தப் பெண்மணியின் இல்லத்திற்கு வருகை தந்தபோது, அப்பெண் மணியும், அவளின் கணவரும் அன்புடன் உபசரித்து விருந்தளித்தனர். மிகச்சுவையுடன் பலவகையான உணவுப் பொருட்களைப் பெண்மணி பரிமாற, அனைவரும் விரும்பி உண்டனர். ஆனால் வேதவியாசர் மனதில் மட்டும் ஒரு ஐயம் இருந்துகொண்டே இருந்தது. இப்படி சுவையாக, பல பொருட் களை உடனுக்குடன் தருவது மட்டுமின்றி, இப்பெண்மணியை இதற்குமுன்பு காசியில் பார்த்ததே இல்லையே என எண்ணத் தொடங்கினார்.
பிறகுதான் அவருக்குத் தெரிந்தது- அப்பெண்மணி அன்னபூரணிதான்; மேலும் அவளுடைய கணவர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர்தான் என்பது! உடனே இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினார். பார்வதியும் சிவனும் காட்சியளித்தனர். ""என்னை நம்பி இங்கு வாழும் இந்த காசி நகரவாசிகளை உமது செருக்கினால் சபிக்க நினைத்தீர். எனவே இனி நீங்கள் காசியில் தங்கக்கூடாது'' என சிவபெருமான் கட்டளையிட்டார். பசியின் கொடுமையால் செய்த தவறுக்கு வேத வியாசர் மன்னிப்பு கேட்க, ""ஒரு பட்சத்தில் இரண்டு தினங்களான அஷ்டமி, சதுர்த்தி திதியில் மட்டும் காசிக்கு வரலாம். மற்ற நாட்களில் காசிக்கு வெளியே தங்கியிருக்க வேண்டும்'' என சிவபெருமான் சொன்னதால், வேதவியாசர் ஊருக்கு வெளியே "வியாச காசி' என்னுமிடத்தில் இன்றும் சிரஞ்சீவியாக ஏதோ ஒரு உருவத்தில் தங்கியுள்ளார் என்பது ஐதிகம். இந்த தகவல் காசி க்ஷேத்ர மஹாத்மியத்தில் உள்ளது. வியாச காசியை தற்சமயம் ராம்நகர் என்று அழைக்கிறார்கள்.
"தானத் ஸர்வ ஸ்மாதபி
அன்னதானம் விசிஷ்யதே'
என்னும் சாஸ்திரத்தின்படி, அன்னதானம் இறைவனுக்குச் செய்யும் வழிபாட்டில் சிறந்தது மட்டுமின்றி மற்றவற்றைவிட உயர்ந்தது.
"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறர் தயர்ந்த
வேற்றரைக் கண்டுளம் பதைத்தேன்'
எனப் பாடிய அருட்பிரகாச இராமலிங்க அடிகளாரின் ஜீவகாருண்ய கொள்கை, பசிப்பிணியைப் போக்கி, பசியின் தத்துவ மாகிய கடவுளை ஜோதி வடிவில் காணுதல் தான்.
அன்னத்தை உண்டாக்கியவருக்கே அளிப்பது நிவேதனம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்வது சைவ ஆகம மரபாகும். அன்று சிவலிங்கத்திற்கு புதிய அரிசியால் சமைத்த உணவை அவருடைய லிங்கத் திருமேனி முழுவதும் சாற்றி, அதில் காய்கறி, பழங்களை வரிசையாக அழகான முறையில் அடுக்கி வழிபடுவதுண்டு.
சமைத்த அன்னத்தை வீணாக்குவது பாவமாகும். தேவைக்கேற்ப சமைத்து அதைப் பகிர்ந்துண்ண வேண்டும். அதேபோன்று நம் சக்திக்கேற்றவாறு அன்னதானத்தைச் செய்தால் போதுமானது.
ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணாஷ்ட கத்தை தினமும் பாராயணம் செய்தால் வீட்டில் உணவுப் பொருட்களுக்கு நிச்சயம் குறையே வராது.