பஞ்சபூத இயற்கை சக்திகளின் பணிகளும், அவற்றால் சகல உயிரினங் களும் அடையக்கூடிய பயன்களும் அளப்பரியவை. கண்களால் காணமுடியாத பஞ்சபூத சக்தியானது மனிதர்களின் உடல், உணர் வோடு ஒன்றி அவர்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவுசெய்வதால்தான் பூமியில் மனிதர்களால் வாழமுடிகிறது. பிரபஞ்ச சக்திக்குக் கட்டுப்பட்டு மாபெரும் நற்பலன்களை வாரிவழங்கும் பஞ்சபூதங்கள் சில நேரங்களில் தனித்தனியே சீற்றமடைகின்றன. அப்படிப் பட்ட நேரங்களில் அவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த முடிவதில்லை; அவற்றின் சீற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் முடிவதில்லை.
ஆனால் மனிதர்கள் இதைப் பற்றியெல்லாம் சிந்திக் காது, இயற்கைக்கு மாறாக, இடையூறாக செயல்படுவதால் தான் அவ்வப்போது பேரழிவும் கொடூர நோய்களும் தாக்குகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.
உலகில் மிகப்பெரிய வல்லரசாக இருந்தாலும் இயற்கையை மிஞ்சி எதுவும் செய்யமுடியாது. அப்படி இருக்கும்போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்? எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதால் மேன்மேலும் விபரீதங்களும் பேரழிவுகளும் அகால மரணங்களும் பொருள் சேதங்களும் சம்பவிக்கின்றன.
மேலும் எந்தவொரு விஞ்ஞான வளர்ச்சி யைப் பயன்படுத்தி வருகிறோமோ அவையனைத் தும் சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கி மனிதனை அடக்கி ஒடுக்கிவிடும். இப்பொழுது நாம் சென்று கொண்டிருப்பது வளர்ச்சிப் பாதை என நினைத்தாலும், இயற்கை சீற்றங்களால் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால் தனிமனித பாதிப்புடன் உலகின் ஒட்டுமொத்த பாதிப்பால் பல முன்னேற்றங்களும் தடைப்படுகின்றன. இதை அறிந்ததனால்தான் நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தி பல்வேறு இயற்கை சீற்றங்களைத் தணித்தார்கள்.
காவல் தெய்வமென்பது ஒரு ஊரைக்காத்து வரும் சிறிய தெய்வம்.காவல் தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயங்கள் எல்லாம் சிறியதாகவே இருக்கும். ஆனால் திருவிழாக்காலங்களில் அந்தப் பகுதியே களைகட்டும். அந்த தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், ஆடைகள், அபிஷேக ஆராதனைகள் என்று எல்லாமே சிறப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் தற்போது மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலைமுத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, மாடன், வீரன் என பல காவல் தெய்வங்கள் உண்டு.
பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர் களைக் காப்பதில் மாரியம் மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தாய்க்குச் சமமாக வேறு எவரைச் சொல்லமுடியும்?மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது. ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் மாரியம்மன்தான் மக்களைக் காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.
ஸ்ரீ பிலவ வருடம், 17-7-2021 சனிக் கிழமையன்று ஆடி மாதம் ஆரம்பமாகிறது. மனிதர்களின் நன்மைக்காகவும், பஞ்சபூத சாந்திக்காகவும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் சிறப்பு மிகுந்த பண்டிகைகளை இங்கு காணலாம்.
மங்கள கௌரி விரதம்
பொதுவாக ஆடி மாதம் அம்மனுக் குரிய மாதம் என்பதால் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும். ஆடி மாதங்களில் வெள்ளிக் கிழமைகள் மட்டுமல்ல; செவ்வாய்க் கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள்பூசிக் குளித்து, சிவப்புநிற ஆடையணிந்து, வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி, வாசனை மலர்கள், செந்நிற மலர்கள் அல்லது செண்பக மலர்கள் சாற்றி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு படைத்து அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதத்தைக் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களைத் தரும்.
மிகக் குறிப்பாக காலை 8.00-9.00 மணிவரையிலான சுக்கிர ஓரை மற்றும் மதியம் 3.00-4.30 மணிவரையிலான ராகு வேளையில் வழிபட வேண்டும். இயன்றவர்கள் அன்னதானம் மற்றும் சிவப்புத் துவரை தானம் செய்யலாம். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் கொடுக்கவேண்டும்.
இதனால் ஜாதகத்திலுள்ள செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். பதினாறு பேறும் கிட்டும். ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய், ராகு- கேது சம்பந்தத்தால் ஏற்படும் இன்னல்கள் தீரும்.
ஆடி வெள்ளி
ஆடிமாத வெள்ளிக்கிழமைகளுக்குத் தனிச்சிறப்புண்டு.
பொதுவாக ஆடிமாத வெள்ளிக் கிழமைகளில் திருமணமான பெண்கள் விரதமிருந்தால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தவை.
முதல் வெள்ளிக்கிழமை- ஆடி 7 (23-7-2021)
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையானது ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்குரியது. பார்வதி தேவியின் அம்சமான ஸ்வர்ணாம்பிகையை மனமுருக வேண்டினால், வீட்டில் பொன்,பொருள் சேர்க்கை பெருகும். அடமான நகைகள் மீண்டுவரும்.
இரண்டாம் வெள்ளிக்கிழமை- ஆடி 14 (30-7-2021)
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் அம்சமான அங்காளம்மனை பூஜைசெய்து வணங்கிவந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும் வீரமும் அதிகரிக்கும்.
ஜாதகத்தில் சுக்கரன், சனி சேர்க்கையால் ஏற்படும் இடர்ப்பாடுகள் தீரும்.
மூன்றாம் வெள்ளிக்கிழமை- ஆடி 21 ( 6-8-2021)
ஆடிமாத மூன்றாம் வெள்ளிக்கிழமை யானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது. பார்வதி தேவியின் மற்றொரு வடிவமான காளிகாம்பாளை அந்த நாளில் வேண்டினால் தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். கொடிய நோய்த் தாக்கம் குறையும். தொழில் மற்றும் உத்தியோக அனுகூலம் உண்டாகும்.
ஜாதகத்தில் சனி, ராகு- கேது சேர்க்கையால் உருவாகும் இன்னல்கள் குறையும்.
நான்காம் வெள்ளிக்கிழமை- ஆடி 27 (13-8-2021)
ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக் கிழமையானது சக்தியின் அம்சமான காமாட்சியம்மனுக்கு உகந்தது. இந்த நாளில் அன்னையை வணங்கினால் சுற்றியுள்ள தீயசக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன், ராகு- கேது சம்பந்தத்தால் உருவாகும் சுக்கிர தோஷம் அகலும்.
பொதுவாக ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வரும். இந்த வருடம் நான்கு வெள்ளிக்கிழமைகள் மட்டுமே வருகின்றன. பெண்கள் ஆடி மாதத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் லலிதா சகஸ்ஹரநாமம், அபிராமி அந்தாதி படித்து, மகாலட்சுமிக்கு விரதமிருந்து பூஜைசெய்து, படையல் படைத்து, சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க, சுமங்கலி பாக்கியம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை, வழிபாடு செய்வதால் பொன், பொருள், செல்வம், பணச் சேர்க்கை கிடைக்கும். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினால் சுபகாரியம் நடக்கும்.
ஆடிமாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை முறையாகச் செய்தால், நீண்டகாலமாக தீர்க்கமுடியாத பல இன்னல் கள் தீரும். வெளியில் சொல்லமுடியாத அவமானங்கள், கஷ்டங்கள்கூட காணாமல் போய்விடும். காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் வீட்டுப் பூஜையறையில் இருக்கும் அம்மனின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றி, வாசனை மலர்கள் அணிவித்து, 'ஓம் சர்வசக்தி தாயே போற்றி' என்னும் மந்திரத்தை 108 முறை கூற, தீராத துன்பமென்று உங்களுக்கு எது இருக்கி றதோ அந்த பிரச்சினை தீரும். இதேபோல், ஆடிமாதம் வீட்டு வாசலில் வேப்பிலையை செருகி வைக்க, ஆடிமாதக் காற்றில் பரவும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நம் வீட்டிற்குள் நுழையாது.
ஆடி 1, சனிக்கிழமை (17-7-2021) துர்க்காஷ்டமி
துர்க்கை என்றால் துக்கத்தை நீக்குபவள் என்பதால் செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி, சிவப்பு மலர்களை சாற்றி, துர்காதேவி அஷ்டகம் பாராயணம் செய்வதால் துன்பம், துயரங்கள், கண்திருஷ்டி, எதிரிகள் தொந்தரவு விலகும்.
ஆடி 1-ஆம் நாள் சனிக்கிழமையும், அஷ்டமி திதியும். சித்திரை நட்சத்திரமும் இணைந்து வருவதால் நாகதோஷம், பெண் சாபம், மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் மற்றும் ராகு தசை, ராகு புக்தி நடந்துகொண்டிருப்பவர்கள், ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு, பூஜை செய்வதால் பாதிப்புகள் குறையும்.
குரு பூர்ணிமா
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆடி 7 வெள்ளிக்கிழமை காலை 10.44 முதல், ஆடி 8 சனிக்கிழமை காலை 8.07 வரை பௌர்ணமி திதி உள்ளது. (23-7-2021 - 24-7-2021).
அதாவது தெலுங்கு வருடத்தில் வரும் ஆஷாட மாதப் பௌர்ணமி தினமே குரு பூர்ணிமா எனப்படும். ஆஷாட மாதம் என்பது தமிழ் வருடத்தில் ஆனி மாதத்தில் துவங்கி ஆடி மாதத்தில் முடியும். சில வருடங்களில் ஆஷாட பௌர்ணமி ஆனி மாதத்திலும், சில வருடங்களில் ஆடி மாதத்திலும் வரும்.
தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான அன்றைய நாளில், தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால், இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
மகாவிஷ்ணு ஹயகிரீவரராக அவதரித்து குருவாக இருந்து உபதேசம் செய்ததாகவும் கூறப் படுகிறது.
முருகப்பெருமான் குருவாக இருந்து "ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் ஆகிய மூவருக்கும் சொன்னதாகக் கூறப் படுகிறது.
வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் என்பதால், வியாச பகவானை முன்வைத்து குருபூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி, கலைகளைக் கற்றுத்தந்து ஞானம் வழங்கிய குருவினை மாணவர்கள் வணங்கவேண்டிய நாள். அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறவேண்டிய நாள்.
பாரதம் சொன்ன வியாசர், இராமாயணம் எழுதிய வால்மீகி, உபநிடதங் களுக்கு விளக்கமளித்த ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர், புத்தர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது சிறப்பு.
குருவருளும் திருவருளும் நிரம்பிய இந்த நாளில் கல்வியும் ஞானமும் வழங்கிய எல்லா குருமார்களையும் வணங்கி மானசீக வாழ்த்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் தியானமும் தவமும் சிறப்பானவை.
அங்காரக சதுர்த்தி- ஆடி 11 (27-7-2021)
செவ்வாய்க் கிழமை
ஒவ்வொரு பௌர்ணமிக்குப் பிறகும் வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தியாகும். செவ்வாய்கிழமையும், சங்கடஹர சதுர்த்தியும் இணைந்த நாளானது அங்காரக சதுர்த்தி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ, சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானது.
அங்காரக சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபடுவதால் சங்கடங்கள் தீருவதோடு, செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும். மீளாத கடனால் அவதிப்படுபவர்கள் அன்றைய தினம் விநாயகரை வழிபட கடன் தொல்லை தணியும். கடன் தீர்க்கவும் உகந்த நாள். மேலும் சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், சில நோய்களும் நீங்கும்.
ஆடிப்பெருக்கு- ஆடி 18 (3-8-2021)
ஆடிப்பெருக்கு எனும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவமழையால் காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். இதைத்தான் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார் கள்.
உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யமுடியும். அதற்கு வற்றா நதிகளைத் தங்கள் கடவுளாகப் போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையைத் தொடங்குவார்கள். அன்று புனித நதிகளுக்கு சீர்செய்து வணங்கவேண்டும். நதிக்கரையிலுள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவார். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் வழிபட்டு தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்தால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமணத் தடை அகலும். ஜனனகால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும்.
ஆடி அமாவாசை-
ஆடி 23 (8-8-2021) ஞாயிற்றுக்கிழமை
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம், சந்திரனின் ஆட்சிவீடு. சூரியன் சிவாம்சம். ஆடி அமாவாசையின்போது சிவாம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்றுசேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான் ஆடி அமாவாசையானது வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத் தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அன்று நீர்நிலையில் பிதுர்பூஜை செய்து வேத விற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளி களுக்கு வசதிக்கேற்ப ஆடைதானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொண்டபின் வீட்டிற்கு வந்ததும், முன்னோர்களின் படங்கள்முன் தலைவாழை இலையில், பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் படையல் போட்டு வழிபட வேண்டும்.
அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும். இதனால் முன்னோர் களின் ஆசி கிட்டுவதுடன், வீட்டில் தீயசக்தி இருந்தால் அது விலகியோடும்.
அமாவாசை நாட்களில் பித்ருபூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி யின்மை போன்றவை ஏற்படும். முன்னோர் களுக்கு ஆடி அமாவாசையன்று சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி ஏற்படும்.
ஆடிப்பூரம்
ஆடி 25 செவ்வாய்க்கிழமை (10-8-2021) காலை 9.42 மணிக்கு பூர நட்சத்திரம் ஆரம்பித்து, ஆடி 26 புதன்கிழமை (11-8-2021) காலை 8.49 மணிவரை உள்ளது.
அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். ஆடிப்பூரத்தில் ஆண்டாள் பிறந் தாள் என்பதால், ஆண்டாளை நினைத்து திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடினால் திருமணத் தடை அகலும். மனம் விரும்பிய மணாளனை அடையலாம். ஜனனகால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்த வர்கள், ஆடிப்பூர நாளில் அம் பிகையை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும்.
நாக சதுர்த்தி- ஆடி 27 (12-8-2021) வியாழக்கிழமை
ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி யில் நாக சதுர்த்தி கொண்டாடப் படுகிறது. பித்ருதோஷம் இருப்பவர்களுக் குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாகதோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரம் பலிப்பது குறைவு. ஜாதகரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன்மூலம் ஏற்படும் தோஷம் ஏழு ஜென்மங்களுக்கும் தொடரும். கடுமையான தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதமாகும்.
நாகதோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். சில கணவன்- மனைவி பிரிந்துவாழ்வார்கள் அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது அல்லது உடல் ஊனமான குழந்தை பிறக்கும். ஒருசிலருக்கு தீராத நோய், பரம்பரை வியாதி, குடும்பத்தினர் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். நாக சதுர்த்தி விரதத்தை கணவர், குழந்தைகள் நலனுக்காகவும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
கடுமையான நாகதோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில், நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டை செய்து, அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும்.
மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள சர்ப்ப சிலைக்கு- நாகர் சிலைகளுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்யவேண்டும். பால் ஊற்றிவிட்டு தண்ணீர் ஊற்றி சிலையைத் தூய்மை செய்யவேண்டும். அதன்பிறகு நாகர் சிலையில் மஞ்சளை தலைமுதல் வால்வரை தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து, பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரித்து, பூ, அட்சதையுடன் சர்க்கரைப் பொங்கல், துள்ளு மாவு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி பூஜைசெய்தால் குடும்பத்தில் நிம்மதி பெருகும்.
அத்துடன் கணவர் மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும். தொழில் வளர்ச்சி, நல்ல வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கும். கடன்தொல்லை குறையும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்து கண்டம் நீங்கும்.
நாக தோஷத்தால் தடைப் பட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.
கருடபஞ்சமி- ஆடி 28 (13-8-2021) வெள்ளிக்கிழமை அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ் டிக்கப்படுகிறது. மற்றவர்களுக்குத் தீங்கிழைப் பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்தபின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.
கருடன், மகா பலமுடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.
மகாவிஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாகலி கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப்போல பலசாலியான, புத்திசாலியான ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர்.
பெண்கள் கருட பஞ்சமியன்று கௌரியம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பிருந்து பூஜைசெய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில் கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனி, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாகதோஷம் விலகும். விபத்து, நோய் நீங்கும். மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாகவும் திகழும் கருட பகவானுக்கு கருட ஜயந்தி, கருட பஞ்சமியன்று கருட ஹோமம் செய்வது நலம்.
கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய, தீர்க்க முடியாத நீதிமன்ற வழக்குப் பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன்தொல்லை தீரும். உயிர்க்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருடனை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.
ஆடிமாத விசேச வழிபாட்டால் நினைத் தது நடக்கவும், ஆரோக்கியம் மேம்படவும், லட்சுமி கடாட்சம் பெருகவும், இல்லங்களில் சுபகாரியங்கள் நடக்கவும், மனதில் நிம்மதி கிடைக்கவும் அனைவருக்கும் குருவருள், திருவருள் கிடைக்கவேண்டி எல்லாம்வல்ல இறைசக்தியை வேண்டுதல் செய்கிறேன்.