"மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.'
பொருள்: "கிங்கிணி' என ஒலிக்கும் சலங்கைகள் அணிந்த பாதங்களுடைய பெருமைக்குரியவனே! (அன்று உன்னால் மூர்ச்சையான இந்திரனின் மனைவி) இந்திராணியின் மாங்கல்யத்தைக் காத்தவனே! கருணையுள்ளவனே! ஞானஸ் தனே! தேவர்களுக்கு சூரியன் போன்றவனே! மரணத்தைப்போல மூர்ச்சையாகி விழும் நிலை முருகனின் தாசர்களான நமக்கு இல்லை. எந்தநாளும் நமக்குத் துணையாக ஒளிவீசும் மயிலும், வேலும் இருக்கிறது.
சிறுபிள்ளையின் பெரும் லீலை!
குழந்தைக் குறும்புடன் விளையாடித் திரிந்த முருகன், மலையோடு மலையை மோதச் செய்தார்; கைலாசத்திலிருந்து மேரு மலைக்குத் தாவினார்; மலைச் சிகரங்களை இடமாற்றி வைத்தார். குறும்புச் செயல் மட்டுமின்றி ஞானச் செயல்களையும் செய்தார். இதைச் சிவனும், பார்வதியும் பார்த்தனர்.
ஆதலின் நமது சத்தி அறுமுகன்
அவனும் யாமும்
பேதகம் அன்றால் நம்போல் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதம் இல் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு
அருள வல்லான்.
(கச்சியப்பரின் கந்தபுராணம்: காண்டம்-1 உற்பத்திக் காண்டம்; பகுதி: முருகப் பெருமானின் திருவிளையாடல், பாடல்-1070
இதுபற்றி பார்வதியிடம் கூறிய சிவன் "முருகன் சாதாரணக் குழந்தையல்ல. ஞானமுடைய வன்; தன்னைப் பணிந்தோர்க்கு அருளக் கூடியவன்; உன்னையும், என்னையும் உள்ளடக்கிய மொத்த உருவம் ஆறுமுகன்' எனச் சொன்னார்.
இயற்கையை இடம் மாற்றும் முருகனின் செயல் தேவர்களை அச்சுறுத்தியது. "இது தெய்வக் குழந்தையல்ல.... நம்மை எதிர்க்கவந்த அசுரக் குழந்தை' என முடிவுகட்டிய தேவர்களின் தலைவர் இந்திரன், தனது தேவலோக பரிவாரங் களுடன் குழந்தை முருகனிடம் யுத்தம் செய்தார். இந்த யுத்தத்தில் முருகன் தொடுத்த அம்புகளால் சூரியன், சந்திரன்,
அக்னி, வருணன் உள்ளிட்டோர் அழிந்தனர்.
முருகனின் அம்பு தாக்கி மூர்ச்சையாகி விழுந்தார் இந்திரன். இதைக்கண்ட நாரதர் உடனே தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் நடந்ததைச் சொன்னார்.
உடனே பிரகஸ்பதி வந்து முருகனை வணங்கி, "தேவர்கள் செய்த தவறை மன்னிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.
"ஆதலால் வானவர்க் கரசன் ஆற்றவும்
ஓதிதான் இன்மையால் உன்றன் ஆடலைத்
தீதெனா வுன்னிவெஞ் செருவி ழைத்தனன்
நீதிசேர் தண்டமே நீபு ரிந்தனை.'
(கச்சியப்பரின் கந்தபுராணம்: காண்டம்-1 உற்பத்திக் காண்டம்; பகுதி: முருகப் பெருமானின் திருவிளையாடல், பாடல்- 1123).
"மற்றுள தேவரும் மலைந்து தம்முயிர்
அற்றனர் அவர்களும் அறிவி லாமையால்
பெற்றிடுங் குரவரே பிழைத்த மைந்தரைச்
செற்றிடின் எவரருள் செய்யற் பாலினோர்.'
(கச்சியப்பரின் கந்தபுராணம்: காண்டம்-1 உற்பத்திக் காண்டம்; பகுதி: முருகப் பெருமானின் திருவிளையாடல், பாடல்- 1124).
"வானவர்களாகிய தேவர்களின் அரச னான இந்திரன், உனது திருவிளையாடலை தீமை தரக்கூடியதாகச் சொன்னதால், இந்திர னின் பேச்சைக்கேட்டு மற்ற வானவர் களும் அறிவிழந்து தங்களது உயிரை இழந்த னர். இவர்களுக்கு உன்னைத்தவிர வேறு யார் அருள்பாலிக்க முடியும்!' என முருகப் பிரானிடம் பிரகஸ்பதி வேண்டினார்.
"இதனால் இந்திரன் உள்ளிட்ட தேவர் களை உயிர்ப்பித்தார் முருகன்.
அந்தியின் வனப்புடைய மெய்க்குகன் எழுப்புதலும் அன்ன பொழுதே இந்திரனும் மாதிர வரைப்பினரும் வானவரும் யாவரு மெழாஅச் சிந்தைதனில் மெய்யுணர்வு தோன்றுதலும் முன்புரி செயற்கை யுணராக் கந்தனொடு கொல்சமர் புரிந்ததென உன்னினர் கலங்கி யெவரும்.'
(கச்சியப்பரின் கந்தபுராணம்: காண்டம்-1 உற்பத்திக் காண்டம்; பகுதி: முருகப்பெருமானின் திருவிளையாடல், பாடல்- 1130).
மீண்டும் உயிர்பெற்ற இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், அழகிய முருகனின் தன்மையின் உண்மை அறிந்து, அவருடன் போரிட்டதற்காக வெட்கினர்; கலக்கமும் அடைந்தனர்.
ஆனால் முருகனோ "குழந்தைதானே என்கிற அலட்சியத்துடன் என்னிடம் போரிட்டீர்கள். எனது விஸ்வரூபத்தைப் பாருங்கள்' என பிரம்மாண்ட வடிவம் காட்டினார்.
"கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம கங்கை யுமைதன்
மைந்தநம பன்னிரு புயத்தநம நீபமலர் மாலை புனையுந்
தந்தைநம ஆறுமுக வாதிநம சோதிநம தற்ப ரமதாம்
எந்தைநம என்றுமிளை யோய்நம குமாரநம என்றுதொழுதார்.'
(கச்சியப்பரின் கந்தபுராணம்: காண்டம்-1 உற்பத்திக் காண்டம்; பகுதி: முருகப் பெருமானின் திருவிளையாடல், பாடல்- 1133).
"கந்தனாகிய, ஐந்து முகத்தான் சிவன் தந்த முருகேசனாகிய; கங்கையை உடைய சிவனின் மகனான, பன்னிரண்டு தோள்களையுடைய; நீபமலர் எனும் கடம்ப மலர் மாலையணிந்த, ஆறுமுகனே; சோதியாய் இருப்பவனே; எங்கள் தந்தையே, என்றைக்கும் இளையவனாய், இளம் அழகனாம் குமரன் வாழ்க' என இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் முருகனைத் தொழுதனர்.
அவர்களுக்கு திருவருள் வழங்கி "நான் தேவர்களை துன்புறுத்தும் அசுரர்களை அழித்தே தீருவேன்' என இந்திரனிடம் சொன்னார் முருகன்.
இந்த புராண நிகழ்வு, கச்சியப்ப சாமிகள் பாடிய கந்த புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதனால்தான்.... "சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா' என; அதாவது, மூர்ச்சையான இந்திரனை உயிர்ப்பித்து; சசிதேவியாகிய இந்திராணியின் மாங்கல்ய பாக்கியத்தை காத்தவனே' என முருகப் பெருமானை அருணகிரியார் போற்றிப் பாடினார். "வேலும் மயிலும் துணையாக எப்போதும் முருகனடியார்களுக்கு இருப்பதால் மூர்ச்சையாகும் பயமெல்லாம்; மரண பயமெல்லாம், முருகனடியார்களுக்கு இல்லை' என்றும் இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
பாடல்: 22
"மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்கv எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.'
பொருள்: பூக்கள் மிக நெருக்கமாகக் கட்டப்பட்ட மலர்ச்சரத்தைச் சூடிய கூந்தலையுடைய வள்ளியை விரும்பித் துணையாக ஏற்றவன்; இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனப் படும் முத்தமிழில் எத்தமிழ் கொண்டு தன்னை வைதவர்களையும் வாழவைப்பவன்; அவர்களுக்கு முக்தி தருபவன்; முரட்டு யானை (தும்பிக்கை)போல இருபது கைகளைக்கொண்ட இராவணனின், பத்துத் தலைகளையும், அம்புகளால் கொய்தவனின், (ஸ்ரீராமனாகிய விஷ்ணுவின்) மருமகன்; உமையவள் பார்வதி ஈந்த அழகிய குமரனே!
திட்டியவர் போற்றினார்!
இராமன், சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசத்தில் இருந்தபோது அசுர வதங்களைச் செய்துவந்தார் இராமன். இதனால் பாதிப்படைந்த இலங்கை அரசன் இராவணன், அசுரன் மாரீசனை மாயமானாக அனுப்பி, இராமன் மற்றும் லட்சுமணனின் கவனத்தைத் திசைதிருப்பி, துறவிக் கோலத்தில் வந்து, சீதையை கவர்ந்துசென்று இலங்கையில் அசோக வனத்தில் சிறைவைத்தார். இதனால் எழுந்த யுத்தத்தில், ஏற்கெனவே தீர்மானிக் கப்பட்ட முந்தைய விதிப்படி ராவணனை யுத்தத்தில் கொன்றார் இராமன். இராவண வதத்திற்காகவே மகாவிஷ்ணு, இராமனாக பிறப்பெடுத்தார். இதுவே இராமாயணம்.
அசுரபலம் பொருந்திய இராவணனை இராமராக இருந்து அழித்த விஷ்ணுவின் மருமகன் முருகன் என அருணகிரியார் சிறப்புச் சேர்க்கிறார்.
திட்டியவர்களையும்; வைதவர்களையும்; ஏசியவர்களையும்கூட அருளால் காக்கிற முருகனின் பெருந்தன்மைக்கு உதாரணமாக "கோழியை (பராசக்தியை) பாடும் வாயால், குஞ்சை (முருகனை) பாடமாட்டேன்' என்று சொல்லி, பிறகு முருகனின் அருட் திறம் அறிந்து போற்றிய பொய்யாமொழிப் புலவர் கதையையே கொள்ளலாம். (ஏற்கெனவே பொய்யாமொழிப் புலவரின் கதையை விவரித்துள்ளோம்).
(பாட்டு வரும்)