பிரம்மதேவனின் மானஸ புத்திரர்களில் ஒருவனான தட்சன் ஈசனின் மீது தீவிர பக்திகொண்டவன். நான்முகனின் கட்டைவிரலில் தட்சன் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தட்சனின் மகள் தாட்சாயணி. அழகிலும் நற்குணங்களில் சிறந்த இந்த நங்கை, தன் தந்தையைப் போலவே ஈசனின்மீது அதிக பக்திகொண்டவள். ஆண்டவனின்மீது கொண்ட அதி தீவிர பக்தியே காதலாக மாற, மணந்தால் மகாதேவனே என்ற எண்ணத்துடன் எந்நாளும் ஈசனைத் தன் இதயக்கமலத்தில் நிறுத்தி பூஜித்து வந்தாள். ஆனால் தட்சனின் எண்ண ஓட்டம் வேறாக இருந்தது. அரண்மனையில் செல்வச்செழிப்போடு சகல வசதிகளுடன் வளர்ந்த தன் அன்பு மகள் தாட்சாயணியை ஈசனுக்கு மணம்முடிக்க தட்சனுக்கு சிறிதும் விருப்பமில்லை.

"பனித்த சடையுடன், சர்ப்பங்களை மாலையாகத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு, காடுடைய சுடலைப் பொடியைத் தன் மேனியில் பூசி, மயானத்தில் திரியும் மகாதேவனுக்கா என் அன்பு மகளை மணம் செய்து கொடுப்பேன்'' என்று ஈசனைக் குறித்து அனைவரிடமும் எள்ளி நகையாடுவதைத் தன் வழக்கமாகக் கொண்டான் தட்சன்.

தாட்சாயணிக்கு ஏற்ற மணாளனைத்தேட, சுயம்வரம் நடத்தினான் தட்சன். இந்த சுயம்வரத்திற்கு இந்திராதி தேவர்களும் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் தாட்சாயணியின் கைத்தலம் பற்றும் கனவோடு சுயம்வர மண்டபத்தில் கூடியிருந்தனர்.

ஆனால் தாட்சாயணியோ, கயிலைநாதனைத் தவிர வேறு எவரையும் தன் சிந்தையில் நினைக்க வில்லை. சுயம்வர மாலையுடன் மண்டபத்திற்கு வருகை தந்த தாட்சாயணி தன் சிந்தையில் சிவனை நிறுத்தி, மகாதேவனை நமஸ்கரித்து, தன் கையிலிருந்த மாலையை ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்தாள்.

Advertisment

ஆகாய வெளியில் சிவ கணங்கள் சூழ ரிஷபாரூட ராக எழுந்தருளிய ஈசனின் திருக்கழுத்தில் சுயம்வர மாலை மணமாலையாக விழுந்து அவரது நீலகண்டத்தை அலங்கரித்தது. ஈரேழு பதினான்கு உலகத்தவர்க்கும் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் அம்மையப்பனின் கைத்தலம் பற்றி மகிழ்ந்தாள் தாட்சாயணி.

சீற்றம்கொண்ட தட்சன்!

நடந்ததை நினைத்து ஈசன்மீது கடும் கோபம் கொண்டான் தட்சன்.

Advertisment

ஈசனை மதியாது, தன் அன்பு மகள் தாட்சாயணி யையும் அழைக்காமல் தேவர்களை மட்டும் முன்னிருத்தி ஒரு பெரும் யாகத்தை நடத்தினான் தட்சன். தட்சனின் தகாத செயல்பாடுகளில் தேவர்களுக்கு விருப்ப மில்லை என்றாலும், தட்சனிடம் கேள்வி எழுப்ப எவருக்கும் துணிவில்லை. ததீசி முனிவர் ஒருவர் மட்டுமே "சிவமூர்த்திக்கு அவிர்பாகம் அளிக்கவேண்டும்' என்று வலியுறுத்தினார். முனிவரின் வார்த்தையையும் புறந்தள்ளி யாகத்தைத் தொடங்கினான் தட்சன்.

தன்னை மதியாது தட்சன் நடத்தும் யாகத்திற்கு ஈசன் செல்லவில்லை. ஆனால், தாட்சாயணிக்குத் தன் தந்தை நடத்தும் யாகத் திற்குச் சென்று, "தன்னையும் தன் பதியையும் மதியாது யாகம் நடத்துவது முறையல்ல' என்று தன் தந்தையிடம் நியாயம் கேட்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ஈசன் மறுத்தும் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயணி.

தாட்சாயணி, யாக மண்டபத்திற்குச் சென்றபோது அவளை எவரும் வரவேற்கவில்லை. அத்துடன், யாக மண்டபத்தில் அமர்ந் திருந்த தேவர்கள் மற்றும் மறை யோதும் அந்தணர்கள் முன் னிலையில் சிவபெருமானையும் ஏளனம் செய்து அவமதித் தான் தட்சன். தனக்கு ஏற்பட்ட அவமானத்தோடு, தன் பதியை யும் இகழ்ந்த தட்சனின் செயலை நினைத்து கோபமும், வேதனையும், வருத்தமும் மேலிட, "இந்த யாகம் அழியட்டும்' எனச் சபித்து அவ்விடம் விட்டு அகன் றாள் தாட்சாயணி.

தன் மணாளனை அணுகி தட்சனின் யாகத்தை அழிக்க வேண்டி னாள். ஏற்கெனவே, நாரத மகரிஷி மூலம் நடந்த வற்றை அறிந்த சிவபெருமான், சினத்தினால் தீப்பிழம்பாக மாறினார். ஈரேழு பதினான்கு உலகங்களும் ஐயனின் கோபம் என்ற தீயில் தகித்தன. ஒன்பது கோள்களும் செயலிழந்து நிலைகுலைந்தன. வானவெளியில் வலம்வந்த ஏழு குதிரைகள் பூட்டிய ஆதித்தனின் ரதம் அப்படியே நின்றுவிட்டது. இதனால் எங்கும் இருள் சூழ்ந்தது.

ஈசன் தனது விரிசடையிலிருந்து சிறு கற்றையைப் பிடுங்கி எறிந்து தரையில் வீச, அதிலிருந்து வெளிப்பட்டார் சிவ பெருமானின் அம்சமான அகோர வீரபத்திரர். தாட்சாயணியும் மாகாளியைச் சிருஷ்டித்து (பத்ரகாளி) யாகத்தை அழிக்க ஆணையிட்டாள். (ஆதாரம்: அபிதான சிந்தாமணி) சிவபெருமானின் ஆணையை ஏற்று, அகோர வீரபத்திரர் தட்சனை அழிக்கப் புறப்பட்டார். தகாத செயல் புரிந்த தட்சனின் தலையைத் தன் வில்லிருந்து புறப்பட்ட அம்பினால் ஒரே நொடியில் சாய்த்து முடித்தார். தன் மைந்தன் தட்சனின் இழப்பால் வருந்திய நான்முகன், சிவபெருமானிடம் தனது புத்திரனின் செயலைப் பொறுத்தருளி, மீண்டும் உயிர்பிச்சை அளிக்க வேண்டினார்.

vv

மனமிரங்கிய ஈசன் ஆணைப்படி, தலையிழந்து கிடந்த தட்சனின் உடலில் ஆட்டினுடைய தலையைப் பொருத்தி மீண்டும் உயிர்பெற்று எழச்செய்தார் வீரபத்ரர். தட்ச வதம் முடித்தபின்னரும் சினம் தணியாத வீரபத்திரர், ஆலவாய் அண்ணலிடம் கோபம் தணிய உபாயம் கூறியருளுமாறு வேண்டினார். "காடுகளும் மலைகளும் சூழ்ந்து பச்சைப்பசேலெனக் காட்சி தரும் குளிர்ந்த பிரதேசமான அரன் மைந்தபுரம் என்ற இடத்திலுள்ள வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்றால் உன் கோபம் தணியும்'' என்று ஈசன் கூறியருளினார்.

வீரபத்திரர் தன் சினம் தணிய திருக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள இந்த இடமே அரன்மைந்தபுரம் என்று பூஜிக்கப்பட்டு, பின்னர் அனுமந்தபுரம் என்று வழங்கப்பட்டு வரும் திருத்தலமாகும்.

வீரமார்த்தாண்ட வதம்!

காஷ்யபரின் இரு மனைவியர் திதி, அதிதி என்பவர்கள். இவர்களுக்குப் பிறந்த அசுரர்களும் தேவர்களும் சதாசர்வகாலமும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டி ருந்தனர். ஒருசமயம் தேவர்களின் பலம் அதிகரிக்க, அசுரர்கள் தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரை அணுகித் தங்களைக் காத்தருள வேண்டினர்.

அசுரர்களில் பலசாலியான வீர மார்த்தாண்டன் என்பவனை அழைத்து, பிரம்மதேவனைக் குறித்துத் தவம்செய்ய ஆலோசனை கூறினார் சுக்ராச்சாரியார். வீரமார்த்தாண்டனின் கடுமையான தவத்தில் மனமிரங்கிய பிரம்மதேவன் அவனுக்குக் காட்சி கொடுத்து, "வேண்டிய வரங்களைக் கேள்'' என்றருளினார்.

எவராலும் வெல்லமுடியாத ஆற்றலையும், ஈரேழு பதினான்கு உலகங்களை ஆளும் திறத்தினையும் தனக்கு அளிக்கவேண்டும் என்று வீரமார்த்தாண்டன் வரம் கேட்க, "அவ்வாறே ஆகட்டும்'' என்று வரம் தந்தார் பிரம்மதேவன்.

வரம் பெற்ற அகந்தையினால் அசுரர் களுடன் சேர்ந்து தேவர்களைக் கடுமையாகத் தாக்கினான் வீரமார்த்தாண்டன். தன்னை வெல்ல இவ்வுலகில் எவருமில்லை என்ற ஆணவத்தினால் முனிவர்களைக் கொடுமைப்படுத்தி அவர்களது தவத்திற்கும் இடையூறு செய்தான். இதனால் தேவர் களும் முனிவர்களும் வரமளித்த பிரம்ம தேவனிடம் முறையிட, தாம் அளித்த வரத்தை வீரமார்த்தாண்டன் துஷ்பிரயோகப் படுத்தி வருவதை எண்ணி வருந்தினார் பிரம்மதேவன்.

வீரமார்த்தாண்டனின் கொடுஞ் செயல்களுக்கு ஈசன் ஒருவரே முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்று முடிவுசெய்தார் நான்முகன். இந்திரன், வருணன், வாயு, குபேரன், அக்னி உட்பட அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்ற பிரம்ம தேவன், வீரமார்த்தாண்டனின் கொடுஞ் செயல்களை ஈசனிடம் கூறி குறைதீர்க்க வேண்டினார்.

அவர்களது குறையைக் கேட்ட சர்வேஸ்வரன், "அஞ்சேல்'' என்று அபயம அளித்து, தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி வீரமார்த்தாண்டனை வதம் முடிக்கக் கட்டளையிட்டார். ஈசனின் கட்டளையை ஏற்ற வீரபத்திரர், நொடிப்பொழுதில் வீரமார்த்தாண்டனைக் கொன்று முடித்துத் திரும்ப, தேவர்களும் முனிவர்களும் மகிழ்ச்சியோடு, "ஹர ஹர மகாதேவா'' என்று போற்றிக் கொண்டாடினார்கள்.

வீரபத்திர சுவாமியை மூலவராகவும் தனிச் சந்நிதியிலும் வழிபடும் பல்வேறு திருத்தலங்கள் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் இருந்தாலும், தட்சனை வதம்செய்த பின்னர் வீரபத்திரர் எழுந்தருளி கோபம் தணிந்த இடம் அனுமந்தபுரம் என்பது சிறப்பான ஒன்றாகும். பழநி, சேலம், திருவானைக்கோவில், திருவண்ணாமலை, கோவை பேரூர், தஞ்சாவூர், சிவகங்கை போன்ற திருத்தலங்களில் மூலவராகவும்; சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக் கோவில், திருக்கழுகுன்றம், நாகப்பட்டினம், வேதாரண்யம், வீரவ நல்லூர், பெரும்பேர் கண்டிகை, திருமுல்லைவாயில், திருக் காளத்தி போன்ற தலங்களில் தனிச் சந்நிதியிலும், பல திருக்கோவில்களில் பரிவார மூர்த்தியாகவும் வீரபத்திரர் அருள்பாலிக் கின்றார்.

மனநோய்க்கு மருந்தாகும் அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர்!

அனுமந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவீரபத்திரர் திருக்கோவில், நோய் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாகப் பூஜிக்கப்படுகிறது. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருக்கோவிலுக்கு வருகை தந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுத் தங்கள் நோய்தீர்ந்து இல்லம் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நரம்புத் தளர்ச்சி, மனப்பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச் சிதைவு போன்ற நோய்களி னால் பீடிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமி நாட்களில் வருகை தந்து, வெற்றிலைச் சுருளை மாலை களாகக் கட்டி வீரபத்திரருக்குச் சாற்றி வழிபட, அவர்களது நோய் குணமாகி மன அமைதி பெறுகின்றனர்.

மேலும் இத்திருக்கோயிலில் வழிபாடுகள் செய்வதால் நம்மைப் பிடித்துள்ள தீயசக்திகள் (Negative effects) நம்மைவிட்டு அகலும் என்பதோடு, துஷ்ட தேவதைகள், ஏவல், பில்லி, சூன்யம், வைப்பு, கண் திருஷ்டி போன்றவை நம்மை நெருங்காது என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வீரபத்திர சுவாமியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்ட அன்பர்கள், தங்களுக்குத் திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக இத்திருக்கோவிலுக்கு வருகைதந்து 108, 1008 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைச் சுருள்களை மாலைகளாகச் சூட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

இதனால் அவர்களது மணவாழ்க்கை சிறப் பாக அமையும் என்பதும், உடனடியாக புத்திரப்பேறு ஏற்படும் என்பதும் பக்தர்களின் அனுபவமாகும்.

வெண்ணெய் மற்றும் சந்தனக் காப்பு வழிபாடு!

வீரபத்திரர் உக்ரமூர்த்தி என்பதால், அவ ருடைய இன்னருளைப் பெற வெண்ணெய்க் காப்பு சாற்றியும் சந்தனக் காப்பு சாற்றியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். "வெண்ணெய் உருகி வழிவதைப்போன்று நம் துன்பங்களும் நம்மைவிட்டு நீங்கிவிடும்'' என்பதை உறுதிபடச் சொல்கிறார் வீரபத்திரருக்கு நித்ய பூஜைகள் செய்யும் இத்தலத்தின் சிவாச்சாரியார் செந்தில் குருக்கள்.

ஸ்ரீஅகோர வீரபத்திரரை வெள்ளிக் கவச அலங்காரத்தில் வெற்றிலைக் காப்புடன் தரிசிக்கும்போது ஏற்படும் பரமானந்த அனுபவத்தை வார்த்தைகளில் வடிக்க இய லாது. அப்படியோர் அழகு இப்பெருமான்!

அனுமந்தபுரத்தில் வழிபடும் பக்தர்களின் முகத்தில் புனித நீர் தெளிக்கப்படுகின்றது. அப்புனித நீரின் ஸ்பரிசம் நம் முகத்தில் பட்ட நொடியில் நமக்குள் ஏற்படும் புத்துணர்ச்சியை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும். தரிசனம் முடிந்து வெளியில் வரும்போதே நம் மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்வதை பக்தர்கள் நிதர்சனமாக உணரலாம்.

ஸ்ரீபத்ரகாளி

அண்ட வெளிகளுக்கெல்லாம் ஆதார சக்தியாகத் திகழும் அம்பிகை பத்ரகாளியாகத் தனிச் சந்நிதியில் கோவில்கொண்டு எழுந் தருளியுள்ளார். செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபட எதிரிகள் தொல்லை நிவர்த்தியாகும்.

அனுமந்தபுரம் ஸ்ரீஅகோர வீரபத்திரரை வழிபட்டு நம் இன்னல்களுக்கு விடை கொடுப்போம்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இத் திருக்கோவிலுக்கு ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 31-ஆம் நாள், 14-6-2019 வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை- செங்கல்பட்டு தேசிய நெடுஞ் சாலையிலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் திருத்தலத்திலிருந்து கிழக்கே ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அனுமந்த புரம் திருத்தலம்.