ஆருத்ரா தரிசனம் 30-12-2020

தமிழ் மாதங்களில் பக்தி மயமான மாதம் எதுவென் றால் மார்கழி மாதத்தைதான் சொல்லுவார்கள். காரணம், அந்த மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் பூஜைசெய்வது, கோவிலுக்குச் சென்று திருப்பாவை, திரும்வெம்பாவை, தேவாரம், நாம கீர்த்தனைகளைப் பக்தியுடன் பாடுவது போன்ற பக்திப்பூர்வமான செயல்களைச் செய்வர். மகளிர் வீட்டு வாசலில் அழகிய வண்ணமயமான கோலங்களைப் போட்டு, அதன் நடுவில் பூசணிக்காயின் (பறங்கிக் காய்) மஞ்சள்நிறப் பூவை பசுஞ்சாணத்துடன் வைத்து, வாசலில் அகல்தீபமேற்றி வழிபடுவது நம் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் வழக்கம்.

இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, பீமஜெயந்தி, ஹனுமத் ஜெயந்தி, திருவாதிரை போன்ற சிறப்பு தினங்கள் வருகின்றன. மார்கழி மாதத் திருவாதிரைத் திருநாளில் வரும் ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து, களிக்கூத்து, நடனத் திருக்கோலத்தை சிவனடியார்கள் தரிசித்து மகிழ்வார்கள்.

நடராஜப் பெருமான் பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து வடிவாக இருக்கிறார் என்று நம் திருமுறைகள் கூறுகின்றன. ஐந்தெழுத்தை தூல பஞ்சாட்ரசம், சூக்கும பஞ்சாட்ரசம்; காரண பஞ்சாட்ரசம் என சிவனடியார்கள் கூறுவர். "நமசிவய' என்பது தூல பஞ்சாட்ரசம் "சிவாயநம' என்பது சூக்கும பஞ்சாட்ரசம்; "சிவயவசி' என்பது காரண பஞ்சாட்ரசம். யஜுர் வேதத்தில் வரும் ஸ்ரீருத்ர மந்திரத்தில் "நம சிவாயச சிவதராயச' என பஞ்சாட்ரச மந்திரம் போற்றப்படுகிறது.

Advertisment

natarj

-மாணிக்கவாசகர் அருளிய

"நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

Advertisment

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க

ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க'

என்னும் திருவாசகத்தின் முதல் பாடலே, பஞ்சாட்ரசம் மந்திரமான நமச்சிவாயத்தின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

நடராஜப் பெருமானின் புனிதத் திருமேனி ஐந்தெழுத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரின் திருவடி "ந'காரமாகவும், திருவுந்தி "ம'காரமாகவும், தோள்கள் "சி'காரமாகவும், முகம் "வ'காரமாகவும், திருமுடியானது "ய'காரமாகவும் இருப்பதாக தூல பஞ்சாட்ரச நிலை கூறுகிறது.

நடராஜப் பெருமான் தனக்குத் தானே தங்குவதற்கு அமைத்துக்கொண்ட இடம்தான் சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்! "சித்' என்பதற்கு அறிவு என்னும் பொருளும், "அம்பரம்' என்பதற்கு ஆகாயம் என்னும் பொருளும் உண்டு. சிதம்பரம் என்பது அறிவாகிய ஆகாயம் என்றும் சொல்வார்கள். பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயம்.

முன்பு தில்லை வனத்தில் எழுந்தருளிய மூலநாதரை வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வழிபட்டுவந்தனர்.

இதில் வியாக்ரபாத முனிவர் தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, வனத் தில் பூக்கும் மலர்களை வண்டுகள் தேனெடுப் பதற்குமுன்பே பறித்து, அதை இறைவனுக்குச் சூட்டிப் பூஜை செய்வார். வண்டுகள் தேனெடுத்தால் பூக்களில் வண்டின் எச்சில்படும் என்பது அவரது எண்ணம். எச்சில் படாத பூக்களையே தினமும் பறித்ததால், இறைவனின் அருளால் அவர் புலிகளைப் போன்ற கால்களும், இரவில் நன்றாகப் பார்வை தெரியும் வண்ணம் கண்களும் பெற்றார். "வியாக்ரம்' என்றால் புலி. எனவே, இவர் வியாக்ரபாதர் என்று பெயர் பெற்றார். இதன்காரணமாக இந்த இடத்திற்கு முன்பு புலியூர் என்ற பெயரும் இருந்தது.

natraj

மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனின் மறு அவதாரமாகக் கருதப்பட்ட பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவர் போன்று தில்லை வனத்தில் சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டுவந்தார். யோக சூத்திரம் என்னும் ஒப்பற்ற நூலை இம்முனிவரே எழுதியுள்ளார். சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டுகளிக்கவேண்டுமென இவ்விரு முனிவர்களும் விரும்பினர். அவர்களின் கடுந்தவத்தை மெச்சிய சிவபெருமான், தைமாத பூச நட்சத்திரத்தில் ஆனந்தநடனக் கோலத்தில் காட்சிதந்தருளினார்.

நடராஜப் பெருமானின் அருவ நடனக் காட்சியைக்கண்டு மகிழ்ந்த இரு முனிவர்களும், அவர் இதே இடத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று வேண்டினர்.

நித்திய, நைமித்திக வழிபாட்டுக்குத் தேவை யான ஏற்பாடுகளைச் செய்தனர்.

சௌட தேசத்து மன்னனான சிம்ம வர்மனின் தோல்நோய் நடராஜப் பெருமானின் அருளால் தீர்த்ததால், அம்மன்னன் கோவில் கோபுரத்திற்கு பொன்வேய்ந்து பொன்னம்பலமாக மாற்றினான் என்பர். அதனால் இரணிய வர்மன் என்னும் பெயரும் இவருக்கு வந்தது. இரணியம் என்றால் தங்கம் என்னும் பொருளும் உண்டு.

கங்கை, யமுனை நதிக்கரைக்கு இடைப் பட்ட இடத்திலிருந்து நடராஜப் பெருமானுக்கு தினமும் நித்திய, நைமித்திக வழிபாடு செய்வதற்காக மூவாயிரம் வேதம் படித்த அந்தணர்களை தில்லைக்கு (சிதம்பரம்) அழைத்துவர ஏற்பாடு செய்தான் அந்த மன்னன். அந்த சமயத்தில் 2,999 அந்தணர்கள் மட்டுமே இருந்தனர். ஒருவர் கிடைக்காததால் மன்னன் மனம் வருந்தினான்.

அந்தசமயத்தில் அசரீரியாக நடராஜப் பெருமான், தானே அந்தணர் வடிவில் வருவதாகக் கூறி உடன்வந்தார். இதைதான் திருவிசைப்பா எழுதிய நம்பியாண்டார் நம்பி-

"களையா உடலோடு சேரமான் ஆரூரன்

விளையா மதம்மாற வெள்ளானை மேல்கொள்ள

முனையா மதிமுடி மூவாயிர வரோடும்

அனையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே'

என பாடினார்.

அன்றுமுதல் தில்லையில் வாழ்கின்ற அந்தணர்களை நடராஜப் பெருமானின் வம்சமாகக் கருதப்பட்டனர். "திருத் தொண்டத் தொகை' என்னும் நூலின் ஆசிரியரான சுந்தரமூர்த்தி சுவாமிகள், 63 நாயன்மார்களையும், தொகையடியார் களையும் சேர்த்து 72 சிவனடியார்களின் வரலாற்றை, "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்களுக்கும் அடியேன்' என்று துவங்கும் திருத்தொண்டத் தொகைமூலம் 11 பாடல்களை எழுதினார். இப்பாடல்களே பிற்காலத்தில் பெரிய புராணத்தை சேக்கிழார் எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தன.

ஆருத்ரா தரிசனம் அன்று நாமும் சிவாலயம் சென்று நடராஜப் பெருமானின் ஆனந்தநடனக் காட்சியைக் கண்டுகளித்து வாழ்வில் இன்புறுவோமாக!