காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவடிசூலம் என்னும் திருத்தலம். இங்கு ஞானசம்பந்தருக்கு சிவபெருமான் இடையனா கக் காட்சி கொடுத்த- மிகப்பழமை வாய்ந்த ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அதனருகேயுள்ள கோவில்புரம் என்னும் பகுதியில் ஆதிசக்தியாக அன்னை, ஆதிபரமேஸ்வரி தேவி ஸ்ரீகரிமாரியம்மன் என்னும் திருநாமங்கொண்டு 51 அடி உயரத்தில் விஸ்வரூபிணியாக வீற்றிருக்கிறாள்.
சதிதேவியின் உடல்பாகங்கள் பூவுலகில் வீழ்ந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன. அவையெல்லாம் ஒன்றிணைந்த வடிவமே இதுவென்னும் வகையில் அன்னை 51 அடி உயரத்தில் விளங்குகிறாள். மேலும் 51 அட்சரங்களையும் இது குறிக்கிறது. காஞ்சியில் வரும் வேகவதி ஆறு இந்த அன்னையின் திருவடிகளுக்குக்கீழே அந்தர்வாகினியாக (மறைபொருளாக) ஓடுகிறது என்கின்றனர்.
இந்த விக்ரகத்தை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட கல் ருத்ரபூமியில் 22 அடி ஆழத்தில் கிடைத்தது.
அப்போது அதன் எடை 800 டன் ஆகும்.
அதிலிருந்து உருவாக்கப்பட்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ள அம்பாள் விக்ரகம் 300 டன் எடை கொண்டது. பத்மபீடம் பத்தடி உயரம் கொண்டது. தாயின் பாதத்திலிருந்து உச்சி நாகாபரணம்வரை 41 அடி உயரம். ஆதியில் அன்னை இங்குள்ள மலையில் கால் பதித்திருக்கிறாள். அதை காமாட்சி பாதம் என்கின்றனர். அப்போது சித்தர்களுக்கும் முனிவர்களுக்கும் தான் இங்கு வந்து அமர்வதாக அளித்த வாக்கின்படி, புண்ணியக்கோட்டி மதுரைமுத்து சுவாமிகளை காரிய நிமித்தமாகக் கொண்டு தற்போது இங்கு விஸ்வரூபிணியாக கோவில் கொண்டுள்ளாள்.
அம்மன் வீற்றிருக்கும் பகுதியைச்சுற்றி ஏழுமலைகள் அமைந்துள்ளன. அவள் எதிரே சூலமலை; அக்னி மூலையில் ஐராவதம் (யானை) தவமியற்றிய மலை; நிருதி பாகத்தில் சஞ்சீவி ஆகர்ஷண சக்திகொண்ட- மேலே சுயம்பு லிங்கமுள்ள மலை; வாயு பாகத்தில் ஆஞ்சனேயர் அன்னையை நோக்கித் தவமியற்றும் மலை;
அதையடுத்து மயில்குன்று எனும் மலை; பின்னர் அன்னையின் வாகனமான சிம்ம வடிவமுடைய மலை; ஏழாவதாக குப்பட்சி குன்று எனும் மலை.
இவ்வாலய முகப்பில் மகா திருவடிசூலம் 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவாக்கிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அமைப்பை வேறெங்கும் காணவியலாது என்கிறார் கள். இந்த சூலமானது பல்வேறு தத்துவங்களைக் கொண்டு விளங்குகிறது. கீழிருந்து மேலாக- எட்டு திசைகளுடன் கீழ், மேல் என இரண்டையும் சேர்த்து பத்து திசைகள், ஒன்பது கோள்கள், அஷ்டதிக் பாலகர்கள், ஏழு செயல்பாடுகள், ஆறு சமயங்கள், சதாசிவனாரின் ஐந்து முகங்கள், நான்கு யுகங்கள், ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி எனும் மூன்று சக்திகள், நம் தாய்- தந்தையரைக் குறிக்கும் அன்னையின் இரு பாதங்கள், நம் பிறப்பைக் குறிக்கும் ஒரு சூலம்.
இந்த சூலத்தை மூன்றுமுறை வலம்வந்து வழிபடுவது சிறப்பு. அவ்வாறு வலம்வரும்போது அதிலுள்ள தேவதைகள் அருள் கிட்டும். பிராத்தனைச் சீட்டு வாங்கி இங்கு கட்டினால் நம் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அவ்வாறு நிறைவேறியவர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
அம்பாள் இங்கு விஸ்வரூபமாக இருப்பதால், அதற்கேற்றவண்ணம் அவளது சிம்ம வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. 13.5 அடி நீளம், ஏழடி உயரம், ஆறடி அகலம் கொண்ட- ஒரே கல்லில் வடிக்கப்பட்ட இந்த சிம்மத்தின் சிறப் பென்னவென்றால், இதன் வாய்க்குள் எட்டு கிலோ எடையுள்ள ஒரு கல் உருண்டை உள்ளது. அதை வெளியே எடுக்கமுடியாது.
ஆனால் வாய்க்குள் உருளச் செய்யலாம். சிற்பிகளின் திறமையை இது நிரூபிக்கிறது.
இத்தல விநாயகர் கமலவிநாயகர் எனப் படுகிறார். இவருக்குப் பின்னாலிருந்த வேம்பு, முன்னர் பட்டுப்போயிருந்தது.
அம்பாள் இங்கு பிரதிஷ்டையானபின் துளிர்த்து வளர்ந்துள்ளது.
அம்பாளுக்கு கருவறை அமைக்கவேண்டும். ஏற்கெனவே 51 அடி உயரத்தில் விஸ்வரூபமாக இருப்பவளுக்கு எவ்வாறு அமைப்பதென்று சங்கடத்தில் இருந்தபோது, சிவபெருமானே, "நானே இங்கு விமானமாக அமைந்து, சிவசக்தி சொரூபமாகக் காட்சியளிக்கிறேன்' என்று அருள்வாக்கு உரைத்தாராம்.
அதன்படி கோடி லிங்கங்கள் கொண்ட சிவலிங்க அமைப்பை உருவாக்க முடிவுசெய்து, அதற்கான மாதிரி அமைப்பு உருவாக்கப் பட்டது. அதுபோல கருவறை அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. லிங்கத்தின் ஆவுடையார் பாகத்தில் அம்பாள் வீற்றிருக்க, அவளுக்குமேல் 94 அடி உயரமுள்ள பாண அமைப்பும், அதற்கும்மேலாக திருமுடி அமைப்பும் எழுப்பப்படவுள்ளன.
4.25 அடி உயரம், 2.75 அடி அகலம் கொண்ட 10,000 லிங்கங்கள் அமைத்து, அதில் ஒவ்வொரு லிங்கத்திலும் ஆயிரம் லிங்கங்கள் அமைத்து, மொத்தம் ஒரு கோடி லிங்கங்கள்கொண்ட திருமேனி உருவாக்கப்படவிருக்கிறது. இந்த உலகில் கோடானுகோடி உயிர்கள் உள்ளன. நமக்குமுன்னர் எவ்வளவு கோடி உயிர்கள் தோன்றின- நமக்குப் பின்னர் எவ்வளவு கோடி தோன்றவுள்ளன என்பது நமக்குத் தெரியாது. அத்தனைக் கோடி ஜீவன்களும் தங்கள் கர்மாவைத் தொலைப்பதற்காக பிறவிகள் பல எடுத்து சலித்து, கடைசியில் பரம்பொருளிடம் தங்கள் ஆத்மாவைக் கொண்டு சேர்க்கின்றன. அதனால் நாம் வாழும் காலத்திலேயே அம்பாள் வழியாக நம் ஆத்மாவை லிங்க வடிவ பரம்பொருளுடன் சேர்த்து பேரின்பத்தை அடையவேண்டும்.
அதற்காகவே இந்த கோடி லிங்கம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரு லிங்கத்திற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஆத்ம லிங்கமாகத் தங்கள் பெயரைப் பதிவுசெய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இன்னும் இந்த பிரம்மாண்ட ஆலய வளாகத்தில் ஏராளமான அற்புதங்கள் இருக்கின்றன.
அவை அடுத்த இதழில்...
-எம்.