கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று 20-8-2022 அன்று கிருஷ்ண பக்தர்கள் அனைவரும் கொண்டாடினார்கள். பெருமாள் கோவில்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என இரு மனைவிகள் உண்டு. நீளாதேவி என்னும் தேவியும் உண்டு; அரிதாகக் காணலாம்.

தாயார் மகாலட்சுமி என்று தனிச் சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் இருப்பார். இந்த அன்னை பெருமாளுடன் சேர்ந்திருப்பது பங்குனி உத்திரம் ஒருநாள் மட்டுமே. அதற்கு சேர்த்தி உற்சவம் என்றே பெயர். இதைத் தவிர ஆண்டாள் எனும் கோதையை தனிச் சந்நிதியில் நின்றகோலத்தில் காணலாம். ஆடிப்பூரம் நாள் ஆண்டாள் ஜெயந்தி.

திருப்பதி வேங்கடாசலபதிக்கு மணமகள் பத்மாவதி தேவி. கார்த்திகைப் பஞ்சமியன்று தாமரையில் உதித்தவள். திருச்சானூரில்தான் அமர்ந்த கோலத்தில் காணலாம். திருமண வைபவம் நடக்கிறது. திருமலையில் பத்மாவதியின் உருவம் இல்லை. ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமே உள்ளனர். திருமலையப்பன் திருச்சானூர் வரமாட்டார்.

Advertisment

dd

ராதாரமணன், ராதாமாதவன், ராதாநாதன், ராதாவல்லபன், ராதேஸ்யாம், ராதாகோபாலன், ராதாகிருஷ்ணன், ராதாகோவிந்தன் என்று கண்ணனுடன் சேர்த்து ராதையைக் கூறுகிறோம். கிருஷ்ணனுக்கு பிரதானமான தட்சிண துவாரகை எனப்படும் மன்னார் குடியிலோ, மதுரை மதனகோபாலன் சந்நிதியிலோ, தஞ்சை வேணுகோபாலன் கோவிலிலோ, சென்னை பார்த்தசாரதி கோவிலிலோ கண்ணனுடன் ருக்மணி, சத்தியபாமாவைக் காணலாம். ஆனால் ராதையைக் காணமுடியாது. நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் ராதா என்னும் நாமம்கூட இல்லை. கிருஷ்ண லீலைகளை மிக விரிவாகக் கூறும் ஸ்ரீமத் பாகவதத்தில்கூட (18 ஆயிரம் துதிகள்) ராதா நாமம் கூறப்படவில்லை.

வடநாட்டுக் கண்ணன் கோவில்களில் பார்த்தால் கண்ணனுடன் ராதாவை மட்டுமே காணலாம். மகாலட்சுமி, ருக்மிணி, சத்தியபாமா, ஆண்டாள் ஆகியோரைக் காண்பதரிது.

ராதையைப் பற்றி பிரம்ம வைவர்த்த புராணம், கர்க்க சம்ஹிதை, பாத்ம புராணம், வராக புராணம், ஸ்காந்த புராணம், நாரதீய புராணம், நாரத பாஞ்சராத்ரம், பிரம்ம சம்ஹிதை, தேவி பாகவதம், தேவி புராணம், கிருஷ்ண யாமளை, சம்மோஹன தந்த்ரம், ருத்ர யாமளை போன்றவை விவரிக்கின்றன.

கோவர்தன் அருகே பர்சானா என்னும் இடத்திலுள்ள மலையில், வ்ருஷபானு கோபனுக்கும் கீர்த்திதா தேவிக்கும், கண்ணன் பிறந்த அஷ்டமிக்கு அடுத்த வளர்பிறை அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில் பகல் 12.00 மணிக்கு உதித்தவள் ராதை. (மலையிலுள்ள கோவிலில் ராதையைக் காணலாம்.) இவள் பிறந்த தினத்தை ராதாஷ்டமி என்று வடநாட்டில் சிறப் பாகக் கொண்டாடுவார்கள்.

வந்திப்பவர்கள் மனதை வசீகரிப்பவன் கிருஷ்ணன். அதுபோல் வந்திப்பவர்களின் வேண்டுதல்களைப் பூர்த்திசெய்பவள் ராதை. இதுவே இந்தப் பெயர்களின் பொருளாகும். அன்பு, பிரேமை, காதல் வடிவானவள் ராதை.

ராதை, ராதிகா என இரு பெயர்கள் உண்டு. கண்ணன் வந்திக்கும் தேவி ராதை; கண்ணனை வந்திக்கும் தேவி ராதிகா. ஒரே பிரம்மம் லீலைக்காக இரண்டாகப் பிரிந்தது என ராதாதாபினி உபநிடத ஸ்லோகம் கூறுகிறது.

"ய க்ருஷ்ண: ஸாபிச ராதாச க்ருஷ்ண

ஏவ ஸ: ஏகம் ஜ்யோதி: த்விதா பின்னம்

ராதா மாதவரூபம்.'

கிருஷ்ணனே ராதா; ராதாவே கிருஷ்ணன். தேவி பாகவதம் ராதாவை பஞ்ச பிரகிருதிகளில் ஒன்றாகக் கூறுகிறது.

"கணேபி ஜனனி துர்கா ராதா லட்சுமி

சரஸ்வதி சாவித்திரி ஸ ஸ்ருஷ்டி

வினதௌ ப்ரகிருதி பஞ்சதா ஸ்ம்ருதா.'

நவராத்திரியில் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குவோம். தேவி பாகவதம் ராதா, சாவித் திரியை சேர்த்து ஐந்தாக்கி விட்டது. தேவி பாகவதம் கண்ணனைவிட ராதையை உயர்த்தி இவ்வாறு கூறுகிறது.

"க்ருஷ்ண அர்ச்சாம் ந அதிகாரோ

மகா ராதா அர்ச்சாம்வினா

வைஷ்ணவா: ஸகலா தஸ்மாத்

கர்த்தவ்யம் ராதிகா அர்ச்சனம்.'

ராதையைப் பூஜிக்காமல் கண்ணனைப் பூஜிக்க அதிகாரம் இல்லையாம். ஆக, ராதையை அர்ச்சிக்க வேண்டும்.

நாரத பாஞ்சராத்ரத்தில் ராதிகா சகஸ்ரநாமம் உள்ளது. சிவன் பார்வதிக்கு உபதேசிக்கிறார். ருத்ர யாமளையில் சிவன் நாரதருக்கு உபதேசிக்கும் ராதா சகஸ்ரநாமம் உள்ளது. ப்ருஹன் நாரதீய புராணத்தில் நாரதருக்கு சிவன் கூறும் ராதா கிருஷ்ண சகஸ்ரநாமம் உள்ளது. முதல் 500 நாமங்கள் கிருஷ்ணரையும், பிந்தைய 500 நாமங்கள் ராதையையும் பற்றியது. மிக அற்புதமானவை. ராதா நாமங்கள் கொண்ட கிருஷ்ணர்; கிருஷ்ணர் நாமங்கள் கொண்ட ராதை என ராதை- ராம நாம த்ரிசதி (300 நாமங்கள்) உள்ளன.

"ஸ்ரீ ராதாயை ஸ்வாஹா' என்பது ஷடாக்ஷரம். "ஸ்ரீ ராதிகாயை நம' என்பது அஷ்டக்ஷரம். "ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ராதிகாயை ஸ்வாஹா' என்பது நவாக்ஷரம். "ஓம் க்லீம் க்ருஷ்ண ப்ரியாய நம' என்பதும் நவாக்ஷரம். "ஓம் நமோ பகவதே ராதா க்ருஷ்ணாய' என்பது துவாதசாக்ஷரம்.

"ஸ்மரணாத் அருணாசல' என்பதன்மூலம், அருணாசல என்று நினைத்தாலே முக்தி. அதுபோன்று ராதா என்னும் நாமமும் முக்தியளிக்குமாம்.

"ரா இதி ஆதார வசனோ தா ச நிர்வாண வாசக:

யத: அவாப்னோதி முக்திம் ச யாச ராதா ப்ரகீர்த்திதா'

என்னும் துதி, ராதா என்னும் நாமம் முக்தியை அளிக்கும் என்று கூறுகிறது. வரகூர் நாராயண தீர்த்தர், நாராயணீயம் எழுதிய பட்டத்திரி ராதாவை நினைத்துள்ளனர்.

ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, க்ரியா சக்தி, ஞானசக்தி என்று அம்பாளைக் கூறுகிறோம். மகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இருப்பவள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்போம். அதுபோல கண்ணனை ஆட்கொண்ட சக்தியான ராதாவை ஹ்லாதினி சக்தி என்று கூறுவர்.

கண்ணன் கார்த்திகைப் பௌர்ணமியன்று பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ராசலீலை ஆடினான். அவர்களுள் பிரதானமான கோபிகை ராதாவே. எனவே அவளுக்கு ராஸேஸ்வரி, ராஸ மண்டல வாஸினி, ராஸ சிந்து ஸயாங்கி, ராஸப்ரியா, ராஸகம்யா, ராஸ அதிஷ்டாத்ரு தேவதா, ராஸ மண்டல மத்தியஸ்தா, ராஸ மண்டல ஸோபிதா, ராஸ மண்டல ஸேவ்யா, ராஸக்ரீடா மனோ ஹரா, ராஸ ரஸிகா, ராஸ உன்மாதினி, ராஸ ரஸ உல்லாஸினி, ராஸ ரஸமய ரூபிணி என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.

ராஸலீலை விரக காமரசர லீலையா என்றால் இல்லவே இல்லை. சுத்த பிரம்மச் சரியான சுகர் பரீட்சித்து மகாராஜா வுக்கு உபதேசம் செய்தார். அதன் பலச்ருதி கூறுவது என்ன?

"பக்திம் பராம் பகவதி பிரதிலப்ய காமம்

ஹ்ருத்ரோகமா: ச ஆஸ்வபஹினோ

இதி அசிரேண தீர:'

காமப் பசியை அழிக்கிறது; பகவானிடம் பக்தியை ஆழ்த்துகிறது.

ராதையைப் பற்றி சங்கீத மும்மணிகள் பாடவில்லை. அவர்களுக்குமுன்பு வாழ்ந்த ஊத்துக்காடு வெங்கட கவி ராதா ராஸ லீலைகள், ராதா கல்யாணம் என பாடியுள்ளார். அப்பாடல்களைக் கேட்டால் ராஸலீலை நடனம் பார்ப்பது போலவே தோன்றும்.

ராஜஸ்தான் ராணி மீரா, கண்ணனைத் தன் கணவனாக மதித்ததால் ஒருசில பாடல் கள் ராதாவைப் பற்றிப் பாடியிருக்கிறாள்.

அவதூத அத்வைத சதாசிவ பிரம்மேந்திரர் ராதாவைப் பாடியுள்ளார்.

12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த பூரி ஜெகந்நாத பக்தர் ஜயதேவர் "கீத கோவிந்தம்' என்று 24 பாடல்கள் (எட்டு சரணங்கள் உள்ளதால் அஷ்டபதி எனப் படுகிறது) பாடியுள்ளதை அனுசரித்து ராதா கல்யாணமும் செய்கிறார்கள். இதுவொரு பத்து வருடங்களாக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவலாக நடத்தப்படுகிறது.

முதலிரண்டு அஷ்டபதிகள் தசாவ தாரத்தை கண்ணனே என்று குறிக்கிறது. ராதா- கண்ணன்- சகி (தோழி) என மூவரே இதில் உள்ளனர். ராதையானவள் கண்ணன் விரகத்தில் எவ்வாறு அவதியுகிறாள்; கண்ணன் ராதைமீதுள்ள விரகத்தில் எவ்வாறு அவதியுகிறான் என்று விளக்கும் பாடல்கள். ராதை- ஜீவாத்மா; கண்ணன்- பரமாத்மா; சகி- குரு. குருவானவர் எவ்வாறு ஜீவ- பரம ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார் என்று விளக்கும் மாதுர்ய ரஸப் பாடல்கள். எனவே பதங்களின் தத்துவார்த்தம் உணர்ந்து பாடவேண்டும். பூரி ஜகந்நாதரே உவந்து ஏற்ற பாடல்கள்!

அதன் உன்னதத்திற்கு ஒரு சம்பவத்தை சிந்திப்போம். ராதையானவள் கண்ணன் மீதுள்ள விரகத்தில் தவிக்கிறாள். கண்ணனிடம் சென்று தோழி கூற, கண்ணனே ராதையைத்தேடி வருகிறான். அப்போது ராதை, வேறு கோபிகையை ரசித்துவிட்டு கண்ணன் வருகிறான் என்று கற்பனைசெய்து கண்ணனை வெறுக்கிறாள். தோழி அறிவுரை கூறுகிறாள். அப்போது "கண்ணன் ராதையின் பாதம் பணிகிறான்' என்னும் வரி ஜயதேவரின் மனதில் தோன்ற, தவறென்று எழுதாமல் விடுகிறார். ஆனால் அதே வரியை கண்ணனே ஜயதேவர் வடிவில் வந்து எழுதிவிடுகிறார். (19-ஆவது அஷ்டபதி, ஏழாவது சரணம்). எனவே சாந்நித்தியம் வாய்ந்த சொற்கள். குச்சிப்புடி நடனத்தில் இது பிரதானம்.

கண்ணன் சந்தனமென்றால் ராதை குளிர்ச்சி; கண்ணன் நெருப்பென்றால் ராதை வெப்பம்; கண்ணன் சர்க்கரையென்றால் ராதை இனிப்பு; கண்ணன் ஜோதியென்றால் ராதை ஒளி!

அதாவது கண்ணன்- ராதை ஒன்றிய தத்துவம். எனவே கண்ணனுடன் ராதையையும் எண்ணுவோம்.