ன்று உலக அளவில் எடுத்துக்கொண்டால், கடவுள் மறுப்பாளர்கள் குறைந்த சதவிகிதத்தினரே உள்ளனர். அதேபோன்று, "நாங்கள் மிக அறிவாளிகள்' என்று சொல்லிக்கொண்டு நடிகைக்கு கோவில்கட்டிய மேதை களும் உண்டு. இதுகூட பரவாயில்லை; இப்போது கேரள மாநிலத்தில் ஒருவர் "கொரோனாதேவி' என்னும் ஒரு கோவிலைக் கட்டி வழிபாடு, பூஜைகள் நடத்திவருகிறார். இவ்வாறு ஒரு நடிகைக்கும் வைரஸுக்கும் கோவில் கட்டுவதென்பது மாபெரும் குற்றமாகும். ஏனெனில் இன்னும் ஒரு நூறு வருடங்கள் கடந்தநிலையில், இத்தகைய கோவில்களைக் கண்டு எதிர்கால சந்ததியினர் எத்தகைய மூடத்தனமான எண்ணங்களுக்குத் தள்ளப்படுவார்கள்- மூடநம்பிக் கையில் சிக்கிக்கொள்வார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இது அறிவை மழுங்கச் செய்யும் செயலாகும்.

இதையெல்லாம் பார்க்கும்போது பெரும் பான்மையான மக்கள் அறியாமை யெனும் இருள்நிறைந்த அதலபாதாளத்தை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? அடிப்படை அறிவின் ஆதாரம் சிதைந்துவிட்டது என்பதேயாகும். அவரவர் மண்சார்ந்த- மாநிலம் சார்ந்த தாய்மொழிக் கல்வியே அறியாமை இருளைப் போக்கும் அடிப்படை பகுத்தறிவு ஆதாரமாகும்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக'

Advertisment

எனும் வள்ளுவரின் கூற்றை உணர்ந்து கல்வி பயிலவேண்டும். இவ்வாறு ஒருவன் கல்வி பயிலும்போது அவனது அறியாமை, மூடநம்பிக்கை எனும் கொடிய நோய்களிலி ருந்து விடுபட்டு, கொரோனா போன்ற கொடிய நுண்கிருமிகளையும் கொன்றொழித்து விடமுடியும்.

உண்மையான கல்வியைக் கற்றுத் தேர்ந்திருந்தால் காடுகளையும் மரங்களையும் மலைகளையும் இயற்கையையும் அழித்து விட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைப்பார்களா? அனைத்து வசதிகளும் உள்ளன என்று நம்பி அங்கு வீடுவாங்கிக் குடியேறிய நமக்கு பிராணவாயு (ஆக்சிஜன்) பற்றாக்குறை எவ்வாறு வந்தது? பல்வேறு வசதிகளுடன்கூடிய தனி வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் என்றுசொல்லி விற்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களைப் பாதுகாக்க பிராணவாயு வசதி உள்ளதா? அதற்கு சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமானதாகும்.

ஆக்சிஜன் (ஞ2) எனப்படும் பிராண வாயுவும், ஓசோன் (ஞ3) எனப்படும் அமிர்த காற்றும் மரங்கள், செடி கொடிகள் போன்ற இயற்கை வளங்களில் இருப்பதை நாம் மறந்துபோனதன் விளைவு, இன்று மூச்சுத்திணறலில் கொண்டுவந்து விட்டு விட்டது. இத்த கைய அவலநிலை ஏன் வந்தது? நாம் இயற்கையை மறந் தோம். நமது இயல்புத் தன்மையை இழந்து செயற்கை ருசியை நம்பினோம். அதனால் செயற்கையான பிராணவாயுவுக்கு வரிசையில் நிற்கிறோம்.

Advertisment

உலகப் பொதுமறையாம் திருக்குறள் காட்டிய வாழ்வியல் ஒழுக்கநெறிகளை மறந் தோம். துன்பச் சூழலில் சிக்கித் தவிக்கிறோம்.

உணவே மருந்து என்பது எத்தகைய பெரிய சத்தியவாக்கு!

"தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்'

என்கிறது குறள். ஒருவன் தனது உணவு முறையை அறிந்துகொள்ளாமல், தன் நாக்கிற்கு அடிமையாகி, தன் பசியளவிற்கு மேம்பட்டு கண்டகண்ட உணவுகளை அதிகமாக உண்பானேயானால், அவனிடம் பல்வேறு வகையான நோய்கள் உருவாகி அவனையே அழிக்குமளவுக்கு வளர்ந்துவிடும்.

நாம் சுதந்திரம் பெற்று விட்டோமென்று சொல்லி, இன்றும் சுதந்திர அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த அடிமை ஆசையே மேலும் வளர்ந்து கொண்டிருக் கிறது. "என் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான்; ஆப்பிரிக்காவில் வேலைசெய்கி றான்' என்று பெருமை பேசியவர்கள், இன்று கொரோனா வைரஸ் தாக்கத்தால் சொந்த நாட்டிற்குத் திரும்புவார்களா என்று தவித்துக்கொண்டிருப்பதை நாம் கண் கூடாகப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் காரணம், அந்நியர்கள் நம் இனத்தை மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் பிரித் தாளும் சூழ்ச்சியைத் தொடர்ந்து செய்து வந்ததுதான். எனினும் அதில் அவர்கள் தோல்வியடைந்தனர்.

dd

ஏனென்றால் உலகிலுள்ள அனைவருக் கும் இயற்கையையும், இயற்கையுள் இறைவனையும் போதித்தது நம் தமிழ்மண், தமிழினம், தமிழ்மொழியாகும். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் நமது ஒற்றுமையையும் பகுத்தறிவையும் தன்மானத் தையும் சுயமரியாதையையும் அழிப்பதற்கு, ஆங்கிலேயே ஆதிக்கமும் அதற்குத் துணை போன பல அசுத்த ஆதிக்கங்களும் எவ்வளவோ முயன்றன. ஆனாலும் தோற்றுவிட்டன. எனினும் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. சூழ்ச்சியாளர்கள், சதிகாரர்கள், கைக்கூலிகள் ஒன்று சேர்ந்து, பஞ்சமா பாதகங்களைச் செய்யும் "கார்ப்பரேட்' வியாபாரிகளிடம் கைகோத்தனர். முதலில் நமது பரம்பரை உணவுப்பழக்கத்தை முற்றிலும் சிதைத்து, குப்பைக்குப் போகும் சக்கையை நாம் ருசிக்கக் கடைவிரித்தனர். அவர்கள் விரித்த வலையில், அறியாமை இருளிலும் ஆடம்பர மோகத்திலும் உள்ள நம்மவர்கள் அகப்பட்டுக் கொண்டனர்.

ஒருவனது பரம்பரை உணவுப்பழக்கத்தை அழித்துவிட்டால், அத்தகைய பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் போற்றுபவர்களின் உணர்வுகளை அழித்துவிட முடியும். உணர்வு களை அழித்துவிட்டால் அவர்கள் சார்ந்த-

அவர்களது மனம்சார்ந்த- மரபுசார்ந்த- பண்பாடு சார்ந்த மொழியை அழித்துவிட முடியும். அவ்வாறு மொழியை அழித்து விட்டால் அந்த இனத்தையே அழித்துவிடலாம்.

இதன்படி ஒரு மரபுவழி சார்ந்த பண்பாடு, கலை, அறிவியல், பாரம்பரியம் மிக்க ஒரு மண்ணிலுள்ள- மகத்தான "பகுத்துண்டு பல்லுயிர்' போற்றும்- பாதுகாக்கும் இனத்தை வேரோடு அழித்துவிட முயல்கிறார்கள். அடிப்படைக் கல்வியும் தாய்மொழிக் கல்வியும் மறைந்துகொண்டிருப்பதால், நம் பிள்ளை களின் எதிர்காலம் அடிமைத்தனத்தில் அகப் பட்டுக்கொள்ளும். அதையே பெருமையாகப் பேசிக்கொண்டு நமது வருங்கால- எதிர் கால சந்ததியினர் வாழ்க்கையைக் கேள்விக்குறி யாக்கிக் கொள்வார்கள்.

நாம் எதைப் படிக்கவேண்டும்- எதை உண்ணவேண்டும்- எப்படி வாழவேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித்தர யாருக்கும் உரிமையோ தகுதியோ இல்லை. இதை சொல்வதற்குக் காரணம்- ஒரு இனத் தின் உணவு, மொழி, ஆரோக்கியத்திற்கு ஏதேனும் கேடு வந்தால், அதை சரிசெய்யும் வழியை உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளனர் நம் தமிழ் முன்னோர்கள். அதையறிந்து நாம் பின்பற்ற வேண்டும். எந்த மாற்று மருத்துவ முறைகளையோ மருத்துவர்களையோ நாம் குறைசொல்லவில்லை. அது நமது நோக்கமு மல்ல. அகத்தியர், தேரையர், போகர் என்று நமது 18 சித்தர்களும் பலவகை மருந்துகளை யும் செயல்முறைகளையும் நமக்கு வரமாக அருளிச்சென்றுள்ளனர். அவற்றையெல்லாம் முறையாகப் பயன்படுத்தினால் நாம் முழுமையான ஆரோக்கியத்திற்கு சொந்தக் காரர்களாக மாறமுடியும்.

பிரபஞ்ச அறிவியல் ஞானி, அணுவை முதன்முதலில் உலகிற்கு உணர்த்திய மெய்ஞ்ஞானி திருமூலர், "திருமந்திரம்' எனும் மாபெரும் பொக்கிஷத்தை தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிச் சென்றுள்ளார். திருமந்திரம் என்பது வெறும் செய்யுளோ, சிவம் பற்றிய பாடல்கள் மட்டுமோ அல்ல. திருமந்திரம் ஒரு தத்துவம்; மிக உயர்ந்த மனோதத் துவம்! கரு என்றால் என்ன- கரு எப்படி உருவாகிறது- ஆண்குழந்தை பிறக்க என்னசெய்ய வேண்டும்- பெண்குழந்தை பிறக்க என்னசெய்ய வேண்டும்- ஒரு குழந்தை ஏன் திருநங்கையாகப் பிறக்கிறது என்பவை உள்ளிட்ட பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய உடல் இயக்கவியல், உடற்செயலியல், உடல் தத்துவவியல் எனும் பல அம்சங்களைக் கொண்ட மகா மருத்துவ நூலாகும்.

மனித உடலானது சுமார் 4,448 நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதையறிந்து, அதனை குணப்படுத்தும் அனைத்துவகை மருந்துகளையும் நமது முன்னோர்கள் கண்டறிந்து தந்துள்ளனர். அதைப்போலவே மருந்தில்லா வாழ்க்கை- அதற்காக ஆரோக்கிய மான அட்டாங்கயோகம் போன்றவற்றை உலகிற்கு முதலில் வழங்கியவர் திருமூலரே. ஏனென்றால் கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க்குடியாகும்.

"சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை; சுப்பிரமணியன் என்னும் ஆறுமுகச் சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்பது மிகச்சிறந்த பழமொழியாகும். கொரோனா என்னும் இந்த வைரஸ் மட்டுமல்ல; வேறு எந்த வைரஸ் வந்தாலும் அதைத் தாக்கியழிக்கும் ஆற்றல் நமது மொழிக்கும், மொழிசார்ந்த நம் மருத்துவத்திற்கும், மண்சார்ந்த நம் உணவுப் பழக்கங்களும் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. நுண்ணியதே- கண்ணுக்குப் புலப் படாததே கொரோனா வைரஸ். ஆனால் அதை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றவன் நுண்ணியதிலும் நுணுக்கமாக மறைந்திருக்கி றான். அவனே பரம்பொருள் சிவபெருமான். இது குறித்து திருமூலர்-

"அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு

அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே'

என்கிறார். அணுவுக்குள் அணுவாக விளங்குகின்ற பரமாணுவே சிவப் பரம்பொருள் ஆவார். எவ்வாறு? அணுவுக்குள் உள்ள அணுவை ஆயிரம் துகள்களாக்கி, அதிலொரு துகளுக்குள் மிக நுட்பமாகவும் மெல்லியதாகவும் உள்ள பரமாணுவே ஆதிப் பிரானான பரம்பொருள் சிவபெருமான். அத்தகைய பரமாணுவான ஆதிப் பிரானை நெருங்கக் கூடிய வர்களுக்கு, அணுவுக்குள் அணுவாக இருக்கும் சிவப் பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

அனுவைப் பற்றிய திருமூலரின் இந்த திருமந்திர விளக்கம் சைவ சித்தாந்தக் கூற்றுப் படி சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். அணுவைப் பற்றிக் கூறிய திருமூலர், நம் மானிட உடலிலுள்ள மிகத்துல்லியமான உயிரின் அளவீட்டை எவ்வாறு கூறியிருக்கிறார் என்பதையும் காண்போம்.

"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிரம் ஆயினால்

ஆவியின் கூறு நூறாயிரத் தொன்றே.'

உடலுடன் பொருந்தியுள்ள உயிரின் உருவத்தை அளவிட்டுச் சொல்லவேண்டு மென்றால், பசுவின் முடியொன்றை எடுத்து அதை நூறாகப் பிளக்கவேண்டும். அவ்வாறு பிளந்த ஒரு பகுதியை மேலும் ஆயிரம் பங்காக்க வேண்டும். அவ்வாறு ஆக்கப்பட்ட நூறாயிரத் தில் ஒரு பகுதியே உயிரின் உருவமாகும். (நூறாயிரத்தில் ஒன்று- பசுவின் ஒரு முடியில் ஒரு லட்சம் பங்கில் ஒரு பங்காகும்.)

அணுவைப் பற்றியும், மனித உயிரின் அளவீட்டைப் பற்றியும் திருமூலரின் திரு மந்திரம் கூறியதைப் பார்த்தோம். இப்போது உயிர்காக்க உதவும் உணவுபற்றி திருவள்ளுவர் தனது "ஞானவெட்டியான்' எனும் நூலில் கூறியதைக் காண்போம்.

"கருங்குருவை யரிசிபசும் பயறு மாவின்

கருநிழல் வெண்ணாவின்பசும் பாலுங்கூட்டி

ஒருபோது மன்னஞ்சமைத் துண்ணும்போது

உடன்கூட்டு அமுரியுப்பு உண்டால் மோட்சம்

குருவருளை மனதிலெண்ணி ரவியி லன்னங்

கொள்ளுமதி ராத்திரியி லாவின் பால்கொள்

அரும்பொருளை மறவாதே யோராண்டாகில்

அதிகாலை யமுரியுண்டு மதியி லாண்டே.'

கருங்குறுவை அரிசியும், பசும் பயறும், வெள்ளைப் பசும்பாலும் சேர்த்து சமைத்து ஒருபொழுது உண்ணும்போது, அதனுடன் அமுரி உப்புக்கூட்டி உண்டால் மோட்சம் கிடைக்கும்- அதாவது வீடுபேறு கிடைக்கும்.

குருவருளை மனதில் நினைத்து சூரிய வெளிச் சத்தில் அன்னத்தை உட்கொள்ளவேண்டும். இரவில் பசும்பால் அருந்தவேண்டும். ஒரு வருடத்திற்குப் பின்பு அதிகாலை சந்திரன் சாரத் தில் (சந்திரகலை) உண்ணவேண்டும். (பலவகை உப்புகள் அமுரி உப்பு ஒரு வகையாகும்.)

இவ்வாறு உணவே மருந்து என்பதைக் கண்டறிந்த நாம் (முன்னோர்கள்), அனுவைக் கண்டறிந்த நாம், உணவே மருந்தென்னும் உயரிய கொள்கைக்கு சொந்தக்காரர்களாகிய நாம் இன்று நம் இனத்தின் ஆரோக்கியத் திற்கு வேட்டுவைப்பவர்களோடு கூட்டுவைத்துக் கொண்டு, பணம் பணம் என்று பேயாய் அலைகிறோம். அமைதியாய் இருக்கப் பழகுவோம். அதில்தான் ஆரோக்கியம் ஒளிந்துகொண்டிருக்கிறது.

"அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்

வெவ்வியனாகிப் பிறர்பொருள் வவ்வல்மின்

செவ்வியனாகிச் சிறந்துண்ணும் போதொரு

தவ்விக்கொடு உண்மின் தலைப்பட்ட போதே'

என்கிறார் திருமூலர். அடுத்தவர்மீது பொறாமைகொண்டு அவதூறாகப்பேசி அநியாயம் செய்யாதீர்கள். நீதிநூல்கள் கூறிய நல்வழி கெடும்படும்படியாக நடக்காதீர்கள். பெருங்கோபம் கொண்டு பிறர் பொருளைக் கவர்ந்து கைப்பற்றிக் கொள்ளாதீர்கள். உலகில் எல்லா சிறப்பும் பெருமையும் பெற்று சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, நீங்கள் உண்ணும்போது பசியென்று யாரேனும் வந்தால் அப்போதே அவர்களுக்கு ஒரு அகப்பை உணவைத் தந்து, பிறகு உண்ணுங்கள். இதுவே ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழும் வழியாகும். இப்படி ஒருவரின் பசிக்கு உணவளிப்பதென்பது பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு நாம் செய்யக்கூடிய உயரிய பூஜைக்குச் சமமாகும்.

பொருள் கையில் உள்ளபோதே இறைவனின் அருளைப் பெற முயற்சிப்போம். பிறர் பசியைப் போக்குவோம். அதனால் நம்மை மனப் பிணி முதற்கொண்டு எந்தப் பிணியும் நெருங்காது.