மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 12-ஆம் தேதிவரை 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே, கடந்த மாதம் காணப் பட்ட வீண்விரயங்கள், மருத்துவச் செலவுகள் இம்மாத முற்பகுதி வரை காணப்படும். சிலருக்குப் பொருளாதாரத் தேவைகள் கடைசிநேரத்தில் பூர்த்தியாகும். ராசிநாதன் ஆட்சியான பிறகு இந்நிலையில் மாற்றங்கள் நிகழும். திடீர்ப் பயணங்கள் ஏற்பட்டு அதன்மூலம் அலைச்சல் உருவாகலாம். ஜென்ம ராசியைப் பாக்கியாதிபதி குரு ஆட்சிபெற்றுப் பார்ப்பதால் கௌரவம், அந்தஸ்து, கீர்த்தி ஆகிய எல்லாம் சிறப்பாக செயல்படும். 3-ஆமிடத்தை குரு பார்க்கும் காரணத்தால் சகோதரவழியில் சகாயம் உண்டாகும். சகோதர- சகோதரிகளின் திருமண முயற்சி கள் கைகூடும். திருமணமான பின்பும் கணவருடன் சேர்ந்து வாழாமலிருக்கும் உடன்பிறப்புகள் மனம் மாறி இணைந்துவாழும் சூழல் உருவாகும். சகோதரிகளால் உங்களுக்கும், உங்களால் சகோதரிகளுக்கும் நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாதம் முழுவதும் 2-ல் இருக்கிறார். அவருடன் ராகு, குரு, கேது, சனி சம்பந்தம். வாழ்க்கையில் சில போராட்டங்கள், சில ஏமாற்றங்கள், சில இன்னல்கள், இடைஞ்சல்கள் ஆகியவற்றை சந்திக்கும் நிலை ஏற்பட்டாலும், குரு ராசிநாதன் சுக்கிரனைப் பார்ப்பதால் இவற்றையெல்லாம் சமாளிக்கும் ஆற்றலும் உருவாகும். தவிர்க்கமுடியாத விரயச்செலவுகளும் ஏற்படும். அந்தச் செலவுகளை சமாளிக்கும் வகையில் தனவருமானமும் வரும். 2-ஆமிடம் வித்தை, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். செலவழிக்கும் யோகம் இருக்கிறதெனில் வரவுக்கும் வழிபிறக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வரவாகவும், சிலருக்கு உழைத்து சம்பாதிக்கும் யோகமாகவும் அமையும். சிலருக்கு முன்னோர்வழி சேமிப்பாகவும் இருக்கும். 4-ஆமிடத்தை குரு பார்க்கிறார். இதனால், தாய்சுகம், தன்சுகம், வீடு, வாகனவகையில் நற்பலன்கள் அடையலாம். ராஜகாரியங்களில் வெற்றிபெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 13-ஆம் தேதிவரை 2-ல் இருக்கிறார். பிறகு, 3-ஆமிடமான சிம்மத்திற்கு மாறுகிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானமென்றாலும், சூரியனோடு நெருங்கிப் பயணம் செய்கிற புதனை மறைவு தோஷம் பாதிக்காது. மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது ஜோதிடப் பழமொழி. ஜென்ம ராசியிலுள்ள ராகு உங்கள் செயல்களில் தேக்கநிலைகளையும், தாமதங்களையும் உருவாக்கினாலும் அவை குரு பார்வையால் விலகும். 7-ல் உள்ள சனி கணவர்- மனைவிக்குள் சச்சரவுகள், வாக்குவாதங்களைத் தோற்றுவிக்கலாம். எனினும் பிரிவு ஏற்படாது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வதன்மூலம் சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற் றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். நீண்டகாலமாக நிலவும் இடத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும். பாகப் பிரிவினைகள் தங்குதடையின்றி நிகழும்.
கடகம்
கடக ராசிக்கு 6-ல் இருக்கும் குரு, சனி, கேதுவுடன் ராகு சம்பந்தம். சிலர் நொய்நொடி, உடல் உபாதைகள் ஆகியவற்றால் மன உபாதைகளையும் சந்திக்கநேரும். 11-க்குரிய புதன் இம்மாதம் 13-ஆம் தேதிமுதல் 2-ஆமிடத்துக்கு மாறுகிறார். 2-க்குரிய சூரியனும் 17-ஆம் தேதிமுதல் ஆட்சிபெறுகிறார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றிலெல்லாம் சிறப்பான பலன்களை சந்திக்கலாம். 10-ஆமிடத்தை குரு பார்க்கிறார். எனவே, தொழில் முன்னேற்றம், வேலை யோகம், உத்தியோக வாய்ப்பு போன்ற நற்பலன்கள் அமையும். தொழில்துறையில் சீர்திருத்தங்கள் யோகமான திருப்பத்தை உண்டாக்கும். தனவருமானம் பெருகும். அதிக உழைப்பிருந்தும் அதற்கான வருமானமில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அந்நிலை மாறும். தொழில் இயக்கம் லாபத்தைத் தரும். குடும்பச் சூழ்நிலையில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். அலைச்சலும் பயணமும் இருந்தாலும், அதில் பயனும் பலனும் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 16-ஆம் தேதிவரை விரய ஸ்தானத்தில் இருக்கிறார். சங்கடங்களையும் பிரச்சினைகளையும், வீண்விரயங்களையும் சந்திக்கநேரும். சிலருக்குப் பிள்ளைகள்வகையில் கவலையும் வருத்தமும் ஏற்படலாம். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலையில்லாத் தொல்லையும், பெற்றோருக் கும் பிள்ளைகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகலாம். 5-ல் உள்ள சனியும் கேதுவும் இவற்றை உருவாக்கினாலும், 5-க்குரிய குரு 5-ல் ஆட்சிபெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். எனவே, மலைபோல வரும் துன்பம் பனிபோல விலகிவிடும். தொழிலில் லாபகரமான சூழல் 17-ஆம் தேதிமுதல் தென்படும். 17-ஆம் தேதி சூரியன் ஆட்சிபெறுகிறார். உங்களது செயல்பாடுகளை முழுமையாகப் பூர்த்திசெய்து தருவார். எதிர்காலத் திட்டங்களையும் கனவுகளையும் நனவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் 11-ஆமிடத்தில் சஞ்சரிக்கி றார். தொழில்துறையில் லாபமும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். சிலர், வெளியூர் அல்லது வெளிமாநில வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம். 4-ல் ஆட்சியாக இருக்கும் குரு வீடு, வாகனம் ஆகியவற்றில் நற்பலன்கள் தருமென்றா லும், சனியும் கேதுவும் அங்கிருப்பதாலும், ராகு சம்பந்தம் பெறுவதாலும் தடை, தாமதம் ஆகியவற்றையெல்லாம் சந்தித்துப் போராடவேண்டியிருக்கும். ஜனன ஜாதகத்தில் தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், இவற்றிலிருந்து விதிவிலக்குடன் தப்பிக்கலாம். அதாவது, கொரோனா ஊரடங்கு காலத்திலும் இ-பாஸ் பெற்றுச் செல்வதுபோல. தொழில், வாழ்க்கைப் பிரச்சினை ஆகியவற்றுக்காக சிலர் கடன்வாங்க நேரிடும். அவற்றை நாணயத் துடன் அடைத்து நன்மதிப்புப் பெறலாம்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். 3-ல் குரு ஆட்சி, ராகு- கேது, சனி சம்பந்தம். சுக்கிரனுக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. 3-ஆமிடம் தைரியம், வீரியம், சகோதர ஸ்தானம். எனவே, உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகவே இருக்கும். 9-க்குரிய புதன் 13-ஆம் தேதிமுதல் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். 17-ஆம் தேதிமுதல் சூரியன் 11-ல் ஆட்சி. ஆகையால், தொழில்துறையில் எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். தெய்வ அனுகூலமும் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்புகள் ஏற்படும். கணவர்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டாகும். சலசலப்பு மாறி கலகலப்பு உருவாகும். திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமண யோகம் அமையும். சிலருக்கு இடையிடையே தடையும் தாமதமும் குழப்பத்தை உண்டாக்கினாலும், வைராக்கியத்தாலும் விடாமுயற்சியாலும் அவற்றை முறியடித்து வெல்லலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ஆம் தேதிமுதல் 8-ல் மறைந்தாலும் ஆட்சிபெறு கிறார். எனவே, மறைவு தோஷம் பாதிக்காது. செவ்வாய், விருச்சிக ராசியைப் பார்க்கிறார். வேலை, வருமானமில்லாமல் இருக்கும் நிலை மாறி, வருமானத்திற்கு வழிபிறக்கும். ஏழரைச்சனியின் கடைசிக்கூறு நடக்கிறது. ஜனன ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால்- அதாவது, சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள் ஏமாற்றம், இழப்பு, அவப்பெயர் போன்றவற்றை சந்திக்கநேரும். எல்லாரிடமும் கடன் வாங்கி ஓடிஒளிந்த நிலையையும் சனி தந்தார் என்பதில் சந்தேகமில்லை. 2-ல் உள்ள குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் இயக்கம் தடைப்படாது. தேகசுகம் நன்றாக இருக்கும். போட்டி, பொறாமை இருந்தாலும் பாதிக்காது. சமாளித்து ஜெயிக்க லாம். ஏழரைச்சனியின் ஆரம்பத்தில் கஷ்ட நஷ்டங்களை சந்தித்தவர்கள், கடைசிக்கூறில் நற்பலன்களையும் நல்வாழ்வையும் சந்திக்கலாம்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சி. அவருடன் சனி, ராகு- கேது சம்பந்தம். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்குசனி, இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்குப் பொங்கு சனி, மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனி. இதில், மரணச்சனி எனில் மரணம் நிகழும் என அர்த்தமல்ல. மரணத்திற்கு நிகரான வேதனையும் கஷ்டமும் ஆகும். என்றாலும், ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் மேற்கண்ட பலன்கள் பாதிக்காது. சிலர் குடியிருப்பு மாற்றம், சிலர் வேலையில் இடமாற்றம், சிலர் வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஆகியவற்றை சந்திக்கலாம். 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும். 5-க்குரிய செவ்வாய் ஆட்சி. எனவே, குருமங்கள யோகம் செயல்படும். கணவர்- மனைவிக்குள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் அதிகமாகும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. வீண்விரயங்களும் அலைச்சல்களும் இருக்கத்தான் செய்யும். என்றாலும், மகர ராசிநாதன் சனி என்பதால் பாதிப்புகள் பெரியளவில் ஏற்படாது. 4-க்குரிய செவ்வாய் 4-ல் ஆட்சி. பூமி, வீடு, மனை சம்பந்தமான திட்டங்களை செயல்படுத்தலாம். சிலர் வீடுகட்டுவதற்கு வங்கிக்கடன் அல்லது தனியார் வங்கிக் கடனுதவியை நாடலாம். விரயத்தை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளலாம். 8-ல் சூரியன் 17-ஆம் தேதிமுதல் ஆட்சிபெறுகிறார். அரசு சம்பந்தப்பட்ட முயற்சி கள் தள்ளிப்போகலாம். சிலருக்கு தாயார் வகையில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குரு 12-ல் நின்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் இவற்றுக்கு நிவர்த்தியுண்டாகும். தொழில்துறை யில் ஏற்படும் தொய்வுகள் படிப்படியாக விலகும். குருவருள் துணைபுரியும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 11-ல் சனி நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே, உங்களது முயற்சிகளும் செயல்பாடுகளும் வீண்போகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரத்தில் ஏற்றமுண்டாகும். கும்ப ராசிக்கு 6-ஆமிடத்துக்கு 6-ல் குரு நிற்பதால் போட்டி, பொறாமை, எதிரி, கெடுபலன்கள் மறையும். குடும்பம், தனம், வாக்கு போன்றவற்றிலும் சிறந்த பலன் அமையும். மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைந்து, ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் உருவாகும். மாதப் பிற்பகுதியில் 7-ல் சூரியன் ஆட்சி. கணவர்- மனைவிக்குள் கருத்து வேற்றுமைகள் மாறும். 5-ஆமிடத்தை குரு பார்க்கிறார். உங்களது எண்ணம், திட்டம், மகிழ்ச்சி ஆகிய யாவும் குறைவில்லாத நிறையாக செயல்படும். குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என ஆனந்தம் பாடலாம்.
மீனம்
மீன ராசியில் சஞ்சாரம் செய்த செவ்வாய் 12-ஆம் தேதிமுதல் 2-ல் ஆட்சிபெறுகிறார். 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். அந்த இடத்தை ராசி நாதன் குருவும் பார்க்கிறார். எனவே, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனைவி, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வாய்ப்பும் சூழலும் அமையும். வெளிவட்டாரத்தில் நன்மதிப்பும் பெறலாம். 17-ஆம் தேதிமுதல் 6-க்குரிய சூரியன் 6-ல் ஆட்சிபெறுகிறார். உங்களது முயற்சிகளிலும் செயல்பாடுகளிலும் சிறிது தேக்கம் ஏற்பட்டாலும், சிம்ம ராசியையும் சூரியனையும் குரு பார்ப்பதால் தடைகள் விலகி செயல்களைப் பூர்த்திசெய்யலாம். என்றா லும், தாமதநிலைகளைத் தவிர்க்கமுடியாது. தொழில்துறையில் சிலர் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். அது நல்ல மாற்றமாகவும் அமையும்.