மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் 600 கண்டோபா ஆலயங்கள் இருக்கின்றன. நாம் குறிப்பிடும் ஆலயம் புனேயிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில், ஜெஜுரி என்ற இடத்தில் இருக்கிறது. இது ஒரு சிவன் கோவில்.
450 படிகள் ஏறி இந்த ஆலயத்திற்குச் செல்லவேண்டும். கோவிலில் 18 வளைவுகள், 350 விளக்குத் தூண்கள் உள்ளன.
அங்கு முக்கியமான திருவிழா வருடத்திற் கொரு முறை மார்கழி மாத வளர்பிறையில் ஆறு நாட்கள் நடக்கிறது. மணி, மல்லா ஆகிய இரு அரக்கர்களை கண்டோபா (சிவன்) அழித்ததாகப் புராணம் கூறுகிறது.
அந்த நாளை "சம்பா சஷ்டி' என்று குறிப்பிடுகி றார்கள். அந்த நாள்தான் முதல்நாள்.
அன்றிலி−ருந்து ஆறு நாட்கள் திருவிழா...
இதுதவிர, அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் இன்னொரு திருநாள் "சோமாவதி அமாவாசை.' கண்டோபாவின் உருவத்தை ஆலயத்திலிலிருந்து கார்ஹா என்ற நதிக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
அங்கு அவரை நீராட்டுவர். அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் திரள்வார்கள். மராத்தியர்களும், பிராமணர்களும் "சம்பா சஷ்டி'யை விசேஷ மாகக் கொண்டாடுகிறார்கள்.
கண்டோபா என்பது சிவபெருமானின் ஒரு அம்சம். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மக்கள் கண்டோபாவைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஷத்திரியர்களுக்கும், பிராமணர்களுக்கும் கண்டோபா முக்கியமான கடவுளாக இருக்கிறார். இந்த வழிபாடு 9-ஆவது நூற்றாண்டிலி−ருந்தே தொடர்ந்து நடந்து வருகிறதாம்.
கண்டோபாவை லிங்க வடிவத்திலும், குதிரையின்மீது அமர்ந்திருக்கும் தோற்றத் திலும் வழிபடுகிறார்கள். "மல்ஹாரி மகாத்மியம்' என்ற புராண நூலில் கண்டோபாவின் வரலாறு விரிவாகக் கூறப் பட்டிருக்கிறது. கிராமப் பாடல்களில் கண்டோபாவைப் பற்றி நிறைய பாடப்படுகிறது.
"ஓம் ஸ்ரீ மார்த்தாண்ட பைரவாய நமஹ' என்பது கண்டோபாவிற்கான மந்திரம்.
அவருடைய ஆயுதங்கள் சூலமும் வாளும். "கண்டோ' என்றால் வாள். "பா' என்றால் தந்தை. வாளை வைத்திருக்கும் தந்தை என்ற பொருளில் இப்பெயர் அமைந்துள்ளது.
மல்லா என்பவன் ஒரு அரக்கன்.
அவன் தம்பி மணி.
அவர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி, அவர்கள் யாருடைய கண்களிலும் புலப்பட மாட்டார்கள். அந்த வரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பூலோகத்திலுள்ள எல்லாருக்கும் பலவிதமான தொல்லைகளைத் தந்தனர். அவர்கள் இருவராலும் பாதிக்கப்பட்ட துறவிகள் இந்திரன், விஷ்ணு இருவரிடமும் சென்று தங்களின் குறைகளை முறையிட்டனர்.
அவர்கள் சிவனிடம் சென்று முறையிடும்படி கூற, முனிவர்கள் சிவனிடம் சென்று தாங்கள் படும் இன்னல்களைக்கூறி வேண்டி நின்றனர்.
அதைக்கேட்ட சிவபெருமான் மார்த் தாண்ட பைரவர் என்ற கண்டோபா அவதாரத்தை எடுத்து, நந்தியின்மீதமர்ந்த கோலத்துடன் வந்தார். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய படையே திரண்டுவந்தது.
அப்போது சிவபெருமான் தன் உடலெங்கும் மஞ்சள்பூசி தங்கமென ஒளிர்ந்தாராம். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே பெரிய போர் உண்டானது. அரக்கர்களை இரக்கமே பாராமல் தேவர்கள் அழிக்க, மல்லா, மணி இருவரையும் கண்டோபா வடிவில் வந்த சிவபெருமான் அழித்தார்.
இறக்கும் தறுவாயில் அரக்கன் மணி தன் வெண்ணிற குதிரையை கண்டோபாவுக்கு சமர்ப்பித்து, "எங்களை மன்னித்து இந்த குதிரையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்' என வேண்டி னான். சிவபெருமானும் அவ்வாறே அருளினார். இதுவே கண்டோபா வடிவ வரலாறு.
இந்த ஆலயத்தில் கண்டோபா தன் மனைவிகள் மாலசா, பாணி இருவருடனும் காட்சியளிக்கிறார். மாலசா என்பவள் பார்வதி; பாணி என்பவள் கங்கை.
தினமும் காலை 6.00 மணியிலிலிருந்து இரவு 8.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.