கத்தியர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையாகத் திகழ்பவர். சப்த ரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். அகத்தியர் எனும் பெயருக்கு விந்தியமலையை அடக்கியவர் என்று பொருளாகும். அகத்தியருக்கு கும்பமுனி, குறுமுனி, கலசயோனி என பல பெயர்கள் உண்டு. தமிழகத்தில் ஜோதிர்லிங்கமாய்த் திகழும் இராமேசுவரம் திருக்கோவில் அமைய மூலகாரணமாய் இருந்தவர்.

இராமபிரானுக்கு வெற்றி கிடைக்கும் பொருட்டு அகத்தியரால் உபதேசிக்கப் பட்டதே "ஆதித்திய ஹிருதயம்' எனும் சுலோகம். இதைப் பாராயணம் செய்த பிறகே இராமபிரான் இராவணனை வென்றார் என்கிறது இராமாயணம். மேலும் இராவணனோடு போர்புரிய திவ்ய பாணங்களைக் கொடுத்து, அந்த பாணங்களின் வரலாற்றையும் கொடுத்தவர் அகத்தியர். இலங்கையை வென்று திரும்பிய இராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் போக்க லிங்கப்பிரதிஷ்டை செய்ய உபதேசம் செய்தார். இப்படி இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே இராமநாதசுவாமி ஆவார்.

தாமிரபரணி ஆற்றை சிவபெருமான் அகத்தியருக்குக் கொடுத்ததாக திருநெல்வேலி புராணம் கூறுகிறது. தேவர்களை வருத்திய விருத்ராசுரன் இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு பயந்து கடலில் ஒளிந்துகொள்ள, தேவர்கள் அகத்தியரை வேண்ட, அகத்தியர் சமுத்திரநீரைத் தன் கைகளால் ஏந்திக் குடித்து விருத்ராசுரன் இருப் பிடத்தை அடையாளம் காட்ட, இந்திரன் அவனை வென்றான் என்றும், பின்னர் மீண்டும் கடல்நீரை அகத்தியர் விடுவித்ததாகவும் மதுரை திருவிளையாடல் புராணம் கூறுகின்றது. அகத்தியர் பன்னிரண்டு வருடங்கள் நீரில் படுத்துத் தவமிருந்ததாக உத்தர இராமாயணம் கூறுகிறது.

சிவனின் அனுக்கிரகத்தால் சிவபூஜை செய்வதற்காக கமண்டலத்தில் கங்கையைப் பெற்றுக்கொண்டு அகத்தியர் திரும்பிவருகையில், மாயாம புரத்தின் அருகில் மலையுருவாக இருந்த கிரௌஞ்சனின் மாயையில் அகப்பட்டு, பின்னர் அதிலிருந்து விலகி, அவனை மலை உருவாகவே இருக்க சபித்து, குமாரக்கடவுள் வரும் நாளில் அவரது வேல் பட்டு சாபவிமோசனம் கிட்டும் எனவும் அருளியவர் அகத்தியர்.

Advertisment

கந்தனை வணங்கித் தவம்புரிந்து சகல கலைகளையும் பெற்றவர். சூரியனிடமிருந்து தமிழைக் கற்றவர். கவேரனின் குமாரியாகிய காவிரியை மணந்தவர். இவளே உலோபமுத்ரா என காவிரி புராணம் கூறுகிறது. இவளை விதர்பா (காசி) நாட்டு புத்திரி என மகாபாரதம் கூறுகிறது. உலோபாமுத்ராவை இவர் திருமணம் செய்தபோது சிவனும் பார்வதியும் பொதியமலைக்கு நேரடியாக வந்து வாழ்த்திய பேற்றினைப் பெற்றவர்.

தொடிதோற் செம்பியன் எனும் மன்னன் காலத்தில், அவன் ஆண்ட காவிரி பூம்பட்டினத்தில் இந்திர விழாவை முதன்முதலில் எடுத்தவர் அகத்தியர் என மணிமேகலை புராணம் கூறுகிறது. இவர் தொல்காப்பியர், அதங்கோட்டாசான், தூராலிங்கர், செம்புட்சேய், வையாபிகர், வாய்ப்பியர், பணம்பாரனார், கழாரம்பர், அவிநயர், காக்கைப்பாடினியார், நற்றத்தார், வாமனர் என்னும் பன்னிரண்டு சீடர்களைக் கொண்டவர். மருத்துவம், ஆயுர்வேதம், இரசவாதம், சோதிடம், யோகம், சமயம், வெண்பா, திரட்டு, கும்மிநூல் என்னும் தலைப்புகளில் 148 நூல்கள் எழுதியுள்ளார்.

அவற்றில் அகத்தியம், வைத்திய நூல்கள், பெருந்திரட்டு, ஆயுர்வேத பாஷ்யம், விதிநூல், மூவகை காண்டம், அகத்திய சிந்தாமணி, செந்தூரம் முந்நூறுமணி, நாலாயிரம், சிவஜாலம், சக்தி ஜாலம், சண்முக ஜாலம், வைத்திய கண்ணாடி, அகத்திய ரத்னாகாரம், வைத்தியம் ஆயிரத்து ஐந்நூறு, ஆயிரத்து அறுநூறு கர்மவியாபகம், தரிசில்புஷ்பம் இருநூறு ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

Advertisment

இத்தனை பெருமைகளைக்கொண்ட அகத்தியப் பெருமான் இறுதியாக, பெருமாள் அனந்தசயனம் கொண்ட திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் சமாதியில் அமர்ந்ததாகத் தெரிகிறது. மகாவிஷ்ணு அனந்த சயனத்தில் இருக்கும்போது பத்மநாபரின் வலக்கை சிவலிங்கத்தைத் தழுவியதாக இருக்கும். ஆனால் சில படங்களில் பத்மநாபரின் கை அகத்தியரின் தலையில் வைத்து ஆசீர்வதிப்பதைப்போல் காணப்படும். இதைவைத்துப் பார்க்கும்பொழுது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோவிலே அகத்தியரின் சமாதியுள்ள இடமென உறுதியாகக் கூறலாம்.

இப்படிபட்டவருக்கு இராமேசுவரத் தில் இராமருக்கு உபதேசம் செய்த இடத்தில், "அகத்திய தீர்த்தம்' எனும் தீர்த்தமும், சிறிய அளவிளான அகத்தியர் திருக்கோவிலும், காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலும் உள்ளது.

சிவபெருமானின் திருமணக்காட்சியை மற்றவர்களைக் காட்டிலும் பலமுறை காணும் பேறுபெற்றவர் அகத்தியர். பொதுவாக திருமணக்காட்சியை அது நிகழும்போது மட்டுமே காண இயலும். ஆனால் அகத்தியரோ பலமுறை கண்டுகளித்தார்.

சிவபெருமானின் திருமணக்காட்சியைக் காண அனைவரும் கயிலாயத்தில்கூட, அதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதை சமன்செய்வதற்காக சிவபெருமான் அகத்தியரை அழைத்து, "எம் சார்பாக நீவீர் தென்பகுதிக்கு திக்விஜயம் செய்க'' என ஆணையிட்டார். ஆண்டவன் கட்டளையை சிரமேற்கொண்ட அகத்தியர், "தங்களது திருமணக்காட்சியைக் கண்டுவிட்டுப் புறப்படுகிறேன்'' என்றார். சிவபெருமானோ,

"இல்லை. நீவீர் இப்பொழுதே புறப்பட்டாக வேண்டும். எந்த தலத்திலிருந்து எம்மை நினைத்து வணங்குகிறீரோ அங்கெல்லாம்யாம் உமக்கு திருமணக்காட்சியைக் காட்டியருள்வோம்'' என்று கூற, அடுத்த நொடியே அகத்தியர் அங்கிருந்து புறப்பட்டார்.

ss

வழியில் எதிர்ப்பட்ட ஒவ்வொரு சிவாலயத்தி லும் அகத்தியர் சிவனை வழிபட, சிவன் திருக்கல்யாணக் காட்சியை அருளினார்.

பலமுறை பார்த்தும் அலுக்காதவர் அம்பாள் ஆலயங்களிலும், ஆலயமே இல்லாத ஊர்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டும் மீண்டும் மீண்டும் அக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சியுற்றார்.

அப்படி அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கங்கள் அகத்தியலிங்கம் என அவர் பெயராலேயே அழைக்கப்பட்டதுடன், வழிபாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அகத்தியர் தன் பயணத்தில் வழிபட்ட ஆலயங்கள் ஏராளம். மூவர் பாடிய தேவாரத் தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் தலங்கள் என்று அடைமொழியிட்டு அடை யாளப்படுத்துவதுபோல, அகத்தியர் தரிசித்த தலங்களை அவர் பெயராலேயே அடை மொழியிட்டுக் குறிப்பிடலாம். சிவன் தன் திருமணக்காட்சியை காட்டியருளிய இத்தலங்களை சிவபெருமானின் திருமணத் தலங்களாகவும் கூறலாம்.

இப்படிபட்ட தலங்களில் ஒன்றே விளந்தை (ஆண்டிமடம்) அருள்மிகு தர்சம்வர்த்தினி உடனுறை மேலை அகத்தீசுவரர் திருக்கோவில்.

இவ்வாலயம் திருமுதுகுன்றம், திருஎருக்கத்தம்புலியூர் எனப்படும் இராசேந்திரபட்டினம் கோவில்களுக்குத் தெற்கிலும், வைணவத் தலமான ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குத் தென்மேற்காக வும், பூலோக கயிலாயம் எனப்படும் சிதம்பரம், மேலச்சிதம்பரம் எனப்படும் திருக்களப்பூர் ஆகிய கோவில்களுக்கு மேற்காகவும், "பொங்கார் கலிசூழ் புவனம் பதினாலும் கங்காபுரி புகுந்து கண்டுவப்ப' என ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு வடக்காகவும், பொன்பரப்பின கோவரையன் என்பவனால் கட்டப்பட்ட பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் ஆலயத்திற்கு கிழக்காகவும் அமைந்துள்ளது.

ஆலயச்சிறப்பு

அகத்தியமுனிவர் அடுத்தடுத்து என ஒரே பகுதியில் பிரதிஷ்டைசெய்த பஞ்சலிங்கங்களில் ஒன்றை மூலவராகக்கொண்ட தலம்- அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக்கொண்ட தலம்- இறைவன் அனுக்கிரக மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கும் தலம் போன்ற சிறப்புகளுக்குரியது. புராணப் பெயர்கள் ஆண்டவர்மடம் மற்றும் வில்வாரண்யம். ஆண்டவர்மடம் என்பது மருவி தற்போது ஆண்டிமடமாக அழைக்கப்படுகிறது. இறைவன் (ஆண்டவர்) உறையுமிடத்தில் அவரின் அடியார்கள் (ஆண்டிகள்) இருப்பது இயல்புதானே. இறைவன்- அகத்தீசுவரர்; இறைவிலி தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்த நாயகி. உற்சவர்- சோமாஸ்கந்தர். தலவிருட்சம்- வில்வம். (மிகபழமையான மரம்). தல தீர்த்தம்- அகத்தீசுவர தீர்த்தம்.

காலம் மற்றும் கட்டுமானம்

சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் இவ்வாலயம் யாரால் எப்பொழுது கட்டப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆலயத்திலும் எவ்வித கல்வெட்டுகளும் குறிப்புகளும் இடம்பெறவில்லை. கடைசி யாக 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வால யம் திருப்பணி செய்யப்பட் டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 1958, 2002, இறுதியாக 2017-ல் குடமுழுக்குவிழா நடத்தப்பட்டுள்ளது.

தல வரலாறு

அகத்தியமுனிவர் வழக்கம் போல சிவனை வணங்குவதற்காக சிவாலயம் இல்லாத இந்த ஊரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் பிரதிஷ்டை செய்த ஐந்து லிங்கங்கங்களில் முதலாவது லிங்கம் இவ்வாலயத்தின் கிழக்கு திசையிலுள்ள கீழை அகத்தீசுவரர் ஆலயத்திலும், இரண்டாவது லிங்கம் இவ்வாலயத்திலும் உள்ளன. மற்ற மூன்று லிங்கங்களும் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சிவலிங்கபுரம், கூவத்தூர், கொளப்பாடி ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து லிங்கங்களும் அகத்தீசுவரர் என்னும் திருப்பெயருடன் விளங்குகின்றன. இதைத்தவிர விளந்தைகாலனி, காட்டாத்தூர், குளத்தூர் (அய்யூர்), சி(லு)வச்சேரி ஆகிய இடங்களிலுள்ள நான்கு லிங்கங்களையும் சேர்த்து அட்டதிக்கு பாலகர்கள் சூழ் ஆலயமாகவும் இது திகழ்கிறது.

ஆலய அமைப்பு

நாற்புறமும் வீதிகள் சூழ, கிழக்குநோக்கி ஐந்துநிலை கள் மற்றும் ஐந்து கலசங்களைக் கொண்ட இராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு முன்னால் ஆலய தீர்த்தமான அகத்தீசுவர தீர்த்தம் உள்ளது. பிராகாரச்சுற்றில் இடப் புறம் இரண்டு தலவிருட்சங்கள் உள்ளன. இதில் ஒன்று மிகமிகப் பழமையானதாகும். அதையொட்டி ஆலயகிணறு அமைந்துள்ளது. பிராகாரச்சுற்றில் நால்வர்,

வினாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை முருகப் பெருமான், கஜலட்சுமி, சண்டிகேசுவரர், சிவகாமி உடனுறை நடராஜப் பெருமான், நவகிரகங்கள், பைரவர், சூரியன் ஆகியோரது தனிச் சந்நிதிகள் இடம்பெற்றுள்ளன.

விநாயகர் சந்நிதியையொட்டி அகத்தியர் சிவவழிபாடு செய்யும் சுதைச்சிற்பம் இடம்பெற்றுள்ளது. கருவறைச்சுற்றில் விநாயகர், அகத்திய முனிவர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நான்கு கரங்களைக்கொண்ட விஷ்ணுதுர்க்கை இடம்பெற்றுள்ளனர். (அகத்தியர் வழிபட்ட தலங்களில் கருவறைச்சுற்றில் அவரது திருமேனி இடம்பெற்றிருக்கும். இதுவே அகத்தியர் வழிபட்டதற்கான ஆதாரமாகும்).

பஞ்சமூர்த்திகளின் சுதைச்சிற்பங்களோடு கம்பீரமாகக் காட்சியளிக்கும் மகாமண்டபத் திற்கு முன்புறம் பலிபீடம் மற்றும் நந்தியெம்பெருமானும், தொடந்து இடப்புறம் விநாயகரும், வலப்புறம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம். இடைநாழி கடந்து கருவறையில் மூலவர் அகத்தீசுவரர் லிங்கவடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலப்புறத்தில் தெற்கு நோக்கியவாறு அன்னை தர்மசம்வர்த்தினி நின்றகோலத்தில் நாளும் தன்னை நாடிவரும் பக்தர்களின் தேவைகளைத் தீர்த்துவைக்கும் விதமாக அருள்பாலிக்கிறாள்.

உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள்

சிவாலயங்களுக்கேயுரிய வாராந்திர திங்கட்கிழமை சோமவார வழிபாடு, வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு, வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு, பட்சம்தோறும் அஷ்டமிநாளில் பைரவர் வழிபாடு, பிரதோஷம், மாதந்தோறும் பௌர்ணமி வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, வருடந்தோறும் கந்தர்கஷ்டி, நடராசர் அபிஷேகம், மகாசிவராத்திரி, சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, நால்வர் குருபூஜை ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம்: அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் ஊரின் மத்தியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, அரியலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. தமிழக அரசின் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையி னரால் நிர்வகிக்கப்படும் இவ்வாலயத்தில் தினசரி இரண்டுகால பூஜைகள் நடை பெறுகின்றன. அருகிலுள்ள ரயில் நிலையம் விருத்தாசலம். தினசரி காலை 7.00 மணியிலிருந்து பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை யிலும் ஆலயம் திறந்திருக்கும்.