வெற்றிகளை அள்ளித் தரும் துர்க்காதேவி கொற்றவையின் அம்சம். சிவனுக்கு உகந்த இந்த துர்க்கை எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு இடப்புறம் தனக்கென்று ஓர் இடம்பிடித்து, வடக்கே முகம் காட்டி, அருள்மழை பொழிபவள்.

அந்தவகையில் புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள மடுகரை என்ற கிராமத்தில் தனியே கோவில்கொண்டு தன்னாட்சி நடத்துகின்றார் ஸ்ரீதுர்க்கை.

வித்தியாசமாக இத்தலத்தில் இவள் கிழக்கே திருமுகம் காட்டி, எழுந்துள்ளாள். எட்டு கரங்கள்கொண்டு, சிம்மத்தின்மீது வீற்றிருந்து, பக்தர்களைக் காக்கும் காவல் தெய்வமாய் காட்சியளிக்கின்றாள்.

Advertisment

durai

இந்த துர்க்கை கோவில்கொண்ட நாள்முதல் பக்தர்களது கனவில் வந்து, அவர்களிடம் பேசி, அவர்களின் குறைகளைக் களைவது வழக்கம். அப்படி ஒருநாள் இரவு தனது கோவிலுக்கு அருகே இருந்த "இருசப்பன்' என்ற பக்தனை தட்டி எழுப்பி, தனது சூலாயுதத்தை திருடன் ஒருவன் திருடிக்கொண்டு ஏரிக்கரைமீது செல்வதாக செய்தி சொன்னாள். உடனே ஊரார் துணையோடு ஓடிச்சென்ற இருசப்பன், சூலத்தை மீட்டு வந்தான். இப்போது அந்த சூலாயுதம் சுதை வடிவ துர்க்கையின் கரத்தில் தவழ்கிறது.

Advertisment

இதுபோன்ற அற்புத சம்பவங்கள் இங்கு நித்தமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீ துர்க்காதேவியின் திருவருளால் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வன்னைக்கு விளக்கேற்றி, குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் குறைகளைக் களைந்து, அன்பர் வாழ்வில் குதூகலத்தை ஏற்படுத்துகின்றாள்.

Advertisment

அதோடு, இங்கு தனியே சனீஸ்வரபகவான் எழுந்தருளி அனுக்கிரகம் செய்வதால், இவர் அனுக்கிரக சனி என போற்றப்படுகின்றார். எங்குமே காணக்கிடைக்காத வட்டவடிவ அமைப்பில் நவகிரகங்களை இங்கு தரிசிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக -அலங்காரமும், அன்னதானமும் நடைபெறுகின்றன.

நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் இங்கு மிகவும் கோலாகலமாக இருக்கும். நிவேதன பிரசாதத்தோடு, குங்குமமும் இங்குவரும் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்பது நாளும் ஒன்பதுவகையான அலங்காரத்தில் அன்னை அஷ்டபுஜ துர்க்கை இங்கே அழகாய் திகழ்கின்றாள்.

பக்தர்களிடம் நேரில் பேசும் இந்த எட்டுக்கர துர்க்கையை வழிபட, திருமணத்தடை நீங்கும். பிள்ளைவரம் கிட்டும். வழக்குகள் வெற்றியாகும். எதிலும் வெற்றி உண்டாகும்.

வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் இந்த அஷ்டபுஜ துர்க்கையை வணங்கி, வாழ்க்கையின் இன்னல்கள் யாவும் களைவோம்; இன்புற்று வாழ்வோம்.

விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலையிலுள்ள வளவனூரிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மடுகரை. நெடுஞ்சாலையை ஒட்டி இவ்வாலயம் அமைந்துள்ளதால் இங்குவருவது மிகவும் சுலபம்.