அதர்மம் தலைதூக்கும்போது மக்கள் படும் துன்பங்களைப் போக்க இறைவன் வெளிப்பட்டு துயரைத் துடைப்பார். இப்படி மக்களைக் காக்க பூமிக்குளிருந்து தானே வெளிப்பட்டு மக்களைப் பாதுகாத்து வருகிறார் நாகவல்லியம்மன் சமேத ஆதிசிவன்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு மேற்குப் பகுதியிலுள்ளது கொரக்கை கிராமம். இந்தப் பகுதியில் கொன்றைவேந்தன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்துவந்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஆதிசிவன், நாகவல்லியம்மன் கோவிலை உருவாக்கி வழிபட்டுவந்துள்ளனர். அச்சமயம் முஸ்லிம்களின் படையெடுப்பின்போது பல இந்துக் கோவில்கள் சூறையாடப்பட்டன. இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அதில் இந்தக் கோவிலும் தப்பவில்லை. முஸ்லிம் படையெடுப்பின்போது இப்பகுதி மக்கள் சிதறிப்போனார்கள். நகரமே தரைமட்டமாகிப் போனது.
சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு புலம்பெயர்ந்து வந்த மக்கள் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் இப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனின் பெயரால் கொற்கை என ஊருக்குப் பெயர் வைத்துள்ளனர். பிறகு காலப்போக்கில் மருவி குருக்கை என்றாகி, இப்போது கொரக்கை என்று அழைக்கப்படுகிறது.
இப்பகுதியை குறுநில மன்னர் ஆட்சிசெய்தார் என்பதற்கு உதாரணமாக "ஏந்தல்' என்ற ஊர் உள்ளது.
அரசன் இறைவனிடம் கையேந்துதல், பொறுமையில் சிறந்தோன் என்ற பொருளில் இப்பெயர் அமைந்துள்ளது. அருகில் உள்ளது பாளையம். அரசனின் படை பாசறையமைத்துத் தங்கும் இடத்திற்கு இப்பெயர் உண்டு. இப்படி கொரக்கையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்தற்கான ஆதாரங் கள் உள்ளன. தற்போது ஆதிசிவன், நாக வல்லியம்மன் கோவில் கொண்டுள்ள பகுதி முழுவதும் மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சிக்குரிய இடமாக உள்ளது கொரக்கை.
சில நூற்றாண்டுகளுக்குமுன்பு இங்கு குடியேறிய மக்கள் காடுகளைத் திருத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்படி நிலத்தில் உழுதபோது பூமி யிலிருந்து விநாயகர், நாகவல்லியம்மன், ஆதிசிவன் (சிவலிங்கம்), நந்தி, தண்டாயுதபாணி ஆகிய திருவுருவங் களோடு நடராஜர் உற்சவர் சிலையும் கிடைத்துள்ளது. அவை அங்கிருந்த வேப்ப மரத்தின் கீழிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்த வேப்பமரத்தின் அருகிலேயே அவற்றை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். ஒருசமயம் இங்கிருந்த நடராஜர் சிலையை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதனால் சிவபக்தர்கள் மிகுந்த வேதனையடைந்து, களவுபோன சிலையை மீட்கும்வரை உணவு அருந்துவதில்லை என்று விரதம் மேற்கொண்டனர். உணவுக்கு பதில் காடுகளில் கிடைக்கும் காரைப் பழம், சூரப்பழம், கோவைப்பழம், கிழங்கு வகைகளை உண்டு, களவுபோன நடராஜர் சிலையைக் கண்டுபிடிப்பதற்காக ஊர்ஊராகத் தேடிச் சென்றனர்.
சுமார் ஆறு மாதங்களுக்குப்பிறகு அரியலூர் ஜமீன் வீரர்கள் சிலை திருடர்கள் பலரைப் பிடித்தோடு, அவர்களிடமிருந்து ஏராள மான சிலைகளைப் பறிமுதல் செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிவபக்தர்கள் அரியலூர் சென்று ஜமீன்தாரை சந்தித்து, தங்கள் ஊர் நடராஜர் சிலை களவுபோனது குறித்து விவரம் சொல்லி, தங்கள் நடராஜர் சிலை அதிலிருந்தால் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது ஜமீன்தார், ""கள்வர்களிடமிருந்து ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு குவியலாக உள்ளன. அதில் உங்கள் நடராஜர் சிலையை எப்படித் தேடி எடுக்கமுடியும்'' என்று கேட்க, அதற்கு சிவபக்தர்கள், ""எங்கள் நடராஜர் மிகவும் சக்திவாய்ந்தவர். சிலையைத் திருடிச் சென்றவர்கள் எங்கெல்லாம் கொண்டு சென்றார் களோ, அந்தப் பகுதியைச் சுற்றிலும் மழைபெய்யாமல் வெயில் அடித்திருக்கும். இது அரியலூர் ஜமீனிலும் நடந்துள்ளது. அவரைப் பற்றி நாங்கள் பதிகம் பாடினால் அவர் தானே வெளியே வருவார்'' என்று கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு வியப்படைந்த ஜமீன்தார், ""நீங்கள் கூறியபடியே பதிகம் பாடுங்கள். சிலை வெளியே வந்தால் தாராளமாக எடுத்துச் செல்லுங்கள்'' என்று கூறியுள்ளார். சிவபக்தர்கள் நடராஜரை வேண்டி மனமுருகப் பதிகம் பாடினார்கள். அவர்கள் பாடிமுடிப்பதற்குள் நூற்றுக்கணக்கான சிலைகளுக்கு அடியிலிருந்த நடராஜர் இரு விரல்களையும் உயரே தூக்கியபடி சிலைக் குவியலுக்குள்ளிருந்து மேலே வந்துநின்றார். இந்தக் காட்சியைக் கண்டு ஜமீன்தார் உட்பட அங்கிருந்தவர்கள் மெய்சிலிர்த்தனர். அங்கேயே அவருக்கு வழிபாடு செய்தனர். பின்னர் அந்த நடராஜர் சிலையை சிவபக்தர்களிடம் கொடுத்தோடு, அவர்களுக்கு ஊருக்குச் செல்லும்வரை பாதுகாப்பிற்கு வீரர்களையும், சமைத்து சாப்பிட உணவுப் பொருட்களையும் கொடுத்தனுப்பியுள்ளார் ஜமீன்தார்.
சிலையோடு தங்கள் ஊரான கொரக்கை நோக்கி வந்த சிவபக்தர்கள், வெள்ளாற்றங் கரையை அடைந்தனர். .அங்கே ஆற்றில் குளித்துவிட்டு சமையல் செய்து, தங்கள் ஆறுமாதகால விரதத்தை முடித்தனர்.
அங்கிருந்து தங்கள் ஊரைநோக்கிக் கிளம்பும்போது, நடராஜர் சிலை அசரீரியாக, "பக்தர்களே, எனக்கு வெள்ளாறும் இதன் கரையும் மிகவும் பிடித்துள்ளது. எனவே நான் இங்கேயே கோவில்கொள்ள விரும்புகிறேன். ஏற்கெனவே நான் இருந்த இடத்திலிருந்து நேர்க்கோட்டில் நூல்பிடித்து, அங்கே சிவலிங்கத்தை வைத்து வழிபடுங்கள். என்னை இங்குள்ள ஆலயத்தில் வைத்து வழிபடுங்கள்' என்று உத்தரவிட்டது.
அந்த வெள்ளாற்றங்கையில் சு.ஆடுதுறை என்ற ஊரில் சிவபெருமான் குற்றம்பொறுத்த ஈஸ்வரராக கோவில் கொண்டிருந்தார்.
அங்கே நடராஜர் சிலையை சிவபக்தர்கள் ஒப்படைத்தனர். அதே நேர்க்கோட்டில் கொரக்கையில் சிவலிங்கத்தை ஆதிசிவனாக வைத்துவழிபட ஆரம்பித்தனர். அப்போது முதல் ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்கள், பிரதோஷ வழிபாடு ஆகிய நிகழச்சிகளில் கொரக்கை யைச் சேர்ந்தவர் களுக்கு முதல் முக்கியத்துவம் அளித்துவந்த னர். காலப் போக்கில் அவை மாறி போயுள்ளன.
தற்போது கொரக்கையில் கண்டெடுக் கப்பட்ட சிவலிங்கத்தை ஆதிசிவனாகவும், அம்பாளை நாகவல்லியம்மனாகவும் பிரதிஷ்டை செய்து, சிறிய அளவில் கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார்கள். அப்பகுதி நத்தமேடு என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாலய இறைப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள சாந்தப்பன், ""எங்கள் முன்னோர் கள் இங்குள்ள வேப்பமரத்தின் அடியில் வைத்து திறந்தவெளியில் வழிபாடுசெய்தனர்.
சில ஆண்டுகளுக்குமுன்பு சிறிய அளவில் கோவில் எழுப்பி வழிபட்டுவருகிறோம். பிரதோஷம், மகாசிவராத்திரி, ஆடிமாத நாகசதுர்த்தி, வைகாசி விசாகம், ஆருத்ரா தரிசனம் போன்ற சமயங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
இங்குவந்து வழிபடுகிறவர்கள் அனைத்து தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி பெறுகிறார்கள். பௌர்ணமியன்று தியானம் செய்பவர்கள் மனஅமைதி, நோயற்ற வாழ்வு பெற்று, குழப்பங்கள் நீங்கி வாழ்வில் வெற்றிபெறுகிறார்கள். மற்ற பகுதிகளில் மழையில்லாமல் வறட்சி காணப்பட்டாலும் இப்பகுதியில் மழைபெய்யும். பயிர்கள் செழித்து வளர்ந்து மகசூல் கொடுக்கும். பொதுவாக வேப்பமரங்கள் இலையுதிர் காலத்திற்குப்பிறகு ஒருமுறை மட்டுமே பூப்பூத்து காய்காத்து பழங்களைக் கொட்டும். ஆனால் இங்கு தலவிருட்சமாகவுள்ள இறைவன் தோன்றிய வேப்பமரம், ஆண்டு முழுவதும் பூப்பதும் காய்பதும் பழம் உதிர்வதுமாக உள்ளது. இது வேறேங்கும் காணாத அதிசயம். நாகவடிவத்தின்கீழே அம்மன் உள்ளது போன்ற வடிவத்தை வேறெங்கும் காண்பதரிது. இவ்வாலயத்தில் விநாயகர், முருகன், அருமையான வேலைப் பாடுகளுடன்கூடிய நந்தீஸ்வரர், நவகிரக சந்நிதிகள் உள்ளன. காவல் தெய்வங்களாக வீரபத்திரர், ஐயனார் ஆகியோர் பழையகால சிற்பங்களாக உள்ளனர். அவர்களையும் வழிபட்டுவருகிறோம்'' என்றார்.
இவ்வாலயப் பணிகளில் முழுமனதோடு தன்னை அர்ப்பணித்துக்கொண்டே திருமதி புனிதவதி, ""இவ்வாலய இறைவனையும் நாகவல்லியம்மனையும் நாடிவந்து வழிபடுவோர்களுக்கு நல்லதே நடந்துவருகிறது. சிறுமுளையைச் சேர்ந்த தம்பதிகளுக்கு பத்து ஆண்டுகளாக குழந்தைபாக்கியமில்லை. இங்குவந்து சர்க்கரைப் பொங்கல் படையலியிட்டு வழிபாடு செய்தனர். மகாசிவராத்திரி இரவு முழுவதும் இங்கு தங்கி வழிபட்டனர். ஓராண்டுக்குள் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைத்தது. அதேபோன்று சிறுநீரகம் செயலிழந்து "இவர் இனி பிழைக்கமாட்டார்' என்று மருத்துவர்கள் கைவிட்ட ஒருவரை இங்கே கொண்டுவந்து அமரவைத்து வழிபாடு செய்தனர். அவர் பிரதோஷ காலங்களில் தவறாமல் வந்து வழிபாடுசெய்தார். தற்போது அவர் நல்ல உடல்நலத்தோடு விவசாய வேலை செய்துவருகிறார். அதேபோன்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் 48 நாட்கள் இங்கு தொடர்ந்து வந்து, இறைவனுக்குக்கும் நாவல்லியம்மனுக்கும் அகல்விளக்கேற்றி வழிபட்டுவந்தார். தற்போது அவர் பூரண உடல்நலம் பெற்றுள்ளார். தவறாமல் 48 நாட்கள் அகல்விளக்கேற்றி வழிபடும் பக்தர்கள் அனைத்திலும் வெற்றிபெறுகிறார்கள்.
இவ்வாலயம் சிறியது; இறைவன்- இறைவியின் சக்தி மிகப் பெரியது என்பதை இங்குவந்து வழிபட்டுப் பலன்பெற்றவர் கள் கூறுகின்றனர். பௌர்ணமி நாட்களில் சிவனடியார்கள் இக்கோவிலிலுள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்து தியானம் மேற்கொள்கின்றனர். அதனால் மனரீதியாக, உடல்ரீதியாக பல நன்மைகள் அடைகின்றனர்.
நெல்லிலிருந்து உமியை நீக்கிவிட்டு விதைத்தால் முளைக்காது. உமி நீக்காத நெல்லை விதைத்தால்தான் அது விளைந்து உணவாக மாறும். அதேபோல் இறைவனும் இறைவியும், அரிசியும் உமியும் பிரிக்கமுடியாதது போன்று மனிதர்களின் மனதில் இறைபக்தியை விதைக்கிறார்கள்.
அவர்களை வழிபட்டு நல்ல எண்ணங்களோடு மற்றவர்களுக்கும் உதவியாக வாழவேண்டும்'' என்கிறார்.
இவ்வாலயத்தின் அருகில் பிரசித்தி பெற்ற வெங்கனூர் கம்பம் பெருமாள் எனும் வரதராஜப் பெருமாள் கோவிலுள்ளது. இவரை வழிபடுவதற்குப் பல மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
சு.ஆடுதுறை குற்றம்பொறுத்த ஈஸ்வரர் கோவில், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் ஆகியவை அருகருகில் அமைந்துள் ளன. அங்கேவந்து வழிபடும் பக்தர்கள் கொரக்கையிலுள்ள ஆதிசிவன், நாகவல்லி யம்மனையும் வழிபட்டுப் பலன்பெற அழைக்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம்- தொழுதூர் சாலையில், பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது ஆதிசிவன் ஆலயம். அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
தொடர்புக்கு: அலைபேசி: 96268 79126